தாயகம் காத்தோரை தாள் பணிவோம்

இரவி அருணாசலம் எழுதுவது என்னவெனில்

மாவீரர்களை நினைவு கூருகின்ற நாட்கள் நம்மை நெருங்குகின்றன. அதற்குத் துக்கம் காப்பது நம் கடன், `துக்கம் காப்பது என்பது துக்கப்பட்டு அழுது கொண்டே இருப்பது என்ற பொருள் அல்ல. அவர்களது தியாகத்தை, வீரத்தை நெஞ்சு உறுதியை, ஓர்மத்தை நினைவு கூர்ந்த வண்ணம், அந்த நாட்களை கடப்பது என்றே அதனை கருதுகின்றேன். அவ்வாறு நினைவு கூருவது என்பது, துக்கத்துடன் தான் கழியும் என்பது இயல்பு.

முதன் முதலாக பொதுமக்கள் மத்தியில் மாவீரர் நாள் கொண்டாடப்பட்ட 1991ஆம் ஆண்டில் நானும் அதில் கலந்து கொண்டேன். அது கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கற்பித்த காலம். நவம்பர் 27ஆம் நாள் கரைந்து உருகிப் போனேன் நான்.என்னிடம் கிளிநொச்சியில் கல்வி கற்ற இரண்டு மாணவர்கள் மாவீரர்களாகி புகைப்படங்களில் கண் மலர்த்தியபோது, கலங்குவதைத் தவிர வேறொன்றும் செய்யத்தெரியவில்லை. அன்று சாமம் 12 மணிக்கு உடைந்துபோய் அழ வேண்டிய நிலை எனக்கு வந்தது. இந்துக் கல்லூரியின் மைதானம் முழுவதும் மரக்குத்திகள் நட்டுதீப்பந்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தீப்பந்தத்திற்கும் முன்னும் மாவீரர்களின் பெற்றோர் தீப்பந்தங்களை கொளுத்த தயாராக இருந்தனர். சாமம் 12 ம ணிஅடிக்கின்ற போது அவர்கள் ஒரே நேரத்தில் தீப்பந்தங்களைக் கொளுத்தினர். கதறல் அழுகையுடன், ஒப்பாரிப்பாடலுடன், விம்மல் பொருமலுடன் வெடித்த வெப்பியாரத்துடன் நடுங்கும் கைகளுடன் தீப்பந்தங்களை ஏற்றினர். அப்பொழுது பார்த்து மழை சோனா வாரியாகப் பொழிந்தது. யாவரினது கண்ணீரும் ஒன்று திரண்டு மழையாக வந்ததோ என்னவோ. அந்த உணர்விலிருந்து நான் எப்படி விலகி நிற்க முடியும் விலகி நிற்பவர் எப்படி மனிதராக முடியும் நெஞ்சுகதறி எனக்கும் கண்ணீர் கொட்டிற்று. அக்கணங்களை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சு வெட்கத்திலும், துக்கத்திலும் விம்முகிறது. உன்னதத் தியாகிகளின் அர்த்தத்தை எவ்வளவு முட்டாள் தனமாக மறுத்தபடி வந்தேன் அல்லது நிராகரித்தபடி வந்தேன். இப்பொழுது மாவீரர் நாள் என்பது முக்கிய திருநாளாக எனக்கும் அமைந்து விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், கரும்புலிகள் ஆகியோரின் துக்க நாளாக மாத்திரம் மாவீரர் நாளை நான் கருதவில்லை. ஒடுக்கப்படும் மக்களுக்காக பணிபுரிந்து மரணித்த அனைத்துப் போராளிகளையும் நினைவு கூரும் நாளாக இப்பொழுது அர்த்தப்படுத்துகின்றேன். அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் கொல்லப்பட்டிருந்தாலும் கூட. “மொழியாகி எங்கள் மூச்சாகி’’ பாடல் ஒலிபரப்பப்படுகின்ற போது தோழர் விசுவானந்த தேவன், நண்பர்கள் விமலேஸ்வரன், கேதீஸ்வரன் ஆகியோர் கூட என் நினைவில் வந்துபோவார்கள்.

நவம்பர் 27ஆம் நாளைத் தான் என் மனதில் தேசிய துக்க நாள் என அறிய விரும்புகின்றேன். நண்பர் மீரா பாரதி தனது மரணம் இழப்பு மலர்தல் நுÖலில் முள்ளிவாய்க்கால் துயரைக் குறிக்கும் மே 18 ஆம் நாளை தேசிய துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறார். அக்கருத்து விவாதத்திற்குரியதொன்று. ஆனால், உலகத்தமிழரில் பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொண்ட ஒரு தேசிய துக்க நாள் நவம்பர் 27ஆம் நாள் தான் என்பது என் துணிபு.

உண்மையில் மாவீரர் என்போர் ஓர் மகத்தான மனிதர். `சிறு பயல்கள்’ ஆன எங்களால் அவர்களை புரிந்து கொள்ள முடியாது. அழுக்கு மிகுந்த எங்கள் அறிவினால் அவர்களை கொச்சைப்படுத்த தயங்க மாட்டோம். போதைப்பொருள் கொடுத்துத் தான் கரும்புலிகள் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள் என்றும் போராளிகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார் என்றும் திலீபன் தண்ணீர் கேட்டபோதும் கொடுக்காமல் சாக்காட்டினார்கள் என்றும் உன்னதத் தியாகிகளை எவ்வளவு கேவலப்படுத்துகின்றோம். நாங்கள் அறிவுஜீவிகள், அதிமேதாவிகள் அப்படித்தான் கதைப்போம்.

இந்த உன்னத தியாகிகள் தமக்கு உயிர் போகப்போகின்றது என்று தெளிவாகத் தெரிந்தபோதும் சிரித்தபடி சாவை அணைத்தவர்கள் இவர்கள். இந்த `சின்ன மூளை’ களுக்கு அதனை விளங்கத் தெரியாது, விளங்க விருப்பமும் கிடையாது. யாவற்றையும் விடுவோம். சில அரசியல் தலைவர்களின் கொலைகள், கட்டுநாயக்கவிமான நிலையத்தாக்குதல், வேறுசில தாக்குதல்கள் இவற்றில் எல்லாம் இவர்களது சாகசங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை மாத்திரமல்ல, நம்மால் எண்ணவே
முடியாதவை. ரெலோத் தலைவர் தங்கத்துரை கூறியதுபோல, `இவர்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்’ பிடல்கஸ்ரோலின் வாசகத்தை இங்கு நான் இரவல் வாங்குகின்றேன். வரலாறு இவர்களை விடுதலை செய்யும்.

தாயகம் காத்தோர் இவர்கள், இவர்களின் தாள்களை பணிதல் நம் கடன். நாம் தாள் பணியும் தகுதிக்கு மிக மேம்பட்டவர்கள் அவர்கள். அதற்குப் பல நுÖறு கதைகளில் ஒரு கதை சொல்கிறேன். ஒரு கரும்புலி தன் இலக்கு நோக்கி பயணப்படப் போகிறார். எனவே கரும்புலியின் வீட்டுக்கு அவரது பொறுப்பாளர் அழைத்துச் சென்றார். கரும்புலியின் கொட்டில் வறுமையாலும், இரண்டு தங்கைகளாலும், தாயாராலும் நிறைந்து கிடக்கின்றது. மகனைக் கண்டதும் தாய்க்கு புழுகம். ஆனால், சமைத்துப் போட ஒன்றும் இல்லையே என்ற மனப் புழுக்கம். மெதுவாக மகனிடம் சொல்கிறார். `ராசா நாலு நாளாக நாங்கள் சாப்பிடல்ல, இப்ப நீ வந்திருக்கிறாய், என்ன செய்வது என்று தெரியல’ இதனைப் பொறுப்பாளர் கேட்டவுடன் தனது பொக்கற்றிலிருந்து காசை எடுத்து அதில் சில நூறு ரூபா தாள்களை கரும்புலியிடம் கொடுக்கிறார்.

கரும்புலி தாயுடனும், தங்கைகளுடனும் மகிழ்வாக இருந்து தாய் மகனுக்கு ஊட்டிவிட, மகன் தங்கைகளுக்கு ஊட்டிவிட சாப்பாடு ஆயிற்று, மகன் புறப்படுகின்ற நேரம், தாய் மகனிடம் மெதுவாகச் சொல்கிறார் “உன்ர தங்கச்சிமார் இன்டைக்கு சாப்பிட்டினம், இனி எப்ப சாப்பிடுவினமோ தெரியாது உன்ர பொறுப்பாளரிடம் சொல்லி கொஞ்சகாசை வாங்கித் தாவன்”. மகன் துக்கத்தை அடக்கிச் சொன்னான்,

“அம்மா, அது எங்கன்ட காசு இல்லை, சனங்களின்ட காசு அதை நாங்கள் தொட ஏலாது”

இக்கதையை புழுகுகிறான் என்றோ, புராணக்கதை என்றோ சொல்பவரை விடுவோம்.

அவர்கள் பிறவிக் குருடர், தாள் பணிய வேண்டியதன் காரணத்தையே கதையாகச் சொன்னேன்.