மாவீரர் வாரம் என்று வெறும் ஏழுநாள்களுக்குள், எம் நினைவெழிச்சியினை அடக்கி விட முடியாது, நாம் இதை மாவீரர் மாதம் என கொண்டாண்டங்களைத் தவிர்த்து தாயக சிந்தனையுடன் தாயக விடிவுக்காக வேலைகளில், அந்த ஒரு மாதத்தையும் களியாட்டங்களை தவிர்ந்து இருக்க வேண்டுமென ஒரு சாரார் மிக மும்மூரமாக முகநுால்களிலும், இணையத்தளங்களிலும், மின்னஞ்சல் களிலும் காரசாரமான விவாதங்களில் கனடாவில் நடக்கவிருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஈடுபட்டுக்கொண்டிருக்க, லண்டனில், இந்தியாவில் உள்ள அரசியல் பிரமுகர்களையும், அறிவாளர்களையும் கூப்பிட்டு ஒரு உலகத் தமிழர் மாநாடு ஒன்று இலைங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களுக்கான சர்வதேச சுயாதீன விசாரணைனை வலியுறுத்தி இதே மாதத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் சார்பான நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசியல் சாராத களியாட்ட நிகழ்வாக இருந்தாலும் சரி இது பற்றிய விவாதங்களில்,சீமான் பொது மக்கள் உள்வாங்கப்படுகின்றார்களா? அவர்கள் எந்தளவு தூரம் இது பற்றிய தெளிவோடு இருக்கிறார்கள் என்பதுவும் கவனிக்கப்படவேண்டும்.
எமது பிரச்சனைகளையும், நாம் என்ன செய்யப்போகின்றோம், ஏன் செய்கின்றோம் என்று வெளிநாட்டவர்களுக்கு பிரச்சாரம் செய்யும் அதே வேளையில், அரசியில் கலந்துரையாடல்கள், பொதுமக்களை உள்வாங்கிய, உணர்ச்சிவசப்படாது விடையங்களை சீர்துாக்கி பார்க்கின்ற, துார நோக்கோடு மக்களையும் உள்வாங்கிக்கொள்கின்ற வகையில் மாதத்திற்கு ஒன்று என்னவகையில் தன்னும் நடைபெற வேண்டும்.
இல்லாவிட்டால் அரசியலை கொண்டு நடத்துபவர்கள் கொஞ்ச பகுதியினராகவும், மக்கள் ஒரு தனி அலகாகவும் விடுபட்டு விடுவார்கள். அதை விட அபாயம் என்னெவெனில் நல்ல அரசியல் செய்பவர்களிடம் பணம் இல்லாது போக, இந்த மற்றவர்களின் பின்னனியில் இயங்கும் அரசியல் வேலை செய்பவர்கள் செய்யாத ஒன்றுக்கு பளபளப்பான அட்டையில் பல பிரமுகர்களோடு படம் எடுத்து எல்லோருமே அவர்களோடு சேர்ந்து வேலை செய்வதான ஒரு பிரம்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள். ஏதோ நிகழ்வில், எதற்காகவோ நின்ற படத்தை, என்னுடைய அநுமதியின்றி ஏன் உமது புத்தத்தில் நானும் உமது அணியின் தொண்டர் என போட்டீர் என்று சிலர் அவர்களோடு திரைமறைவில் அடிபட்டுக்கொள்வது மக்களுக்கு தெரிய வரவா போகின்றது? மொத்தத்தில் பிரபலம் தேடுபவர்கள், மக்களின் தொடர்பாடல் குறைந்த இக்காலத்தை, தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள், இது அவர்களுக்கு சாதகமான காலம்.
அண்மையில் ஊடகவியலாளார் எனத் தன்னைப் பெருமையாக அழைத்துக்கொள்ளும் பெண்மணி ஒருவர் உரையாடும் போது சொன்னார். “இனி இரண்டு, மூன்று வருடங்களுக்கு பின்பு தலைவர் வந்தாலும் அவருக்கு வயது போய்விடும், என்னென்று துவக்கு பிடித்து சண்டை போட்டு எமக்கு விடுதலை எடுத்து தரப்போகிறார்” என்று. நான் அவரின் அறிவின் உச்சம் கண்டு வாயடைந்து போய் நின்றேன்! ஊடகவியலாருக்கே அறிவின் செம்மை இப்படி இருக்கும் போது, சாதாரண பொது மக்களுக்கு எப்படி இருக்கும் என்று ஒப்பிட்டு, பொது மக்களின் அறிவை குறைந்துக் கொள்ள நான் விரும்பவில்லை. விடுதலை கிடைக்கும் போது நெல்சன் மண்டேலாவுக்கு எத்தனை வயது? ஜே. ஆர். ஜெயவர்தனா எத்தனை வயது மட்டும் பதவியில் இருந்தார்? ஒரு அணியை இயக்குவதற்கு தலைமை பதவியில் இருப்பவர் கட்டாயமாக ஆயுதம் தூக்க வேண்டும் என்று இல்லை.
அப்படி பார்தால் தற்போது ஒரு ஊடகத்துறையிலும் இல்லாமல், மூத்த ஊடகவியலாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்ளவர்கள், ஏன் அப்பிடிச்சொல்கிறார்கள்? அது சார்ந்த அறிவும், அநுபவமும் தம்மிடம் இருப்பதனால் தானே? விடுதலை என்பது ஒரு மக்கள் குழுமம் சார்ந்த விடையம், தனிப்பட்ட ஒருவரின் உந்துதலால் அது வழிநடந்தப்பட்டாலும், உருவாக்கப்பட்டாலும், அது வளர்ந்து விருட்சம் ஆன பின்பு, விழுதுகள் ஆயிரம் வரும், அவைகளும் வேர்களாக தொழிற்படும்,நம்பிக்கைதான் எமது ஆணிவேர். முடியாது என்றால் முயன்று பார்க்கும் எண்ணம் கூட எழாமல் போய்விடும். இந்த நாட்டில் 20 வருடத்திற்கு முன்பு செய்யாத, எண்ணிப்பார்க்க முடியாத எத்தனையோ வகையாக வேலைகளிலும், தொழில்களிலும் இப்போ எமது தமிழர் மக்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். இது வெள்ளைகாரர் தான் செய்யமுடியும் என்று ஞஉனைத்திருந்தால் முயன்று பார்த்திருக்க முடியாது.
இப்போ மாவீரர் நாள் வருகின்றது. முன்பு போல் 5 இடத்தில் வைத்தால் சரியில்லை. எக்ஸ்செல் மண்டபத்தில் வைத்தால்தான் நாம் வருவோம் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். எக்ஸ்செல் மண்டபம் என்பது மாவீரர் துயிலும் இல்லம் அல்ல, அது ஒரு சாதாரண மண்டபம். அதற்கு நாம் ஒரு மாவீரரின் பெயரை வைத்து, அந்த மாவீரர் மண்டபம் என்றோ, திடல் என்றோ மக்களின் உணர்ச்சியை கொஞ்சம் சென்டிமென்டல் ஆக்கி ஒரு பிணைப்பை தேவையில்லாது ஏற்படுத்தி, அரசியலை பிழைப்பாக்கத் தேவையில்லை. மாவீரர் தினம் ஏன் வைக்கப்பட வேண்டும், அது சொல்லும் அரசியல் செய்தி என்ன? நாம் ஏன் ஒன்று திரண்டு ஓர் இடத்தில் நின்று, எமது பலத்தையும், எந்த அரசியல் நோக்கத்திற்கு பின்னால் நாம் நிற்கின்றோம் என்பதும் தான், செய்தி. நடத்தப்படும் நோக்கம் தான் உயரியதும், அது சொல்லும் செய்திதான்,அரசியல்.
முள்ளிவாய்காலின் பின்னும், முன்னும் நடந்த அரசியல் சதிவேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வருகின்றன, சம்பந்தபட்டவர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டு வருகிறாகள். காலம் பலவிடையங்களையும், பல தனிமனித முகத்திரையையும் கிழிக்கும் போது, இம் மாவீரர் நாள் குழப்பங்களும் தீர்ந்து விடும்.