நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றபோது, இதுவே நடப்பு அரசாங்கத்தின் இறுதி அமர்வு என அதன் முதல்வர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இந்நிலையில்,கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடு கடந்த அரசாங்கம் அதன் இலக்கினை நோக்கி நகர்ந்திருக்கிறதா எனபதனை காய்த்தல் உவத்திலின்று ஆராய வேண்டியுள்ளது.
நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம், அதன் பின்னாலிருந்தவர்கள், குறிப்பாக சிறிலங்கா பாதுகாப்பு படைகளுடன் இயங்கும் கே.பி. உடன் தொடர்புடையவர்களுக்கும் இக்கட்டமைப்புக்கும் உள்ள நெருக்கம் என்பவை தொடர்நது ஜயத்துக்குரியவையாக இருந்து வருகிற போதிலும், தமிழ் வெகுமக்கள் மத்தியில் இக்கட்டமைப்பு பற்றிய எதிர்பார்ப்பு இன்னமும் இருந்து வருகிறது. நாடு கடந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை தனது இறுதி இலட்சியமாக தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஒன்றே அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் இது விடயத்தில் வெளிப்படையாக கருத்துக்கூறாது, காலனித்துவ எஜமானர்களின் மனங்கோணாது பார்த்துக் கொள்கையில்,நாடு கடந்த அரசாங்கத்தின் வெளிப்படையான நிலைபாட்டினை தமிழர்கள் பலரும் வரவேற்கின்றனர். இருப்பினும் வெளிச்சக்திகள், நாடு கடந்த அரசாங்கத்தினை ஒரு முக்கியத்துவற்ற மென்போக்கான ஒரு அமைப்பாகவே கருதுகினறன. சர்வதேச முரணபாடுகளுக்கான குழு (International Crisis Group) அண்மையில் வெளியிட்ட இலங்கைத் தீவின் அரசியல் நிலைமை தொடர்பான அறிக்கையில்,நாடு கடந்த அரசாங்கம் பற்றி ஒருவரிக்குறிப்பே காணப்படுகிறது. ஏனைய அமைப்புகள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கும் இவ்வறிக்கை நாடுகடந்த அரசாங்கத்தினையிட்டு அதிகம் அக்கறைப்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை.
ஐக்கிய இலங்கைகுள் தீர்வை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடயத்தில் நாடு கடந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் காட்டும் மெத்தனமும் நிபந்தனையற்ற ஆதரவும், அதனை ஒரு மென்போக்கான அமைப்பாக வெளிச்சக்த்திகள் இனங்கண்டுள்ளமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது மட்டுமல்லாமல், அதற்கு சவாலாக அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் குடிசார் சமுக செயற்பாட்டாளர்கள் விடயத்தில் நாடு கடந்த அரசாங்கத்தினர் தூர விலகியே நிற்கின்றனர்.
அலைந்துழல்வு தமிழ் மக்கள் மத்தியில் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக காட்டிக்கொள்ளும் நாடு கடந்த அரசாங்கம் வெளித்தரப்புகள் மத்தியில் கவனத்துக்குரிய ஒன்றாக இல்லாதிருப்பது அதன் இருப்பு பற்றிய கேள்வியை எழுப்புவதுடன்,அது இரட்டைத் தன்மையுடன் செயற்படுகிறதா என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. நாடு கடந்த அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவிலிருக்கும் ஜோசப் சந்திரகாந்தன், சிறிஸ்கந்தராஜா போன்றோரும், இதர ஆலோசகர்களான சர்வேந்திரா தர்மலிங்கம், இரேனியஸ் செல்வின், உருத்திரமூர்த்தி சேரன் போன்றவர்களும் தமிழீழ கோரிக்கை வியடத்தில் நெகழ்ச்சித் தன்மையை வலியுறுத்துபவர்களாக இருப்பதும் இந்த ஐயப்பாட்டை வலுப்படுத்துகின்றது.
இன்றைய உலகமயமாக்கலில், நாடு கடந்த நிலையில் இணைந்திருக்கக்கூடிய சமூகங்களின் (Transnational communities) முக்கியத்தும் பற்றி கல்வியாளர்கள் மட்டத்தில் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நாடுகடந்த நிலையில் வாழும் ஒரு தேசிய இனத்தை முறைமைப் படுத்தப்பட்ட ஒரு அமைப்பினூடாக இணைக்கும் ஒரு முயற்சியாக நாடு கடந்த அரசாங்கம் அமைவதாக அதன்மீதான ஒரு நேர்மையான கண்ணோட்டத்தினை செலுத்த முடியும். ஆனால் இவ்வாறான அமைப்பு ஒரு அரசாங்கம் போன்று செயற்பட முயற்சிப்பது அதன் இயங்குதளத்தில் சிக்கலகளை தோற்றுவிக்கும் அபாயத்தை தனகத்தே கொண்டுள்ளது எனபதனை கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையானது, ஒருபுறத்தில் அதன் உறுப்பினர்களிடையே ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தி அவர்களை யதார்த்த உலகத்திலிருந்து விலக்கி வைத்துவிடுகிறது. மறுபுறத்தில், இக்கட்டமைப்பு பற்றிய அதீதமான எதிர்பார்ப்புகளை மக்களிடத்தில் ஏற்படுத்தி, அவை எதுவும் நிறைவேறாத நிலையில் இவ்வமைப்பு பற்றிய விரக்தியை ஏற்படுத்திவிடும். நாடு கடந்த அரசாங்க கட்டமைப்பு விடயத்தில் நம்பிக்கையுடன் செயற்படும் ஆளணி,அவர்களால் உபயோகிக்கப்படும் வளங்கள் என்பவற்றை நாம் இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது. இவர்கள் விரக்தி நிலைக்கு சென்று பொது வாழ்விலிருந்து ஒதுங்கி விடுவார்களேயாயின் அதனுடைய பாதிப்புகளை தமிழ் அலைந்துழல்வு சமூகமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாடு கடந்த அரசாங்கம், ஒரு புகலிட அரசாங்கமோ (exile government) அல்லது ஒரு நடைமுறை அரசாங்கமோ (defacto government) அல்ல. இவ்விடயத்தினை பலதடவைகள் உருத்திரகுமாரன் அவர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார். மேற்படி இரண்டு வகை அரசாங்கங்கள் போல நாடு கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்குட்பட்டு ஒரு சிறு தொகை மக்கள் தொகுதிகூட கிடையாது. இக்கட்டமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் தவிர வேறொருவர் மீதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கும் அதிகாரம் நாடுகடந்த அரசாங்கத்திற்கு கிடையாது. இக்கட்டமைப்பு செயற்படும் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் சுயவிருப்பின்பேரிலேயே இவ்வமைப்புக்கு ஆதரவு வழங்குகிறார்கள். இந்நிலையில் நாடு கடந்த அரசாங்கத்தின் கீழ் மற்றய தமிழ் அமைப்புக்கள் இயங்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் எதுவித அர்த்தமுமில்லை.
ஈழத்தமிழ் மக்களின் சமூக விழுமியங்களையும், பொருளாதார கட்டுமானங்களையும், அரசியல், மனிதவுரிமைகளையும் பாதுகாத்தலே நாடு கடந்த அரசாங்கத்தின் குறிக்கோள் என இக்கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இக்குறிக்கோளில் எதுவித தவறினையையும் காணமுடியாது. புலம்பெயர்தளத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் வலுநிலையை அதிகரித்து, அதனையே ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பரணாக பேணவேண்டியதன் அவசியம் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதனையிட்டு சற்று ஆறதல் அடையலாம். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத்தளத்தினை நாடுகடந்த அரசாங்கம் கொண்டிருக்கிறதா? அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?என்றகேள்விகளுக்கு விடைகாண வேண்டியுள்ளது. கடந்துபோன மூன்று ஆண்டுகளின் இவ்விதமான எந்த முன்னெடுப்புகளையும் அவதானிக்க முடியவில்லை என்பதே யதார்த்த நிலையாக இருக்கிறது.
அண்மையில் உருவாக்கப்பட்ட நாடு கடந்த அரசாங்கத்தில் மேலவை (செனட்) ஒரு திட்ட வரைபினை வெளியிட்டுள்ளது. உள்ளக பாவனைக்கான இவ்வரைபில் மேலெழுந்தவாரியாக சில ஆக்கபூர்வமான கருத்துகள் காணப்பட்டபோதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவற்கான ஆலோசனைகளோ கால வரையறையோ அதில் அடங்கியிருக்கவில்லை. “எமது நாட்டை உருவாக்கிப் பார்த்துவிட்மோம். இனி இந்த அரசின் பணி அதை செயற்படவைப்பது” என்பது போன்ற அபத்தமான சொல்லாடல்களும் இந்த ஆவணத்தில் காணப்படுகின்றன என்பதனையும் வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியுள்ளது.
மேற்படி ஆவணத்தில் காணப்படும் இன்னொரு விடயம்,“தமிழீழ விரும்பிகளிடையே கட்டொருமைப்பாட்டை ஏற்படுத்துதல்” என்ற தலைப்பில் அமைந்திருக்கிறது. நாடு கடந்த அரசாங்கததைச் சேர்நதவர்கள் தமக்கிடையே குழுநிலைப்பாட்டில் இயங்கிக்கொண்டு தமிழீழ விரும்பிகளுடையே எவ்வாறு ஒருமைப்பாட்டை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதனை அவர்களே விளக்கவேண்டும்.
சர்வதேச அதிகாரபீடங்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டாலும், சர்வதேச மட்டத்தில் நட்புறவு சக்திகளை வளர்ப்பதன் மூலமே நாடுகடந்த அரசாங்கம் தன்னை வலுபடுத்திக்கொள்ள முடியும். அதனை தவிர்த்து,வீட்டுக் கோடிக்குள் நின்று வீராப்பு பேசுவதுபோல், தமிழ் சமூகத்தின் மத்தியில்நின்று செயற்பட்டுகொண்டு அரசாங்கம், மந்திரி, மேலவை, கீழவை என்று,(போதாக்குறைக்கு வர்ண ஆடை, அணிகலன்களுடன்) எமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பது சலிப்பு தட்டுவதாக மட்டுமல்லாமல் இக்கட்டமைப்பின் உருவாக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது.