உன் கடிதம் கிடைத்தது. உயிர் என்றால் ஆன்மா, உயிரெழுத்து, காற்று, சீவன் எனப்பல பொருள் உண்டு. என்னை உன் ஆத்மார்தமான தோழி என அழைத்திருந்தாய் நன்றி. அப்பன் இல்லாவிட்டால் தான் அப்பனின் அருமை தெரியும் என்பது போல. நீ இல்லாதவிடத்து உன்அருமை நன்றாகவே தெரிகிறது.
அது சரி உன்னை ஒன்று கேட்கவேணும் உனக்கு வரும் கடிதங்களை உன்னுடைய மனிசனும் வாசிப்பாரோ?.. நீ வாய்கிழிய கத்திய பெண் சுகந்திரத்தை கல்யாணத்தோடு தொலைத்து விட்டாயோ? குடும்பத்துக்குள் குழப்பம் கொண்டர வேண்டுமென்றில்லை சும்மா அறிந்து வைத்திருந்தால், ஒளிவுமறைவு இல்லாமல் எழுதலாம் பார் அதுதான்.
உன்னை ஏன் குழப்புவான் என்றுதான் நாங்கள் இடம்பெயர்ந்த கதையை உனக்கு எழுதவில்லை. அங்கை போட்டாலும் தம்பிராசா அண்ணை தபாலை இஞ்சை கொண்டு வந்து தருவார்தானே. இவ்வளவு நாளும் ஆமிகாரங்களுக்கு கிட்ட இருந்தது, மடியில நெருப்பைக்கட்டிக்கொண்டிருந்த மாதிரி இந்த இடம் இல்லை, முன்பு பேச்சு வார்த்தைக்குள்ள தங்கச்சி என்று போகேக்கில வரேக்கில கூப்பிட்டுவிட்டு இஞ்சி தின்ற குரங்கு மாதிரி இளிக்குங்கள்..பொம்பிளை பிள்ளைகள் சைக்கிளை ஊன்டி தள்ளிக் கொண்டுதலைவிதியை நொந்து கொண்டு போய்விடுங்கள். இப்ப என்னென்றால் பழையபடி பொம்பிளைகள் மேல் கை வைக்கபாக்குதுகள்.
உனக்கென்றபடியால் சொல்கிறன் நாங்கள் இடம்பெயர்ந்த விசயத்தை, அண்டைக்கு நல்ல மழை. இவள் என்ட கடைசி தங்கச்சி நல்லதம்பி மாஸ்ரரின்ட வகுப்புக்கு போயிட்டு வரேக்கில இவளோடு வாற பிள்ளைகளும் அன்டைகென்று பாத்து வரேல. உவங்கள் அவளை மறிச்சு உதென்னஎன்று கேட்டு அவளின் நெஞ்சை பிடிச்சு கிள்ளியிருக்கிறான்கள். அவள் பேயடிச்ச மாதிரி வந்து நான் உலுப்ப ஓவென்று ஒரே அழுகை. வயசுக்கு வர இருக்கிற பிள்ளைக்கே இந்த நிலமை என்றால்.. மிச்ச குமர்பிள்ளைகளின் நிலை.
ஊருக்குள்ள ஒருதருக்கும் மூச்சுவிடக் கூடாதென்று அப்பாவின் ஓடர். சுடுகுது மடியைப்பிடி என்று அண்டைக்கே சாமான் சக்கட்டுகளோடு தேவி அக்கா வீட்டில இரண்டு நாள் தங்கி அப்பா முழு மூச்சாக கொட்டில் போட்டு மூன்றாம் நாள் இடம் பெயர்ந்து விட்டோம்.
எனக்கொன்றும் இரகசியமாக வைத்திருக்க விருப்பம் இல்லை. எங்களுக்கு நடக்கும் ஒவ்வொரு அநியாயங்களையும் வெளிக்கொணர வேண்டும். பெரிதாக பறையடித்து இங்கு மட்டும் அல்ல, தமிழன் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் அதற்காக குரல் எழுப்பி நியாயம் கேட்க வேண்டும். மறைந்து ஒளித்து வாழும் வாழ்வு வேண்டாம், தங்கச்சியை கெடுத்திருந்தால், அப்பாதுÖக்கில் தொக்கியிருப்பார், பாவம் கடன் தொல்லைபோல என்று ஊர் சொல்லியிருக்கும்.
வெளிநாடுகளின் உள்ள எம்மவர்களால் நடாத்தப்படும் தமிழ் இணையத்தளங்கள், தமிழரை அதிரவைக்கும் விதத்தில், இப்படியான உள்ளுர் செய்திளை உடனுக்குடன் கிசு கிசு செய்தி போல கிளு கிளுப்பாகத் தராது, சமூகப்பொறுப்போடு செய்தியை ஆராய்ந்து பிரசுரித்து அது ஆங்கில பத்திரிகைகள் மனிதஉரிமை நிறுவனங்களை அடையும் வண்ணம் விளக்கமாக, சரியாக தரவுகளோடு எழுதவேண்டும். ஒரு மட்டத்தில் எல்லோராலும் பேசப்படும் விடையமாக வந்தால், அடுத்ததடவை செய்யும் போது ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்து செய்வார்கள், அது கோயிலை இடிப்பதாக இருந்தாலும் சரி, பலவந்தமாக கையைப் பிடித்திழுப்பதாக இருந்தாலும் சரி.
ஒரு தமிழனுக்கு ஆறு இராணுவம் என்ற ரீதியில்தமிழர் பகுதியில் போர் முடிந்த பின்னும் இராணுவம் நிலை கொண்டுள்ளது. அவங்களும் செய்ய வேலை இல்லாமல், என்ன செய்வது என்று பாயை பிராண்டிக் கொண்டு யோசித்து ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறான்கள். நீ பொருளியல் படித்தனி, யோசித்து பார், 400,000 ஆயிரம் சிங்களப் படைகள் தமிழ் பகுதிகளில் நிலை கொண்டுள்ளன, போர் முடிந்து விட்டது என்று இவ்வளவு சிங்கள இளைஞர்களையும் வேலை யில்லை என்று வீட்டுக்கு ஒரு சிறிய தொகையை கொடுத்துஅனுப்பினால் என்ன நடக்கும், இப்ப சம்பளமும்சுளையாக எடுத்துக் கொண்டு, தமிழரிடம் இம்பளமும், பகல் கொள்ளையும் அடிக்கும் இவர்களுக்கு இனி உழைச்சு சாப்பிட உடம்பு வளையுமா? இவர்களை இவர்களின் கிராமத்துக்கு அனுப்பினால்இன்னொரு ஒயட தோற்றம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, அதனால் அரசும் இவர்களை குடும்பமாகவே தமிழர் பகுதிளை சுரண்டி அதில் குடியமர்ந்த முனைகிறது.
ஆச்சியும், அப்புவும் சுகம். அண்ணணைப் பற்றி அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். உன்னைப்பற்றி சொல்லு. எப்பிடி பொழுது போகிறது. என்னபுத்தகம் வாசித்தாய்? இப்பவும் சட்டைதானா போடுகிறாய்? ஜீன்ஸ் ஒன்று கொண்டு போனால் நல்லாயிருக்கும் என்று உன்ட மாமியார் சொன்னதைகேட்டு நீயும் நானும் கடை கடையாகத் திரிந்து கடைசியாக ஒன்றை வேண்டிக்கொண்டு வந்ததும், பிறகு உன்ட மனிசன் அதைப்பார்த்து விட்டுஇதென்ன தலையணைக்கு உறை போட்ட மாதிரி? குவினின் மதரும் நெடுக சட்டைதான் போட்டவ, நீர் சட்டையே போடும், காணும் என்றுமறித்ததும், எனக்கு இப்ப நினைத்தாலும் சிரிப்பு.
இப்ப இரவில கொட்டில் குளிர். சில வேளைகளில் நீர் விட்டுப்போன அந்த ஜீன்ஸ்சைத்தான் சாரத்துக்குள்ள கால் குளிராமல் போட்டுக்கொண்டு படுக்கிறனான். இருட்டிக்கொண்டுவருகுது மழை பெய்யப் போகுது போல, வெளியிலஇருக்கிற விறகு, சுள்ளிகளை எடுத்து உள்ளஅடுக்க வேணும். உன் கடிதத்தை ஆவலுடன்எதிர்பார்த்து முடிக்கின்றேன்.