ஐநா மனிதவுரிமைச்சபையில் சிறிலங்கா மீதானதீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சிறிலங்காவின் மக்களுக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் டேவிட்கம்ரன் தெரிவித்துள்ளார். இத்தீர்மானம் சிறிலங்காவிற்கு எதிரானது அல்ல, இது சிறிலங்காவிற்கானது எனக் கூறியுள்ளார் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் மிஷேல் சிஷன். இவர்களைப்போலவே இத்தீர்மானம் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காகப் போராடும் சிறிலங்காவின் மக்களுக்கு கிடைத்த வெற்றி என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தன், காலனித்துவ விசுவாசத்துடன் மேற்குலக அதிகார மையங்களின் கருத்தை பிரதிபலிக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தவிர்ந்த மற்றயவர்கள் இத்தீர்மானத்திற்கு வலுவான எதிர்ப்பினை தெரிவித்துவருகையில், இது சிறிலங்கா மக்களுக்கானது எனமேற்குலக இராசதந்திரிகள் ஏன் கூறுகிறார்கள் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
இம்முறை மனிதவுரிமைச்சபையின் கூட்டத்தொடரின் போது, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஜெனிவாவிற்கு வந்து, ஐநா பணியகமான Palais des Nations வளாகத்தில் lobby நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததார்கள். அவர்களை எங்களின் `வழிகாட்டிகள்’ என மூத்த ஊடகவியலாளர் மதிப்பிற்குரிய ஏ.சி. தாசீசியஸ் அவர்கள் உயிரோடை தமிழ் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் அழைத்ததை கேட்கக் கூடியதாக இருந்தது. `வழிகாட்டிகள்’ என்பவர்கள் சரியான வழியினைக் காட்டுபவர்களாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிருப்பதால், மேற்படி செயற்பாட்டாளர்களை பொதுவில் ‘வழிகாட்டிகள்’ என அழைப்பதில் எனக்குத் தயக்கமிருக்கிறது. இருப்பினும் அவர்களது வகிபாகத்தைகருதியே தாசீசியஸ் ஐயா அவ்வாறு அழைகிறார் எனநம்புகிறேன். தவிரவும், தமிழில் நல்ல பல புதியசொற்களை அறிமுகப்படுத்தியிருக்கும் அவரது தமிழோடு விளையாடுவது எனது நோக்கமல்ல.
ஐநா மனிதவுரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல்உரிமைகளைப்பற்றிப் பேசவில்லை, அவர்களைத்தேசிய இனமாக மட்டுமல்ல ஒரு தரப்பாகவே குறிப்பிடவில்லை. ஆனால் எல்லாப் போதாமைகளுக்குமத்தியிலும் இத்தீர்மானம் உலகின் இரண்டு பலம்பொருந்திய நாடுகளினால், ஒட்டுமொத்த மேற்குலகத்தின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டது என்ற விடயத்தினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. வேறு எந்த நாடுகளினதும் ஆதரவில்லாத நிலையில், இவ்வல்லாதிக்க அலையடிப்புக்கு எதிராக ஈழத்தமிழினம் எதிர்நீச்சல் போடமுடியாது. இருப்பினும், இப்பெருநதியில் அடித்துச் செல்லப்பட்டு கரைந்துவிடபோகிறோமா ? அல்லது நதியோட்டத்துடன் ஓடினாலும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல்உரிமைகளை கவனத்தில் நிறுத்திச் செயற்படப்போகிறோமா? என்ற விடயத்தில் தமிழர் தரப்பு அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகிறது.
தீர்மானத்தைக் கொண்டுவந்த அரசுகளும் அதனை ஆதரித்த நின்ற அரசுகளும் ஈழத்தமிழரின் நலனில் அவர்களுக்கு உள்ள பிரத்தியேக அக்கறை காரணமாக எந்த முன்னெடுப்பினையும் செய்யவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.மற்றைய தேசிய இனங்களின் அல்லது நாடுகளின் விடயங்களில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் இது பொருந்தும். அவ்வாறாயின் மேற்குலகம் எதனைச் சாதிக்க விழைகிறது?
இவ்வினாவிற்கு பதிலளிக்க முற்படும் சிலர், இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை படைத்துறைத் தேவைகளுக்காக கையகப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கான அடிக்கோள் என்கிறார்கள். சிலர், எரிபொருட்களை கொண்டும் செல்லும் கப்பற் பாதையில் உள்ள இலங்கைத்தீவின் அமைவிடத்தின் மூலோபாய முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இன்னமும் சிலர் பிராந்தியத்தில் சீன ஆதிக்கம், முத்துமாலைத் திட்டம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள. இவர்களின் கருத்துகளில் சிறிதளவேனும் உண்மைத்தன்மை இல்லை என நிராகரித்து விடமுடியாது. இருப்பினும் மேற்குலகத்தின், கடந்தகால, தற்கால நடவடிக்கைகளை அவதானிக்குமிடத்து, இலங்கைத் தீவின் மீதான மேற்கின் கவனத்தை,
தாராண்மைவாத உலக ஒழுங்கினை(liberal world order) ஏற்படுத்தும் அதன் செயற்பாடுகளின் ஒருபகுதியாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 2002ம் ஆண்டிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இலங்கைத்தீவு மீதானமேற்குலகத்தின் நடவடிக்கைளை இந்த அடிப்படையில் அவதானிக்க முடியும்.
தாரண்மைவாத சர்வதேசியம் (liberal internationalism) என்பது நாடுகளை, மனிதவுரிமை,ஐனநாயகத்தைப் பேணுதல், நல்லாட்சி போன்றவிடயங்களில் தாராண்மைவாத ஒழுங்குக்குள் கொண்டுவருவது என்றும் அதற்காக இறைமைகொண்ட நாடுகளில் தலையீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் மேற்குலகின் வெளியுறவுக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தலையீடுகளை மேற்கொள்ளுவதற்கு ஐநா சபை, ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் போன்ற பன்னாட்டு மாற்றங்களை மேற்கு நாடுகள் நன்கு பயன்படுத்தி வருகின்றன.
நாடுகளுக்கிடையிலான கணிப்பின்படி, மனிதவுரிமைகள், சனநாயகத்தைப் பேணுதல் போன்றவிடயங்களில் சிறிலங்கா 89வது இடத்திலிருக்கிறது. ஐநா மனிதவுரிமைச்சபையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் அனைத்தும் அதற்கு கீழிருக்கின்றன. சிறிலங்காவிற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்கசார்பு நாடுகளான ஐக்கிய அரபுகள் அமீரகம் (UAE), சவுதி அரேபியா என்பனமுறையே 149வது, 163வது இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தகவல்களிலிருந்து தாராண்மைவாத உலக ஒழுங்கு பற்றி இந் நாடுகள் கொண்டுள்ள அச்சத்தை புரிந்து கொள்ளமுடிகிறது.
இப்போது ‘வழி’ காட்டிகள் விடயத்திற்கு வருவோம். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை ஐநா மனிதவுரிமைச்சபையில் நிறைவேற்றும் விடயத்தில் இங்கு நாம் குறிப்பிடும் வழிகாட்டிகள் அனைவரும் உடன்படுகிறார்கள்.சர்வதேசத் தலையீடு விடயத்திலும், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற விடயத்திலும் இவர்களுக்கிடையில் ஒருமித்த கருத்து நிலவுகிறது. இருப்பினும், இவ்வாறான சர்வதேச நகர்வுகளினூடாக தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கு இவை கடைப்பிடிக்க முனையும் அணுகுமுறையில்தான் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும், அதன் ஆதரவு அமைப்புகளான அருட்தந்தை இமானுவலின் உலகத்தமிழர் பேரவை, கனேடியதமிழ் கொங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் கொங்கிரஸ் போன்ற புலம்பெயர்தமிழ் அமைப்புகளும் முற்று முழுதாக மேற்கின் தாராண்மைவாத நகர்வுகளுக்கு உதவுவர்களாகவும் தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளை இவர்கள் இரண்டாம்பட்சமாக எடுத்துக்கொள்வதாகவும் தெரிகிறது. ஆகையால் அமெரிக்கத் தீர்மானம்முழு சிறிலங்கர்களுக்கும் கிடைத்த வெற்றி என தமிழ்த் தேசியவாதக் கட்சியினால் கூறமுடிகிறது.
தமிழ்த் தேசியவாத அடையாளங்களைத் துறந்து ‘சிறிலங்கர்களாக’ தங்களை நிலைநிறுத்த கூட்டமைப்பின் தலைமை அண்மைக்காலமாகப் படாதபாடுபடுகிறது. இதனைச் சிலர் ‘புலிநீக்க அரசியல்’ எனக் கூறினாலும், தேர்தல்காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு `புலிநிறை` அரசியலே கூட்டமைப்புக்கு தேவைப்படுகிறது என்ற முரண்நிலையயையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த இரட்டை நிலைப்பாட்டை கூட்டமைப்பு கனகச்சிதமாகப் பேணிவருகிறது. சர்வதேச தொடர்பாடல்களுக்கு நியமன உறுப்பினர் சுமந்திரனும், தமிழ் மக்களின் gallery இல் நடித்துக்காட்டி, உசுப்பேத்துதற்கு சிறிதரன், சிவாஜிலிங்கம்,அரியநேந்திரன் போன்றவர்களும் (சென்னைத்தமிழில் கூறுவதானால் டம்மி பீசுகளும்) கூட்டமைப்புக்கு தேவைப்படுகிறது.
கூட்டமைப்பைச் சேர்ந்த ‘வழிகாட்டிகள்’ திசைதெரியாத நிலையில் ஜெனிவாவில் கூடாரமடித்திருந்தாலும், நாடுகள் மட்டத்திலான அதிகாரிகளுடனான தொடர்பாடல்களை சுமந்திரனும், அவரது உதவியாளரான நிரன் அங்கிற்றல் என்பவருமே மேற்கொண்டிருந்தனர். சுமந்திரனின் ஏற்பாடுகளுக்கு புறம்பாக நாடுகளின் பிரநிதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த அனந்தி சசிதரன் எடுத்த முயற்சிகளுக்கு சுமந்திரனும் அவரது ஆதரவாளர்களும் முட்டுக்கட்டை போட்டதாக அறியமுடிகிறது. அனந்தியை `புலி ஆதரவாளர்’ என ஒதுக்கி வைக்கும் விடயத்தில், உலகத் தமிழர் பேரவையில் அங்கம் வகிக்கும் அமைப்புகளும் முன்னின்றதாகவும், கனேடிய தமிழ் கொங்கிரசின் பிரதிநிதி ஒருவர் அனந்தியை ஒரு `loose cannon’ எனவும் அவரது மொழிபெயர்ப்பாளரை ஈ.பி.டி.பி ஆதரவாளர் எனவும் வெளிநாட்டு தன்னார்வச் செயற்பாட்டாளர்களுக்கு கூறியதாக அத்தரப்பிலிருந்து தெரியவருகிறது.
தாராண்மைவாத நடைமுறைகளை மீறாமல், அதேசமயம் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளில் விட்டுக்கொடுக்காமல் நாடுகளின் பிரதிநிதிகள் மட்டத்தில் செயற்படக்கூடிய இளைய தலைமுறைச் செயற்பாட்டாளர்கள் பலர் இப்போது முன்னணிக்கு வந்துள்ளமை சற்று ஆறுதலளிக்கிறது. இத்தகைய தகமைகளக் கொண்டவராகவும், தமிழ் மக்களின் போராட்டத்தினை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லக்கூய ஒரு தலைவராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரைக் இனங்காட்டுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. எந்தவொரு வெளிச்சக்திகளுக்காகவும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஒருவராக அவர் இருப்பதனால் அதிகார மையங்கள் மட்டத்தில் அவர் விருப்புக்குரியவராக இருப்பார் என எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அவர்களால் புறக்கணிக்க முடியாத ஒரு ஸ்தானத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பலத்தினை தாயக புலம்பெயர் தமிழ் மக்களே வழங்கவேண்டும்.