தைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த இனிக்கும் நினைவுகள்சுவையானவை. போர்ச்சூழல் வாழ்விலும், புலம்பெயர்ந்த பின்னைய வாழ்விலும் அதனைப் போல ஊரே மகிழ்ந்து கொண்டாடிய தைப் பொங்கலை மீளக் காண முடியவில்லை. அம்மா, அண்ணைமார், சித்தி என்று ஒரே கூட்டுக்குடும்பமாக ஒரே உலைச் சோறு உண்ட காலம்.மாமி வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பு வீடு என்றுஅயல் வீடுக்கு வேலிப் பொட்டுக்குள்ளால், கறிகள் பரிமாறி, ஓடிப் போய் விளையாடி உறவுகொண்டாடிய காலம்.
ஒரு வீட்டில் கூக்குரல் கேட்டால் ஊரே ஓடி வந்து உதவிய காலம் அது. அயல், ஊர் என்ற சமூகத்திற்குள் எளிமையான சிக்கனமாக வாழ்வை தமிழ் சமூகம் கொண்டிருந்த அந்தக்காலத்தில் எல்லா வைபவத்தைப் போலவேதைப் பொங்கலும் ஊர் மகிழ்ந்து கொண்டாடியகொண்டாட்டமாக இருந்தது.
எங்கள் தெல்லிப்பளை ஊரிலும் மாரி வெள்ளம் வடிந்து வற்றி வளவுகள், வீதிகள் எல்லா நிலமும் ஈரம் மாறாத நிலையில் தான் தை பிறக்கும். நீண்ட கால விடுமுறையின் பின் மகாஜனாப் பள்ளிகள் உட்பட பள்ளிகள் ஆரம்பித்து விடும். வகுப்பேறிய மகிழ்ச்சி, புதிய வகுப்பு, புதிய ரீச்சர், புதிய புத்தகங்கள், கொப்பிகள், புத்தகத்துக்கு உறை போட்டு மேல் மூலையில் பெயரும், வகுப்பும் எழுதி சித்தி தைத்துத் தந்த சீலைப் பைக்குள் கொண்டு போவதே ஒரு ஆனந்தம்.
மாரிக்குள் நிலவிய இருள் மாறி அதிகாலையிலேயே சூரிய ஒளி மஞ்சள் நிறமாக ஊருக்கு ஒளி காட்ட ஆரம்பித்து விடும். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் 5 மணிக்கும் 6 மணிக்கும் ஒலிக்கும் சங்கு கணீரென்று ஒலிப்பதும் அந்த மாரி முடிந்த கையோடு தான். இவ்வாறாக உழவர்கள் காளை மாடுகளை ஈரம்மாறாத நிலத்துக்கு கலப்பையோடு உற்சாகமாக ஓடிச் செல்லும் சத்தம் ஒழுங்கைகளில் கேட்கும். வளவுகளும், வீதிகளும் வெள்ளத்தால் கழுவப்பட்டு சுத்தமாக காட்சி தரும். பள்ளிஆரம்பமான சில நாட்களில் ஜனவரி 14ஆம்நாள் தைப்பொங்கல் வரும். அது பள்ளி நாளென்றாலும், அரச விடுமுறை தான். இருவாரங்களுக்கு முன்பாகவே கடைகளில் வெடிகள், பூரிசுகள், புதிய மண்பானை, சிரட்டை அகப்பை, சர்க்கரை, தயிர், பச்சையரிசி, கசுக்கொட்டை, முந்திரிகைவத்தல், வெற்றிலை பாக்கு என்று பொங்கல் சாமான் விற்பனைக்கு வந்துவிடும்.
கூப்பன் கடை என்று சொல்லப்படும் சங்கக்கடைகளில் மலிவான விலையில் குடும்ப அங்கத்தவர்களுக்கு தக்கபடி இவை வழங்கப்படும். வண்டிலில் மண்பானை சட்டிகளை அடுக்கிஉடையாமல் வைக்கல் பரப்பி வீதிகளில் கூவிக்கூவி விற்கப்படும் பானை சட்டி வண்டில்களையும் வீதிகளில் எங்கு காணமுடியும். சந்திகளில் கலகலப்பு. கரும்பு முதலான வெற்றிலை,பாக்கு, சர்க்கரை, வாழைப்பழம் எல்லாம் மலிவாகக் கிடைப்பது எல்லாம் சந்தைகளில் தான்.
சுன்னாகம் சந்தை திங்கள், புதன், வெள்ளி என்று கலகலப்பது அந்த நாட்களில் தான். பொங்கலுக்கு விசேட கழிவில் சேலைகள் யாழ்ப்பாண பட்டணத்தை அலங்கரிக்கும். மலிவுவிற்பனையாளர்களின் விளம்பரப் பலகைகள் எங்கும் தொங்கும். இவ்வாறான மலிவு சேலைவாங்கவும், ஒரு சினிமாப் படத்தை பார்த்து விட்டுவருவதற்கும் சித்தி எங்களை காரில் அழைத்துக் கொண்டு போவா. புதிய எம்.ஜி.ஆர்., சிவாஜி திரைப்படங்கள் தைக்கு வெளியாகும், அவற்றின் விளம்பரங்கள் எங்கும் தொங்கும். ஸ்பீக்கரில் கோன் பூட்டி காரில் ஒலிபரப்பிக் கொண்டு போவார்கள். நோட்டீஸ் போடுவார்கள், ஓடிப் போய் பொறுக்குவோம். எங்கள் வீட்டுக்கு முன்பாகவுள்ள கடையில் சினிமாப் போஸ்டர்கள் ஒட்டியிருக்கும். சிவாஜி சாவித்திரியோடு இருக்கும் படத்தை நின்று ரசிப்பதில் ஒரு ஆனந்தம்.
தெல்லிப்பளை சந்தி பேப்பர்க்கடையில் அண்ணா, கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் வாங்கிவருவார். அதில் புதுவருடப் பொங்கல்சிறப்பு இருக்கும். பொங்கலுக்கு முன்பான இரவுகளில் வெடியோசைகள் ஆரம்பித்துவரும். யானை மார்க் வெடி தான் பெயர் போனது. ஒரு வெடிப்புத்தகத்தில் 24 வெடி இருக்கும். வட்டவடிவான வெடிப்பெட்டிகள் 100 வெடிகள் கொண்டிருக்கும். சின்னப் பிள்ளைகள் என்பதால் பூரிஸ் பெட்டி தான் கிடைக்கும். அண்ணாமாருக்கு வெடிப்பெட்டி சித்தி, சரவணமுத்து மாமா வாங்கித் தருவார்கள். பொங்கல் அதிகாலை 4 மணிக்கு எழும்பி வெடி கொழுத்தஆரம்பிப்போம். எங்கள் வீட்டு நாற்சார் வீட்டின் நடு முற்றத்தில் பொங்கல் நடக்கும். அம்மா முதல் நாள் சேகரித்த மாட்டுச் சாணியால் முற்றத்தில் மெழுகுவார். அம்மாவின் கல்யாண பொன்னுருக்குக்கு நட்ட முருக்கம் மரம்பருத்து வளர்ந்து அடர்த்தியாக முற்றத்தில் நின்றது. மாரிக்கு மாரி அது மொட்டையடிக்கப்படுவதால் அந்த முருக்கம் சருகுகள் கூட முற்றத்தில் இருக்காது.
இவ்வாறாக மெழுகி முடிய சித்தி கோலம் போட ஆரம்பிப்பா, உலக்கை வைத்து, எல்லைபோட்டு நடுவில் அழகாக சீமெந்துத் தாளில் அன்னம், தாமரை போன்ற படங்கள் வரைந்து ஓட்டை துளைத்து போட்ட பட கோலங்களும் முற்றத்தை அலங்கரிக்கும். இவ்வாறாக கோலம் போட்டு முடிய, நடுவில் மூன்று கல் அடுப்பு அதன் மேலே பெரிய புதிய மண்பானை, மண்பானையின் கழுத்தில் மாலை போல் சுற்றி 7 மாவிலைகள், சுற்றவர விபுதி, சந்தனப் பூச்சு, இவ்வாறாக நாற் புறமும் தடி நட்டு மாவிலைதோறனம் கட்டி, வாழைக்குட்டிகள், கரும்பு என்று சோடித்து முற்றம் கலகலப்பாகும்.
ஒரு மூலையில் நிறைகுடம், வெற்றிலை, பாக்கு என்று சாணகப்பிள்ளையாரோடு வாழையிலையில் வைக்கப்பட்டிருக்கும். எங்கும் வெடியோசைகள், தென்னம்பாளை, தென்னம்மட்டை என்பன தான் விறகு. பானையில் பால் விட்டு சூடு பட்டு பால் நுரை தள்ள பானைக்குஅரிசி எடுத்து மூன்று முறை சுற்றி போட வேண்டும். நாங்கள் குளித்து தோய்த்து உலர்ந்த ஆடையை போட்டால் அரிசி போட விடுவார்கள். அம்மாவும் விடியற்காலையில் தோய்ந்து லங்கா சேலையை முடிந்து விபுதி பூசி காட்சியளிப்பா. அரிசி பதமாக சர்க்கரை கரசல், கசுக்கொட்டை, முந்திரிகை வத்தல் போட்டு பொங்கலை பொங்குவா. சித்தப்பா அப்படி செய், இப்படிச் செய் என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டு இருப்பார். சிரட்டைக்குள் வைத்துவெடி வைப்பது, உரலுக்குள் வெடியை போடுவது என்று விளையாடிக் கொண்டிருப்போம்.
பொங்கல் பானை பொங்கி முடிய மூன்று தலை வாழை இலையில் படைத்தல் ஆரம்பமாகும். ஒவ்வொரு இலையிலும் மூன்று அகப்பை போட்டு வாழைப்பழம் உரித்து வைத்து, கற்பூரம் சாம்பிராணியோடு எரித்து பூப்போட்டு எல்லோரும் சுற்றி வந்து சூரியனைக் கும்பிடுவோம். ஒரு புறம் எங்கள் வீட்டில் படையல் நடப்பதை தொடர் வெடித்து அண்ணா ஊருக்கு பறைசாற்றிக் கொண்டிருப்பார். பொங்கல் முடிய குடும்பமாக எல்லோரும் விறாந்தையில் பந்திப்பாயில் வரிசையாக இருந்து உண்ண ஆரம்பிப்போம். அம்மா பரிமாறிக் கொண்டிருப்பார்.
ஒவ்வொருவருக்கும் வாழையிலையில் வடை, பாயாசம் என்று பொங்கலோடு வைக்கப்பட்டிருக்கும். அம்மம்மாவும் சப்பாணி கட்டி இருக்க முடியாது என்றாலும் ஒரு காலை மடக்கிஎங்களோடு பொங்கல் பந்தியில் இருந்து சாப்பிடுவார். பொங்கல் அன்று பல வீட்டு பொங்கல் மற்றும் பலகாரங்கள் எங்கள் வீட்டுக்கு வரும். குஞ்சுப் பெட்டி என்ற பனையோலைப் பெட்டியில் வைத்துத் தான் வந்து சேரும். எங்கள் வீட்டுப் பொங்கலும் அப்படியே அயல் வீடுகளுக்குப் போகும்.
வருடாவருடம் ராதாவின் அக்கா மாமங்கா அக்காவின் பொங்கல் தான் மிக மிக இனிப்பாக சுவையாக இருக்கும். எங்கும் வெடியோசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். மாலையில் உயனைவெளியில் மாட்டு வண்டிச் சவாரிநடக்கும். பார்க்க போவோம். மாடுகள் குறுக்கே இழுக்கும் என்பதால் துÖரத்தில் நின்று பார்வையிட வீட்டுக்காரர் அனுமதிப்பார்கள்.
இரவானால் அம்பனை வைரவர் கோயில் முன்பாக கலைப்பெருமன்றத்தின் உழவர்விழா நடக்கும். பட்டிமன்றம், கவியரங்கம், நாடகங்கள், நடனங்கள் என்று கலகலப்பாக இரவிரவாக நடந்து முடியும்.
அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் இவ்வாறாகஅந்த இனிய பொங்கலின் நினைவுகள் இன்றும்மகிழ்ச்சியாகத் தான் பொங்கிக் கொண்டிருக்கின்றது.