சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இருபது நாட்களே இருக்கையில், முதன்மை வேட்பாளர்களான மகிந்த இராஜபக்சவிற்கும் அவரது முன்னாள் சகாவான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்து வருகிறது. மைத்திரிபால எதிரணியின் பொதுவேட்பாளராக களம் இறங்கியமை தேர்தல் அரசியலிலை ஆர்வமாக அவதானிப்பவர்களுக்கு சுவாரசியத்தைக் கொடுக்கிறது. இத்தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட்டால் இன்னும் பல விறுவிறுப்பான தருணங்கள் கிட்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இங்கு மறைக்கப்படுகிற உண்மை என்னவெனில் இது வெறுமனே இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான போட்டியே தவிர ஒரு மெய்யான ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல் அல்ல என்பது. இங்கு சிங்கள – பௌத்த இனவாதம் இரண்டு பிரிவாக கச்சை கட்டி நிற்கிறது. இரண்டு பேரில் யார் தங்களுக்குத் தோதானவர் என்பதனை அவர்கள் இன்னும் இருபது நாட்களில் தீர்மானிக்கப் போகிறார்கள். யார் வென்றாலும் வெல்லப்போவது சிங்கள – பெளத்த இனவாதமே. இந்தப் போட்டியில் தமிழர்கள் பார்வையாளர்களாக இருக்க முடியுமே தவிர பங்காளிகளாகி தங்களை கோமாளிகளாக்கிக் கொள்ளக் கூடாது.
இரண்டு தரப்பினரின் பரப்புரைகளை அவதானித்தால், எதிர்க்கட்சியினர், மகிந்த ஆட்சியில் ஜனநாயகமின்மை, ஊழல், குடும்ப ஆட்சி போன்ற விடயங்களை முன்னிறுத்தி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். இப்பரப்புரைகளில் நியாயமிருக்கிறது. இருப்பினும் ‘சர்வதேசச் சதி’ (international conspiracy), தமிழ் அலைந்துழல்வு சமூகம், விடுதலைப்புலிகள் மீளத்தலையெடுக்கிறார்கள் என முற்றிலும் இனவாத அடிப்படையில் பரப்புரை நடாத்தும் மகிந்த தரப்பை எதிர்கொள்வதற்காக எதிரணியினர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள். இந்த இரண்டு தரப்பும் தாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அழிவிற்கு எவ்வாறு பங்களித்தோம் என்பதனை முண்டியடித்துக் கொண்டு உரிமை கோருகிறார்கள். ஆயுதரீதியில் தமிழ் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்டமையை எதிரணியினர் நியாயப்படுத்துவதுடன், இக்கொடுர இனவழிப்பை மேற்கொண்டவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தாம் ஒரு போது இணங்கப் போவதில்லை எனவும் கூறிவருகிறார்கள். சுருக்கமாகக் கூறுவதானால் தங்களில் யார் சிறந்த சிங்களத் தேசியவாதி என சிங்கள மக்களுக்கு நிருபிப்பதன் மூலமே தமது வெற்றியை உறுதி செய்யமுடியும் என முன்னணி வேட்பாளர்கள் இருவரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
சிறிலங்காவின் கடந்த ஒரு நூற்றாண்டு அரசியலை, அதிலும் குறிப்பாக அத்தீவு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கடந்த அறுபத்தாறு ஆண்டு அரசியலை அவதானிப்பவர்களுக்கு இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் தீவின் அரசியலில் சிங்கள – பௌத்த பேரினவாதமே கோலோச்சி நிற்கிறது.
சிங்கள குட்டி பூர்சுவாக்கள்
சிங்கள மக்களின் வாக்கு வங்கியை பெருமளவில் தீர்மானிப்பவர்கள் யார் என்பது பற்றி இடதுசாரிப் பார்வை கொண்டவரான பேராசிரியர் குமார் டேவிட் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் தகவல்கள் கவனத்திற்குரியவை. இலங்கைத் தீவின் சனத்தொகையில் எழுபத்தைந்து விழுக்காடு சிங்களவர்கள் என்றால் அதில் மூன்றில் இரண்டு பகுதியானவர்களை ‘குட்டி பூர்சுவாக்கள்’ (The Sinhala petty-bourgeoisie) என்ற சமூகப் பிரிவில் அவர் அடக்குகிறார். அதாவது ஏறத்தாள மொத்த சனத்தொகையின் அரைப்பங்கினர் இந்தப்பிரிவிற்குள் வருகிறார்கள். மத்திய தரவர்க்கத்தினர் எனப் பொதுவாக அறியப்படும் இவர்களை அவ்வாறு கூறாமல் குட்டி பூர்சுவாக்கள் என அழைப்பதற்கு டேவிட் கூறும் காரணம்: மத்தியதரவர்க்கத்தவர்கள் பெரும்பாலும் ஆங்கில அறிவு கொண்டவர்களாகவும், மேலைத்தேய பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் என்றும் இவர்களை பெரும்பாலும் சிங்களத்தில் (சுயபாஷா) தொடர்பாடல்களை நடாத்திவரும் சிறு முதலாளிகள் அல்லது சுயதொழில் புரிபவர்கள் என வகைப்படுத்துகிறார். ருக் ருக் அல்லது ஒட்டோ எனப்படும் மூன்று சக்கர வண்டி ஒன்றைச் சொந்தமாக வைத்திருந்து சவாரி மூலம் பணமீட்டுபவர்களைக் கூட அவர் இந்த வகைக்குள் அடக்குகிறார். இவர்கள் அநகாரிகதர்மபாலவினால் உருவாக்கப்பட்ட சிங்கள பௌத்த மறுமலர்ச்சியின் பாதிப்பிற்கு உள்ளாகியவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்.
சிங்கள மக்களிடையே உள்ள வர்க்க வேறுபாடுகள் பற்றிப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக இத்தரப்பினரது அரசியல் முக்கியத்துவம் பற்றியே பேச வேண்டியுள்ளது. இன்று சிறிலங்காவின் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக இந்த வர்க்கத்தினரே இருக்கிறார்கள். கொழும்பு மற்றும் நகரங்களிலிருக்கும் மேற்தட்டினரில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய வாக்காளர்களாக உள்ளது போல் இந்த வர்க்கத்தினர் குறித்த ஒரு கட்சியின்பால் சாய்ந்திருக்கவில்லை. மாறாக, சிங்கள பௌத்த பேரினவாதியான ஆளுமையுள்ள ஒரு தலைவரை கட்சிபேதங்களுக்கு அப்பால் நின்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆதலால் அவர்களால் சேனநாயக்க (டி.எஸ்., டட்லி). பண்டாரநாயக்க (சொலமன், சிறிமா, சந்திரிகா), ஜயவர்தன, பிரேமதாச, இராஜபக்ச என இரண்டு கட்சிகளிலிருந்தும் தலைவர்களைத் தெரிவு செய்ய முடிகிறது.
ஜனநாயகம், நல்லாட்சி
இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்திருக்கிற ஒரு சுலோகம்: நிறைவேற்று அதிகார முறையிலான ஜனநாயக முறையை ஓழித்து நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டு வருவோம் என்பது . இது பெரும்பாலும் கொழும்பு மேட்டுக்குடி தாராண்மை வாதிகளால் முன்னெடுக்கப்படுவதுடன் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேற்குலகத்தை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச முரண்பாடுகளுக்கான மையம் (ICG) சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கை, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரையிட்டு அது நம்பிக்கை கொண்டுள்ளமையை வெளிப்படுத்துகிறது. ஆனால் இவ்விடயத்தில் மேற்குறித்த குட்டிபூர்சுவாக்களுக்கு எதுவித அக்கறையும் இல்லை என தயான் ஜயதிலக போன்றவர்கள் வாதிடுகிறார்கள். அதனால் எதிரணியில் உள்ள ஜாதிக ஹெல உருமய நிறைவேற்று அதிகார முறைமையில் மாற்றத்தை வேண்டுகிறதே தவிர அதனை முற்றாக ஒழிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். கொழும்பிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்படும் கருத்துகளே பெரும்பாலும் வெளியே வந்தடைகின்றன. இவை எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையினரான சிங்களத் தாராண்மைவாதிகளின் கருத்துகளே தவிர பெரும்பான்மை சிங்கள மக்களின் கருத்துகள் அல்ல என்பதனை கவனத்தில் எடுக்க வேண்டும். தாராண்மைவாதம் இனத்துவ அடையாளங்களை முன்னிறுத்துவதில்லை என்றாலும் கொழும்புத் தாராண்மைவாதிகளை எனது நண்பர்கள் ‘சிங்கள லிபரல்கள்’ என்று அழைப்பார்கள். அவ்வாறு அவர்கள் அழைப்பதில் நியாயமிருக்கிறது ஏனெனில் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை உளமார ஏற்றுக் கொண்டு , அதேசமயம் தாரண்மைவாத நடைமுறைகளின்படி சரியான அரசியல் சொல்லாடல்களைப் பாவிப்பவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். இவர்களே ஜனநாயகம், நல்லாட்சி என்பதனை முன்னிறுத்தி மைத்திரிக்கு ஆதரவு தேடுகிறார்கள். இருப்பினும் மைத்திரியும் அவருடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஜாதிக ஹெல உருமய போன்றவையும் சிங்கள பௌத்த பேரினவாதக கருத்துகளை வெளியிடும்போது அதனைக் காணாதது போல் இருந்து விடுகிறார்கள்.
மூச்சுவிட ஒரு சந்தர்ப்பம்?
சிங்கள லிபரல்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் தமிழ் லிபரல்கள் இன்னும் ஒருபடி சென்று, ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்கள் மூச்சு விடுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு மைத்திரிக்கு ஆதரவளிக்குமாறு கோருகிறார்கள். மகிந்த தொடர்ந்து ஆட்சியிலிருந்தால் தமிழினம் முற்றாக அழிந்து விடும் எனவும் கூறிவருகிறார்கள். சிறிது காலத்திற்கு முன்னர் மகிந்தவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சனைகளை தீர்க்கலாம் எனக் கூறிய இவர்கள் இப்போது மைத்திரி மூலமாக மூச்சுவிட சந்தர்ப்பம் தேடுவது வேடிக்கையாக இருக்கிறது. அண்மையில் ஆட்சிமாற்றத்தை கோடி காட்டி வெளிவந்த ஒரு அறிக்கையில் ஒப்பமிட்டிருக்கும் கல்வியாளர்கள் பட்டியலில் உள்ள தமிழர்கள் முன்னர் ‘சிறிலங்கா டெமோக்கிரசி போரம்’ போன்ற பெயரில் தம்மை தாராண்மைவாதிகளாக்க் காட்டிக்கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் மேற்குநாடுகளின் நகரங்களில் பரப்புரைகள் செய்தவர்கள். இவர்கள் பற்றி தமிழ்மக்கள் நன்கறிவர். தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவத்தை குறைக்காமல் தமிழ் மக்கள் நிம்மதியாக மூச்சு விட முடியாது என்பதனால், மைத்திரி ஆட்சிக்கு வந்தால் இராணுவக் குறைப்பை அவர் எவ்வாறு செய்வார் என்பதனையாவது மக்களுக்கு விளக்குவதற்கு இவர்கள் முன்வர வேண்டும்.
சிங்கள –பௌத்த இனவாதம் தோற்கடிக்கப்படாமல், தமிழ்த் தேசிய இனம் தமது அரசியல் உரிமைகளை பெற்றவிட முடியாது என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொண்டால் இத்தேர்தலில் வாக்களிப்பது அர்த்தமற்றது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். மாறாக தமிழ் மக்கள் ஒரே குரலில் ஒரு செய்தியை சொல்வதற்கு இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முடியும். அது தேர்தல் புறக்கணிப்பு மூலமாகவே சாத்தியமாகும்.