திண்டாடும் உலகப் பொருளாதாரமும் திணறும் மைய வங்கிகளும்

646

2008-ம் ஆண்டில் விழுந்த உலகப் பொருளாதாரம் எழும்ப முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உலக நாடுகளின் மைய வங்கிகள் 2008-ம் ஆண்டிலிருந்து தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமது நாணயப் பெறுமதிகளைத் தத் தம் நாட்டுப் பொருளாதார நிலைக்களுக்கு ஏற்ப மாற்றப் பெரு முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாணயப் புழக்கத்தை அதிகரிப்பதும் அதனால் ஏற்படும் நாணயப் பெறுமதி வீழ்ச்சியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த மைய வங்கிகள் படும்பாடு பெரும்பாடு.

எரி பொருள் ஒளிகாட்டும்

உக்ரேனிலும் லிபியாவிலும் பிரச்சனைகள் தொடர்கின்றபோது உலக எரிபொருள் விநியோகம் பாதிப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் உலகில் எரிபொருள் தேவை குறைந்து கொண்டிருப்பதாக பன்னாட்டு வலுவள முகவரகம் தெரிவிக்கின்றது. 2014-ம் ஆண்டுக்கான சராசரி எரிபொருள் தேவை நாளொன்றிற்கு 180,000 பீப்பாய்களால் குறைவடைந்து விட்டதாக இந்த முகவரகம் தெரிவிக்கின்றது. 2014-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான எரிபொருள் பாவனை நாள் ஒன்றிற்கு 700,000 பீப்பாய்கள் மட்டுமே. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவான எரிபொருள் பாவனையாகும். எரி பொருள்பாவனையும் அதற்கான தேவையும் பொருளாதாரம் வளர்ச்சியை எதிர்வு கூறக் கூடியவை. உலக எரிபொருள் பாவனை உலகப் பொருளாதாரம் இன்னும் 2008-ம் ஆண்டின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனச் சுட்டிக் காட்டுகின்றது. 2014-ம் ஆண்டு ஜி-20 நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சி 2013-ம் ஆண்டைப் போலவே 2.8 விழுக்காடாகவே இருக்கும். 2015-ம் ஆண்டு இது 3.2 ஆக அதிகரிக்கலாம். ஜி-7 நாடுகளின் பொருளாதாரம் 2013-ம் ஆண்டு 2.2 விழுக்காடு வளர்ந்தது. 2014-ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்த வளர்ச்சி 2 விழுக்காடு மட்டுமே.

நாணயப் போர்

மைய வங்கிகள் ஒரு நாட்டின் வட்டி விழுக்காட்டைத் தீர்மானைக்கும் போது நாட்டின் பணவீக்கம், பொருளாதார வெளியீட்டு வித்தியாசம் (ழுரவிரவ புயி) ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் உண்மையான மொத்தப் பொருளாதார உற்பத்திக்கும் அதன் மொத்த உற்பத்தி ஆற்றலுக்கும் (pழவநவெயைட) உள்ள வித்தியாசத்தை வெளியீட்டு வித்தியாசம் என்பர். பணவீக்கத்தின் ஒன்றைரைப் பங்கையும் வெளியீட்டு வித்தியாசத்தையும் நாட்டின் வட்டி விழுக்காட்டிற்கு ஏற்ப இன்னும் ஒரு கணியத்தையும் கூட்டி வரும் தொகையை நாட்டின் வட்டி விழுக்காடாக இருக்க வேண்டும். ஆனால் பல நாடு மைய வங்கிகள் அப்படிச் செய்யாமல் தமது நாட்டுப் பொருட்கள் மற்ற நாடுகளில் மலிவாக இருக்கக் கூடியதாக தமது நாட்டின் நாணயப் பெறுமதி குறைவாக இருக்கக் கூடிய வகையில் தமது வட்டி விழுக்காட்டை தீர்மானிக்கின்றன. இதை நாணயப் போர் என்பர். இந்த நாணயப் போரில் பெரு வெற்றி அடைந்த நாடு சீனாவாகும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் எழும்புகின்றன நிமிரவில்லை.

2008-ம் ஆண்டின் பின்னர் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரமும் ஐக்கிய இராச்சியப் பொருளாதாரமும் ஒரு திடமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டப் போதும் அவை காத்திரமான வளர்ச்சியாக இல்லை. அதே வேளை யூரோ வலய நாடுகளின் பொருளாதாரங்கள் இன்னும் மந்த நிலையிலேயே இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்புக்கள் ஏற்படுகின்ற போதிலும் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க இரு நாடுகளும் பெரும் பாடு படுகின்றன. அமெரிக்காவில் ஒருவரு வேலை கொடுக்க அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு முப்பத்தேழாயிரம் டொலர்களை உட்செலுத்த வேண்டியுள்ளது. 2008-ம் ஆண்டு இது 7600 டொலர்களாக இருந்தது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீதான அதன் மைய வங்கியின் பிடி தளர்ந்து கொண்டு போவதைக் காட்டுகின்றது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்க எடுக்கும் பெரு முயற்ச்சிகளுக்கு மத்தியிலும் அமெரிக்க டொலர் தனது உலக நாணய நிலையை இழக்காமல் இருக்கின்றது. அமெரிக்க டொலரின் பெறுமதியும் உறுதியாக இருக்கின்றது. ஆனால் அமெரிக்காவில் உள்ள பல் வேறு உளவுத்துறைகள் அமெரிகாவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என எச்சரிக்கின்றன. இந்த வீழ்ச்சி அமெரிக்காவின் உலக ஆதிக்க நிலையைப் பெரிதும் பாதிக்கலாம். பொருளதாரச் சுழற்ச்சி நிபுணர்கள் 2016, 2017 ஆண்டுகளில் அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம்

ஒரு நாட்டின் வங்கிகள் தமது காப்பு வைப்புக்களை மைய வங்கிகளில் இடுவதுண்டு. இவற்றிற்காக மைய வங்கிகள் வைப்பிடும் வங்கிகளுக்கு வட்டி வழங்குவதுண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய மைய வங்கி வைப்பிடும் வங்கிகளிடம் இருந்து கட்டணம் அறவிடும் முறையை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இது ஒரு எதிர்மறை வட்டி விழுக்காட்டை உருவாக்கும் முயற்ச்சியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைச்சன் பிள்ளை ஜேர்மனியின் 2014 ஓகஸ்ட் மாதம் வெளிவந்த வியாபார சூழ்நிலைச் சுட்டெண் ஜெர்மனியின் பொருளாதாரம் இன்னும் மந்த நிலையிலேயே இருக்கின்றது எனச் சுட்டிக் காட்டுகின்றது. ஜேர்மனி மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சிக்கன நடவடிக்கையில் ஈடுபட நிர்பத்திக்கின்றது. இந்த சிக்கன நடவடிக்கையைப் பின்பற்றுவது தொடர்பாக பிரான்ஸில் பெரும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகள் வருமானம் குறைந்தவர்களைப் பாதிக்கும் என்பதால் பிரெஞ்சு இடது சாரி அரசியல்வாதிகள் இவற்றிற்கு கடும் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள். இதனால் பிரெஞ்சுத் தலைமை அமைச்சர் பதவி விலகி அங்கு ஆட்சிய் மாற்றம் ஏற்படவிருக்கின்றது. பிரெஞ்சுப் பொருளாதாரம் 2014-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 0.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது.

எகிறும் இந்தியா

ஆண்டொறின்ற்கு ஒரு கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு உண்டு. இதற்கு இந்தியா குறைந்த அளவு எட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் 4ஐந்து விழுக்காட்டிலும் குறைவாகவே வளர்ந்தது. 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.6 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது. இக்காலாண்டில் இந்தியக் கைத்தொழில் துறை நிலக்கரிச் சுரங்கத் துறை ஆகியன தேய்வைச் சந்தித்தன. 2014-ம் ஆண்டு இந்திய ரூபாவின் பெறுமான வீழ்ச்சியைத் தடுக்க இந்திய மைய வங்கி வட்டி விழுக்காட்டை அதிகரித்தது. 2015-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் ஐந்து விழுக்காடு வளர்ச்சியை எட்டலாம். 2015-ம் ஆண்டு 5 முதல் 5.6 விழுக்காடு வளர்ச்சி ஏற்படலாம். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உள்ளகக் கட்டுமானங்களில் பெரும் முதலீடு செய்ய வேண்டி இருக்கின்றது. இதற்கு அந்நிய முதலீட்டை வரவேற்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகக்த் தெரியவில்லை. இரசியாவிற்கு எதிரான முலதனத் தடை இந்தியாவில் அந்நிய முதலீட்டை இலகுவாக்குவதுடன் மலிவாகக் கிடைக்கவும் செய்யும். நரேந்திர மோடி தனது பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியனை நியமிப்பது அவர் இந்தியாவை சந்தைசார் பொருளாதாரமாக “சீர்திருத்தப்” போகின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இவர் ஏற்கனவே இந்திய மைய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜனுடன் இணைந்து நூல்கள் எழுதுவதிலும் ஆய்வுப் பத்திரங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டவர்.

பிரேசில்

பிரேலின் மைய வங்கி பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாலரை பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வழங்குதலை செய்ய முனைகின்றது. இது பிரேசிலின் இரண்டாவது பெரிய முயற்ச்சியாகும். பிரேசிலின் பொருளாதாரம் 2014-ம் ஆண்டு 1.8 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரேசிலிய மைய வங்கி பொருளாதாரம் 2.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்வு கூறியிருந்தது. பிரேசிலிய மைய வங்கி நாட்டின் பணவீக்கம் 4.5 விழுக்காட்டிலும் குறைவானதாக இருக்க வேண்டும் என முயல்கின்றது. ஆனால் தற்போதைய பனவிக்கம் 6.2 விழுக்காடாகும்.

சீன நாட்டாண்மைகளும் கூட்டாண்மைகளும்

கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் மைய வங்கியும் அரசும் நான்கு பெரும் பிரச்சனைகளை எதிர் கொண்டிருந்தன:
1. வீடு மற்றும் கட்டிங்களின் (Real Estate) விலை அதிகரிப்பு.
2. உள்ளூராட்சிச் சபைகளின் கட்டுக்கடங்காத கடன்கள்.
3. நிழல் வங்கிகள் (Shadow Banking) எனப்படும் பதிவு செய்யாத கடன் வழங்கு நிறுவனங்களின் அதிகரிப்பு.
4. கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) பளு அதிகரிப்பு.

இப்பிரச்சனைகளால் சீனப் பொருளாதாரம் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகி திடீர் சரிவை சந்திக்கலாம் என 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் பல பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியிருந்தனர். இதில் கூட்டாண்மைகளின் கடன் பளு சீன மைய வங்கிக்குப் மிகப்பெரும் சவாலாகும். சீனாவில் உள்ள கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) உலகிலேயே பெரியதாகும். 2013-ம் ஆண்டு இக்கடன் 142ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) 13.1ரில்லியன்கள் மட்டுமே. சீனக் கூட்டாண்மைகளின் கடன் சீனவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 120 விழுக்காடாகும். 2014-ம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் சீன நிறுவனமான Shanghai Chaori Solar தனது கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை சீன பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியது. கடன் மீளளிப்பு வலுக்களைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடும் நிறுவனமான Standard & Poor சீனாவின் கூட்டாண்மைகளின் கடன் பளு ஆபத்தான வகையில் உயர்வாக இருக்கின்றது என அறிவித்தது. 1. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த படியால் கூட்டாண்மைகளின் நிதிநிலைமை பாதிப்படைந்தமை; 2. சீன அரசு நாட்டில் கடன் வழங்குதல்களைக் கட்டுப்படுத்தியமை 3. அதிகரித்த வட்டி ஆகியவை சீனக் கூட்டாண்மைகளின் கடன் பளுவை அதிகரித்தன

சீனக் கூட்டாண்மைகளின் இலாபத்திறன் ஆறு விழுக்காடாக இருக்கும் நிலையில் அவற்றின் கடன்களின் வட்டி விழுக்காடு ஏழிற்கும் அதிகமாக இருப்பது ஒரு நல்ல பொருளாதார அறிகுறியல்ல. சீனக் கூட்டாண்மைகளின் நிதிப் பாய்ச்சல் சீராக இல்லாத்தால் கடன்பளு மேலும் அதிகரிக்கின்றது. நிதிப் பாய்ச்சல் குறைவதால் கடன் படுதலைத் தொடர்ந்து கடன் பளுவால் நிதிப்பாய்ச்சல் குறைதன் என்பது ஒரு தொடர் சுழற்ச்சியாகி நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் கடனுக்கும் அதன்மொத்தப் பெறுமதிக்கும் அதன் உள்ள விகிதாசாரம் கடன் நெம்புத் திறனாகும் (debt leverage). சீனாவில் நிதி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கூட்டாண்மைகளின் கடன் நெம்புத் திறன் 113 விழுக்காடாக இருக்கின்றது. அதாவது ஒரு மில்லியன் பெறுமதியான ஒரு கூட்டாண்மை 113 மில்லியன்கள் கடன் பட்டுள்ளது. இந்தக் கடன் நெம்புத்திறன் குறைவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதைத் தடுக்க சீன அரசு சீனப் பொருளாதாரத்திற்கு நான்கு ரில்லியன் யூவான்களை உட்செலுத்தியது. இதில் பெரும் பகுதி கூட்டாண்மைகளுக்கு கடன்வழங்குவதாக அமைந்தது. அவற்றில் பெரும்பகுதி சீனா முன்னுரிமை கொடுத்த துறைகளில் முதலிடப் படவேண்டும் எனபது சீன அரசின் நிபந்தனையாக இருந்தது. ஆனால் அத்துறைகள் இலாபத் திறன் குறைந்தனவாக இருந்தன. தற்போது சீனவின் கூட்டாண்மைகளின் கடன்களில் நிலுவை செலுத்த முடியாத கடன்கள் (non-performing loans) அதாவது உரிய நேரத்தில் மாதாந்த கடன் கொடுப்பனவையோ அல்லது வட்டிகளையோ கொடுக்க முடியாத கடன்கள்) அதிகரித்துச் செல்கின்றன. இது ஒரு ஆபத்தான நிலை என கூட்டாண்மைகளின் கடன்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவின் மேற்பார்வை செய்யும்National Development and Reform Commission இன் கூட்டாண்மை கடன் வழங்குதலை மேற்பார்வை செய்யும் பிரிவில் சீன அரசு பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. அப்பிரிவின் தலைவரை இடமாற்றம் செய்து புதியவரை அப்பதவிக்கு அமர்த்தியுள்ளது.தற்போது கூட்டாண்மைத் துறையில் ஏற்பட்டது போன்ற ஓர் ஆபத்தான கடன் அதிகரிப்பு 1998-இல் இருந்து 2001-ம் ஆண்டு வரை சீன அரச துறையில் ஏற்பட்டது. அப்போது சீன அரசு சீனப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக உள்கட்டமைப்புக்களிலும் (infrastructure) வீடுகள் மற்றும் கட்டிங்களிலும் (Real Estate) பாரிய முதலீடுகளைச் செய்தது.

இதற்காக சீன அரசு பெருமளவில் கடன்பட்டது. கடன் பளுவைக் குறைக்கும் முகமாக வட்டி விழுக்காடு செயற்கையாக குறைந்த நிலையில் வைத்திருக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் பெரு வளர்ச்சியைக் கண்டது. 1998இல் இருந்து 2001 ஆண்டு வரை சீன அரச கடனின் அசூர வளர்ச்சி ஆபத்தானது எனப் பொருளாதார நிபுணர்கள் அப்போதும் எச்சரித்தனர். ஆனால் சீனா அந்தக் கடன் பளுவைச் சமாளித்து விட்டது. 1996-ம் ஆண்டு ஜப்பானின் அரச கடன் நெம்புத்திறன் எண்பது விழுக்காடாக இருந்த போது ஜப்பான் கடன் நெருக்கடியைச் சந்திக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் தற்போது ஜப்பானில் அரச கடன் நெம்புத்திறன் இருநூறு விழுக்காடாக உயர்ந்து விட்டது. ஜப்பான் கடன் நெருக்கடியைச் சந்திக்காமல் தன் கடன் பளுவைச் சமாளித்துக் கொண்டே இருக்கின்றது. சீனா தனது பொருளாதாரத்தை சந்தை சார் பொருளாதாரமாகச் சீர்திருத்தம் செய்வதை மேலும் துரிதப்படுத்தும் போது அது பலதுறைகளில் பொருளாதார் முன்னேற்றம் அடையும். அப்போது சீனக் கூட்டாண்மைகளின் இலாபத் திறன் அதிகர்த்து அவற்றால் கடன்பளுவைச் சமாளிக்கக் கூடிய நிலை ஏற்படுமென நம்பலாம்.

தீக்குள் விரலை வைத்த இரசியா

இரசியப் பொருளாதாரம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பவர்களால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றது. இரசியாவின் மக்கள் தொகை குறைந்து கொண்டு செல்வது அதன் மொத்த தேசிய உற்பத்தியைப் பாதிக்கின்றது. நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பாலும் படித்த இளைஞர்கள். இது போதாது என்று இரசியா உக்ரேன் விவகாரத்தில் தலையிட்ட படியால் அதற்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வந்த பொருளாதாரத் தடை இரசியாவைப் பாதிக்கத் தொடங்கி இருக்கின்றது. இரசியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அலெக்ஸி உல்யுகயேவ் இரசியப் பொருளாதாரம் தேய்வுச் சுழற்ச்சிக்குள் நுழைந்து விட்டது என்கின்றார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிதும் தங்கி இருக்கும் இரசியப் பொருளாதாரத்தை சீனாவையும் இந்தியாவையும் நோக்கி நகர்த்தும் முயற்ச்சி வெற்றியளிக்க நீண்ட நாட்கள் எடுக்கும். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எரி வாயு விநியோகம் செய்ய பெரும் முதலீட்டை இரசியா செய்ய வேண்டியிருக்கும். இரசியாவின் மூலதனத் தேவையில் அரைவாசிப் பங்கு மேற்கு நாடுகளிடம் இருந்தே பெறப்படுகின்றன. இதனால் இரசியாவின் எரிவாயு விநியோகத்திற்கு ஆப்பு வைக்க மேற்கு நாடுகள் இரசியாவிற்கான மூலதனத் தடையை மேற்கொள்ளவிருக்கின்றன.

தற்போது மத்திய கிழக்கிலும் உக்ரேனிலும் இருக்கும் கொதி நிலை 2015-ம் ஆண்டு தென் சீனக் கடல் கிழக்குச் சீனக் கடல் தாய்வான் எனப் பல இடங்களில் விரிவடைய வாய்ப்புண்டு. 2017-ம் ஆண்டின் மையப் பகுதிக்குப் பின்னர்தான் உலகப் பொருளாதாரம் தற்போதைய மந்த நிலையில் இருந்து மீட்சியடையும்.