திராவிட மொழிகள்

433

இந்திய மக்களில் கால் பகுதியினரின் தாய்மொழியாகவும் உலகில் 3.7 சத வீதத்தினரின் தாய்மொழியாகவும் உள்ள இந்தத் திராவிட மொழிகள் அவற்றின் பிரதான மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றுடன் தெலுங்கானாவையும் புதுச்சேரியையும் உட்படுத்தி ஆறு பிரதேசங்களில் ஆட்சிமொழியாக உள்ளன. திராவிட மொழிகள் இந்தியாவின் பெரும்பான்மையோர் பேசும் ஆரியமொழிக் குடும்ப மொழிகளிலிருந்து வேறுபட்டுதமக்கென்றே மொழியியலில் ஒரு தனிப் பண்பு கொண்டவை.

அவசியமற்ற பிற மொழிக் கலப்புக்கு இடமளிக்காத எம் தாய் மொழியாம் கன்னித்தமிழே மொழி வல்லுனர்கள் கவனத்தை ஈர்க்கும் மொழியாக உள்ளது. வேதத்தையும்வேறும் பல இலக்கி யங்களையும் வளமாகக்கொண்ட இறந்த மொழியாம், பழமை கொண்ட மொழியாம் வட மொழிக்கு இணையாக வளம்கொண்ட இலக்கி யங்களைத் தன்னகத்தே கொண்டு அம்மொழி யின் தரத்திற்கு செம்மொழியாக உயர்ந்த ஒரே ஒரு வழக்கில் உள்ளமொழி தமிழேயாகும்.

தமிழின் பெருமை கூறுவதற்காக நான் இக்கட்டுரையை எழுதவில்லை. தமிழின் இந்தச் சிறப்புக்களையும் மாறாத தன்மையையும் தொல் மொழியுடன் உள்ள ஒற்றுமையையும் வைத்து தமிழை இறைவனால் படைக்கப் பட்ட மொழியாகவும், அதற்கு துணையாக லெமோரியா என்ற அறிவியல் நிராகரித்த கண்டமொன்றையும் தூக்கிப் பிடித்து தமிழிலிருந்துதான் மற்றைய திராவிட மொழிகள் மட்டும் அல்ல மேலும்பல மொழிகள் தோன்றியவை என்று ஒரு தப்பான கோட்பாடு முன் வைக்கப்படுகிறது. திராவிட மொழிகள் பற்றி ஓரளவு தகவல்களை அறிந்தாலே தமிழ்தான் எல்லாம் என்ற கோட்பாடு தவறென்பதற்கு சங்கதிகள் கிடைக்கலாம்.

இக் கட்டுரையில் இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகள் பற்றியும், பாகிஸ்தானில் பேசப்படும் ஒரு திராவிட மொழி பற்றியும் கூறும்போது அவை அனைத்துமே ஒரு ஆதி மொழி அல்லது தொல்மொழியிலிருந்துதானே குடும்பமாக வளர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.அதுபோல் அந்த ஆதி மொழியின் சகோதரமொழிகளாக இருந்தவையும் குடும்பங்களை உருவாக்கி இருக்க வேண்டும். அக்குடும்பங்கள் எவை என்பது இன்னும் தெரியாப் பொருளாகவே உள்ளது.

திராவிடக் குடும்பத்தை வடக்கு தெற்கு என இரு பெரும் பிரிவுகாகப் பிரித்துள்ளார்கள். மூன்றாவது பிரிவாக கொலமி பர்ஜி என்னும் சிறு பிரிவு ஒன்றும் உள்ளது. வட பிரிவில் ஆக மூன்று மொழிகள் மட்டுமே உள்ளன. அவை குருக்(அவுரன்), மோல்ரோ, பிரகுவி ஆகியவை. பெயருக்கு ஏற்றாற்போல் அவை வட இந்தியாவிலும் அதன் வடக்கிலும்தான் பேசப்படுகின்றன. தற்போது மோல்ரோ மொழியை இரு மொழியாகத் தேவையை ஒட்டி பிரித்துள்ளார்கள். படத்தில் அவதானிக்கவும். வட பிரிவின் பிரதேசம் பாரியது. கிழக்கே வங்கம், வங்கதேசம், ஒரிசா என்று தொடங்கி மேற்கே பாகிஸ்தானின் பாலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை செல்கிறது. இந்தச் சூழலை அவதானிக்கும்போது ஒரு காலத்தில், ஆரியர் வருகைக்கு முன் அவை எல்லாம் திராவிடர் வாழ்ந்த இடங்களாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Dravidian languages

வட பிரிவின் முதல் இரண்டு மொழிகளான குரூக்கும் மோல்ரோவும் மூன்று மில்லியன் வரையான மக்களால் ஒரிசா போன்ற இந்திய கிழக்குப் பதுதிகளில் பேசப்படுகிறது. பிரகுவி மொழி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படுகிறது. ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் இம் மொழி பேசுபவர்கள் உள்ளார்கள். ஆதி நாகரிகங்களில் ஒன்றான சிந்து வெளி நாகரிகத்துடன் நிச்சயம் தொடர்புடையது இந்தமொழி.

தென் பிரிவு பற்றிக் கூறுமுன் ஒன்று சொல்லவேண்டி உள்ளது. எங்கள் மொழிகள்பற்றி ஆய்வு செய்த மொழி அறிஞ்ஞரும் துறவியும் திராவிட மொழிகளின் தனித் தன்மையை உலகுக்கு வெளிக்கொணர்ந்து அரும் பெரும் சேவையாற்றியவருமான கால்ட்வெல் அவர்கள் 23 மொழிகளை அடையாளம் கண்டார். நான் மொழிகளின் பெயர்களை மட்டும் கூறுவேன். நீங்களே வேண்டுமென்றால் படத்தில் எண்ணுங்கள். காரணம் சில மொழிகளை இரு மொழிகள் என்று கூறுவவேண்டிய தேவையும் உள்ளது.

தென் திராவிடப் பிரிவின் உப பிரிவான தெலுங்குப் பிரிவில் வளம் கொண்ட சுந்தரத் தெலுங்குடன், கோண்டி, கொண்டி, குயி, குவி, கொலமிஎன்று பத்துக்கு மேற்பட்ட மொழிகள் ஆந்திரா தெலுங்கான ஆகிய மாநிலங்களிலும் அவற்றைஅண்டிய மாநிலங்களிலும் பேசப் படுகின்றன. தெலுங்கு பேசுவோர் மட்டும் 7.6 கோடி.

தென் திராவிட அடுத்த உபபிரிவில் எங்கள் தமிழ் உட்பட வளம் கொண்ட மற்றைய இரு மொழிகளான கனடமும் மலையாளமும் அடங்குகினன்றன. தமிழ் பேசுவோர் 7 கோடி வரை உள்ளார்கள். ஏழு கோடி என்றால் உலக மக்கள்தொகையின் ஒரு சதவீதம், இதில் வியப்பு ஒருசதவீத மக்கள் உலகம் முழுவதும் பரந்துள்ளதுதான். மற்றைய இரு மொழிகள் ஒவ்வொன்றிலும் மக்கள் தொகை நாலு கோடிக்கு சிறிது குறைவு. ஐந்தாவது தரத்திற்கு வளர்துள்ள துளுவ நாட்டு மொழியான துளுவமும் இந்தப் பிரிவுள்தான் வருகிறது. அவர்கள் மொழியில் தரமான சினிமாப் படங்கள்கூட தயாரிக்கப் படுகின்றன. இந்த நான்கு மொழிகளுடன் தோடர், கோட்டர், கொறகர், படகர், குறும்பர், இருளர் ஆகியோர் பேசும் மொழிகளும் அடங்கும். இவர்களுள் இருளர்தம் மொழியை எழுதத் தமிழ் எழுத்துக்களைத் தான் பயன்படத்துகிறார்கள்.மேலே கூறிய ஆறு இனங்களில் நாலு இனங்களுக்கு ஊட்டியில் வீட்டுத் திட்டத்தின் கீழ்அடுத்தடுத்து வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்கள். கூனூர் மலைப் பாதையில் இருந்து அந்தக்காட்சியைப் பார்த் திருக்கின்றேன். எவை அந்த நாலு இனங்கள் என்பதை ஞாபகப் படுத்த முடியவில்லை.

திராவிட மொழிகளில் பல மொழிகள் எழுத்துவடிவம் கண்டது சென்ற நூற்றாண்டில்தான். சிறந்த இலக்கணத்தையும் இலக்கிய வளத்தையும் கொண்ட மலையாளம் கி பி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது. இதை வைத்துக்கொண்டு கி பி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் மலையாளம் தமிழிலிருந்து தோன்றியது என்று விளக்கம் கொடுப்போரும் உள்ளனர். இல்லாத மொழிக்கு எப்படி எழுத்துஉருவாக்க முடியும் என்ற எளிய அம்சத்தைக்கூட சிந்திக்கும் திறன் அற்றவர்கள். மலையாள மன்னன் செங்குட்டப்பன் கண்ணகிக்கு சிலை செதுக்க இமயம் சென்று கற்கொண்டு வந்ததற்கு அவருக்கு செலுத்திய நன்றிக் கடன் அவரைதமிழராக்கி செங்குட்டுவன் என்று பெயர் மாற்றிமலையாளத்திற்கு அன்னியன் ஆக்கியதுதான்.ஒரு காவியத்தையே இயற்றிய அவர் தம்பிஇளங்கோவுக்கும் அதை ஒத்த செயற்பாடுதான்.

தமிழ்நாட்டையும் மலையாளத்தையும் நீண்டமலை பிரித்ததால் பல காலத்திற்கு முன்பே சொற்கள் வேறுபட்டு மலையாளம் தனி மொழியாக வளரத் தொடங்கி விட்டது, புதிய பல வடமொழிச் சொற்களையும் தன்னுள் சேர்த்துவிட்டது. அப்படி ஊடுருவிய வடமொழிச் சொற்களையும் உள்ளடக்க மேலதிக ஒலியன்கள் தேவைப்பட்டதால் தமிழைவிட மேலதிகமாக 15 மெய்எழுத்துக்களையும் சில உயிரெழுத்துக் களையும் கூட்டி எழுத்து வடிவம் அமைத்தார்கள்.

எங்கள் தென்திராவிட பிரிவைச் சேர்ந்த கனடமொழியும் தமிழ் எழுத்து வடிவங்களைப் பின்பற்றாமல் மலையாளம்போல் 33 மெய் எழுத்துக்களுடன் தெலுங்கில் உருவாக்கப் பட்டிருந்த எழுத்து வடிவத்தை சிற்சில மாற்றங்களுடன்கி பி ஆறாம் நூற்றாண்டு ஏற்றுக் கொண்டது. தமிழுடன் கனட மொழி நெருங்கி இருந்திருந்தாலும் இன்றைய நிலையில், பல வடமொழிச் சொற்களை தெலுங்குடன் கூட்டுச் சேர்ந்து இரவல் வாங்கியதால் இன்று கனடர்கள் கூறுகிறார்கள் தெலுங்கு மொழி தங்களுக்கு ஓரளவு புரிகிறÙன்றும் தமிழ் புரிவதில்லை என்றும்.

திராவிட மொழிகளின் முதல் இலக்கியங்கள் என்றால் அது தமிழின் தொல்காப்பியமும், முதல் சங்கப் பாடல்களும்தான். அவற்றின் காலம் கி மு 500 என்று மதிப்பிடுகிறார்கள். கி மு 300 க்கு முந்திய தமிழ் கல்வெட்டுக்கள் எதுவும் கண்டறியப்படாத காரணத்தால் சிறிதுகுழப்பம் உள்ளது. வேதங்களுக்கு சுருதி என்றொரு பெயர் உண்டு. சுருதி என்றால் காதல் கேட்பது என்று அர்த்தம். எழுத்து வடிவம் இல்லாத காலத்தில் உருவான வேத மந்திரங்களை குரு சீடனுக்கு சொல்ல அச்சீடன் தன் சீடனுக்குசொல்ல சங்கதி தொடர்ந்ததால் அதற்கு சுருதி என்ற பெயர் உருவானது. தமிழ் இலக்கியங்களும் தொடக்கத்தில் சுருதி நிலையில் இருந்தவையோ தெரியவில்லை.

பழமை மிக்க நாகரிகமான சிந்து வெளிக்கும் பிரகுவிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றியதெளிவு குறைவு. பிரகுவித் தொடர்பு சிந்துவெளியை அண்மித்துப் பேசப்பட்டதால் வந்தது. தமிழையும் தொடர்வுபடுத்துகிறார்கள் சில ஆய்வாளர்கள். நாங்கள் வானிலுள்ள வெள்ளிகளை விண்மீன்கள் என்போம். ?ந்து வெளியின்சைகை எழுத்துக்களில் இந்த மீன்களின் குறியீடுகளைக் காட்டியே ஆறாமீன் வெள்ளிக் கூட்டம், ஏழு நட்சத்திரங்கள் கொண்ட வசிட்டர் அருந்ததி வெள்ளிக் கூட்டம் ஆகியவற்றைக் காட்டுகிறார்கள். இது சில நப்பாசைகளை எம் உள்ளத்தில் தோன்றுவிக்கத்தான் செய்கிறது.

திராவிட ஆதி மொழிக்கு எவை சகோதர மொழிகளாக இருந்தவை என்பது தெரியாப் பொருள் என்றேன். ஆனாலும் ஊகிப்போம். ஊகத்தை ஆதாரமில்லாமல் முடிவாக எடுப்பதுதான் தவறு.

ஏழாயிரத்திலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூரல் மலைப் பகுதிகளில் பேசப்பட்ட ஆதி மொழியொன்று எங்கள்ஊகததுக்குள் அகப்படுகிறது. இது இன்றையகங்கேரிய, பினிஷ் மொழிகளின் ஆதி மொழி. ஊகத்துக்கு தடயம் தருவதுபோல் ஒன்றிரண்டு காரணங்களும் உண்டு. சென்ற ஆண்டு பின்லாந்து நாட்டில் வைக்கிங்குகளின் ஒரு மாதிரி வீட்டைப் பார்க்கச் சென்றேன் வாசலில் வைக்கிங் கிரை குடில் (Viking te koti) என்று எழுதப்பட்டிந்ததைக் கண்டு வியந்தேன். In Helsinki என்பதை in என்று பிரித்துச் சொல்லாமல் நாங்கள் ஹெலிசிங்கியில் என சொல்வதுபோல் Hesingissa என்கிறார்கள். To Helsinki என்பதை ஹெல்சிங்கிக்கு என்பதுபோல் Helsinkiin என்கிறார்கள். From Helsinki என்பதை ஹெல்சிங்கியிலிருந்து என்பதுபோல் Helsigista என்கிறார்கள்.

இவை உண்மையான தகவலானாலும் முடிவுசெய்யப் போதாது. ஆதாரம் கிடைக்கு முன் ஊகத்தை முடிவாக எடுப்பது ஆபத்தானது. மொழி ஆய்வாளர்கள் வாளாதிருக்கமாட் டார்கள்.அவர்கள் முடிவு வரும்வரை காத்திருப்போம்.

[author title=”எழுதியது” image=”http://orupaper.com/wp-content/uploads/2016/01/uncle.png”] மாசிலாமணி
ஒருபேப்பருக்காக[/author]