திருச்சபைகளும் இரண்டாம் பனிப்போரும்

81

1979-ம் ஆண்டு சோவியத் ஒன்றியப் படைகள் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தன. அங்கு சோவியத் ஒன்றியப் படையினருக்கு எதிராகப் போராட ஐக்கிய அமெரிக்கா, சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான் ஆகியவை இணைந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களுக்கு எதிராகப் போராட வைத்தனர். சோவியத்தின் படைத்துறைச் செலவு ஒரு புறம் அதிகரிக்க வைக்கப்பட்டது. மறுபுறம் அதன் எரிபொருள் ஏற்றுமதி வருமானத்தை வீழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியா எரிபொருள் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரித்தது. புதிதாகஎரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்திச் செலவிலும் குறைந்த விலை உலகச்சந்தையில் எரிபொருள் விற்கப்படும் போது அந்தப் புதிய உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கும் என சவுதி அரேபியா அப்போது தெரிவித்தது. ஆனால்ஆப்கானிஸ்த்தான் போரும் எரிபொருள் விலைவீழ்ச்சியும் சோவியத் ஒன்றியத்தை 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைய வைத்தது.

அப்பன் காட்டிய வழி

2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊடகம் ஒன்றில்வெளி-ஆசிரியத் தலையங்கம் எழுதிய றோனால்ட் றீகனின் மகன் மைக்கேல் றீகன் தனது தந்தைஎப்படி சவுதி அரேபியாவை உலகச் சந்தையில் எரிபொருளைக் கொட்டிக் குவிக்கும் படி சொன்னார் என்பதை அம்பலப் படுத்தினார். இதன் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் வருமானத்தைச் சிதைத்து அதன் நாணயமான ரூபிளை வீழ்ச்சியடையச் செய்வதுமாகும். மைக்கேல் றீகன் தனது கட்டுரையில் அப்போது சோவியத் ஒன்றியத்திடம் இருந்த உலகில் விற்கக் கூடிய ஒரே பொருள் எரிபொருள் மட்டுமே எனத் தெரிவித்ததுடன் பராக் ஒபாமா தனது தந்தையின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் மைக்கேல் அந்த ஆலோசனையைச் சொல்ல முன்னரே ஒபாமா அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்.

செயல் மீளியக்கம் – Action Replay

தற்போது1980களில் நடந்தவையின் செயல்மீளியக்கம் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எரிபொருள் விலை கண்டபடி வீழ்ச்சியடைகின்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியப் படைகள் இரகசியமாக நிலைகொண்டிருக்கின்றன. அது இரசியாவிற்கு ஒரு செலவு. அது போதாது என்று சிரியாவில் இரசியப் படை நிபுணர்களும் சிறுபடைப்பிரிவும் நிலைகொண்டுள்ளது. இந்த நிலையில் 20,000 போர்த்தாங்கிகள், 2,450 போர் விமானங்கள், 460 உழங்கு வானூர்திகள், சகிதம் சவுதி அரேபியா தலைமையில் துருக்கி உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த 350,000 படையினர் சிரியா மீதுபடையெடுக்கத் தயாராகி உள்ளனர். சிரியாவில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்தவேண்டுமாயின் இரசியா தனது பல படைப்பிரிவுகளை சிரியாவிற்கு அனுப்ப வேண்டியிருக்கும். இரசியா கடல்வழியாக சிரியாவிற்குப் படையினரை அனுப்புவதற்கு தனது வோல்கா நதியில் ஆரம்பித்து கருங் கடலூடாகவும் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ளதுருக்கி நீரிணையூடாகவும் ஏகன் கடலூடாகவும்சென்று மத்தியதரைக் கடலை அடையவேண்டும். துருக்கியால் இரசியாவை இலகுவாக துருக்கிநீரிணையில் வைத்து இரசியக் கடற் போக்கு வரத்தைத் தடுக்க இயலும். இரண்டாம் உலகப் போரின் போதும் துருக்கி அப்படிச் செய்தது.

இரசியாவின் மேற்கு கறுக்கின்றது

அமெரிக்கப் பாரளமன்றத்திற்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவுக் கோரிக்கையில் அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கான பாதுகாப்புச் செலவாக 3.4 பில்லியன் டொலராக ஒதுக்கியிருந்தார். இது 2016-ம் ஆண்டிற்கான ஒதுக்கிட்டிலும் பார்க்க நான்கு மடங்காகும். இரசியாவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அதன் எல்லையில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படைகளையும் படைக்கலன்களையும் குவிப்பது ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய தந்திரோபாயமாக இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் 2015- ஜுன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா,லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். அந்த நாடுகளில் தேவை ஏற்படும் போது நேட்டோப்படையினர் ஒரு 48 மணித்தியால அவகாசத்தில் சென்று தரை இறங்கக் கூடியவகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும்என்றார். இந்த நகர்வுகளும் நடவடிக்கைகளும் இரசியா உக்ரேனில் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளினால் அச்ச மடைந்த நாடுகளுக்குநம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தது. ஜுன்16-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன்இரசியா நாற்பது அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும்ஏவுகணைகளை இந்த ஆண்டு தனது படையில்சேர்த்துக் கொள்ளும் என அறிவித் திருந்தார். இந்த அறிவிப்பும் அஸ்டன் கார்ட்டரின் அறிவிப்பும் ஐரோப்பாவில் ஒரு பனிப்போரை ஆரம்பித்து விடவில்லை என்றார் கார்ட்டர்.

இரண்டாம் பனிப்போர்

2016 பெப்ரவரி 12-ம் திகதி ஆரம்பமான மூன்று நாள் மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இரசியத் தலைமை அமைச்சர்டிமிட்ரி மெட்வெடேவ் தற்போது இரசியாவிற்கும்மேற்கு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவைபுதிய பனிப்போர் என விபரிக்கலாம் என்றார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைவலுவைஅதிகரிப்பதன் மூலம் ஐரோப்பாவின் உறுதிப்பாட்டை அமெரிக்கா குலைக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவும் நேட்டோப் படையினரும் செய்யும் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பின் உச்சத் தளபதிஜெனரல் பிலிப் பிரீட்லவ் அப்படி ஒரு பனிப்போர் இல்லை என்றார். ஜேர்மனியில் நடந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி இரசியப் படைகள் சட்டபூர்வமான அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

கருங்கடலில் நெருங்கும் எதிரிகள்

கிறிமியாவை 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடன் இணைத்த இரசியா மிகவும் துரிதமாக அங்கு தனது போர் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் குவித்தது. அத்துடன் கருங்கடலில் தனது கடற்படை வலுவையும் பெருக்கியது. எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியாஆகிய நாடுகளின் வான்பரப்பை நேட்டோப் படைகள் 24 மணித்தியாலமும் கண்காணிப்பது போல் கருங்கடலையும் கண்காணிக்கும் திட்டத்தை நேட்டோப் படையினர் செயற்படுத்தலாம். இதுவரை கருங்கடலை ஒட்டி துருக்கியில்ஒரு நேட்டோ கடற்படைத் தளம் அமைப்பதைஅனுமதிக்காத துருக்கி இனி ஒரு கடற்படைத்தளம் அமைக்க ஒத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நேட்டோவின் பிரச்சனை

விளடிமீர் புட்டீன் ஆட்சிக்கு வந்ததில் இருந்துஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பையிட்டு கவலையடைந்தன. உக்ரேனில் இரசியா செய்தஆக்கிரமிப்பிற்குப் பின்னர் பல ஐரோப்பியநாடுகள் அச்சமடையவும் தொடங்கின. போதாக் குறைக்கு இரசிய அரசுறவியலாளர்கள் அடிக்கடி அணுப் படைக்கலப் போர் என்றும் மிரட்டிக்கொண்டுருக்கின்றனர். ஐரோப்பாவில் உள்ளநேட்டோவின் அணுப்படைகலன்கள் பழமையானவை. அதன் செயற்திறன்களையிட்டு ஐக்கியஅமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கரிசனை கொண்டுள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பவில் உள்ளஅணுப் படைக்கலன்களை மேம்படுத்துவதற்காக பல பில்லியன் டொலர்களை செலவழிக்க எண்ணியுள்ளது.

இரு திருச்சபைகளின் தலைகளின் சந்திப்பு

2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13-ம் திகதி சனிக்கிழமை கியூபாத் தலைநகர் ஹவானாவில்இரசிய மரபுவழித் திருச்சபையின் உயர் போதகர் பட்ரியாக் கிரில்லும் கத்தோலிக்கத் திருச்சபையின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களும் சந்தித்து உரையாடியதுடன் இருவரும் இணைந்து ஒரு பிரகடனத்திலும் கைச்சாத்திட்டனர். இருவரினதும் சந்திப்பில் ஐரோப்பிய ஒருமைப்பாட்டுக்கும் கிருத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்கள் கைச்சாத்திட்ட பிரகடனத்தில் நாம் உடன்பிறப்புக்கள் பகைவர்கள் அல்லர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புட்டீனின் உதவியாளராகக் கடவுள்

ஐ எஸ் அமைப்பின் வளர்ச்சி வெற்றியில் முடிந்தால் வட ஆபிரிக்கா, மேற்காசியா, மத்தியஆசியா ஆகிய பெரு நிலப்பரப்பு இஸ்லாமியஅரசாக உருவெடுக்கும். இதில் அணுப்படைக்கலனகளைக் கொண்ட பாக்கிஸ்த்தானும் அடக்கம். அதனால் ஒரு பெரு வல்லரசாக உருவெடுக்கலாம். இதையிட்டி திருச்சபைகள் கரிசனை கொண்டுள்ளன போல் தெரிகின்றது. அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் கிறிஸ்த்தவம் இணைத்து வைத்திருக்கின்றது என்பதுஉண்மையாகும். அதுதான் நேட்டோக் கூட்டமைப்பு. கடந்த இருபது ஆண்டுகளாக இரசியாதம்முடன் இணையும் என எதிர்பார்த்திருந்த இந்தக் கூட்டமைப்பு உக்ரேன் விவகாரத்துடன்அந்த எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. இப்போது வேறு விதமாக அணுகப்படுகின்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை,எரிபொருள் விலை திட்டமிட்டு விழச்செய்தமை,இரசியாவை சிரியாவில் ஒரு போரில் மாட்டவைத்தமை ஆகியன புட்டீனின் செல்வாக்கை அடுத்த சில ஆண்டுகளில் தவிடு பொடியாக்கும் நோக்கதிலேயே செய்யப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தை ஒரு துப்பாக்கி குண்டு கூடவெடிக்க வைக்காமல் 11 ஆண்டுகளில் சிதைத்தது போல புட்டீனின் பிடியில் இருந்து இரசியாவை மீட்டெடுக்கும் போது ஏற்படும் அதிகார இடைவெளியால் இரசியாவில் பெரும் குழப்பம் ஏற்படாமல் தடுக்க இரசிய மரபுவழித் திருச்சபையின் தலையீடு அவசியம். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவில் மரபு வழித்திருச்சபையின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை கொண்டுவந்த போது அதை ஐநா பாதுகாப்புச் சபையில் இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்யாமல் இருக்க இரசியத் திருச்சபை உதவியாக இருந்தது. இரசியாவில் திருச்சபைக்கும் புட்டீனிற்கும்இடையில் நல்லுறவு இருந்தாலும் திருச்சபையைபுட்டீன் தனக்கு அடங்கி நடக்கும் ஒன்றாகவே வைத் திருக்கின்றார். ஒரு அமெரிக்க ஊடகம்இஸ்லாமிய நாடுகளில் கடவுளே அரசர் சீனாவிலும் ஜப்பானிலும் அரசரே கடவுள் இரசியாவில் கடவுள் புட்டீனின் உதவியாளர் எனநகைச் சுவையாக புட்டீனிற்கும் திருச்சபைக்கும் உள்ள தொடர்பை விபரித்தது. புட்டீனுடன் திருச்சபை ஒத்துழைத்தாலும் அவர் தம்மீது காட்டும் மேலாண்மையை திருச்சபை விரும்பும் எனச் சொல்ல முடியாது.
உலகத்தை ஒரே ஒழுங்கில் கொண்டு வருதல் என்னும் போர்வையில் அமெரிக்க ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் உலகத்தைக் கொண்டு வர திருச்சபைகளின் கியூபச் சந்திப்பு வழிவகுக்குமா ?