தென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்

1106

ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் வெயில் காலம் தொடங்கி விட்டால் களியாட்டநிகழ்ச்சிகளுக்கு குறைவிராது. வார இறுதிநாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். தென்னிந்தியாவிலிருந்து சினிமாக்கலைஞர்களை அழைத்துவந்து இங்குள்ளவர்களை மகிழ்விப்பார்கள். இங்கு நிகழ்ச்சி நடத்த வருபவர்களை முன்பு சின்ன மேளக்காரர், பெரிய மேளக்காரர் என்று வகைப் படுத்துவதுபோல் தரப்படுத்தப்பட்டாலும் எல்லோருமே கோடம்பாக்கத்தை அண்டியவர்களாகவே இருப்பார்கள்.

தென்னிந்திய சினிமாக்காரர் கலந்து கொள்ளும் பெரும் நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்ததும் கூடவே இன்னொரு அறிவுப்பும் வரும். நிகழ்ச்சியை புறக்கணியுங்கள், ஊரில் மக்கள் துன்பத்தில் வாழ்கையில் இங்குஆட்டம் பாட்டமா வேண்டிக்கிடக்கிறது? தமிழ்உணர்வை காட்டுங்கள் என்ற உசுப்பேத்தலுக்கு குறைவிருக்காது. கலாச்சாரம் சீரழிகிறது என்ற கலாச்சார காவலர்களின் ஒப்பாரி வேறு.

பொதுவாக இவ்வாறான எல்லா நிகழ்ச்சிகளிலும் தென்னிந்திய திரைப்படத்துறையை (அது சின்னத்திரையோ, பெரிய திரையோ) சார்ந்தவர்கள் கலந்து கொண்டாலும், மெகா நிகழ்ச்சிகள் எனப்படும் பெரும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் எதிர்ப்பு கிளம்புகிறது. பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் நிகழ்ச்சிகளிலும் சினிமாக்காரரே கலந்து கொண்டு பழைய மாணாக்கர்களின் அறிவுப்பசியைத் தீர்த்தாலும் அவற்றுக்கு எதிர்ப்புக்கிளம்புவது குறைவு. இவ்வாறு எதிர்ப்பவர்களை கொஞ்சம் கவனமாக அவதானித்தால்அவர்களின் நேர்மையை விளங்கிக்கொள்ளலாம். ஒரு நிகழ்ச்சியை எதிர்ப்பவர்கள் இன்னொரு நிகழ்ச்சி நடைபெறும் போது இதனை கண்டுகொள்ளாது விடுவார்கள். முன்னர் எதிர்த்தவர்களே பின்னர் இவ்வாறான நிகழ்ச்சியை நடாத்துவதும், முன்னர்நிகழ்ச்சியை நடாத்தியவர்களே பின்னர் எதிர்ப்பதும் அடிக்கடி நடைபெறும் விசித்திரமான நடைமுறைதான்.

அண்மையில் லண்டனில் நடந்து முடிந்த விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியைப் பார்ப்போம். மார்ச் மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடானபோது, அந்த மாதத்தில் நடைபெற்றால் ஐ.நா.மனிதவுரிமைச் சபையில் அமெரிக்கத் தீர்மானம் மீதான தமிழர்களின் கவனத்தை இது திசை திருப்பி விடும்என எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் அதுஏப்பிரல் 20க்கு மாற்றப்பட்டது. கிறிஸ்தவ மதத்தவர்களின் புனித நாளான உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் இந்த நிகழ்ச்சியை நடாத்துகிறார்களே என தமிழ்க் கிறிஸ்தவர்கள் சினங்கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் தப்பித்தார்கள் ஏற்பாட்டாளர்கள்.

இந்த விடயத்தில் தமிழ் ஊடகங்களின்நிலைப்பாடு இன்னமும் வேடிக்கையானது. விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியைகண்டித்து ஒரு இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரையில், “இன்று புலம் பெயர்நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்டவர்களை இலங்கை அரசும் இன்டர்போல் நிறுவனமும் இணைந்து தேடிக்கொண்டிருக்க, இதே சுப்பர் சிங்கர் லண்டனில் பிரமாண்ட மேடையில் பணச் சுரண்டலுக்காக நடத்தப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணச்சுரண்டல், கோர்ப்பரேட் ஆதிக்கம், முதலாளித்துவம், பொருள் முதல்வாதம், மார்க்ஸ், ஏங்கல்ஸ் என்ற சொற்கள் குறித்த இணையதளத்தில் பரவலாகவே பாவிக்கப்படுகிற சொற்கள்தான் என்றாலும், சிறிலங்காவின் தடைப்பட்டியில் உள்ளடக்கப்பட்ட நானூற்று சொச்ச செயற்பாட்டாளர்களுக்காக நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லும் கட்டுரையை இந்த இணையதளம் பிரசுரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் இந்தப்பட்டியலில் குறித்த இணையதளத்தின் வட்டாரத்திலுள்ள ‘இடதுசாரித் தோழர்கள்’ அல்லது ‘மக்கள் போராளிகள்’ எனஅழைக்கப்படுபவர்கள் எவரும் இல்லை. அதுமட்டுமல்ல இந்த நானூற்றுச் சொச்சப்பேரில் பலரை கோத்தாபாய தனது பட்டியலில் சேர்க்கமுன்னரே இவர்கள் “பாசிஸ்டுகள்”. “புலிப்பினாமிகள்” என்ற பட்டியலில் போட்டிருந்தார்கள். இப்போது இவர்களுக்காக இந்த இணையத்தளம் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்கிறது என்ன அக்கறை? அல்லது இதைத்தான் ஆடுநனைகிறது என்று ஓநாய் அழுத கதை என்பார்களோ?

மக்கள் மீதும் கலை இலக்கியம் மீதும் அக்கறை கொண்டதாகக்கூறும் இந்த இணையதளம் இப்படி நடந்தது என்றால், சினிமா நடிகைகளின் அன்றாட நடவடிக்கைகள் பற்றியஅவசியமான தகவல்களைத் தந்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை வளர்த்து, தனது hit count ஐயும் அதிகரித்துக் கொள்ளும் இன்னொரு இணைய தளமோ, விஜய் ரீவியின்நிகழ்ச்சியை ஈழத்தமிழர்கள் புறக்கணித்தார்கள் என்று வெற்றுக் கதிரைகளின் படத்துடன் செய்தி போட்டுள்ளது. இணைப்பாக “பின் கதவால் தப்பி ஓடின நீயா நானா கோபி நாத்” என்று இன்னொரு on the spot report ஐயும் போட்டுள்ளது. ஏற்கனவே நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணத்தில் பின்கதவால் ஓடியதாக `செய்திபீ போட்டுப் “பிரபலமான” இணைய தளம் இது.

இவற்றுக்கு மேலதிகமாக, நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியில் ஒலிவாங்கியுடன் நின்று “நிகழ்ச்சி நல்லாக நடக்கவில்லையா?” “ஏமாற்றமா?” என்று எதிர்மறையான கேள்விகளை ஒருவர் கேட்டுக்கொண்டிருப்பதான ஒரு காணொளிப்பதிவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்தது. குறித்த சில சினிமாக்காரர்கள் வரவில்லை என மக்கள் ஏமாற்றத்துடன் (நிகழ்ச்சி முடிய) வீடு திரும்பியதாகவும் இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பலருக்கு வருகிற கேள்வி என்னவென்றால், குறிப்பிட்ட சினிமாக்காரர்கள் வராமையால் ஈழத்தமிழர்கள் புறக்கணித்தார்களா? அல்லது தேசியச் செயற்பாட்டாளர்களும், தமிழ் அமைப்புகளும் தடைசெய்யப்பட்டதால் ஏற்றபட்ட தார்மீகக் கோபத்தால் புறக்கணித்தார்களா என்பதுதான்.

இதுவரைக்கும் இக்கட்டுரையை படித்துக் கொண்டிருப்பவர்கள், ஏதோ இந்தாள் சினிமாக்காரரின் அபிமானி போல் இருக்கிறது இந்தநிகழ்ச்சிக்கு ஆதரவாகக் கதைக்கிறார் என்றுநினைத்திருப்பீர்கள். விடயம் அதுவல்ல. விஜய் தொலைக்காட்சியும், தமிழில் ஒளிபரப்பாகிற அத்தனை தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தென்னிந்திய சினிமாவை மையப்படுத்தியே நிகழ்ச்சிகளை நடாத்துகின்றன. இதில்நாங்கள் கரங்கொடுத்து வடம்பிடிக்கிற தேசியஊடகங்களும் விதிவிலக்காக இல்லை.

நிகழ்ச்சிக்கு வந்த சினிமாக்காரர்களுடன் படம் எடுத்துக் கொள்வதானால் கிழக்கு லண்டனில் உள்ள அப்பக்கடை ஒன்றுக்குவருமாறு தமிழ் தேசிய வானொலி ஒன்றில் அடிக்கடி விளம்பரம் ஒலிப்பரப்பட்டது. இவற்றையெல்லாம் நாங்கள் வசதியாக மறந்துவிட்டு, சினிமாக்காரர் நிகழ்ச்சி நடாத்தினால்அந்தப்பக்கம் போகாதே என்று பாமர மக்களுக்கு கூறும் அருகதை யாருக்கு இருக்கிறது?

இவ்வாறான சினிமா நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் மக்கள் வழமையாக இலக்கியஇரசனையுள்ள விடயங்களில் அக்கறையுள்ளவர்கள் போன்றும், அவர்களது கலை இரசனையை இந்த நிகழ்ச்சிகள் மாசுபடுத்துகிறது என்பதுமாதிரியும் சிலர் பாசாங்கு செய்வதுதான் படிப்பதற்கும், கேட்பதற்கும் சற்றுச் சிரமமாக இருக்கிறது. மக்களை இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வைத்தாலும், அவர்கள்தொலைக் காட்சிகளிலும் யுரியூப் போன்றஇணைய காணொளிகளிலும் இந்த நிகழ்ச்சிகளையே பார்த்து இரசிப்பார்கள் அல்லதுபார்த்து பரவசம் அடைவார்கள். அவர்களைமகிழ்வூட்டுவதற்கு மாற்றுக் கலைகள் எதனையும் வைத்திருக்காமல், அவர்களை முற்றும் துறந்த முனிவரின் நிலைக்கு கொண்டு செல்வது சாத்தியப்படாது.

மக்களின் இரசனையை நல்ல கலைகளை நோக்கி வளர்த்தெடுப்பதற்கு என்ன திட்டம்வைத்திருக்கிறீர்கள் என்று தமிழ் ஊடகங்களையும், கல்வியாளர்களையும், சமூக ஆர்வலர்களையும், இடதுசாரி கலை இலக்கியக்காரரையும் கேட்க வேண்டியுள்ளது.

பொன்.அம்பலத்தார்