ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், தமிழ் தேசியம், தமிழ் உணர்வு எல்லாம் பொங்கிப் பீறிடும். தேர்தல் முடிந்தவுடன், சிங்கக் கொடியை ஆட்டுவதும், தாயகமா?…அப்படி ஒன்று இருக்கிறதா என்று முழிப்பதும், எம்மிடத்தில் பலம்இல்லையென்று கூனிக்குறுகுவதுமாக, தமிழ் தேசிய அரசியல் வெளியை நிரப்பிவிடும்.
மறுபடியும் ஒரு தேர்தல் வருகிறது. புது முகமொன்றை நிறுத்தினால், 2010 இல் ஏற்பட்ட வாக்களிப்பு வீழ்ச்சியை சரிசெய்து விடலாம் என்பது முடிவாகி விட்டது.
களமிறக்கப்பட்டவர், தமிழ் தேசியத்தின் மீட்பராக மக்கள் மத்தியில் சித்தரிப்பதற்கு பலத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவரின் சட்ட அறிவு, சிங்களத்தின் அரசியலமைப்புக்குச் சவாலாக இருக்குமென்றும், சர்வதேசத்தை தமிழர் பக்கம் திருப்புமென்றும், பரப்புரை செய்யப்படுகிறது.
13 வது திருத்தச் சட்டம், ஒரு நகைச்சுவைநாடக அரங்கென்று கிண்டல் செய்த நடேசன்சத்தியேந்திரா அவர்கள், அதிலுள்ள ஒவ்வொருசரத்தினையும் விளக்கி, அந்த மாகாணசபை பொறிமுறையை ஆட்டுவிக்கும் மந்திரக்கோல்சனாதிபதியின் கைகளிலும், அவரின் முகவரான ஆளுநரின் வசமே இருக்குமென்பதை அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்தச் திருத்தச் சட்டமானது, அதிகாரப்பரவலாக்கத்தைக்கூட வழங்கவில்லை என்பது தெரிந்திருந்தும், வடக்கில் 13 வது திருத்தச் சட்டத்தை செயல்படுத்திக் காட்டுவோம் என்று கூறுகிறார், மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா.
இரண்டு தடவைகள் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டது கிழக்கு மாகாணம். கூட்டமைப்பு எதிர்க்கட்சி ஸ்தானத்தில் இருந்தும், பரவலாக நடைபெறும் கோவில் உடைப்புகள், படுவான்கரையில் சிங்களத்தால் தீவிரமாக முன்னெடுக்கப்படும் குடியேற்றங்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களான குருக்கள் மடம் , களுதாவளை போன்ற இடங்களிலுள்ள அரசகாணிகள் இராணுவத்தால் அபகரிக்கப்படுவது போன்ற ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.
வடக்கில் ஆட்சியைக் கைப்பற்றினால், முதலமைச்சராக வரும் சட்ட நிபுணர், காணி,காவல்துறைக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவார் என்றும், அதைப்பயன்படுத்தி கிழக்கிற்கும் அந்த உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்பதுதான் கிழக்கு மாகாண கூட்டமைப்பு எம்.பிக்களின் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையானது, 13 வது திருத்தச் சட்டத்திலுள்ள சரத்துக்களை புரிந்து கொண்டுஉருவானதா? அல்லது முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, தனது சட்ட அறிவினைக் கொண்டு சிங்களத்தோடு பேசி அதனை நடைமுறைப்படுத்துவார் என்கிற குருட்டு நம்பிக்கையில் எழுந்ததா?.
தேர்தலில் வெல்ல வேண்டுமாயின், இந்தப் 13 ஆல், பெரும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மக்கள் நம்பக்கூடிய வகையில், முன்னர் விமர்சனங்களுக்குஉட்படாத, எதிர்காலத்தில் ஐந்து கட்சி அரசியலுக்கு சவாலாக இல்லாத, ஆனால் கொழும்பு சட்ட உயர் மையத்தில் பங்காற்றியுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்.
அவரை, ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்காவும் விரும்ப வேண்டும். மேற்குலகிற்கு அரசியல் அறிவுரை கூறும் அனைத்துலக நெருக்கடிக் குழுவினரும் அன்பு பாராட்ட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பும் சவுத் புளோக் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் அவர், விடுதலைப் புலிகளை போராளிகள் என்று அழைக்காமல், குறிப்பாக ஆயுதக்குழுவென்று துணிவோடு சொல்லக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
அதேவேளை, பிற சக்திகளுக்கு வேண்டப்பட்டவராக மாவை சேனாதிராசா இருக்க முடியாது என்பதை, பூகோள வல்லரசு அரசியல்சக்திகளின் தேவைகளைப் புரிந்து வைத்துள்ள சம்பந்தன் அவர்கள் உணர்ந்து கொண்டதால், சுமந்திரனோடு நின்றவாறு கூட்டமைப்பின் அனைத்துத்தரப்போடும் மோதி, தனது முதன்மை வேட்பாளர் தெரிவினை உறுதி செய்துள்ளார்.
மாவையா? விக்கியா? என்கிற கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்ற போது, தனது கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டுமென்ற பேரம் நடைபெற்றதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பிற்கு உள்ளே வித்திக்கு ஆதரவற்ற நிலை காணப்பட்டதால்,விக்கியை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு, இந்த அமைச்சுப்பதவி விவகாரம் பெரும் பங்கினை வகித்ததாகக் கூறப்படுகிறது.
விக்கியை ஏற்றுக்கொண்டதால், பங்காளிக் கட்சிகளுக்கு வேட்பாளர் ஒதுக்கீட்டில் அதிக சனநாயக உரிமை, சம்பந்தரால் வழங்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் நாட்டாண்மைப் பாத்திரமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதில் விக்கிக்கு அடுத்தபடியாக, ஆச்சரியமான இன்னுமொரு புதுவரவு, தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் துணைவியார் அனந்தி சசிதரன்.
இவர் வழங்கும் நேர்காணல்கள், கள யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில், தெளிவாகத்தான் இருக்கிறது. `போரினால் பாதிக்கப்பட்டபெண்கள் மற்றும் போராளிக் குடும்பத்தினருக்கு, இதன் மூலம் எதையாவது செய்ய முடியுமாவென்று முயற்சித்துப் பார்க்கலாம்` என்று அனந்தி கூறுகின்றார்.
தினமும் சந்திக்கும் வலிசுமந்த மனிதர்களின், கூட்டுமன உளவியலில் கலந்திருக்கும் எதிர்பார்ப்புக்களை ஆனந்தி பிரதிபலிப்பதாகவே தென்படுகிறது.
அதேவேளை, முதன்மை வேட்பாளரின் பேச்சில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் திடமாக முன்வைக்கும், சர்வதேச சுயாதீன விசாரணை என்கிற விடயம் அன்னியமாகி விட்டது. மாகானசபைக்கும், சர்வதேச விசாரணைக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லையென்று அவர் எண்ணி விட்டார் போலிருக்கிறது.
கொலையாளிகளிடமே, கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் விசாரிக்கச் சொன்னால் எப்படி இருக்கும்? அதற்கு பக்கபலமாக இருந்தோர், உள் நாட்டு விசாரணை போதும் என்கிறார்கள், வட மாகாணசபைத் தேர்தலும் நடாத்தப்பட வேண்டுமென்கிறார்கள்.
ஆகவே அந்த வல்லரசுகளின் அறிவுரைகளை அனுசரித்துப் போவோர், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றிக்காக குரல் கொடுப்பார்கள் எப்படி என்று எதிர்பார்க்க முடியும்?.
சர்வதேச சுயாதீன விசாரணை வரும். அதற்கு அமெரிக்கத் தீர்மானம் வழிவகுக்கும் என்று கனவுலகில் சஞ்சரிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி.
அமெரிக்க பசுபிக் கடற்படையும், சிங்களத் தின்கடற்படையும் இணைந்து யாழ்.குடாவில் `பசுபிக் ஏஞ்சல்’ கூட்டுப்பயிற்சியை நடாத்துகின்றனர்.
கனவு காணுங்கள்..ஆனால், இவற்றை மறைப்பதற்கு, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு நாம் எதிரானவர்கள் என்கிற புரளியைக் கிளப்பி, இவற்றை மறைத்துவிட முடியாது.
ஆகவே, யாருடைய நிகழ்ச்சி நிரலில், இந்த தேர்தல் நடை பெறுகிறது என்கிற புவிசார் அரசியல் பக்கத்தைத் தவிர்த்து, எதையும் ஆழமாகப் பார்க்க முடியாது.
தமிழ் தேசிய அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளை செயலிழக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகளில், இந்த மாகாணசபை முறைமையும் ஒன்று என்பதனை நிராகரித்து,` திணிக்கப்படுவதை உள்வாங்கும் பலவீன அரசியலிற்குள் மக்கள் தள்ளப்படப்போகிறார்களா?.
வாக்கு வங்கி அரசியல் என்பது, யாரோ ஒருவரிடம் அல்லது சிறு குழுவிடம், மக்கள் தமது அபிலாசைகளை இறக்கி வைத்துவிட்டு, அரசியல் வாழ்விலிருந்து அந்நியமாகிப் போகும்சடங்காகிவிட்டது.
தேசியம் பேசுவதாலும் எதிர்ப்பரசியல் செய்வதாலும், சிங்கக்கொடி பிடித்தவர் பின்னாலும்,போராடிய மக்கள் கூட்டத்தை ஆயுதக்குழுவென்று விளித்தவர் பின்னாலும், வேறுவழியின்றி இழுபட்டுச் செல்லவேண்டிய அவலநிலைக்குள் மக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள்.
மாகாணசபைத் தேர்தல்கள் வரும்.போகும். நாளை அதிலுள்ள சரத்துக்கள் நீக்கப்படும். இந்தியாவிற்குப் பயந்து, பெயரவில் `13 வது திருத்தச் சட்டம்’ என்று ஒன்று இருக்கும்.
ஆனாலும், பூர்வீக தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள், கோட்பாடுகள் என்பவற்றை விட்டுவிட முடியாது. அவற்றினை எந்த வெளியழுத்த திணிப்புக்குள்ளும் உறுதியாக முன்வைக்க வேண்டும். ஏனெனில் அதுவே மிஞ்சும்.
இத் தேர்தல் குறித்து, பிரித்தானிய தமிழர் பேரவை முன் வைத்த காத்திரமான கருத்துக்களையாவது, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன் வைப்பார்களா?.
தேர்தல் காலத்துத் தலைவர்களெல்லாம், தேசியத்தின் தலைவராக முடியுமா (?) என்பதனை, கோட்பாட்டில் உறுதியாகவிருக்கும் அவர்களின் நிலைப்பாடே தீர்மானிக்கும்.