தொடரும் திராவிட சூது… விழிக்குமா தமிழகம்??

99

தமிழனத்தில் யாரும் உணராத எதிர்வரும் அவலத்தை முன்னரே அறிந்து உணர்த்திய ஒரே தலைவன் பிரபாகரன்தான். இந்தியா அமைதிப்படையை தமிழர்களைக் காக்க வந்ததாக வேடம் போட்டு வந்தது. மக்கள் நூற்றுக்கு நூறு சதம் நம்பினார்கள். மற்ற போராளி குழுக்களும் நம்பினர். ஆனால் பிரபாகரன் நம்பவில்லை.

இந்தியாவை எதிர்க்கவேண்டுமானால், முதலில் மக்களிடம் அவல மனநிலையை உருவாக்கவேண்டும். இதற்கு முதலில் திலீபனின் உண்ணாவிரதம் துணை புரிந்தது. மக்களுக்கு இது முதல் அதிர்ச்சி, அதன் பின்பு இந்தியா தனது கட்டுப்பாட்டில் இருந்த சில முக்கிய புலித்தளபதிகளை சிங்களத்திடம் கையளிக்க முற்பட, அவர்கள் அனைவரும் சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இது இரண்டாவது அதிர்ச்சி. அதன் பின்பு புலிகளும் அமைதிப்படைகளும் மோத, அமைதிப்படைகளின் கோரப்பற்கள் அப்பாவிகளின் மேல் பாய, மக்களுக்கு முழு அவலமும் புரிந்தது. முடிவில் மக்களின் துணையுடன் அமைதிப்படை விரட்டியடிக்கப்பட்டது.

தமிழக வரலாற்று நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது, இது தெரியாமல் நடந்த பிழைபோலத் தெரியவில்லை. பெரிய கூட்டுச்சதி போன்றே தெரிகிறது. இன்றும் திராவிடக்கட்சிகள் அவர்கள் ஆட்சியில் பாலும் தேனும் ஓடுகிற மாதிரிதான் பேசுகிறார்களே ஒழிய, அவல மனநிலை கொஞ்சமும் இல்லை.

திராவிடக்கட்சிகள் ஈழத்தில் நடந்த விடயங்களை மக்களிடம் ஆரம்பத்தில் இருந்து பரப்பி இருந்தால், ஒரு அவல மனநிலை ஏற்பட்டு, இனப்படுகொலையைத் தடுக்க வாய்ப்பிருந்திருக்கும், ஈழப்போராட்டத்தில் தமிழகம் பெரும்பங்களித்திருக்க முடியும். ஆனால் திராவிடக்கட்சிகள் அதனைச் செய்யாமல், அவல மனநிலையைப் பரப்ப முனைபவர்களை தடை செய்தது. இன்றும் ஈழம் சார்ந்த போராட்டங்களுக்கோ, திரைப்படங்களுக்கோ, ஊர்வலங்களுக்கோ பெரிய தடை விதிக்கப்படுகிறது. எந்த காரணம் கொண்டும் தமிழர்களிடம் அவல மனநிலை தோன்றிவிடக்கூடாது என்று மிகக்கவனமாக உள்ளனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இராசீவ் காந்தி இறந்ததுதான் தமிழர்களுக்கு நடந்த மிகப்பெரிய அவலம்போல இன்றுவரை தமிழகத்து தலைவர்கள் பேசுகிறார்கள். அதை மக்களும் நம்புமளவுக்கு பரப்புரை செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீண்டும் அவலமனநிலை அடையும் வரை, எந்த பெரிய முன்னேற்றத்தையும் தமிழ்த்தேசியம் பெறப்போவதில்லை.

கலாநிதி மு. சேதுராமலிங்கம். ( தமிழ்த் தேசிய வியூகவியல் வல்லுநர்)