தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போதிய பணபலத்தோடும் ஊடகங்களின் உதவியுடனானபிரச்சார பலத்தோடும் பெருந்தலைவர்கள் வரும் தங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு பணங்கொடுத்து ஆட்களைத் திரட்டி சனநெரிசலை ஏற்படுத்தி, தங்களுக்கிருக்கும் ஆதரவை பிரமாண்டப்படுத்தி மக்கள்முன் காட்டுகிறார்கள். தலைவர்களைப் பார்க்கவும்,கூட்டத்தில் பங்குபற்றும் சினிமாப் பிரபலங்களைப் பார்க்கவும், பணத்திற்காகவும், சாப்பாட்டுப் பார்சலுக்காகவும், கொடுக்கப்படும் பலஅன்பளிப்புகளுக்காகவும் என்று, பல்வேறுபட்ட நோக்கங்களோடு சனங்கள் இந்தப் பணபலமிக்க கட்சிகளின் கூட்டங்களுக்கு முண்டியடித்துக்கொண்டு திரள்கிறார்கள்.
அதே வேளை சீமானின் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பதிலும், மக்கள் கூடக்கூடிய தெருச்சந்திகளில் சிறுசிறு கூட்டங்களைப் போட்டுத் தாங்கள் தயாரித்துள்ள செயல் திட்டவரைபை மக்களுக்கு விபரித்து வாக்குச் சேர்ப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் பெரும்திருவிழாக்களாகவே நடைபெறுவது வழக்கம்.ஆனால் இம்முறை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து தலையெடுத்திருக்கும் நாம் தமிழர் கட்சி இந்தப் பாரம்பரியத்திற்குப் புறநடையாகத் தங்களின் கொள்கைத் திட்டங்களை மக்களின் வீட்டுவாசற்படிக்கே கொண்டு செல்லும் மிகவும்சிக்கனமானதும், நேர்மையானதும், ஆடம்பரமற்றதுமான தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடுவதால், ஒப்பீட்டு ரீதியில் அக்கட்சியின் பலம் எத்தகையது என்பதை ஊகிக்க முடியவில்லை. அதனால், தமிழ்நாட்டின் உள்ளுராட்சிக் கட்டிலில் புத்தம் புதிதாக அடிமட்டத்திலிருந்து முளைத்தெழுந்துள்ள `நாம்தமிழர்’கட்சி ஏறக்கூடிய வாய்ப்புகள் அறவேயில்லையென நாம் எளிதில் தீர்மானித்துவிட முடியாது.
உண்மையில் நாம் தமிழர் கட்சியின் இலக்கு அடுத்த ஐந்து வருடங்களில், அதாவது 2021 இல் நடைபெறப் போகும் சட்டசபைத் தேர்தல்தான். அந்த ஐந்துவருட காலங்களுக்குள் அரசியலில் கால்பதித்து வளர்ந்து விடுவதற்கான முன்னோடி முயற்சியாக அல்லது ஓர் பைலட் பரீட்சையாகவே இந்தத் தேர்தலை அக்கட்சியினர் பாவிக்கிறார்கள். இந்தத்தேர்தலில் காட்டப்படும் சகுனம் அவர்களுக்கு நல்லதாயமைய பலம்பெயர் தமிழர்களனைவரும் தம்மாலான உதவிகளைச் செய்து அவர்களைக் கைதூக்கி விடுவதே தமிழ் தேசிய இனத்தின் எதிர்கால நலனுக்கு சாதகமாயமையும்.
எதிர்காலத்தில் நாம் தமிழர் என்ற அடிப்படைக் கோட்பாட்டோடு திராவிட மாயையிலிருந்து விடுபட்டு வங்காள விரிகுடாவில் குறிப்பாகப் பாக்கு நீரிணையின் இருபுறத்திலும் உள்ளதமிழர் தேசியத்தையும் அவர்களது தாயகத்தையும் ஒன்று படுத்த முயற்சிக்கும் சீமானின் நோக்கம் மிகவலிமையானது. அவர்களது செயல்திட்ட வரைவின் 237ம் பக்கத்தில `ஈழம் எங்கள் இனத்தின் தேசம்’ என்று தலையங்கமிடப்படடுள்ளது. இதுவரை எந்தக் கட்சியினரும் இத்தகைய துணிவோடும் ஓர்மத்தோடும் இத்தகைய கோட்பாடுகளை முன் வைத்ததில்லை. எமதுஎதிர்காலச் சந்ததியின் உள்ளுணர்வில் நாம் பதித்துவைக்க வேண்டிய மிக முக்கிய கருத்துரு பாக்கு நீரிணையின் இருமருங்கிலுமுள்ள எமது தமிழர் தாயகம்தான்.
ஆரம்பத்தில் திராவிட தேசமென்ற கொள்கையைப் பெரியார் உருவாக்கிவிட்டு அதனை அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கையில் ஒப்படைத்தார். உண்மையில் தமிழரல்லாதவர்களால் புனையப்பட்டதே திராவிடக் கோட்பாடு. அதனைத் தமிழர்கள் தவிர்ந்த ஏனைய திராவிட இனத்தவர்கள் சட்டைசெய்யவேயில்லை. ஜவகர்லால் நேருவின் காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அரசினால்கொண்டுவரப்பட்ட பிரினைக்கு எதிரான சட்டத்தால் அண்ணா பயந்துபோய் திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டார்.
அதனால்,ஏனைய திராவிட மாநில மக்களின் ஒத்துழைப்பின்மையாலும் பிரிவினைக் கோசத்துக்கான தடையாலும் திராவிட நாட்டுக் கோரிக்கையை திராவிட இயக்கங்களால் வலுப்படுத்த முடியாது போய்விட்டது. ஆனாலும் தங்கள் அடிப்படைக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் கலைக்கப்படாமல் தொடர்ந்து இயங்கியது. அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதலமைச்சராக இரண்டு வருடங்களே இருந்தார். அவரின்மரணம் கலைஞர் கருணாநிதியை அண்ணாவின் இடத்தில் வைத்துவிட்டது. அண்ணா மறைந்ததுமே எம்ஜிஆருக்கும் கலைஞருக்குமிடையில் இழுபறி தொடங்கிவிட்டது. அண்ணாஇறந்து மூன்று வருடங்களுக்குள்ளாகவே எம்.ஜி.ஆர் திமுக விலிருந்து நீக்கப்பட்டு விட்டார். அதன் விளைவாக தற்போது ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திமுக என்னும் அடுத்த திராவிடக் கட்சி தோன்றியது. இந்தத் திராவிடக் கட்சிகளில் தலைமைப் பொறுப்புகளை வகித்தவர்களெல்லாம் தமிழரல்லாதவர்களாக இருந்ததால்தமிழரின் பெயரைச் சொல்லி ஒரு கட்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்கி வளர்த்தெடுக்கவோர் தலைவனில்லாமற்போனதுதான் தமிழரின் துரதிஸ்டமாகப் போய்விட்டது. மலையாளியான எம்ஜிஆரால், தான் தலைமை வகித்தகட்சியைத் தமிழென்னும் அடையாளத்தோடு கட்டமைக்கவோ தமிழர் கட்சியாக வளர்த்தெடுக்கவோ முடியவில்லை. தெலுங்கரான வை.கோபாலசாமி கருணாநிதியிடமிருந்து பிரிந்த போதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமென்ற கட்சியையே நிறுவக்கூடியதாயிருந்தது. ஆக, தினத்தந்திப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்த சி.பா ஆதித்தனார் மட்டுமே `நாம் தமிழர்’ என்ற பெயரோடு இயக்கத்தைத் தொடங்கினார். ஆனால் அவராலும், திமுக அரசில் அமைச்சராக இருந்ததால் நாம் தமிழரியக்கத்தை அரசியல் ரீதியில் ஓர் பெரிய கட்சியாக வளர்த்தெடுக்க முடியவில்லை.
ஆந்திராவில் என் டி ராமராவ் எம்ஜிஆரைப் போன்றே பெரிய நடிகனாகவும், செல்வாக்குள்ள தலைவனாகவுமிருந்து தெலுங்கு தேசமென்னும் கட்சியை உருவாக்கினார். தமிழ்நாட்டில் அப்படியொரு தமிழ்த் தலைவன் இருக்கவேயில்லை. செல்வாக்கிருந்த எல்லோருமே பிற மாநிலத்தவர்களாகவே இருநந்தனர்.அதனால் திராவிட மாயையே வெகுவாகக் வேரூன்றிவிட்டது. இந்த அவலநிலையினால் தமிழ்நாடு, தமிழர் என்று சொல்லிக்கொள்ளவோர் அரசியல் குறியீடு இல்லாமல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறது. தற்போதுதான் `நாம் தமிழர்’ இயக்கம் சீமானை தலைமைஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழர் தேசியத்தை மையப்படுத்தித் தோன்றியிருக்கிறது.
`சூடு கண்ட பூனை அடுப்படியை நாடாது’ என்பது நாமறிந்த பழமொழி. ஈழத்தமிழருக்கும் இது பொருந்தும். எமது கடந்தகால அரசியல்வரலாறு எம்மைத் தமிழ்நாட்டின் அரசியலுக்குள் மூக்கை நுழைப்பதை அடியோடு வெறுக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. முறையேதிமுக, அதிமுக என்னும் மக்கள் செல்வக்குள்ள இரண்டு கட்சிகளும், மத்திய அரசின் இலங்கை தொடர்பான கொள்கைக்கு ஊறுவிழைக்காமல் நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக எமக்கு நடந்த அநீதிகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தன. அவ்வப்போது தமிழ் மக்களையும், தமிழ் பிரதிநிதிகளையும் திருப்திப்படுத்த சட்டசபையில் சில தீர்மானங்களைக்கொண்டுவந்து நிறைவேற்றியதோடு தங்கள் கடமை முடிந்ததென இருந்து விட்டன.
முள்ளி வாய்க்காலில் தமிழினப்படுகொலை நடந்தபோது தனது குடும்பத்தவர்களுக்கு மந்திரிப்பதவி பெற்றுக்கொடுப்பதற்காக மத்திய அரசுடன் கருணாநிதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டாரேயொழிய அந்தப் படுகொலையை நிறுத்தி ஓர் யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவருமாறு தான் அங்கம் வகித்த மத்திய அரசைக் கோரவில்லை. சும்மா உண்ணாவிரத நாடகமாடுவதும், வைத்திய சாலையில் போய் ஏதாவது காரணத்தைக் கூறிப் படுத்துக் கொள்வதுமாகவேயிருந்தார். அவருக்கு தனது குடும்பத்தவர்களின் மந்திரிப்பதவியே அப்போதைக்கு மிகமுக்கிய விடயமாகவிருந்தது. கருணாநிதியின் இந்தக் கபட நாடகத்தையும் தமிழ் நாட்டுத் தமிழர்களின் ஆதரவற்ற நிலையையும் நன்கு மதிப்பிட்ட இந்திய நடுவண்ணரசின் கொள்கை வகுப்பாளர்கள், மத்திய அரசுடனான கருணாநிதியன் உறவையும், மந்திரிப் பதவிகளுக்காக அவர் வாதாடுவதையும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை ஓர் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைத் தாக்கத்திற்கு உட்படுத்தி, அவர்களது விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, எமது தேசியத் தலைமையையும் அழித்துவிடும்தந்திரோபாயத்தில் இறங்கினர். அதற்காக பேரழிவையேற்படுத்தும் எரிவாயுக்குண்டுகள் உட்பட பல நச்சாயுதங்களை இலங்கையரசுக்கு வழங்கியதுமல்லாமல் தாமே முன்னின்று தமிழர்களுக்கெதிரான தாக்குதல்களையும் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து நடத்தினர். எமது ஆயுதக்கப்பல்கள் வரும் கடல்வழிகளை அவதானித்து அவற்றை நிர்மூலமாக்க ராடார் உட்படப் பல கருவிகள் இலங்கையரசுக்கு வழங்கப்பட்டதோடு, இந்தியக் கடற்படையும் பல நாசகார வேலைகளைச் செய்தது.
திமுக அரசு அமோக வெற்றியீட்டிப் பல பாராளுமன்ற உறுப்பினர்களை சோனியா காங்கிரஸாருடன் இணைந்து தமிழநாட்டின் பிரதிநிதிகளாக அனுப்பிய போதே முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் நடந்தன. இருந்தும் ஈழத்தமிழர்கள் இனக்கொலை செய்யப்பட்டார்கள். நாம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வளர்த்தெடுத்த எமது ஈழதேசியவுணர்வு ஊதியணைக்கப்பட்டது. நமது விலை மதிப்பற்ற தேசியத்தலைமையை நாமிழந்தோம். தமிழ் நாட்டிலோ மந்திரிப் பதவிகளுக்கான பேரத்தைக் கருணாநிதி நடத்திக்கொண்டு அங்கு எமது நிலைகண்டு கொதித்தெழுந்த மக்களுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தார்.
இந்தத் துரோகத்தை மறக்க முடியுமா ? இனிமேலும் இந்தத் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நமது தாய்த்தமிழ் நாட்டில் இருக்கத்தான் வேண்டுமா? “ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் தமிழக ஆட்சிக்கட்டிலில் மாறி மாறி அதிகரத்தைச் சுவைத்திருந்த திராவிடக் கட்சிகளின் துரோகம் தான்” என்கிறது நாம் தமிழர் கட்சியின் செயல் திட்ட வரைவு. அது மிகச்சரியான உண்மையாகும். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் திராவிட மாயையினால் ஏற்படுத்தப்பட்ட இந்தத்துரோகத்தனங்களை வரலாறு உள்ளளவும் மறக்காது, அதற்குப் பிரதியீடாக `நாம் தமிழரென்னும்’ தமிழர் தேசியக் கருத்தியலைப் பலமுள்ளதாக ஆக்கப் பாடுபட வேண்டும்.
நண்பர்களே!
வாருங்கள் சீமானின் கையைப் பலப்படுத்துவோம்.
நாம் தமிழர்! நாமே தமிழர்!