தமிழ் மொழியும், எம் பிள்ளைகளும்

133

தாய் மொழி என்பது ஆங்கிலத்தில் mother tongue என்பர். ஆங்கில அகராதியில் ஒரு பிள்ளை வளரும் பருவத்தில் பேசப்பட்ட மொழி என்கிறார்கள்.(The language which a person has grown
up speaking from early childhood). ஆராட்சியாளர்கள் ஒரு குழந்தைக்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பேசவும், கற்கவும் ஆளுமைஉள்ளது என்கிறார்கள். ஆனால் எம்மவர்களோதமிழைப் படிப்பித்தால் ஆங்கிலம் சரியாக கற்கமுடியாமல் போய்விடும் என்று ஆங்கிலத்திலேயே தாமும் வீட்டில் பிள்ளைகளுடன் கதைப்பதுடன், தமக்குள்ளும் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொள்கின்றனர். இது பிள்ளைகளின் மொழி ஆளுமையில் வருகின்ற சந்தேகத்தில் பெற்றோர் முடிவெடுப்பது. இன்னொருவகையான பெற்றோர் பிரித்தானிய அரசின் வாரிசுகள் போல, ஆங்கிலத்தில் கதைப்பது நாம் மெத்த படித்தவர்கள் என்பதையும், மேட்டு குடியினர் என்பதையும் உறுதிப்படுத்தும் என்பதற்காக தமிழ் நன்றாக தெரிந்திருந்தும், விருப்பப்பட்டு நுனிநாக்கில் ஆங்கிலத்தில் உரையாடிக்கொள்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் தமிழை மறந்தவர்களாகவும், அல்லது ஆங்கிலத்தில் பேசுவது தமக்கு தமிழை விட சௌகரிகமானது என்றும் கூறிக்கொள்கின்றனர், அவர்கள் சொல்வது ஒருவிதத்தில் சரியாக இருக்கலாம். `சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும்நாப் பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம், நித்தம் நடையும் நடைப்பழக்கம், நட்பும், தயையும், கொடையும் பிறவிக்குணம்’ என்ற வெண்பா அதை உறுதி செய்கிறது.

அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் என்னை துருத்திக் கொண்டுள்ளன. ஒன்று எனதுபல்கலைக்கழக நண்பி ஒருவர், தான் தமிழில் எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டது, அதுவும் வாழ்த்து எழுதுவது என்றால் இன்னும் கடினம்,எனக்காக நீயே எழுதிவிடு என்று சொன்னது, மற்றது தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்ஒன்றுகூடல் ஒன்றில், ஆங்கிலத்தில் உரையாடுவது தனக்கு புரியாது என்று சொன்ன ஒருவருடன், தான் ஆங்கிலத்தில் தான் தொடர்ந்தும் உரையாடுவேன் என்று அடம்பிடித்தது. அதற்குஅவர் சொன்ன இரு காரணங்கள். ஒன்று அது தனக்கு சௌகரிகமான மொழி, மற்றது நீர் இந்த நாட்டுக்கு வந்து எவ்வளவோ காலம், உமக்கு என்னென்று ஆங்கிலத்தில் உரையாடமுடியாமல் உள்ளது என்பது. மற்றவரின் விளக்கம், அவர் வந்தவுடன் வேலைக்கு போகத்தொடங்கி விட்டதால், ஆங்கிலம் பயில நேரம் கிடைக்கவில்லை. மனமும் நாடவில்லை என்பது.இங்கே எனக்கு இரு கேள்விகள் உள்ளன. பிரித்தானியாவிற்கு வந்து 20,25 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் ஆங்கிலம் தெரியவில்லை என்று ஆச்சரியமும், கோபமும் படும் இவர்கள், 20,25 வருடங்களாக படித்து, பேசிய தமிழை ஒருவர் மறந்து விட்டேன் என்று கூறும் பொழுதும், தமிழில் பேச கடினமாக உள்ளது, என்றுசொல்லும் போதும் ஆச்சரியப்படாமல் கேள்வியும் இன்றி ஏற்றுக்கொள்கிறார்கள். இங்கு எவ்வளவோ தமிழ் நிறுவனங்களில், தனிய தமிழிலேயே உரையாடிக்கொண்டு வருடங்கணக்கில் வேலை செய்பவர்கள் உள்ளனர்கள். இதுமொழி, கலாச்சாரம், திருமணம், நாட்டுப்பற்று, குழந்தை வளர்ப்பு என்று பல்வேறு விடையங்களிலும் நான் உட்பட எல்லோரும் தத்தம்நிலைமைகளையும், தம்மையுமே அளவுகோலாகக் கொண்டு அதில் இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்ப்பதால் வரும் சிக்கல் என்றுதான் கூறவேண்டும்.

இதே சிக்கல்தான் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் பொழுதும், நாம் எம்மையே அளவு கோலாகக் கொள்கிறோம், இங்குள்ள தமிழ் பாடசாலையின் நிர்வாகி ஒருவர் என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார், இங்குள்ள பாடத்திட்டங்கள் பிள்ளைகளுக்கு கடினமாக உள்ளது. சைக்கிளுக்கு எமக்கு தெரிந்த தமிழ் துவிச்சக்கரவண்டி, இங்கே உந்துருளி என்று சொல்வதால் பிள்ளைகளுக்கு கடினமாக உள்ளதுஎன்று. பிள்ளைகளுக்கு இதில் ஒரு கடினமும்இல்லை, அவர்களைப் பொறுத்தவரை இரண்டுமே அவர்களுக்கு தெரியாத சொல், அத்தோடு படிக்கும் போது ஆங்கிலச்சொற்களை (சைக்கிள்) பாவிக்காமல், அதற்குரிய படத்தைக் காட்டி உந்துருளி என்று சொன்னால் பிள்ளைகளுக்கு விளக்கிக்கொள்கிறார்கள். உங்களுக்கு வேணும் என்றால் விளக்கம் சொல்லலாம், இரண்டு சக்கரம் உள்ள வண்டிகள் எல்லாம் சைக்கிள் ஆகிவிடமுடியாது. பொறிமுறையின் படி, எமது உந்து சக்தியால் உருளும்வண்டி என்பதால், அதற்கு எத்தனை சக்கரம் உள்ளது என்பதை விட, உந்துருளி என்பதேபொருந்தமான பெயராக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொழி என்பது, மக்களின் தேவைக்கேற்ப வளர வேண்டியதொன்று, பிள்ளைகளுக்கு அதைப்படிப்பது கடினம் இல்லை, பெற்றோர்கள் இப்படி அலுத்து சலித்துக்கொள்வது அவர்கள் காதில் விழுவதால், அவர்களும் சிறுவயதில் தமிழ் வேண்டாம் என்கிறார்கள். தமிழ் ஆசிரியர்களும் அதைக் கற்பிக்கும் போது புதுபுது உத்திகளைக் கையாண்டு அவர்கள் அதைமறக்காமல் இருக்கும் வகையில் விளங்கப்படுத்த வேண்டும்.

சிறு வயதில் பிள்ளைகள் தமிழை எப்படி படிகிறார்களோ இல்லையோ வளர்ந்த பின், தமிழ் தெரியும் என்பதற்காக பெருமைப்படுகிறார்கள், தெரியவில்லை என்பதற்காக கவலையும் அடைகிறார்கள். இன்னுமொரு மொழி தெரிந்திருப்பது எப்பொழுதும் குறைவாக இருக்காது. இப்போது எமக்கு முந்திய தலைமுறையைவிட, அடுத்த தலைமுறை, தமிழ் என்று சொல்வதற்கு தயங்குவதில்லை. காலனித்துவமோகம் அவர்களுக்கு இல்லை. எமது கலாச்சாரம் புதுவருடம், பொங்கல், மொழி, சைவ உணவுமுறை என்று எல்லாவற்றையும் பெருமையாகவே பார்க்கிறார்கள். தமிழ் பாடசாலைகள் spoken English என்று உள்ளது போல, பேச்சுதமிழ் என்ற தனியான வகுப்பை உள்வாங்கி தமிழ் பேசத்தெரியாத, பேச விருப்பும் வளர்ந்தவர்களையும் உள்வாக்கிக் கொள்ளவேண்டும்.

பெற்றோரில் ஒருவர் தமிழரல்லாதவிடத்து,தமிழ் பிள்ளைகள், தமிழர்களை திருமணம்முடித்த தமிழர் அல்லாதவர்கள், தமிழ் பேசத்தெரியாத தமிழ்பெற்றோருக்கு பிறந்த தமிழ்பிள்ளைகள், என பலர் தமிழைப் பயிலும்ஆர்வத்தில் இன்னும் உள்ளார்கள். வயதுமுதிர்ந்த, அனுபவம் உள்ள தமிழ் ஆசிரியர்கள் தமது நேரத்தை முதியோர் கழகங்களில் வீணாக்காது, பிறருக்கு பயன்தரும் வகையில் செலவழிக்க முன்வருவது அவர்களுக்கும் மனஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

[https://www.soas.ac.uk/languagecentre/languages/tamil/the-elementary-tamil-evening-course.html ]