தாய்மடி – புதுவை இரத்தினதுரை

288

எட்டாம் போர்,
பத்தாம் போர்,
பதினெட்டாம் போர்
என வெள்ளையனையே
கதிகலக்கிய வீதி இது.

இன்று அந்தரத்தில் ஆடும் எங்கள் அவல
வாழ்வை எண்ணி வீழ்ந்து எந்தப் பொழுதிலும்
இடிந்து விடாதீர்கள்.
இன்றைய வதை பிரசவ வலியைப் போன்றது
வலியைத் தாங்குவதே சுகப் பிரசவத்திற்கான வழி
புதிய உயிர்ப்பொன்று வேண்டுமெனில்
அதற்குப் பொறுமை வேண்டும்.

பல்லைக் கடித்துத் தாங்கும் பக்குவம் வேண்டும்.
விடுதலைக்கான வழி நடத்தல் என்பது
ஊரிப்பட்ட ஆக்கினைகளை சுமப்பது
தினசரி செடில் குத்திய காவடியை எடுப்பது
என்ன இது வாழ்வு என்று
எப்பொழுது சலிப்பு வருகிறதோ,
அப்போதே முழுவதும் இடிந்து போய்விடும்

நேற்று இரவு பரந்தன் வீதியால்
பாரம் ஏற்றிக் கொண்டு
ஓட்டை வண்டிலிலும்
ஒரு விளக்கு எரியும்
உழவு வண்டியிலும்
சென்றது உயிர்காக்க அல்ல,
அது விடுதலைக்கான யாத்திரை.

கோழியையும், நாயையும் கூட
இழுத்துக் கொண்டு
பழைய கட்டில்களையும்
கதிரைகளையும் சுமந்து கொண்டு உள்ளே
வெதும்பிய படி நடந்த பயணம் இருக்கிறதே
அது ஆற்றாமையின் அழுது வடிப்பல்ல.
காற்றற்று போனாலும் வாழ்வோம்
என்ற நம்பிக்கை.

வவுனியாவில் எல்லா வசதிகளுடனும்
மண்டபம் அமைத்துள்ளோம்.
வருகவென எதிரி
குரல் வைத்துக் கூப்பிடுகிறான்.
ஆயினும் அந்தத்திசையை நோக்கி நடக்காமல்
உடையார் கட்டை நோக்கியல்லவா
உறவுகளின் பயணம் இருக்கிறது.

அவர்களின் நெஞ்சுரத்தைப் பார்த்து
நேற்றிரவு நான் அழுதேன்.
எங்கள் தலைவன் மீதான நம்பிக்கையை
எண்ணி என்ன கைமாறு செய்வோம்
இவர்களுக்கு என நேற்றிரவு நான் அழுதேன்.

கொல்லா விதி எம்மை போட்டு
உலுக்குவது கொல்லவல்ல கொல்லவல்ல.
கொடுவினை தீர்ப்பதற்கே. நம்புங்கள்.
பகைவனின் குண்டுவீச்சு விமானங்களால்
எம்மைக் கொல்லத்தான் முடியுமே தவிர,
குலைய வைக்க முடியாது.

எஞ்சும் பிரங்கிக் கனைகளால் எம்மை
குதறமுடியுமே தவிர இலட்சியத்திலிருந்து
உதறிவிட முடியாது.
இன்னும் வரட்டும் துயர்..
இனியும் வரட்டும் இடர்…
எதையும் எங்களை இடித்துவிட முடியாது..
தர்மம் காவல் இருக்கிறது தலைவாசலில்.

இழப்பதற்கு எதுவுமற்றவர்களிடம் தான்
விடுதலையைப் பெறுகின்ற வேகம்
இருக்கின்றது.
எங்களிடம் இழப்பதற்கு
உயிரைத் தவிர வேறெதுவுமில்லை.
எனவே விடுதலைக்கு நானே
பொருத்தமானவன், அரைஞான்
கயிற்றைக் கூட அவர்கள் பறித்துவிட்டார்கள்.

இனி கோவணத்தைப் பற்றிய
கவலை எமக்கு எதற்கு?
எவராவது வாருங்களேன்,
எமக்காகவும் பேசுங்களேன்..
சாவின் விளிம்பின் நின்று
ஈழத்தமிழினம் சத்தமிடுகிறது..
கூவும் எறிகணைகளுக்குள்ளே
நின்று குரல் வைக்கின்றோம்.
கேட்கின்றதா எங்கள் குரல்,
பார்க்கிறதா எங்கள் ஓலம்.

இங்கே பாருங்கள் எட்டாவது தடவையாக
தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து
இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அகப்பட்டதை மட்டும்
அள்ளிக் கொண்டு திசை
தெரியாத வழியில் சென்று
கொண்டிருக்கிறார்கள்.

சின்னக் குடிசை என்றாலும்
அதற்குள்ளே ஓர் ஜீவிதம் அமைத்து
அழகாய் இருந்தது எங்கள் அன்றாடம்.
வயற்கரைகளிலும், வாய்க்கால்
ஓரங்களிலும் அழகு விரித்த
புல்வெளிகளிலும், தீனி பொறுக்கும்
குருவிகளாய் வாழ்ந்திருந்தவர்கள் நாங்கள்.
எமக்கொன்றோர் ஓர் காணி,
அதற்குள்ளே சின்ன குடிசை.
நீர் குடித்து ஆற கிணறு.
கும்பிட்டு எழ கோயில் என்று எமக்கும்
ஓர் வாழ்வு இருந்தது நேற்று வரையும்.

விடுதலைக்குப் போராடும்
பிள்ளையுடன் உண்டு பகிர்ந்தவர்.
நாளைய வாழ்வின் கனவில் என்றும்
கனிந்தபடி இருந்தவர்கள் தாம் இன்று
நாங்கள் அகதிகளாக வெளியேறிக்
கொண்டிருக்கின்றோம்.
தமிழர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக
தண்டிக்கப்படுகின்றோம்.

தமிழர்கள் என்ற அடையாளத்திற்கு
நாங்கள் சிலுவை சுமக்கின்றோம்.
தமிழர் என்று பிறப்பெடுத்ததற்காக
முள்முடி சுமக்கின்றோம்.
நினைச்சுப் பாருங்கள் இவர்கள் விழியில்
இருக்கும் ஏக்கம் புரியும் உங்களுக்கு.
முற்றாக வெட்டிச் சாய்த்து
முடமாக்கப்பட்ட பின் இந்த அந்தரிப்பும்,
உத்தரிப்பும் இன்னும் எத்தனை காலத்திற்கு?

இப்பொழுது வேண்டும்
இவர்களுக்கான உங்கள் கை கொடுப்பு.
இப்போது வேண்டும் இவர்களுக்கான
உங்கள் கருணை. உங்கள் உறவுகள்,
உங்கள் இனத்தவர்.
உங்கள் தொப்புள் கொடி சொந்தங்கள்.
உங்களையே பெரும் துணையென
இறுமாந்திருந்தவர்கள்
சிங்கள வெறியர்களின் தீ வைப்புக்கு
அஞ்சி தெருத்தெருவாக
ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
வாரி வாரி அவதரிக்கும்
எறிகணைகளுக்கு பயந்து
எங்கோ நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மனித அவலத்திற்கு என்ன கணக்கு?
இந்த மானிட வதைக்கு என்ன முடிவு?
இவர்கள் யாருக்குச் சொல்வார்கள்?
யாருடன் வேண்டுகை வைப்பார்கள்?
நீங்களும் கை விட்டால்
இந்தத் தமிழர் எவரிடம் போவார்?

ஈரானிடம் பணம் வாங்கி, இஸ்ரேலிடம்
படைக்கலன் வாங்கி, சீனாவிடம் பிரங்கிகள்
வாங்கி, பாகிஸ்தானிடம் எறிகளைகள்
வாங்கி, இந்தியாவிடம் ராடர்கள்
வாங்கி இந்த விடுதலையை வேண்டிய
ஈழத்தமிழர்களை விரட்டிக் கொண்டிருக்கிறது
சிங்களப் பேரினவாதப் பூதம்
இத்தனைக்கும் என்ன காரணம்?
இவர்கள் தமிழர்கள்..
இவர்கள் தமிழுக்கான விடுதலையைக்
கேட்பவர்கள்.
இவர்கள் தமிழை தலை நிமிரச் செய்பவர்கள்.
ஆனால் தானே கலைக்கின்றனர்.

உலகத் தொண்டு நிறுவனங்கள்
வழங்கிய கொஞ்ச நெஞ்ச உதவிகள்
உயிர் தரித்து நின்றன இதுநாள் வரையும்.
இப்போதும் அதுவும் இல்லையென்று ஆகிற்று.

சாவுக் கணக்கையாவது வரவு வைக்க
ஐ.நா. நிறுவனம் இருந்தது.
இப்போது அதுவும் இல்லையென்று ஆகிற்று.
சாவுக் கணக்கையாவது கணக்கு வைக்க
ஐ.நா சபையின் அகதிகள் நிறுவனம்
இருந்தது, அதைக்கூட சிங்கள அரசு
வெளியேற்றி விட்டது.

இனி என்ன செய்வார்கள் இவர்கள்?
நீங்கள் தங்களைத் தாங்குவீர்கள்
என்று காத்திருக்கின்றனர்.
ஈழத்தமிழர்கள் இறுதிவரை போராடுவார்கள்.
தங்கள் இலட்சியத்திற்காக தலைமுறை
தலைமுறையாக எழுவார்கள்.

அழியும் நிலவரை
அழிவார்களேயன்றி வளைய மாட்டார்கள்.
எட்டுக் கோடி தமிழர்கள் உலகமெங்கும்
இருக்கும்போது இவர்கள் ஏன் ஏதிலிகளாக
அலைய வேண்டும்?
13 இலட்சம் சொந்த உறவுகள்
புலம்பெயர்ந்த தேசங்களில்
இருக்கும் போது இவர்கள்
ஏன் இப்படி அழுதபடி அலைய வேண்டும்?
தான் ஆடாவிட்டாலும், சதை ஆடும் உறவுகளே
காத்திருக்கிறதுஉங்களின் உறவுகள்.

சின்னக்குடிசை என்றாலும்
அதற்குள் எங்கள் ஜீவிதம்
எப்படி அழகாக இருந்தது.
நாங்கள் உழைக்காமல் இருந்த சனமும்
அல்ல, விதைக்காமல் இருந்த சாதியும் அல்ல..
இன்று நிவாரணத்திற்கு கையேந்தி
நிற்கின்றோம்.
நாங்கள் கோழிக்கு எறிந்த
நெல்லைக் குவித்தாலே ஊர் முழுதும்
கூடி பசியாறும்,
நாங்கள் சோறு வடித்த கஞ்சியை
வாய்க்காலில் பாய்ச்சினால்
பத்துக் குளம் நிரவி பாயும் கடலுக்கும்.
இன்று ஆராரோ கொண்டு வரும்
அரிசிக்கு காத்திருந்து தீராத பட்டினியில்
செவியடைத்துக் கிடக்கின்றோம்.

போராடுவது ஒன்று தான்
பொது வாழ்வு கொண்டு வரும்
எல்லா கனவுகளையும் உதறி எறிந்து விட்டு
இனி நிஜ மனிதர்களாக நிமிருவோம்.
ஒன்றில் வாழ்வு, இல்லையேல் சாவு.

காலம் காலமாக கண்ணீர் வடிக்கும் கூட்டம்
ஒரு நாள் கண் திறக்கும்.
ஞாலம் வியக்கும் போரை நடத்தும்
அடக்குமுறையின் உட்சிறகுகளை
உடைத்துத் திறந்து உரிமையை
வென்றெடுக்கும்.
இது இயல்பியல் விதி.
நாங்கள் போராடுவதும் இதற்காகத் தான்.
பதுங்கு குழி பாதுகாப்பானதே தவிர
பயந்தவன் படுத்துறங்கும் பள்ளியறையல்ல.
சாவுக்கு அஞ்சினால்
சரித்திரம் படைக்க முடியாது.
கூவும் எறிகணைகளுக்கு குரல்
நடுங்கினால் எங்கள் பாயும்
பலத்தில் பாதி குறைந்துவிடும்.

வெற்றி நிச்சயம் என வந்தவனை
நாங்கள் விரட்டியடிப்போமா இல்லையா?
ஆனையிறவில் அவன் கட்டிய இரும்புக்
கோட்டையை பூனைக் கோட்டையை
நாங்கள் பிடித்தோமா இல்லையா?
முல்லைத்தீவு எனும் முகத்தைச்
சிதைத்தவனை சொல்லி அடித்து
கலைத்தோமா இல்லையா?

முடியும் என நம்பினால்
முந்நூறு கை முளைக்கும்.
விடியும் என நம்பினால்
வேலியிலே உனக்கு சூரியன்.
இப்போது எமக்கேயன்றி அழிவல்ல.
பின் எதற்கு இடிந்துபோக வேண்டும் இப்போது?
விமானங்களை நாம் முன்னர்
வீழ்த்தினோம் அல்லவா?
பிரங்கிகளை நாங்கள்
பறித்தெடுத்தோமல்லவா?
கோட்டையைப் பிடித்து
கொடியேற்றவில்லையா?
எதற்கு எல்லாம் முடிந்ததென
இடிந்துபோக
வேண்டும் இப்போது?

புலம்பெயர்ந்த
உறவுகளே
நீங்கள் எவ்வளவு து£ரம்
போனாலும்,
எவ்வளவு காலம்
தான் ஆனாலும்,
உங்கள் ஆணி வேர்
இங்கே தான் இருக்கிறது.
நீங்கள் பிறந்த மடி இது
நீங்கள் தவழ்ந்த மண் இது
நீங்கள் இந்த மண்ணுக்குள் பொத்தி பொத்தி
மண்ணின் சூட்டுடன் தான் வாழ்கின்றீர்கள்.
எங்கள் போராட்டம்
மிக விரைவில் முடிவுக்கு வரும்.
வெற்றியின் இலக்கைத் தொட்டு நிற்கும்.
உலகத் தமிழனுக்கு தனித்த குடிலாக
எம் தாயகம் எழுந்து வரும்.
அந்தத் தாயகத்தைக் காண
இங்கு போராடிக் கொண்டிருக்கும் நாங்கள்
பலர் உயிருடன் இருக்க மாட்டார்கள்.
ஆனால், நீங்கள் இருப்பீர்கள்.

உங்கள் தாய்மடியில் வந்து ஏறவும்,
கொடி ஏற்றவும், அழவும்,
அழகாக்கவும் நீங்கள் இருப்பீர்கள்.
இது உங்களுக்குமான போராட்டம் தான்.
இதைத் தாங்குவதும்,
வெற்றியை வாங்குவதும் உங்களின்
கையில் தான் இருக்கின்றது.
பூமிப் பந்தையே நம்பக் கூடிய
ஈழத்தமிழர் அல்லவா நீங்கள்,
நிமிர்ந்து எழுவீர்களேயானால்,
நிச்சயம் முடியும் உம்மால்.

இங்கே பண்டாரவன்னியனின் பட்டுக்குடையையும்,
பாதக் குறட்டையும் கண்டெடுத்தாச்சு
நந்திக் கடலில் குருவிச்சிராச்சியார்
எறிந்த காற்சிலம்பும் கிட்டிற்று.
இழந்தது அனைத்தும் எமக்காகும்
என்ற நம்பிக்கையிலேயே நிமிர்ந்துள்ளோம் நாம்.
புலம்பெயர்ந்து போன பிள்ளைகளே
பெரியவர்களே உமக்கொரு
கடன் உள்ளது என்பதை மட்டுமல்ல
நாளை உமக்கான தேசம்
இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறது.
உம் நாமம் உரைத்தே
எம் தேசக் கொடி ஏறும்.

அட பைத்தியக்கார பகைவனே,
அதிகாரத் திமிரில் ஆணவம் மறைப்பவனே,
அடங்கா மண்ணுக்கு விலங்கிடத் துடிப்பவனே,
உன்னைப் பார்த்து அழுவதா சிரிப்பதா?
ஈழத்தமிழன் சீனச் சட்டியில் செய்த
அண்டாவும் குண்டாவும் அல்ல
போட்டதும் உடைந்து போவதற்கு
நாங்கள் உருக்கில் வார்த்த தாச்சிச் சட்டிகள்.

நெருப்பு படப்பட இன்னும் உருக்காவோம்.
இன்று பிரங்கிக் குரலில் தான் எம்
பிள்ளைகள் புல்லாங்குழல் வாசிக்கின்றது.
கவச வாகனச் சக்கரங்களைக் குவித்தே
தமக்கான காவலரண்களை அமைக்கின்றனர்.
பகைவனின் தலைக் கவசத்தில் தான்
தேநீருக்கான தண்ணீர் கொதிக்கின்றது.
காலால் நெரித்து எம்மை கசக்கிவிடலாம்
என நினையாதே நெருஞ்சி முள் ஏறும்
முளைத்த மரம் வேரிடும். சடைத்தமரம்
விழுதெறியும். தர்மத்தின் வாசலை
மூடி தாண்டவா நினைக்கின்றாய்?

அட மடையர்களே அதர்மத்திற்கு ஆயுள் கம்மி.
ஈழத்தமிழர் நீரடி ஊற்றின் தோற்றுவாய்
தோண்டத் தோண்ட சுரப்பான்.
அள்ளி இறைக்க நினைத்தால் அது வற்றாது.
இறுதியில் இறைத்த கைகளே அலுத்துப் போகும்.
கோடையில் கருகிக் கிடந்தாலும்
மாரியில் துளிர் நிறைந்து படரும்.
அறுகின் வேரை அறுத்து
அழிக்க முடியும் என்றா நினைக்கின்றாய்?
உலகெங்கும் வியாபித்த
புளிய மர வைர வம்ச சாதி.
பாலவனத்திலும் எங்கள் பரம்பரை உருவாகும்.
துருவப் பிரதேசத்திலும்
எங்கள் சொந்தங்கள் உண்டு.
நெருப்பில் குளித்து நிமிர்ந்துள்ள
கோபுரத்தைப் பார்த்து,
மண் மோடை ஒன்று மார்பில் தட்டியதாம்.
நாளாந்தம் எம் தேச வாசலில்
ஏறி சுடரும் சூரிய தேவனே!

வீரியம் அடங்கா வேகனே
உன் திருமுக ஜொலிப்பில்
பலம் கொண்ட சேனையால் அணிவது
சோதனைகள் சூழ்ந்த வேளையில்
ஒன்றாகக் கூடி உறுதி எடுக்கின்றோம்.
7 குதிரைகள் பூட்டிய தேரில் எழுவோம்.
இத்தனை விலை கொடுப்புக்கும் பின்னரும்
முதுகு வளைந்து மண்டியிடுமா எம் வம்சம்?
தருவதைத் தருக, எடுத்துக் கொள்கிறோம்
என பல்லக்கு ஏற சம்மதப்படுமா?
எம் முற்றத்திலும் தலைவாசலிலும்
ஒன்றாகக் கிடந்த உதிரக் கொடிகள்
எட்டாத் தொலைவென்றாச்சே.
கண்டங்கள் எல்லாவற்றிலும் கரை ஒதுங்கி
பிரிவு எண்ணி கண்ணீர் வடிக்கின்றனவே.
எப்படி இவையெல்லாம் மறந்து சுலபமாய்
சமரசப்பட முடியும்.

ஈழத்தமிழருக்கு இரண்டு வழியில்லை.
ஒற்றைவழியே
அது போராடிப் பெறுகின்ற தாயகம்.
ஏய் சூரிய தேவனே
உன் முன் நின்று உறுதி எடுக்கின்றோம்.
இனியும் எம் பயணம் தொடரும்.
இலக்கு எம் கையில் எட்டும் வரை..

ஆக்கம் : புதுவை இரத்தினதுரை