தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வழக்கில் உள்ள முதுமொழி. எதிர்கால நம்பிக்கையை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஊக்குவிக்கும் வாசகம் இது. புதிய வருடம் புதிய உற்சாகம், மாணவர்களுக்கு புதிய வகுப்பு. சாதித்து முடிக்க, கடந்த காலத்தை எடை போட துÖண்டலுக்குரியதாக எண்ணத்தை மனத்துக்குள் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஏற்படுத்துகின்ற ஒரு புது ஆண்டு. உத்தியோக உயர்வு, இடமாற்றம், உத்தியோக ஓய்வு போன்ற மாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்தும் தோற்றத்தோடு தை பிறக்கின்றது. நாற்றுமேடை, நாற்று நடுகை என தோட்டங்களிலும் விவசாயிகளின் சுறுசுறுப்பான ஓட்டம் தைபிறந்தால் தொடங்குகிறது.
வீட்டுக்கு முன் அழகாக வளர்த்த குறோட்டன் செடிகள், அளவோடு வெட்டப்பட்டு ஒவ்வொரு வீட்டின் முகப்பும் ஊரின் ஒரு புதுத் தோற்றத்தோடு காணப்படும் காலம் தை மாதம் தான். வேலிகளில் கிளை விட்டு உயரச் செழித்திருந்த கதியால்கள் அளவோடு வெட்டப்பட்டு வீடுகளும் கூட அழகாக காட்சி தருகின்ற மாதம் தை மாதம். குறுக்கன் அடிக்கின்ற வாழைகள், கமுகு, தென்னம்பிள்ளைகள் என்பன புது நடுகையைக் காண்பதும் தை மாதத்தில் தான். அந்த நாட்களில் தை பிறந்தால் புதிய வருட வருகையை அறிவிப்பதாக கலண்டர்கள் தான் முதலில் காணப்படும். ஒவ்வொரு கடைகளிலும் லீலா பஞ்சாங்கக் கலண்டர்கள், மெய் கண்டான் திருக்குறட் கலண்டர்கள் என்பன போட்டி போட்டுக் கொண்டு ஐப்பசி மாத பிற்பகுதிகளிலே விற்பனைக்கு வந்து விடும். தெய்வப் படங்கள். தலைவர்களுடைய படங்களை தாங்கியதாக குட்டிக் கடைகளிலும் கூட இவை நிரைக்கு தொங்கிக் கொண்டிருக்கும். பொங்கலையொட்டி, மற்றும் அதற்கு முன் வருகின்றநத்தாரையொட்டி புடவைக் கடைகள் கழிவு விலைகளை விளம்பரமாகப் போடும். தங்கள் பெயர் பதித்த மாத, வருட கலண்டர்களை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புடவைக் கடைகளும் வழங்குவதும் உண்டு. இலவசக் கலண்டர்களைப் போட்டி போட்டுக் கொண்டு சேகரிப்பதில் சிறுவர்களாக இருந்த எங்களுக்கு ஒரு தனி ஆர்வம்.
தைப்பிறப்பு இன்னொரு அம்சமான தைப்பொங்கலையும் கொண்டிருக்கின்றது. தைப்பொங்கலுக்கான ஆரவாரம் சினிமா போஸ்டர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டு விடும். யாழ்ப்பாணத்தில் ராணி சினிமா, வெலிங்டன், வின்சர், ராஜா தியேட்டர்கள் என்று இருந்த அத்தனைசினிமா தியேட்டர்களிலும் ஒவ்வொரு பொங்கலுக்கும் புதுப்பட விநியோகம் இடம்பெறும். தங்கள் புதுப்படங்களை ஏற்கனவே, கதாநாயகன், கதாநாயகிகளுடைய பெரிய கட்அவுட்களோடு விளம்பரப்படுத்துவது இந்த தியேட்டர்களின் வாடிக்கை. மாட்டு வண்டில்களில் தைப்பொங்கலுக்குத் தேவையான மண்பானை சட்டிகளை வைக்கோல் இடையிடையே பொருத்தி அது ஆடி உடைந்து விடாமல் இருப்பதற்கான பாதுகாப்போடு வீதி வீதியாகக் கொண்டு வருவார்கள். அம்மம்மா பானையை சுண்டிப் பார்த்து வெடிப்பில்லாத பானையாக உறுதிப்படுத்தி வேண்டுவது இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கின்றது.
கடைகளிலும் பொங்கல் பானைகள், சட்டிகள் நிறைந்து காணப்படும். அலுமினிய தொழிற்சாலைகளிலும் அலுமினிய பானை, சட்டிகளை பொங்கலுக்கு காட்சிப்படுத்துவதும் மலிவு விற்பனையில் விற்பதும் பிற்காலத்தில் வழக்கமாகி விட்டது. பொங்கலுக்காக வாழைக்குலைகளை பழுக்கப் போடுவது ஒவ்வொரு வீடுகளிலும் பிள்ளைகளுடைய வேலையாக இருந்தது. அளவாக வெட்டிய கிடங்கில் முற்றிய வாழைக் குலையை வைத்து வாழைத் தண்டால் இடைவெளி இல்லாமல் பாதுகாப்பாக மூடி ஒரு மூலையில் அளவாக ஓட்டையிட்டு சிரட்டை மூலமோ, பால்ப் பேணி ஊடாகவோ அந்த ஓட்டையினுÖடாக மூன்று நாட்களுக்கு புகையூதி பழுக்க வைத்து பொங்கலுக்கு வாழைப்பழத்தை தயார் படுத்துவது அந்தக் காலங்களில் வீடு தோறும் வாடிக்கை. சந்தை, சங்கக்கடைகள் என எல்லாவற்றிலும் சக்கரை, பயறு, பச்சையரிசி, கயு, தேங்காய், பிளம்ஸ், கரும்பு, மஞ்சள் என்று எல்லாமே விற்பனைக்குவந்துவிடும். இவற்றோடு சீனவெடியும் பொங்கலை அறிவிக்கின்ற இன்னொரு அம்சம். யானை வெடி, மூல வெடி, சீன வெடி என்று பெரிய வெடிகளும், பூரிஸ் என்கின்ற சிறுவர்களுக்கான சீறி எரிகின்ற குச்சி தாங்கிய வானவெடிகளும் ஆக எல்லாம் விற்பனைக்கு வந்துவிடும். பொங்கலுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக வீடு தோறும் இரவிரவாக வெடிகள் வெடிப்பது வழக்கமாகி விடும்.
தைப்பொங்கல் வரையும் வெடித்த வெடிகள் எங்கும், சிறு துண்டங்களாக கடதாசிகள் சிதறி எவ்வளவு வெடிகள் வெடித்தது என்பதைக் காட்டுகின்ற நிகழ்வுகள் வீடு தோறும் தைப்பொங்கலில் நடக்கின்ற ஒன்று. தைப்பொங்கலுக்கு என்று அழகாக விடியற்காலை முற்றத்தை சாணத்தால் மெழுகி நாற்புறமும் தோரணம் தொங்கவிட்டு மாவிலை இடையிடையே சொருகி, மூன்று கல் அடுப்பு சுத்தமாக சாணகம் பூசி நடுவிலே வைத்து சுற்ற வர உலக்கையால் அளவாக பெட்டிகட்டி கோலம் போட்டு அடுப்பில் பானையை வைத்து அதேவேளை ஒரு மூலையில் நிறைகுடம் வைத்து விடியற்காலையிலே பொங்கலுக்கான ஆயத்தம் தயாராகிவிடும். ஆண்பிள்ளைகளாக நாங்கள், விடியற்காலையிலே முழுகித் தோய்ந்து பொங்கிசரிகின்ற போது மூன்று முறை சுற்றி பச்சையரிசியை பானையில் போடுவதற்கு தயாராகி விடுவோம். பொங்கல்பலகாரங்களும் வீடுகள் தோறும் இந்த வேளையில் சுட்டுதயாரிக்கப்படுவது வழக்கம். பொங்கல் முடிய கமகமக்கின்ற அந்த சக்கரைப் பொங்கலை மூன்று தலை வாழையிலும் போட்டு அதற்கு மேலே வாழைப்பழம் உரித்து வைத்து நெய் ஊற்றி, பூக்கள் சகிதம் சூரியனைப் பார்த்து வணங்கி, பின்னர் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் பந்திப் பாயில் உட்கார்ந்து பொங்கலை ஒரு பிடி பிடிப்போம்.
அழகான வர்ணக் குஞ்சுப் பெட்டிகளில் அம்மா தருகின்ற, பொங்கலை அயல் வீடுகளுக்குக் கொண்டு சென்று கொடுப்பது அந்த நாட்களில் எங்கள் வேலை. அடுத்த வீடுகளுக்குப் போவதும், பொங்கல் விடுமுறை நாளிலே மாபிள் அடி, அது இது என்று முழுநாளும் பொங்கல் தினத்தில் எங்களுக்கான கழிப்பான நிகழ்ச்சிகளாக இருக்கும்.
இவ்வாறாக பெரியவர்கள் பொங்கல் மாலை தோறும் மாட்டு வண்டிச் சவாரி நடக்கின்ற இடத்திற்குப் போய் விடுவார்கள். இளைஞர்கள் பொங்கல் நாளில் 4-5 காட்சிகள் என்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடக்கின்ற சினிமா புதுப்படங்களைப் பார்க்க யாழ்ப்பாணத்திற்கு படை எடுத்து விடுவார்கள். சிறுவர்களாகிய நாங்கள் வீட்டோடு விளையாடிக் கொண்டிருப்போம். ஆனந்தமான அமைதியான அந்தப் பொங்கலை இன்று நினைத்தாலும் பொங்கல் போல இனிக்கத் தான் செய்கின்றது.
[highlight color=”red”] – Image Courtney – www.tamilguardian.com – [/highlight]