நாளை மற்றும் ஒரு நாள்

sunrice
Photo Courtesy :- Flickr [homebodyhubby]
கண்ணதாசன் ஒரு பாடலில் இவ்வாறு சில வரிகளை வைத்தான்.
‘எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
எனக்காக உணவும் உண்ண எப்படி முடியும்?
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு. அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று’
இவ்வரிகளிலுள்ளே மிகமிக எளிய உண்மைகள் தான் அமைகின்றன.

எனினும் அவை பேருண்மைகள். நம் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய மகா உண்மைகள்.
இவ்வரிகளை ஈழத்தமிழர் வாழ்வினுடனும் பொருத்திப் பார்க்கலாம். எமக்காக சர்வதேச சமூகம் கண்ணீர் விடும். ஆனால் அது மட்டும் போதுமா? வசையோடு இருக்கின்ற எமக்கான உணவை நாமே தான் தேடி உண்ண வேண்டும். எமக்;கான கடமைகளை நம் கைகளே செய்ய வேண்டும்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் வரை ஒருவர் தலையில் அத்தனை பாரங்களையும் சுமத்தி விட்டு தனிப்பட்ட எம்வேலையில் கவனம் செலுத்துவோம். கேட்ட வேளை பொருளாதார உதவி செய்வதுடன் எம் கடமைகளை நாம் எல்லைப்படுத்தினோம். அது கூடப் பரவாயில்லை. சிலர் அவ்வமைப்புடன் அண்டிப் பிழைத்துவிட்டு இப்பொழுது தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என வாக்குமூலம் தருகின்றனர். மற்றைய அதிகார மையத்திடம் அண்டி வாழ்வதற்கு இப்படியான வாக்குமூலம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

அவைஒரு புறமிருக்க இனி நாம் என்ன செய்யப்போகின்றோம், என்ற கேள்வியே எம்முன் முள்ளாய் குத்தி நிற்கிறது. முப்பது வருடப் போர் வாழ்க்கை ஒன்றும் தரவில்லை என பறைவோர் ஒரு புறமிருக்கட்டும். முப்பது வருடத்தில் பின்பு பேச்சுவார்த்தையிலிருந்து சந்திரிக்காவின் சமாதான யாத்திரை தொடங்கி, ரணிலின் அமைதி ஒப்பந்தம் வரை வந்து அதன் பிறகு ஆறு கட்டப் பேச்சுவார்த்தை மேசைக்கு சிங்கள, பௌத்த பேரினவாத அரசை இழுத்துக் கொண்டு வந்தது இந்தப் போர் வாழ்வு தான் ‘கொடுத்த அடி தான் சிங்களவர்களை சமாதானம் பற்றி பேச வைத்தது’ என்பான் தராகி சிவராம்.

தமிழ் நாட்டில் ஆறரைக்கோடி தமிழர் இருந்தும், அவர்களை ‘இந்தியர்’ என்றே அறிந்த உலகம். தமிழர் என்றோ இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு என்று உணர்ந்து கொண்டது போர் வாழ்வு தந்த பாடம் தான். இப்பொழுது ஐ.நா. முன்னலில் ஈழத்தமிழர் பாடு, பேசுபொருளாக இருக்கின்றது என்றால், முப்பது வருடப் போர் வாழ்வு தந்த அநுபவம் அல்லால் வேறு என்ன?
‘முப்பது வருட காலம் இல்லாத அமைதி இப்பொழுது வந்துவிட்டது அதனை அனுபவிப்போம்’ என்று சொல்வோரின் பொக்கற்றுக்குள் யாரோ நிறையப் பணம் அள்ளிப் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அது அவர்களை பேசவும் எழுதவும் வைக்கின்றது. சிந்திக்க வைக்கின்றது என்று சொல்ல மாட்டேன். இத்தகையோருக்கு சிந்தனை என்பது அறவே கிடையாது. பணம் கொடுப்போரின் சிந்தனைகளை இவர்களது கைகளும், வாய்களும் பேச வைக்கின்றன. இப்படியானவர்களின் குரல்களை வரலாறு நெடிகிலும் கேட்டுக் கொண்டே வருகின்றோம்.

முன்னர் பிரான்ஸ் ஈழமுரசு பத்திரிகையில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆய்வு செய்த ஓர் ஊடகவியலாளர், இப்பொழுது ‘மகிந்தவின் வரவுசெலவுத் திட்டம்’ தொடர்பாக வாழ்த்துப்பா பாடுகிறார். அது கூடப் பரவாயில்லை, இப்பொழுது யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வரலாற்று எழுச்சி கண்டு ‘மாணவர்கள் படிக்க வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது’ என்ற விதமாக ஊடகப்பணி ஆற்றுகின்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டமாக இருந்தால் என்ன, ஒடுக்கப்படும் மக்களுக்காக விடுதலைப் போராட்டம் எங்கு நடந்தால் தான் என்ன, குறிப்பிட்ட அச்சமூகத்தின் பல்கலைக்கழகமே போராட்டத்தை முன்னெடுக்கின்றது, போராட்டத்தின் திசை வழியே ஆற்றுப்படுத்துகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை சிங்கள பல்கலைக்கழக மாணவர்களும் முனைப்புடன் ஆரம்பிப்பதை நோக்கும் போது, பல்கலைக்கழக மாணவ சக்தியின் வீரியம் புரிகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதைப்படிக்க வேண்டும் என்றும் தெரியும், எதற்கு துடிக்க வேண்டும் என்றும் தெரியும். சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின்படியும் வழங்கும், விதியின் படியும் இயங்குவோருக்கு அது புரியாது.

இவர்களைப் புறந்தள்ளி விடலாம், ஆனால், வேறொரு ஆபத்தின் முளை, எம்முள் வேர் விட்டு வளர்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும், அதன் தலைவர் சம்பந்தரையும் நாம் ஏற்கனவே புரிந்து வைத்துள்ளோம். சென்ற மே தினத்தன்று சம்பந்தனின் கையில் சிங்கக் கொடி முளைத்தபோதல்ல, முளைத்ததை சம்பந்தன் நியாயப்படுத்திய போதும் அல்ல, அதற்கு முன்னரே 2009 மே அவலத்திற்குப் பிறகு, மகிந்தவை சந்தித்து சம்பந்தன் நாடிக் கோணி, ஒரு கும்பிடு போட்டாரே அப்பொழுதே தெரிந்து விட்டது, எங்கள் இனத்தை ‘விற்றுத் தொலைக்கப் போகிறார் சம்பந்தர்’ என்றும் அதற்குத் தக்கமாதிரி வரிசை கட்டி காரியங்கள் ஆற்றினார் சம்பந்தன்.

அதன் படிநிலை வளர்ச்சி தான், ‘புலிகள் பயங்கரவாதிகள், புலிகள் என் நண்பர்களையும் கொன்றவர்கள், அவர்களது பயங்கரவாதச் செயலே அவர்களது அழிவுக்குக் காரணம்;’ என்று யார் யாரையோ மகிழ்ச்சிப் படுத்த திருப்திப்படுத்த திருவாய் எழுந்தருளியிருப்பார் சம்பந்தர்.

தலைவர் கை காட்டியபடியால் தான், பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொண்டவர் சம்பந்தர், அப்பொழுதெல்லாம் விடுதலைப்புலிகள் பற்றித் தெரியாத இவருக்கு, சம்பந்தர் அவ்வாறு தான் சொல்வார், ஆனால், சம்பந்தர் அவ்வாறு சொல்வதற்கெல்லாம், புது வியாக்கியானம் கண்டுபிடித்து எழுதும் ஊடகவியலாளர்கள் அதனைப் பேசுவிக்கும் ஊடகங்கள், இன்னமும் இருக்கின்றனவே. அவர்களை என்னவென்று சொல்வது?

யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். எந்த விமர்சனத்திற்கும் களம் அமைத்துக் கொடுப்பது ஊடகங்களின் கடமை. ஆனால், விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதேசமயம் கால்புகழும், ஊகங்களும், திரிபுகளும், சப்பைக் கட்டுகளும் விமர்சனங்கள் அல்ல அதனையும் ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் எளிதாக இருப்பார்கள், ஊடகங்களும் தலைவர்களுமே தாமும் குழம்பி, மக்களையும் குழப்புகிறார்கள். எனவே, சொல்கின்றேன் நாளை மற்றுமொரு நாள், என்று அழியப் போகின்றோமா? அல்லது புத்துயிரும், புத்துணர்வும் மிக்க நாளாக புதுக்கப்போகின்றோமா? நாளை மற்றுமொரு நாள் என்று ஆக்கப் போகின்றோமா அல்லது புத்துயிரும் புத்துணர்வும் மிக்க நாளாக புதுக்கப்போகிறோமா?