“நான் எந்த அரசியல் கட்சியின் கருவியாகவும் செயற்பட மாட்டேன்”

1766

பிரிக்கப்பட்ட வடமாகாணசபைக்கான தேர்தல்கள் நடைபெறவிருப்பது பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்னரே, சிலர் முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஆளும் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் உள்ளவர்கள் மகிந்தவின் சம்மதத்தை பெறத்துடித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களின் பாடு இன்னமும் சிரமமாகிவிட்டது. தமது கட்சித் தலைமைகளின் ஆதரவு மட்டுமல்லாமல், வெளித்தரப்பினரின் ஆதரவும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. குறிப்பாக புதுதில்லியின் `அனுக்கிரகம்’ இல்லாமல் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியாதிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததும், தமது வேட்பாளர்களை தெரிவு செய்யவதில் கூடடமைப்பினர் மும்முரமாகச் செயற்பட்டனர்.முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதில் பலத்த போட்டி நிகழ்வதாகச் செய்திகள் வெளியாகின. தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணக் கிளை மாவை சேனாதிராசாவை முதலமைச்சருக்கான வேட்பாளராக களம் இறக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் கூட்டமைப்பில் அதிகாரம் கொண்ட சம்பந்தன், சுமந்திரன் இரட்டையரோ இளைப்பாறிய நீதிபதியான சீ.வி. விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளாரக தெரிவு செய்வதில் விடாப்பிடியாக இருந்தனர். இந்நிலையில் கொழும்பு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் வி.ரி. தமிழ்மாறனின் பெயரும் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியது. ரெலோ அமைப்பின் சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி, யாழ் உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரன் ஆகியோரும் முதலமைச்சர் வேட்பாளாராக போட்டியிட விரும்பியிருந்த போதிலும் அவர்களது விருப்பினை கூட்டமைப்பின் தலைவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இருப்பினும் மாவை சேனாதிராசாவுக்கும், விக்கிÚஸ்வரனுக்கும் இடையிலேயே கடும் போட்டி நிலவியது.

சம்பந்தன், சுமந்திரன் உட்பட கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுவோர் விக்கினேஸ்வரனை தெரிவு செய்ய முயன்றனர். ஆனால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளின் முக்கியஸ்தர்களும் சேனாதிராசாவிற்கே ஆதரவு வழங்கினர். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் வெளிப்படையாகவே விக்கினேஸ்வரன் மீது விமர்சனங்களை அள்ளி வீசியதுடன், சேனாதிராசாவுக்கான தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஜ×லை 15ம் திகதி கூட்மைப்பின் தெரிவுக் குழுவினர் ஒருமனதாக விக்கினேஸ்வரனை தெரிவுசெய்ததாக அறிவிப்பு வெளியானது. இத்தீர்மானத்தின் பின்னணியில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் இருந்ததாக மாவை சேனாதிராசாவிற்கு நெருக்கமான புலம்பெயர் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. தமது முதலமைச்சர் வேட்பாளராக திரு. விக்கினேஸ்வரனை நிறுத்தவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்த மறுநாள் (ஜ×லை 16ம் திகதி), அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினோம். இவ்வுரையாடலின் போது எமது கேள்விகளுக்கான அவரது பதில்களை இங்கு பதிவு செய்கிறோம்.

ஒருபேப்பர் : 2011ம் இறுதியில் கொழும்பிலிருந்து வெளியாகும் டெயிலி மிரர் பத்திரிகையில் உங்களது நேர்காணல் (12ம் பக்கம் பார்க்க)பிரசுரமாகியிருந்தது. அப்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் கருத்துகளிலிருந்து இப்போதும் மாறாது இருக்கிறீர்களா?

விக்கினேஸ்வரன்: அந்த நேர்காணலில் என்ன கூறியிருந்தேன் என்பது இப்போது ஞாபகத்தில் இல்லை. எந்தக்கருத்து என்று கூறுவீர்களா?

ஒருபேப்பர் : குறித்த நேர்காணலில் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வாக சம்ஸ்டி முறையை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

விக்கினேஸ்வரன்: ஒரு கல்வியாளராக, வெளியிலிருந்துகருத்துக் கூறுபவராக அவ்வாறு கூறியிருந்தேன். ஆனால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்வினை மனதில் வைத்துக் கொண்டு செயற்படமுடியாது. தமிழ் மக்களுடைய நல்வாழ்வும் அவர்களது நலனும் தான் இப்போது என்னிடமுள்ள ஒரேயொரு சிந்தனையாக உள்ளது.

ஒருபேப்பர் : ஏற்கனவே மாகாணசபை முதலமைச்சர் பதவியினை வகித்த இரண்டு தமிழர்கள் தங்களால் அப்பதவியின் மூலம் எதனையும் செய்ய முடியாதிருந்தது என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்போது கிழக்கு மாகாண முதலமைச்சராகவுள்ள நஜீப் அப்துல் மஜீத் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியைச் சேர்நதவராக இருந்தபொழுதிலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளுனருடன் முரண்பட்டு வருகிறார். இந்நிலையில், நீங்கள் எதனைச் சாதிக்க விழைகிறீர்கள்?

விக்கினேஸ்வரன்: உண்மைதான் இதில் பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாகத்தெரிகிறது. ஒரளவுக்கு சட்டம் தெரிந்தவன் என்ற வகையில், பதின்மூன்றாம் திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் எனக்கு நன்றாக விளங்குகிறது. அதாவது ஆளுனருடைய அனுமதியைப் பெறாமல் எதுவுமே செய்ய முடியாத நிலையிருப்பதால். எங்களுக்கு வலது கரத்தால் தரப்பட்டதை இடதுகரத்தால் பெற பட்ட மாதிரியான நிலையிருக்கிறது. இப்பேர்ப்பட்ட சூழலில் எதனை சாதிக்க முடியும் என்றுகேட்கிறீர்கள். சாதிக்க முடியுமோ சாதிக்க முடியாதோ, முதலில் நாங்கள் சாதிப்பது, மக் களுடைய ஆணையை நாங்கள பெறுகின்றோம்.

அதாவது ஜனநாயக முறைப்படி ஒருவரை தேரந்தெடுக்கும் போது மக்களுடைய எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே அது இருக்கிறது. அந்த பிரதிபலிப்பின் அடிப்படையிலே நாங்கள் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் (13ம் திருத்தச்) சட்டத்தில் உள்ள பிரச்சனைகளை எடுத்துக் கூறவேண்டும். அரசாங்கத்திடமும் எடுத்துக் கூறவேண்டும். சர்வதேச மட்டத்திலும் இதனைக் குறிப்பிடவேண்டும். ஆக இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. மக்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர வேண்டும். எது வரும் எப்படி நாங்கள் செய்யப் போகிறோம் என்பதனை இப்போது என்னால் கூறமுடியாதுள்ள ஒரு நிலையில் நானிருக்கிறேன்.

ஒருபேப்பர் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு வேட்பாளராக போட்டியிடுகிறீர்கள். நீங்கள் தமிழரசுக்கட்சியிலோ அல்லது கூட்டமைப்பில் உள்ள மற்றய கட்சிகளில் ஒன்றில் இணைந்
துள்ளீர்களா?

விக்கினேஸ்வரன்: கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் முழுமையான ஆதரவு எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னிடமுள்ளது. இதில் நாங்கள் வேற்றுமை பாராட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. நான் யதார்த்தமாகப் பார்க்கும் ஒரு விடயத்தை மற்றவர்கள் வேறு விதமாகப் பார்த்தால் எமக்கிடையே விவாதம் நடைபெறும். அது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும்.

ஒருபேப்பர் :அவ்வாறானால் நீங்கள் ஒரு அரசியல் கட்சியிலும் இணையவில்லை?

விக்கினேஸ்வரன்: இல்லை, நான் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. என்னைப் பொறுத்தவரையில்,வடமாகாணத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த மாகாண சபையினால் எதைச் செய்யமுடியும் என்று ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது தான் எனது பணியாக இருக்கும். நான் தமிழ் மக்களின் கருவியாகத்தான் கடமையாற்றப் போகிறேனே ஒழிய எந்தக் கட்சியின் கருவியாகவும் நான் கடமையாற்றப் போவதில்லை.

ஒருபேப்பர் :  நீங்கள் ஆயதப்போராட்டத்திற்கு எதிரான கருத்துடையவர், அகிம்சை வழியிலான போராட்டங்களை வலியுறுத்துபவர் என்ற வகையில், நீங்கள் பதவிக்கு வந்தால், மக்களைஅணிதிரட்டி அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

விக்கினேஸ்வரன் : அதுபற்றி இப்போது என்னால் கூறமுடியாது. ஆனால் சில நேரத்தில் எல்லாமே எங்களுக்கு சார்பில்லாமல் நடக்கும்போது, அப்பதவியில் இருந்து பிரயோசனமில்லை. ஆகவே அப்பதவியில் தொடரந்து இருக்க வேண்டும் என்றால் மக்களை அணிதிரட்டி நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் கட்டாயம் ஏற்படும். அந்த நேரத்தில் எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போகிறோம் என்பதனை அப்போதுதான் கூறமுடியும். இப்போது அதுபற்றிக் கூறமுடியாத நிலையிலதான் நானிருக்கின்றேன்.