தை முதலாம் திகதி தைப்பொங்கல்

221

உழவர் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் இது தமிழில் உள்ள ஒரு கூற்று. அறுவடைச் செல்வம் வீட்டுக்கு வந்ததும் நிலம், நீர், கதிரவன், உழவு சாதனங்கள் ஆகியவற்றிற்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாவே பொங்கற் பெருவிழா. திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பாகவும் தை முதலாம் திகதி அறிவிக்கப் பட்டுள்ளதால் இப் பெருநாளின் பெருமை மேலும் உயர்ந்துள்ளது.

பொங்கல் பற்றி விபரமாக எதிர்பார்த்தால் ஏதோ அர்த்தமற்ற தலையங்கம் அல்லவோ போடப் பட்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம். அப்படி அதை வெளிச்சமிட்டுக் குறிப்பிடுமளவிற்கு சில சோதிடக் கணிப்பாளர்கள் குழப்புகிறார்களே. மாதப் பிறப்புக்களைக் குழப்புகிறார்கள். தை முதலாம்திகதி வரும் தைப் பொங்கலைக் குழப்பகிறார்கள். சித்திரை முதலாம் திகதி வரும் சித்திரைப் புத்தாண்டையும் குழப்புகிறார்கள். ஆடி முதலாம் திகதி வரும்ஆடிப் பிறப்பையும் குழப்புகிறார்கள். ஆகையால் நான் சொல்ல முன்வருவது இந்தியா இலங்கையை மையமாக வைத்துதான் மாதப் பிறப்பு முடிவு செய்யப்பட வேண்டும். ஆசியாக் கண்டத்தில் ஒரு நாள் என்றால் அமெரிக்காக் கண்டத்தில் அதற்கு முதல் நாள் என்ற முறை மாறவேண்டும். இக்கட்டுரையை வாசித்த பின் வாசகர்களாகிய நீங்களே உணர்வீர்கள் இந்தக் குழப்பவாதிகள் ஆண்டுப் பிறப்பையே இழிவு படுத்துகிறார்கள் என்பதை.

வான் கோளத்தில் விண்மீன்கள் ஊடாக கதிரவன் ஒரு நாளைக்கு 0. 99 பாகை மேற்கிலிருந்து கிழக்காக ஓடிக்கொண்டிருக்கின்றான். உண்மையில் கதிரவன் ஓடுவதில்லை. பூமி கதிரவனைச் சுற்றுவதால் பூமியில் இருந்து பார்க்கும்எங்களுக்கு கதிரவன் ஓடுவதுபோல் தோன்றுகிறான். இந்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது. தொடக்கப் புள்ளி என்று ஒன்று இல்லாவிடில் கோளத்தின் வில் போன்ற பகுதிகளை அடையாளப்படுத்த முடியாது. விண்ணில் அச்சுவினி என்னும் விண்மீன் தென்படும் இடத்தை தொடக்கப் புள்ளியாகக் அமைத்தார்கள். அதையே 0 பாகையாகக் கொண்டு முழு வான் கோளத்தையும் 30 பாகைக்கு ஒன்று என்ற ஒழுங்கில்மேடம் இடபம் மிதுனம் என்ற ஒழுங்கில் 12 ராசிகளாகப் பிரித்தார்கள். பூமி ஒருமுறை கதிரவனை வலம்வந்து முடிக்க பூமியிலுள்ள எங்களுக்கும் கதிரவன் வான் கோளத்தில் அமைக்கப்பட்ட 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி முடித்ததுபோல் தோன்றும். அதாவதுபுறப்பட்ட அச்சுவினி விண்மீன் தென்படும் புள்ளிக்கே கதிரவனும் திரும்பி வந்துவிடுவான். அதுவே ஒரு ஆண்டு.

கதிரவன் ஒவ்வொரு ராசிக்குள்ளும் நிற்கும் காலம்தான் அந்த அந்த ராசிக்கான மாதங்கள். மேட ராசிக்குள் நிற்கும் காலம் சித்திரை. இடப ராசிக்குள் நிற்கும் காலம் வைகாசி. மிதுன ராசிக்குள் நிற்கும் காலம் ஆனி. அப்படியே 12 ராசிகளுக்கு 12 பெயர்களும் 12 மாதங்களுக்கு 12 பெயர்களும் உள்ளன. மலையாளத்தில் புத்திசாலித்தனமாக ராசிக்கு உள்ள பெயரையே மாதத்திற்கும் பயன் படுத்துகிறார்கள். தைப் பொங்கல் என்றால் அவர்கள் மகரப் பொங்கல் என்று கூறுவார்கள். ஆவணி ஓணம் என்றால் அவர்கள் சிங்க ஓணம் என்பார்கள்.

கோளம் என்பதால் ஒவ்வொரு 30 பாகை கொண்ட ராசிக்குள்ளும் சமமான காலம்தானே கதிரவன் நிற்பான் என்று எண்ணாதீர்கள். அப்படி இல்லை. பூமியின் வலம் வரும் பாதை நீள்வட்டப் பாதையாக உள்ளதால் பூமிக்கு அண்மை நிலை தூர நிலை என இரு நிலைகள் உண்டு. அண்மைநிலையில் பூமி வேகமாக ஓடும் தூர நிலையில் வேகம் குறைவாக ஓடும். இதன் காரணமாக சில மாதங்களில் நாட்கள் குறையும். சில மாதங்களில் நாட்கள் கூடும். எடுத்துக்காட்டிற்கு வருகிற ஆனி மாதத்தில் 32 நாட்கள். கார்த்திகை மாதத்தில் 29 நாட்கள். இங்கு லீப் ஆண்டு என்று ஒன்றை அறிவிக்கத் தேவையில்லை. கதிரவன் அந்த அந்தராசிக்குள் எத்தனை நாட்கள் நிற்பதுபோல் தோன்றுகின்றானோ அந்த நாட்கள்தான் அந்தமாதத்திற்குரிய நாட்கள். 12 ராசிகளையும் கதிரவன் கடக்க ஆண்டும் முற்றுப் பெற்று விடும்.

இத்துடன் இதனுடன் தொடர்புடைய இன்னொன்றும் சொல்லவேண்டி உள்ளது. ஒவ்வொரு ராசியினுள்ளும் இரண்டேகால் நட்சத்திரங்கள் என்ற முறையில் அச்சுவினி பரணி கார்திகை ரோகினி என்ற ஒழுங்கில் 27 நட்சத்திரங்களை உள்ளடக்கி உள்ளார்கள். எடுத்துக்காட்டிற்கு மேட ராசிக்குள் அச்சுவினி பரணி ஆகிய இரு நட்சத்திரங்களுடன் கார்த்திகை நட்சத்திரத்தின் முதலாம் பாதம் என்னும் கால் பகுதியும் அடங்கும். 2 1/4 X 12 = 27 இருபத்தேழாவது நட்சத்திரமான ரேவதியின் கடைசிப் பகுதியும் அச்சுவினியின் முற்பகுதியும் ஒன்றுடன் ஒன்று இணையும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். காரணம் சைவர் பாகையும் 360 பாகையும் ஒரே புள்ளிதானே.

இப்பொழுது மாதப் பிறப்புப் பற்றிப் பார்ப்போம். ஒரு ராசியிலிருந்து மற்ற ராசிக்குள் கதிரவன் நுழையும் நாளே மாதப் பிறப்பு. இந்த நுழையும் நிகழ்வை சங்கிராந்தி என்பார்கள். இதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அதை எளிதில் சமாளிக்கிறார்கள். இந்திய இலங்கை நேரப்படி பகலில் சங்கிராந்தி நிகழ்ந்தால் அன்றையநாளை மாதப்பிறப்பாகக் கொள்கிறார்கள்.இரவில் நிகழ்ந்தால் மறு நாளை மாதப்பிறப்பாகக் கொள்கிறார்கள். இதையே உறுதியாகத் தொடர்ந்து கடைப்பிடித்தால் எந்தக் குழப்பமும் வராது. இதைவிடுத்து, இந்தியா இலங்கையில் சங்கராந்தி நிகழும்ÚÖது இரவு அதனால்அவர்கள் மறுநாள் கொண்டாடட்டும் எங்களுக்கு அப்போது பகல்தானே அதனால் நாங்கள் முதல்நாளே கொண்டாட வேண்டும் என்கிறார்கள். இந்தியாவில் மாத இறுதி அன்று இங்கு மாதப் பிறப்பு என்று அறிவிப்பது மாதத்தையே இழிவு படுத்தும் செயல். இதை அவர்கள் உணராமல் இல்லை. தாங்கள் ஏதோ புதிதாகக் கண்டு பிடித்ததுபோல் தங்கள் கணிப்புத் திறனைப் பறைசாற்ற இந்தக் குழப்பத்தைச் செய்கிறார்கள். உறங்குபவனை எழுப்பலாம் ஆனால் வேண்டுமென்றே உறங்குபவனை எழுப்புவது சிரமம். நாங்கள்தான் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கணிப்பாளர்கள் கவனத்திற்கு நாம் ஒரு விடயத்தை கூறலாம். மேஷ சங்கிராந்தியோ, கற்கடக சங்கிராந்தியோ அல்லது மகர சங்கிராந்தியோ நிகழ்ந்தால் அந்த மாதம் முழுவதும்கதிரவன் அந்த ராசியில் தானே நிற்கப் போகின்றான் ஒரு நாள் பிந்துவதால் திதி அல்லது நட்சத்திரம் தவறிவிடும் என்று கவலைப்படுகிறீர்களா? அதிலும் பார்க்க, இந்தியாவில் மாத இறுதியாக இருக்கும் நாளை, அமெரிக்காவில் மறுமாதத்தின் பிறப்பு என்று அறிவிப்பது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாள் பிந்தி அறிவிப்பது காலம் காலமாக உள்ள வழக்கம் தானே. காலம் காலமாக இரவில் சங்கிராந்தி நிகழ்ந்தால் மறுநாளை மாதப்பிறப்பு என்ற அறிவிக்கும் வழக்கம் தானே உள்ளது.

திதி அல்லது நட்சத்திர விடயத்தில் நீங்கள் கூறுவதில் அர்த்தம் இருக்கு. ஏகாதேசி மறு நாள் ஏகாதேசி அல்ல. அமாவாசை மறுநாள் வேறு, பௌர்ணமியும் அப்படியே. ஏன் தைப்பூசம் மறுநாள் பூசமாகவா இருக்கப்போகிறது. ஆகையால் உங்கள் கடும் போக்கை அவற்றுடன் நிறுத்திக் கொண்டு உலகம் முழுவதும் ஒரேநாளில் புத்தாண்டை கொண்டாட விடுங்கள்.
ஆங்கில ஆண்டோ கதிரவனின் வடக்குத் தெற்குப் பயணப் பாதையை மையமாக வைத்துக் கணிக்கப் படுவதால் பாதை என்ற அர்த்தத்தில் அயன ஆண்டு என்று பெயர் பெறுகிறது. தமிழ் ஆண்டோ கதிரவனின் விண்மீன் சஞ்சாரத்தை மையமாக வைத்து கணிக்கப் படுவதால் விண்மீன் சம்பந்த ஆண்டு என்று பெயர்பெறுகிறது. பாதை இல்லாத ஆண்டு என்றஅர்த்தத்தில் நிராயன ஆண்டு என்றும் அழைக்கிறார்கள். சோதிடத்துடன் தொடர்புடையதால் இதற்கு வேதசோதிட ஆண்டு என்ற பெயரும் உண்டு.

எமது ஆண்டும் பருவ காலங்களும்.

இங்கு சொல்லவேண்டிய விடயம் பூமியின் ஒரு சலனம் காரணமாக எங்கள் ஆண்டு ஆங்கிலஆண்டுபோல் பருவ காலங்களுக்கு ஒப்ப ஓடுவதில்லை. பூமி பம்பரம்போல் தன்னைத்தான் சுற்றுவதுடன் கதிரவனையும் சுற்றுகிறது என்ற கூற்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த இரண்டு செயல்களையும் செய்யும் பம்பரம் சற்று தளம்புவதையும் அவதானித்திருப்பீர்கள். அதுபோல் பூமியும் தளம்புகிறது. ஓருமுறை தளம்பி நிமிரப் பூமிக்கு 26400 ஆண்டுகள் செல்கிறது. கிழக்கிலிருந்து மேற்காக வட்டமிடும் பூமி ஒரு ஆண்டு காலத்தில் சிறிது மேற்குநோக்கி தளம்புகிறது. அதனால் அந்த தளம்பும்கோணத்தையும் சேர்த்து ஓடவேண்டிய தேவைபூமிக்கு ஏற்படுகிறது. அதற்கு தேவைப்படும் காலம் 20 நிமிடங்கள். இதனால் அயன ஆண்டைவிட நிராயன ஆண்டு 20 நிமிடங்களால் நீளம்கூடுகிறது. 72 ஆண்டுகளில் அது ஒருநாளாகத் திரண்டு விடுகிறது. கி பி 285ல் கதிரவன் நடுக்கோட்டுக்கு வரும் நாளான மார்ச் 20ல் மேட சங்கிராந்தி நிகழ்ந்தது. இவ்வாண்டு ஏப்ரல் 14ல் நிகழ்கிறது. 20 நிமிடங்கள் திரண்டு 24 நாட்கள்வித்தியாசத்தை உருவாக்கி விட்டன. அதே ஆண்டு (கி பி 285) தை முதலாம் திகதி டிசெம்பர்21ம் திகதிதான் வந்தது. அப்படியானால் அந்தஆண்டின் தை முதலாம் திகதி நிச்சயம் அறுவடை விழாவாகக் கொண்டாடும் தகைமையுடன் இருந்திருக்கவில்லை. சரியாகக் கணித்துப்பார்ப்போமானால் ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கலியுகத்தின் முதலாம் ஆண்டு ஏப்ரலில் பிறக்கவில்லை. பெப்ரவரி 18ல்தான் பிறந்தது. இது கணிப்பின் தவறில்லை. பூமியின் தளம்பல்தான் காரணி. இவற்றை நாம் தெரிந்து வைத்திருக்கலாமே அன்றிப் பரிகாரம் தேட முடியாது.