நாங்கள் ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்களா?

1121
graham williamson
கிரஹம் வில்லியம்சன்

ஈழத்தமிழர்களின் போராட்டம் பின்னடைவு நிலைக்கு சென்றமைக்கான காரணத்தைச் சொல்பவர்கள் ஒன்றை பட்டென்று சொல்வார்கள், அதாவது ஈழத்தமிழர்களுக்கு வெளிச் சமூகங்களில் நண்பர்கள் இல்லை அதுவே தோல்விக்கு இட்டுச் சென்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் அண்டை அயலில் உள்ளவர்களே எங்களைக் கண்டுகொள்வதில்லை. போராட்டம் நடாத்துவதற்கு எங்கடை சனமே முக்கால்வாசிப்பேர் வராதநிலையில் இவர்கள் எங்கே வரப்போகிறார்கள் என்று சமாதானம் சொல்பவர்களும் உண்டு. ஊர்மொழியில் சொல்வதானால் ‘கொள்ளி வைப்பதற்கும் ஆள் இல்லாத நிலமை’. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? தேடியலைந்து நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் இறங்கிய சிலருக்கு வருபவர்களை தட்டி விட மனம் வராது. இவ்வாறு வலிய வந்து சேர்ந்தவர்களில் ஒருவர்தான் அசல் இங்கிலிஸ்காரர் என தன்னை அழைத்துக்கொள்ளும் கிரஹம் வில்லியம்சன்.

2008ம் ஆண்டின் இறுதியில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் வெளியில்வந்து போராடவேண்டிய நிலை ஏற்பட்டபோது கிரஹம் வில்லியம்சன், ரிம் மார்ட்டின் போன்ற சில இங்கிலிஸ் செயற்பாட்டாளர்கள் தாங்களும் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவிக்கவே அடுத்த கேள்விக்கு இடமில்லாமல் அவர்கள் உள்வாங்கப்பட்டனர். இவர்களைக் கொண்டு ‘Act Now’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றும் உருவானது. தமிழ் நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத பேச்சாளர்களாக கிரஹம் வில்லியம்சன், ரிம் மார்ட்டின் போன்றவர்கள் மாறினார்கள்.

வெளிநாட்டு தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ரிம் மார்ட்டினின் சகோதரர் (ரிம் மார்ட்டின் அல்ல) சிறிது காலம் வன்னியில் இருந்திருக்கிறார். இதுவும் ரிம் மார்ட்டின் தமிழர்களுக்கு குரல்கொடுக்கும் தகமைகளில் முதன்மையானதாக இருந்தது. இருந்தாலும், கடந்துபோன ஐந்து ஆண்டுகளில் இவர்களைப் பற்றிய பல்வேறு வதந்திகள் அரசல் புரசலாக அடிப்பட்ட வண்ணமிருந்தன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் “கிரஹம் வில்லியம்சன் ஒரு தீவிர வலதுசாரிச் செயற்பாட்டாளர்” என சனல் நான்கு கடந்த சனியன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது. தமிழினப்படுகொலையை ‘கொலைக்களம்’ விவரணம் மூலமாக உலகறியச் செய்த சனல் 4 வெளியிட்ட செய்தியை மறுதலிப்பது வேறுவகையான அரசியலாக்கிவிடும் என்பதனால் ‘Act Now’ உடன் சேரந்தியங்கியவர்களும், இவர்களை மேடையேற்றி மகிழ்ந்தவர்களும் இப்போது மௌனம் சாதிக்கிறார்கள்.

கிரஹம் வில்லியம்சன 1975ம் ஆண்டில் தீவிர இனவாதக் கட்சியான பிரித்தானிய தேசியக் கட்சியில் (BNP) இணைந்ததாகவும், 1986 இல் தேசிய முன்னணி (National Front) இன் துணைத்தலைவராகச் செயற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஏறத்தாள பதினைந்து வருடங்கள் அவர் தீவிர வலதுசாரிக்கட்சிகளில் அங்கத்தவராகச் செயற்பட்டிருக்கிறார் என்பதிலிருந்து அவர் தற்செயலாக இக்கட்சிகளில் இணைந்திருப்பார் என எண்ண முடியாதுள்ளது. BNP அமைப்பின் தலைவர் நிக் கிறிபின் உடன் கிரஹம் நிற்கும் ஒளிப்படம் கட்சியில் அவரது முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

BNP அமைப்பின் தலைவர் நிக் கிறிபின், கிரஹம் வில்லியம்சன் குழுவினர் லிபியாவிற்குச் சென்று அரேபிய தேசியவாதி எனக் கருதப்பட்ட லிபியத் தலைவர் முகம்மர் கடாபியை சந்தித்து தமது ஆதரவினைத் தெரிவித்ததாகவும், முஸலீம் தீவிரவாத அமைப்பான Nation of Islam ஐ சேரந்தவர்களையும் சந்தித்ததாகவும், முன்னாள் ஈரானியத்தலைவர் ஆயத்தொல்லா கொமெய்னிக்கு ஆதரவளித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கினறன. ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த இவர்கள் முன்னர் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அதனை பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஏற்கவில்லை எனத் தெரியவருகிறது.

இவற்றை அடிப்டையாகக் கொண்டு அவர்கள் எல்லாத் தேசியவாத இயக்கங்களுக்கும் ஆதரவளிப்பவர்கள் எனச் சிலர் இவர்களை நியாயப்படுத்த முயலலாம். இனத்துவ தூய்மைவாதத்திற்கு அப்பாற்பட்டு சமூக நீதியின் அடிப்படையிலான முற்போக்கான கூறுகளை தமிழ்த் தேசியவாதம் தன்னகத்தே கொண்டிருக்கிறது எனச் சர்வதேச மட்டத்தில் நிறுவுவதற்கு எடுக்கும் முயற்சிகளை இதுபோன்ற தீவிர வலதுசாரிகளின் இணைவு நிரந்தரமாக முறியடிப்பதாக அமையும் என்பதனையிட்டு நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக் வேண்டும்.

பிரித்தானியத் தேர்தல் திணைக்களத்தின் தகவல்களின்படி 1999ம் ஆண்டில் கிரஹம் வில்லியம்சன் குழுவினர் National Liberal Party என்ற கட்சியை பதிவு செய்திருக்கிறார்கள். 2009 இலும் இக்கட்சியின் நான்கு முக்கிய முக்கியஸ்தர்களில் ஒருவராக கிரஹம் இருந்தார். மற்றய மூன்றுபேரும் National Front அமைப்பின் அரசியல் சிப்பாய்கள் என அறிப்பட்டவர்கள். ஆனால் இக்கட்சி பதிவு செய்யப்பட்டு பதினைந்து வருடங்கள் கழித்து இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழ் இணையத்தளங்கள் சில இப்படியொரு பரப்பரப்புச் செய்தியை வெளியிட்டன.

“பிரித்தானியாவில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தலாம். ஆனால் இது தான் உண்மை. நாம் ஜெனீவா ஐ.நா முன்னர் நின்று ஆர்பாட்டம் செய்கிறோம் ! ஆனால் உள்ளே செல்லவில்லை. பிரித்தானிய பாராளுமன்றம் முன்னதாக நின்று ஆர்பாட்டம் செய்கிறோம் ஆனால் உள்ளே எமது தமிழ் பிரதிநிதியாக எம்.பி எவரையும் அனுப்பியது இல்லை! ஆகவே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நாங்கள் குரல்கொடுப்போம் என்று, நஷனல் லிபரல் பார்டி(என்.எல்.பி) National Liberal Party தெரிவித்துள்ளது.”

பரபரப்புச் செய்தி வெளியிடும் இணையத்தளங்களுக்கு செய்தி எழுதவுபவருக்கும் ஒன்றிலிருந்து வெட்டி ஒட்டும் மற்றய ‘நிருபர்களுக்கும்’ செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஏது கவலை?

லண்டனில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் கிரஹம் வில்லியம்சன் குழுவினர் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தமது National Liberal Party மூலமாகக் களமிறங்கியுள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலில் சொக்கலிங்கம் யோகலிங்கம் என்ற தமிழர் ஒருவரும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், சீனர் ஒருவர், குர்திஸ் சமூகத்தவர் ஒருவர் என பல சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதிகளும் இணைக்கப்பட்டிருந்தாலும் வெள்ளையினத்தவர் அல்லாதோர் பட்டியலின் கீழிடங்களில் காணப்படுகின்றனர். இக்கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், தவறி ஒரிருவர் இக்கட்சியிலிருந்து தெரிவானாலும், சிறுபான்மை சமூகத்தவர் இப்பட்டியலில் இருந்து தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை.

வெளிச்சமூகங்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்குத் அவசியமானது என்பதனை நாம் நன்குணர்ந்திருந்தாலும், அத்தகைய ஆதரவுச்சக்திகள் எவ்வாறானவை என்பதனை ஆய்ந்தறியாதவிடத்து அதனால் பெறப்படும் பாதிப்புகள் எமது போராட்டத்தை மேலும் பின்னடைவான நிலைக்கே கொண்டு செல்லும் என்பதற்கு கிரஹம் வில்லியம்சன் குழுவினரின் இணைவு நல்ல சான்றாக அமைந்திருக்கின்றது.

தே. இரவிசங்கர்