நந்திக்கடலிலிருந்து நாம் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.
அது பல கோட்பாடுகளின் பிறப்பிடம் என்பதை நம்ப மறுக்கும் ஒரு தரப்பாகவே இன்னமும் நம்மவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் சிங்களம் அதிலிருந்து நிறையவே கற்றுக் கொண்டது.
தற்காலிக வெற்றி/தோல்வி குறித்து அக்கறைப்படாமல் விட்டுக்கொடுக்கப்படாத இறைமையின் அடிப்படையில் ஒரு இனத்தின் வரலாறு அடுத்த தலைமுறையிடம் எப்படி கையளிக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் “நந்திக்கடலிலிருந்து” கற்றுக் கொண்டார்கள்.
தமிழீழ நடைமுறை அரசை அழிப்பதற்காக சிங்களம் தமது இறைமையை கிட்டத்தட்ட பிராந்திய /மேற்குலக வல்லரசுகளிடம் அடகு வைத்திருந்தது.
அது தமது இறைமைக்கு குந்தகம் என்பதை அவர்கள் அப்போது உணரவில்லை.
மிகத் தாமதமாக அதை உணர்ந்து கொண்டார்கள்.
ஆனால் தற்போது அவர்கள் நந்திக்கடல் சிந்தனைகளின் வழியே இந்த பிராந்திய /மேற்குலக சக்திகளுக்கு எதிராக “செக்” வைக்கத் தொடங்கி விட்டார்கள்.
தமது இறைமையைக் காக்க ஒரு தேசமாக “சிந்திக்க” கற்றுக் கொண்டுவிட்டார்கள்.
இனி அவர்களை வெளித்தரப்பு கையாள்வது கடினம்.
ஒரு திருமணத்தில் சீப்பு இல்லையென்றால் அது நடக்காமல் இருக்கப்போவதில்லை.
அந்த சீப்பின் நிலைதான் தற்போது தமிழருடையது.
நந்திக்கடலில் வைத்து தலைவர் ‘இன அழிப்பு’ என்ற மிகப் பெரிய துருப்பு சீட்டைத் தந்தார்.
ஆனால் அதை இழந்தது மட்டுமல்ல, தமிழ் இறைமையையும் அடகு வைக்கும் தமிழரசுக் கட்சியிடம் நம்மை ஒப்படைத்து விட்டு நடுத் தெருவில் நிற்கிறோம்.
பிரபாகரனியத்தை கற்று தேர்ந்துவிட்டு பிராந்திய/புவிசார் அரசியலை கையாளும் தந்திரங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது சிங்களம்.
அதன் ஒரு எடுத்துக்காட்டுத்தான் மகிந்த குடும்பத்தின் மீள் வருகை.
இதை சிங்களவர்களின் இராஜதந்திரம் என்று எம்மவர் பலரே புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
அது அவர்களுடையதல்ல – அதை பிரபாகரனிடம் இருந்து கற்றுக் கொண்டார்கள்.
ஆனால் நாமோ அதை எதிரியிடம் ஒப்படைத்துவிட்டு பல்லிளித்துக் கொண்டு நிற்கிறோம்.
ஆனாலும் நந்திக்கடல் உருவாக்கியிருக்கும் ஓர்மம் ஒரு நாள் எம்மை மீட்கும் என்ற நம்பிக்கை ஒன்றே இன்னும் எம்மிடம் மிச்சமாக இருக்கிறது.
வெல்வோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”.