தொலைத்த இடத்தைவிட்டு, வெளிச்சம் உள்ள இடத்தில் !!

776

தேடுதல்!
தொலைத்த இடத்தைவிட்டு, வெளிச்சம் உள்ள இடத்தில் !!

ஓருபேப்பருக்காக சுகி

வீதியில் இருமருங்கிலும் மக்கள், தோளில் சிறுகுழந்தைகள் இருந்து கையசைக்க, முதியவர்கள், பெண்கள் என வயது வித்தியாசம் இல்லாது, ஆரவாரவொலி, ஓரிருவர் கைகளில் வெள்ளைக்கொடிகளும், பூக்களுமென, வேறும் சிலர், இனிமேல் எமக்கு விடிவுதான், கடவுளே, என்று இனி நிம்மதியாக இருக்கலாம் என்று தத்தம் மனஆசைகளை, அபிலாசைகளை இவர்கள் நிச்சயம் நிறை வேற்றுவார்கள் என்ற தொனியில் ஆணித்தரமான கருத்துப்பகிர்வுகள். இவ்வளவும் இந்தியஅமைதிப்படை,Indian Peace Keeping Force என்று தம்மைத்தாமே அழைத்துக்கொண்டு எம்மண்ணில் காலடி வைத்தபோது, உண்மையிலேயே சில பகுதியில் நிகழ்ந்தவை. ஊருக்கு ஊர் சிறிய வேறுபாடு இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழினத்தில் பெரும்பகுதியினர், அவர்கள் உண்மையாகவே அமைதிகாக்கத்தான் வருகிறார்கள் எனமனப்பூர்வமாக நம்பினார்கள்.

விடுதலைப்புலிகள் மிகஆழமான, தூரநோக்கோடு இவர்களின் வருகையின் உள்நோக்கம் பற்றி மிகத்தெளிவாகத் தெரிந்திருந்தார்கள். சிறீலங்காவின் வடமராட்ச்சி ஒப்பரேசன் என்று அழைக்கப்பட்ட, 26 மே 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை மீண்டெடுக்கும் போரில் 8,000 சீறிலங்கா படையோடு நடந்த முன் எப்போதும் இல்லாத அழிவினால், நொந்து போன மக்களுக்கு, (அப்போதும் கயபாகு படைக்கு படைஅதிகாரியாக மேஜர் கோத்தபாய ராஜபக்ச இருந்திருந்தார்) அகிம்சை, அமைதி என்ற பெயர்களும், அரசியல் தீர்வு என்பதும் பிடித்திருந்தது. யூன் 4ம்திகதி 1987 இல் ஒப்பரேசன் பூமாலை என்ற பெயரில் சிறிலங்காவின் யாழ் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்தியவிமானங்கள், உணவுபொதிகளைப் போட்டு Indo- Sri Lanka ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது, ஒப்பரேசன் லிபரேசனை முடிவுக்கு கொண்டுவந்தது. தாம் காந்தி தேசம் என்று அழைக்கும் இந்தியாவில் இருந்து, தமக்கு அமைதியை ஏற்படுத்தவந்தவர்கள் எனநினைக்கும் மக்களுக்கு, ஒன்றை ஆக்கும் போதே, அது தமது நாட்டு நலனைப்பேணாமல், தமது வழிக்கு வரவில்லை என்றால், அதை அழிப்பதற்கெனவும் இன்னொன்றை சாமாந்திரமாக உருவாக்கும் சாணக்கியம் கொண்டவர்கள் அவர்கள் என எப்பிடிச் சொல்வது.

இந்தியா காந்தி தேசம் இல்லை, விடுதலைக்கு இன்னும் எவ்வளவோ ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராட வேண்டும், சர்வதேச சமூகமும், சீறிலங்கா அரசும் பாவிக்கும் உத்திகளில், இதுவும் இன்னொரு தந்திரம். இவர்களின் நோக்கம் எமக்கு தமிழீழம் பெற்று தருவதல்ல, ஒரு சாதாரண கோரிக்கைகளைக் கூட இவர்கள் நிறைவேற்றப்போவதில்லை என்பதை எப்படி எடுத்துப்புரிய வைப்பது. திலீபன் தன்னை ஆகுதியாக்க முன்வருகின்றார். அப்போது நான் யாழ்பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலம் ஏன் இப்படி? இப்படி இல்லாவிட்டால் வேறு எப்படி? பலகேள்வி பதில்கள். மொத்ததில் தீலிபன் சிறுக சிறுக மடித்தது, எமக்கு, தான் நேசித்த மக்களுக்கு, இந்தியாவின் உண்மையான முகத்தைப்புரிய வைப்பதற்காகத்தான். அந்த பாவத்திற்கு நாம் எல்லோரும் பங்காளிகள் ஆகுகின்றோம். இப்போது திலீபனுக்கு விளக்கேற்றும் போதுகூட, அதை புரிந்து கொண்டு (சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டை) ஏற்றுகிறோமா என்று புரியவில்லை.

“மக்கள் புரட்சி, நிச்சயமாக தமிழீழத்தை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தரும், நான் மனரீதியாக ஆத்மார்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன்’

-லெப்டினன் கேணல் திலீபன்

எமது விடுதலைப்பயணத்தில், பலஇயக்கங்களை வளர்த்து தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பார்த்தார்கள.; முடியவில்லை. விடுதலைப்புலிகள் தமது கோரிக்கைகளிலும், கொள்கைகளிலும் மிக உறுதியாக இருந்தார்கள். சாதியைகொண்டுவந்தார்கள், சமயத்தைக்கொண்டுவந்தார்கள், ஆனால் விடுதலையில் இணைபவர்கள் எல்வோரையும் புதிதாக பிறந்தவர்கள் போல, பெயர் சூட்டி தனது குழந்தைகள் போலத் தத்தெடுத்துக் கொண்டார்கள்.

ஆகவே அடுத்த கட்டமாக அவர்களை சமாதான பேச்சு வார்த்தை என்ற ரீதியில் வெளியே எடுத்து, வருபவர்களின் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்கம் என்பவற்றை உன்னிப்பாக அவதானித்து எதாவது பலயீனம் தெரிகிறதா என்று ஊன்றி அவதானித்து, அதை துருப்பாக போட்டு இழுத்து இழுத்து எடுத்து உடைக்கப்பார்;தார்கள். கருணா அதில் இழுக்கப்பட்ட ஒரு துடுப்பு சீட்டு, என்றாலும் இறந்து போன மாவீரர்களின் ஆத்மாவின் ஆசியோ என்னவோ ஒவ்வொருதடவையும் தமிழ்சமூகம் குழம்பித் தெளிகின்றது. ஆனால் அந்த குழப்பத்தை தெளிவிக்கவும், குழப்பத்தை சரியாக விளங்கிக்கொள்ளாமலும் பலியாகிப்போல இளம் உயிர்களும் பல. இன்னும் சிலர் காணாமல் போனவர்கள் வரிசையில்.

கடைசி தமிழன் இருக்கும் வரை, விடுதலை நெருப்பு ஓயாது என்று சிலர் சொல்வர் ஆனால் உண்மையில் எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ, உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை நெருப்பு ஒயாது. அது எரிமலைபோல உள்ளே கனன்று கொண்டிருக்கும். ஆகவே எமது விடுதலை நெருப்பை அணையாமல் பார்பதின் பெரும்பொறுப்பு சிறீலங்கா அரசிடம் உள்ளது.

கருணாவின் பிரிவும் விடுதலைபுலிகளை அழிக்கவில்லை, புலிகளை விலைபேசவும் முடியவில்லை. ஆகவே அடுத்த கட்டமாக, பேச்சு வார்த்தையை நீண்டி ஒன்று மாறி ஒன்று எனப்பல கோணங்களில் முட்டுக்கட்டைபோட்டார்கள். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக விடுதலைப்புலிகளும் காலத்திற்கு காலம் சிலவற்றைச் செய்தார்கள், சிலவற்றைச் செய்வது போல நடித்தார்கள். அவ்வப்போது சிலபேருக்கு, சில வேடங்களும் கொடுத்தார்கள். விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்தால் அது விளங்கும், ஆனால் அது தெரியாமல், சிலர் இன்னும் தமது வேடத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது தான் வேடிக்கையான வேதனை.

இவ்வளவு பெரிய, பலமான, யாருக்கும் விலைபோகாத விடுதலை இயக்கத்தின், ஒரு பெரிய சக்தியாக, புலப்பெயர்மக்களும் உள்ளார்கள் என்று உணர்ந்தபோதுதான் சர்வதேசமும், சிறீலங்கா அரசும் தமது கவனத்தை புலர்பெயர்மக்கள்பக்கம் திருப்பின. அதைப்பற்றியும் அதன் பலம், பலயீனம் பற்றியும் அவதானிக்கத்தொடங்கியது. கட்டுக்கோப்பான புலப்பெயர் மக்களின் தலைமைகளின் மேல் தமது கவனத்தை திருப்பியது.

2009 இன் முற்பகுதியில், ஒருமித்து, ஒத்தகுரலில் 2, 3 இலட்சம் பேர் எனத் தெருவில் இறங்கி நீதிகேட்ட மக்களை, இப்பிடியே விட்டால் என்ன நடத்திருக்கும், நாளுக்கு நாள், கிழமைக்கு கிழமைஎன ஒரு போராட்டம் வைத்து, சிறையில் இருப்பவரின் பெயரைஅறிவி, போர்;குற்ற விசாரணை, உண்ணாவிரதம், பெண்களின் பாலியல் வன்முறைகளுக்கெதிரான ஊர்வலம், கீறிஸ் பூதங்களுக்கெதிரான ஆர்பாட்டம் என்று தொடங்கிவிடுவார்கள்.

புலம்பெயர்மக்களின் கவனத்தை, நேரத்தை வேறு திசையில், தமக்கு நெருக்கடி இல்லாத ஒன்றில், யாருக்கும் அச்சுறுத்தல் இல்லாத ஒன்றில் செலவிட்டால் நல்லது. அத்தோடு எமது மக்களுக்கு பதவி, பட்டங்களில் உள்ள பெருவிருப்பு, என்ற பலயீனத்தையும் பாவித்து, தமிழ்மக்களின் தேடல்களை, “இனப்படுகொலைநாள்” என்று எழாது, “தேசிய துக்கநாள்” என்று அழுவதற்கும், இப்போ முக்கியமே இல்லாத “ தேசிய அடையாள அட்டைக் கொடுப்பனவு”, என பலத்தையும், நேரத்தையும் செலவிடவைத்தார்கள். ஆனால் எப்போதும் போல இறந்த எமது மாவீரர்களின் ஆத்மா எமது பலத்தைப் பிரிய விடாது, விலலுக்கு இறைத்த நீர்; போல ஆகாமல் பாதுகாக்கின்றது.

இங்கு வாருங்கள், இங்கு வெளிச்சம் நன்றாகத்தெரிகிறது, வந்து தொலைத்த திறப்பைத்தேடுங்கள் என்றால், சொல்பவர்களையும், அவரோடு சேர்ந்து தேடுகிறவர்களையும் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும், ஏனெனில் திறப்பு தொலைந்தது வேறு இடத்தில், அங்கு தேடினால் தான் கிடைக்;கும். அல்லாவிட்டால் தேடுகிறமாதிரி நடிக்கத்தான் முடியும், தேடமுடியாது.