தொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்

78

இலங்கைத்தீவின் அரசியலோ, அல்லது தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைகளோ தனித்துவமான விடயங்களாக நோக்கப்படாமால், இவைஉலகின் பல்வேறுநாடுகளின் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படவேண்டும் என்ற கருத்தை இப்பத்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இலங்கைத்தீவில் நடைபெற்ற `ஆட்சி மாற்றத்தை’ மற்றைய நாடுகளில் நடைபெற்றுவரும் ஆட்சிமாற்றங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில் பார்த்தால் இலங்கைத் தீவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்தி மற்றைய நாடுகளிலும் பிரயோகிக்கப்பட்டு வருவதனை நாம் அவதானிக்க முடியும்.

`அரபு வசந்தம்’ அல்லது மக்களின் திரள் எழுச்சிப்போராட்டங்கள் என வியந்து பேசப்பட்டவை குறித்தநாடுகளில் அரச தலைவர்களை மாற்றுவதனைநோக்கமாகக் கொண்டவை என்பது இப்போதுதுலக்கமாகத் தெரிகிறது. ஆசியா, ஆபிரிக்காஎனக் கண்டங்கள் கடந்து மூன்றாம் உலகநாடுகளில் ஆட்சி மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்னமும் சில நாடுகளில்ஆட்சி மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. அமைதியான வழியில் ஆட்சியிலிருந்து விலகிச் செல்லமுடியாத அரசாங்கங்கள் மீது வன்முறை பாவிக்கப்படுவதுமல்லாம் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் குழுக்களை `மிதவாதி’ களாகச்சித்தரிக்கும் வேடிக்கையையும் பார்க்க முடிகிறது.சிரியா மீதான விமானத் தாக்குதல்கள் ஒரு ஆட்சிமாற்றத்தை இலக்காகக் கொண்டிருக்கின்றன என்பதனை அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்கின்றன.

இலங்கைத்தீவில் நடந்தது போன்றே கடந்த மாதம் இரண்டு நாடுகளில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடைபெற்றன. ஒன்று மியன்மார் (பர்மா) நாட்டிலும் மற்றையது மேற்கு ஆபிரிக்காவிலுள்ள பேர்கினா பாசோ (Burkina Faso) நாட்டிலும் நடைபெற்றன. இவ்விரண்டு நாடுகளும் சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்டிருந்ததுடன் இராணுவத்தின் கிடுக்குப்பிடிக்குள் மக்கள் இருந்தனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேர்கினா பாசோ
rqநொவெம்பர் 29ம்திகதி ஞாயிற்றுக்கிழமை பேர்கினா பாசோ நாட்டில் ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்றன. முப்பதுவருடகால சர்வாதிகார ஆட்சியின் பின்னர்நடைபெற்ற ஜனநாயகபூர்வமான தேர்தல் என்பதால் அந்நாட்டின் மீது வெளித்தரப்புகளின்கவனம்குவிந்திருந்தது. கடந்த ஒக்ரோபர் மாதம்மேற்படி தேர்தல்கள் நடைபெறவிருந்தபோதிலும்,ஒக்ரோபர் முதல் வாரத்தில் இராணுவத்தின்ஒரு பிரிவினரால் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டமையினால் தேர்தல்கள் பின்போடப்பட்டன.

தேர்தலில் குழறுபடிகள் இடம்பெறுவதனைத் தடுப்பதற்காக தேர்தல் கண்காணிப்பு பணிக்கென மேற்கத்தைய அரசுகள் பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டன. சுவீடன் நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு அரசுசாரா நிறுவனத்தின் அனுசரணையில் தேர்தல் அவதானிப்புப் பணிகள் நடைபெற்றன. அக்குழுவிற்கு தொழினுட்ப உதவி வழங்குவதற்காக அந்நாட்டின் தலைநகர் வாகடுகூ (Ouagadougou) இற்கு நான் சென்றிருந்தமையினால் அத்தேர்தல் தொடர்பான நேரடி அனுபவம் எனக்குக் கிட்டியது. தேர்தல் நடைபெற்ற மறுநாள் தேர்தல் முடிவுகள் ஒரளவு வெளியான நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் Roch Marc Christian முன்னணியில் இருப்பது தெரியவந்தது.

ரொக் (Roch) பிரான்சிலுள்ள University of Dijon பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பொருண்மியத்துறை பட்டதாரி. வங்கித்துறையில் பணிபுரிந்த அவர் 27வது வயதில் பேர்கினா பாசோவில் உள்ளவங்கி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டார். பின்னாளில் அரசாங்கத்தில் அமைச்சராகவும், அந்நாட்டின் பிரதமராகவும் இருந்தார். முன்னைய அரசாங்கத்தில் இருபத்தியேழு வருடங்கள் பதவியிலிருந்த அவர் மூன்றுவருடங்களுக்கு முன்னர் அரசாங்கக் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை உருவாக்கினார்.

எல்லா விதத்திலும் தகுதியானவர் போல் தோன்றிய ரொக் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என தேர்தல் கண்காணிப்பு பணியில் திட்ட முகாமையளாராகவிருந்த யொலன் என்ற பெண்ணுடன் கேட்டேன். அதற்கு அவர், மாற்றம் எதுவும் ஏற்படுவதற்குவாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால் இதில் பெரிதாக நம்பிக்கைகொள்வதற்கு எதுவுமில்லை என்றார். முன்னைய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியில் பங்காளியாக இருந்த ஒருவர் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்என்பதுதான் யோலான் போன்ற சிந்திக்கத் தெரிந்தவர்களின் கேள்வியாக இருக்கிறது. இவ்வாறான ஆள் மாற்றம் உண்மையில் பெரிதாக எதனையும் சாதித்துவிடப்போவதில்லை என்பதே அவர்களது கருத்து. இருப்பினும் மேற்கத்தைய லிபரல் ஊடகங்கள் இந்த ஆட்சிமாற்றத்தையிட்டு பெரிதாகப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு சிலநாட்கள் முன்னர்வரை மகிந்த அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, மகிந்தவிற்கு எதிராக தேர்தலில் நின்றதன் மூலம்புனிதராக்கப்பட்டது போன்ற சம்பவம்தான் பேர்கினா பாசோவிலும் நடந்தேறியிருக்கிறது.

மியன்மார்

aungsangமியன்மாரில் ஐம்பதுவருடகால இராணுவ ஆட்சியின் பின்னர் முதற்தடவையாக ஜனநாயகபூர்வமான தேர்தல் நொவெம்பர் 8ம்திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் மியன்மாரின் மேல், கீழ் என இரண்டு தேசிய அவைகளிலும் 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது ஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi) தலைமையிலான National League for Democracy (NLD) கட்சி. இராணுவ ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட சட்டத்தின் பிரகாரம்ஆங் சான் சூ கீ பதிவியேற்பதற்கு இன்னமும் ஒரு வருடகாலம் செல்லும் எனக் கூறப்படுகிறபோதிலும், அவரது வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே மேற்குலகத்தரப்புகளால் போற்றப்படுகிறது. மேற்படி தேர்தலையொட்டி மியன்மாரில் ஜனநாயகச் செயற்பாடுகளுக்காக பெருந்தொகை நிதியை மேற்குலக அரசுகள் பன்னாட்டு அரசுசாரா அமைப்புகளுக்கு வழங்கியிருந்தன.

1991ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், ஜனநாயகத்திற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டமையால் மியன்மார் இராணுவ ஆட்சியாளரால் பத்துவருடங்களாக வீட்டுகாவலில்வைக்கபட்டிருந்தவருமான ஆங் சான் சூ கீ இன் வெற்றி மேற்கத்தைய தரப்புகளால் வரவேற்கப்பட்டாலும், மியன்மாரிய கல்வியாளர் கலாநிதி ஷார்ணி (Dr Zarni) வேறுவிதமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். 1992ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை மியன்மாரின் இராணுவ ஆட்சியளராகவிருந்த தான் சுவே (Than Shwe) ஆங் சான் சூ கீ இற்கு ஆதரவு வழங்கியமை பற்றி பிபிசி உலகசேவை தொலைக்காட்சிக்கு கலாநிதி ஷார்ணி வழங்கிய செவ்வியில் ஆங் சாங் சூ கீ உட்கட்சி ஜனநாயகத்தை மதிப்பதில்லை எனவும் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதுடன், ரொஹங்கியா இஸ்லாமிய மக்களின் பிரச்சனை போன்ற முக்கிய விடயங்களில் கருத்து வெளியிடுவதனை தவிர்த்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மியன்மார் தேர் முடிவுகள் தொடர்பாக அறிக்கைவெளியிட்டிருக்கும் அனைத்துலக முரண்பாடுகளுக்கான மையம் (International Crisis Group), சர்வதேச ஆதரவினையும், உள்ளுர்மக்களின் ஆதரவனையும் வைத்திருக்கும் சகஈ கட்சி மியன்மார் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கோரியிருக்கிறது. மேற்குலகின் ஆதரவினைக் கொண்டிருக்கும் ஆங் சான் சூ கீ அத்துடன் நின்றுவிடாது சீனாவுடனும் நல்லுறவினைப் பேணிக்கொள்ளும் வகையில் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியிருக்கிறது.

மேற்படி ஆட்சிமாற்றங்களை ஒப்பு நோக்குகையில் சிறிலங்காவில் நடைபெற்றதுபோன்று மேற்குலக அரசுகளிற்கு பணிய மறுத்த ஆட்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளார்களே தவிர மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி மாற்றம் நடைபெற்றதாக கருத முடியவில்லை. ஆட்சிமாற்றங்கள் மூலம் நீண்ட கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கொள்ளப்பட்டு, புதிய ஆட்சியில் மக்கள் தம்மைஆசுவாசப்படுத்துவதற்கான வெளி ஏற்படுகிறது என்பது உண்மைதான், எனினும் இந்த ஆட்சிமாற்றங்கள் நாட்டு மக்களுக்கு அரசியல், பொருண்மிய, சமூக மேம்பாட்டினை ஏற்படுத்துதாகத் தெரியவில்லை. அதே சமயம் குறித்த நாடுகளில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது. ஜனநாயகத் தேர்தல்கள்மூலம் மக்களின் வாக்குகளினால் தமக்குச்சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்துவதில் மேற்குலக நாடுகள் தொடர்ந்து வெற்றிபெற்றுவருகின்றன. இன்னொருபுறத்தில் சர்வாதிகார ஆட்சிகளே வல்லாதிக்க நாடுகள் தங்கள் நாடுகளில் கால்பதிக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன.