தென் சீனக் கடலில் சீனா உருவாக்கு தீவுகள்ஐக்கிய நாடுகள் சபையின் கடல் தொடர்பான உடன்படிக்கையின் படி தீவா அல்லது திடலா என்ற விவாதத்தை பிலிப்பைன்ஸின் சட்டமா அதிபர் ஒரு புறம் உருவாக்க மறுபுறம் சீனாவிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில்நீயா நானா என்ற போட்டியை உருவாக்கியுள்ளது. அமெரிக்கப் வெளியுறவுத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் ஒரு போர் உருவாகக் கூடிய அபாயம் உள்ளது என்றார்.
முப்பத்தைந்து சதுர கிலோ மீற்றர் கடற்பரப்பைக் கொண்ட தென் சீனக் கடல் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு கடற்பிரதேசம் மட்டுமல்ல ஒரு பெரும் போரை உருவாக்கக் கூடிய ஒரு பிரதேசமுமாகும். அதற்கு இரு பெரும் காரணங்கள் உண்டு முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. 1974இலும் 1988இலும் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லிதீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் இருந்தே தென் சீனக் கடல் கடற்போக்குவரத்து தொடர்பாக பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஸ்பிரட்லி தீவுகளுக்கு அடியில் மட்டும் 5.4பில்லியன் எண்ணெயும் 55.1 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பன்னாட்டு நீதிமன்றம் சென்ற பிலிப்பைன்ஸ்
சீன மிங் அரச வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் இருந்தே தென் சீனக்கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் தனது ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தன என்கின்றது சீனா. அதற்கு ஆதரவாக ஒரு ஒன்பது புள்ளிக் கோடு கொண்ட வரைபடத்தைமுன்வைக்கின்றது. அந்த வரைபடத்தின் படி தென் சீனக் கடலில் 90விழுக்காடு பரப்பளவிற்கு சீனா உரிமை கொண்டாடுகின்றது. வியட்னாம்சரித்திரப் பத்திரங்களை முன்வைத்து தென் சீனக் கடலின் சில தீவுக் கூட்டங்கள் தனக்குச் சொந்தம் என்கின்றது. பிலிப்பைன்ஸ் ஐக்கியநாடுகள் சபையின் கடற் சட்ட உடன்படிக்கையின்படி ஸ்பிரட்லித் தீவுக் கூட்டங்கள் தனக்குச் சொந்தம் என்கின்றது. ஐக்கிய அமெரிக்கா 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வெளிவிட்ட அறிக்கையில் சீனாவின் ஒன்பதுபுள்ளிக் கோட்டுப் வரைபடம் ஐக்கிய நாடுகள் சபையின் கடற்சட்டம் தொடர்பான உடன்படிக்கைக்கு மாறானது என்றது. பிலிப்பைன்ஸ் நெதர்லந்தில் உள்ள நிரந்தர நடுவராயத்தில் முறைப்பாடு செய்தது. பிலிப்பைன்ஸின் முறைப்பாட்டை வன்மையாக எதிர்த்த சீனா தென் சீனக் கடல் தொடர்பாக பேசித் தீர்ப்பதாக தான் ஏற்கனவே ஆசியான் அமைப்புடன் உடன் படிக்கை கைச்சாத்திட்டிருப்பதாலும் தென் சீனக்கடல் தனது இறையாண்மைக்கு உட்பட்டபிரதேசம் என்ற படியாலும் தன்னால் நடுவராயத்தில் பங்கேற்க முடியாது என்றதுடன் இதை விசாரிக்கும் நியாய ஆதிக்கம் நிரந்தரநடுவராயத்திற்கு இல்லை என்றும் தெரிவித்தது.
தீவல்ல திடலும் திட்டியும்
ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் படிஒரு நாட்டின் தரையை ஒட்டிய் 12கடல் மைல்நீளக் கடற்பரப்பு அந்த நாட்டின் படைத்துறை ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது அந்த நாட்டுக்குச் சொந்தமான தீவுகளுக்கும் பொருந்தும். பிலிப்பைன்ஸின் சட்டமா அதிபர் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் படி ஸ்பிரட்லி தீவுக் கூட்டம் தீவு என்ற வரைவிலக்கணத்துக்குள் அமையவில்லை என வாதிடுகின்றார். கடல் வற்றும் போது வெளியில் தெரிந்தும் கடல் பெருக்கத்தின் போது நீருள் மூழ்கி மறைந்தும் போகும் சிறுதீவுகளுக்கு இந்த 12 கடல் மைல் ஆதிக்கப் பரப்பு செல்லுபடியாகாது என்பது அவரது விவாதம். ஸ்பிரட்லித் தீவுக் கூட்டம் சீனவில் இருந்து தொலைவிலும் பிலிப்பைன்ஸிற்கு அண்மையிலும் இருப்பதால் அது தமக்கே சொந்தம் என்கின்றார் அவர். செயற்கையாக அமைக்கப்பட்ட தீவுகளிற்கு அதன் கரையில் இருந்து 12 கடல் மைல்நீளமான கடற்பரப்பிற்கு உரிமை இல்லை என்பதே ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்கின்றது.
அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகள்
தென் சீனக் கடலை ஒட்டியுள்ள மற்ற நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சீனா நிர்மாணிக்கும் தீவுகளுக்கு எதிராக அமெரிக்காபடை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்திருந்தன. அமெரிக்கப் பராளமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பலரும் அதை ஆதரித்திருந்தனர். சீனா பன்னாட்டுக் கடற்பரப்பிலே தீவுகளை நிர்மாணிக்கின்றது அது சுதந்திர உலகக் கப்பற் போக்கு வரத்துக்கு சவால் விடுக்கின்றது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தப் பன்னாட்டுக் கடற்பரப்பில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் பயணிக்கும் உரிமை எமக்கு உண்டு என்கின்றது அமெரிக்கா.தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்திசீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம்திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள்எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். சீனாவின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது அமெரிக்க விமானம் பறந்தது. ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும்பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது. இரண்டாவது நடவடிக்கையாக சீனா தான் உருவாக்கிய தீவுகளின் கரையோரத்தில் இருந்து 12 கடல்மைல் பிரதேசம் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என சீனா தெரிவித்தமைக்கு சவால் விடும் முகமாக 2015 ஒக்டோபர் 27-ம் திகதி அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான USS Lassen அத்தீவுகளின் ஆதிக்கக் கடற்பரப்புக்குள் சென்றது. இதனால்ஆத்திரமடைந்த சீனா சீனாவிற்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவின் நகர்வு மிகவும் பொறுப்பற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இப்படியான ஆத்திர மூட்டும் நடவடிக்கைகள் சீனாவின் தீவு கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
2015 ஒக்டோபர் 29-ம் திகதி சீனாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் கடற்படைத் தளபதிகள் காணொளி உரையாடல் ஒன்றை நடாத்தினர். தொடர்ந்தும் இப்படி உரையாடுவதாகவும் ஒத்துக் கொண்டனர். பீக்கிங் பல்கலைக் கழகத்தின் ஸ்ரான் போட் நிலையத்தில் உரையாற்றிய அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்தியத் தளபதி ஹரி ஹரிஸ் பன்னாட்டுக்கடற்பரப்பும் வான்பரப்பும் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் ஆதிக்கத்திற்கும் உட்பட்டதல்ல எமதுபடையினர் பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மிதப்பார்கள், பறப்பார்கள், செயற்படுவார்கள் செய்வார்கள் என்றார். சீனக் கடற்படைத் தளபதி Fang Fenghui அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலின் நடவடிக்கை ஒரு இணக்கமற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்றார்.
மலேசிய மாநாட்டிலும் முறுகல்
மலேசியாவில் நடந்த ஆசியான் கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இறுதி அறிக்கை வெளியிடுவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அறிக்கையில் தென் சீனக் கடல் தொடர்பாக எதுவும் இடம்பெறக் கூடாது எனச் சீனாவும் இடம் பெறவேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தின. மாநாட்டைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டரும் மலேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹ்ஸம்முதீனும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் யூஎஸ்எஸ் தியடோரூஸ்வெல்ற்றில் ஏறி அதன் தென் சீனக் கடலிற்கான ரோந்தில் இணைந்து கொண்டனர்.
கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கு சவால் விட்ட அமெரிக்கா.
கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் திகதி அறிவித்தது. அந்த வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் அனுமதி பெறவேண்டும் என்றது சீனா. இந்த வான்பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம்கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக 2013நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல்இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்தவான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது.அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றிஅமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம் சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களைசீனா அறிவித்த வான் பரப்புக்குள் பறக்க விட்டன. தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகள் தமது கப்பல்களை சீனாவின் ஸ்பிரட்லி தீவுகளுக்கு அனுப்புமா?
தென் சீனக் கடலை ஒட்டிய நாடுகள் எல்லாம்அமெரிக்கா தலைமையில் சீனாவிற்கு எதிரானஒரு படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றன.
Photo Courtesy – www. zerohedge. com