கடந்த வெள்ளியன்று ஆளும் கொன்சவேர்ட்டிவ் கட்சி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த லியம் பொக்ஸ் (Liam Fox) தாம் வகித்துவந்த பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். பொக்ஸ் இன் நெருங்கிய நண்பர் அடம் வெரட்டி (Adam Werritty) என்பவர் பொக்ஸ் இன் அரசியல் அதிகாரத்தை தனது வர்த்தக நலன்களுக்கு பாவித்து வந்ததாக மைய நீரோட்ட ஊடகங்கள் குற்றம்சாட்டின. அதனைத் தொடர்ந்து பொக்ஸ் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பான பல தகவல்கள் ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்தன. இவற்றுள் சிறிலங்கா அரசாங்கத்துடன் அவர் கெண்டிருந்த தொடர்புகள், அங்கு அவர் மேற்கொண்ட செயற்பாடுகள் என்பனவும் முக்கிய இடத்தை பெற்றிருந்தன. எதிர்க்கட்சியான தொழில் கட்சி தனது எதிர்ப்பினை வெளியிட்டதுடன், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியது. எதிர்காலத்தில் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமைப்பதவிக்கு வரக்கூடியவர் என எதிர்பார்க்கப்பட்ட பொக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க டேவிட் கம்ரன் விரும்பாததுபோல் காட்டிக் கொண்டாலும், இதுவிடயமாக விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சரவை செயலாளர் Sir Gus O’Donnell அவர்களைப் பணித்திருந்தார்.
பிரித்தானியாவை பொறுத்தவரை, பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் அதிகார துஸ்பிரயோகம்பற்றி மைய ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்தால், அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது இயலாத காரியம் ஆகிவிடும். பொக்ஸ் ஐ பதவி நீக்கம் செய்ய டேவிட் கம்ரன் தயக்கம் காட்டியதுபோல்; பொக்ஸ் அவர்களும் தான் பதவி விலகப்போவதில்லை என்பதுபோல் நடந்து கொண்டார். இந்நிலையில் ஊடகங்கள் அவர் மீதான தாக்குதல்களை அதிகரித்தன, அவர்பற்றிய பல்வேறு தகவல்களை அவை வெளயிட்டன. அவற்றில் சில அவரது தனிப்பட்ட (பால்) உறவுகள் சம்பந்தமானவை. அவர்மீதான அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில், வேறு வழியின்றி பொக்ஸ் தனது பதவியினைத் துறக்க வேண்டியதாயிற்று.
பொக்ஸ் மீதான குற்றச்சாட்டுகளில், அவரும் அவரது நண்பரும் சிறிலங்கா ஆடசியாளர்களுடனான கொண்;டிருந்த தொடர்புகள் பற்றிய விபரங்கள் ஆதாரத்துடன் ஊடகங்களால் வெளியிடப்பட்டன. இவ்விடயத்தில் கருத்து வெளியிட்ட மைய ஊடகங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினை Sri Lankan Regime என அச்சொல்லின் உள்ளார்ந்த அர்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வலதுசாரி நிலைப்பாடுடைய Daily Telgraph, The Times, Financial Times, Daily Mail முதற்கொண்டு இடதுசாரி நிலைப்பாடுடைய The Guardian வரை இவ்வாறான சொற்பிரயோகத்தைப் பாவித்திருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. பொதுவாக சர்வாதிகார ஆட்சி நடாத்தும் அரசாங்கங்களையே Regime என அழைக்கப்படுவதால், சிறிலங்கா அரசாங்கம் பற்றிய மதிப்பீடு பிரித்தானிய அதிகார மட்டத்தில் எவ்விதம் உள்ளது என்பது வெளிப்பட்டது. சிறிலங்கா பற்றிய பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திiனையும் அவதானிக்க முடிந்தது.
பொக்ஸ் ஐ பதவியிலிருந்து அகற்றுவதில் பிரித்தானிய உயர்மட்டத்தில் உள்ள சில சக்திகள் விரும்பியதாகத் தெரியவருகிறது. கட்சியின் அடுத்த தலைவராக நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் அவர்கள் வருவதையே டேவிட் கம்ரனின் ஆதரவு அணி விரும்பும் நிலையில், அதற்குப் போட்டியாக தட்சரைட் எனப்படும் முன்னாளர் பிரதமர் மாகிரட் தட்சர் அவர்களைப் பின்பற்றும் தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய பொக்ஸ் இருப்பது டேவிட் கம்ரன் அவர்களுக்கு விருப்புடையாக இருந்திருக்காது. அதே சமயம் பிரித்தானிய ஆட்சி மையத்திலும் (British establishment) பொக்ஸ் இன் நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி காணப்படுகிறது. திறைசேரியால் அமுல்படுத்தப்படவிருக்கும் பாதுகாப்பு திணைக்களத்திற்கான செலவீனத்தை குறைக்கும் திட்டம் தொடர்பில்; பொக்ஸ் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், செலவு குறைப்பு பற்றிய விபரங்களை அவர் வெளியில் கசியவிட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. சிறிலங்கா விடயத்தில், தனிப்பட்ட நலன்களைக் கருத்திற்கொண்டு, பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு புறம்பாக ஒரு நிழல் வெளிவிவகாரக் கொள்கையை பாதுகாப்பு அமைச்சர் பொக்ஸ் கடைப்பிடித்தார் என்;ற குற்றச்சாட்டும் உள்ளது. இவற்றைப் பார்க்கையில், பொக்ஸ் அவர்களை பதவியலிருந்து அகற்றுவதில் பிரித்தானிய ஆட்சி மையம் அக்கறை கொண்டிருந்தது புலனாகிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கூட்டாளி என்றவகையில் பொக்ஸ் இன் வெளியேற்றம் சிறிலங்கா – பிரித்தானிய உறவுகளிலும் மாற்றத்தை ஏற்றடுத்தும் என நம்பிக்கையுடன் எதிர்வு கூறலாம். பொக்ஸ் சிறிலங்கா உறவுகள் எப்போது ஆரம்பித்தது எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாவிட்டாலும், முன்னைய கொன்சவேர்ட்வ் ஆட்சியின் இறுதி இரண்டாண்டுகள் (1996-1997) அவர் வெளிநாடு மற்று பொதுநலவாய நாடுகள் அலுவல்கள் (FCO) அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்க இடமுண்டு. 1996ம் ஆண்டு சிறிலங்காவிற்கு பயணம் செய்த அவர், இனப்பிரச்சனை விடயத்தில், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் – ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கை (bi-partisian agreement) ஒன்றை கைச்சாத்திட வைத்தார். பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தாக அப்போது பேசப்பட்ட இவ்வுடன்படிக்கை எதிர்பார்த்த பலாபலனைத் தரவில்லை. எனினும் தமிழர் தரப்பினால் வெறுக்கப்பட்ட ஒரு நகர்வாக இது அமைந்திருந்தது.
போர் உக்கிரமடைந்த 2008-2009 ஆண்டு காலப்பகுதியில் நிழல் பாதுகாப்பு அமைச்சர் பதவி வகித்த லியம் பொக்ஸ், சிறிலங்கா அரசாங்கத்தின் போர் முயற்சிகளுக்கு முழு ஆதரவினையளித்தார். இக்காலத்தில் போர்நிறுத்தம், சமாதானத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் அக்கறை காட்டாமல், அபிவிருத்தி நிதியம் ஒன்றை அமைப்பதிலேயே அவர் குறியாக இருந்தார். இவ்வாரம் பிபிசி தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானியக் கிளைத் தலைவராக முன்பிருந்த மருத்துவர் ரோஜர் சிறினிவாசன், சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்வதில் பொக்ஸ் முனைப்புக்காட்டியதாகவும், அங்கு முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய லண்டன் தமிழ் வர்த்தகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு தன்னிடம் அவர் கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த வருட இறுதியில் மகிந்த இராஜபக்ச லண்டனில் தங்கியிருந்தபோது, அவரை சந்தித்த ஒரேயோரு பிரித்தானிய அரசியல்வாதியாக பொக்ஸ் இருந்தார். இச்சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற தனிப்பட்ட சந்திப்பாக இருந்தபோதிலும், மைய ஊடகங்கள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து கொழும்பில் நடைபெற இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் நினைவுக் கூட்டத்தில் கலந்து கொள்;ளவிருந்த பொக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க தனது பயணத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்திருந்தார். இருப்பினும் ஒத்திவைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி கடந்த ஜுலை மாத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கொன்சவேர்ட்வ் கட்சியின் ஆதரவாளரும், பொக்ஸ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவருமான பெல் பிரபு (Lord Bell) அவர்களது Bell Pottinger நிறுவனமே சிறிலங்காவிற்கான பரப்புரை வேலைகளைச் செய்து வந்தது. அந்நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துடன் செய்து கொண்ட மூன்று வருட உடன்படிக்கையை கடந்த ஆண்டில் முறித்துக் கொண்டது. தோல்வியில் முடிவுற்ற மகிந்த இராஜபக்சவின் ஒக்ஸ்போர்ட் உரை காரணமாக சிறிலங்கா அரசாங்கமே இவ்வுடன்படிக்கையயை முறித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டாலும், உண்மையில் Bell Pottinger நிறுவனமே முறித்துக் கொண்டது. இதற்கு சிறிலங்கா விடயத்தில் பிரித்தானிய வெளியுறவுக் கொள்கையில் எற்பட்ட மாற்றமே காரணமாக அமைந்தது.
பொக்ஸ் இன் வெளியேற்றத்தில் சிறிலங்கா விவகாரம் குறிப்பிடத்தக்க பங்கை வகித்ததாகக் கூறமுடியாது. ஆனால் அவர் மீது குற்றம் சுமத்துவதற்கு, அவருக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு போதுமானதாக இருந்தது என்பதனை நாம் அவதானிக்கலாம். அதனை சாதாரண மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதிலிருந்து பிரித்தானிய மக்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் சனல் 4 போன்ற ஊடகங்களின் பங்கினை உணர்ந்து கொள்ளலாம்.