நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறையும், தமிழர்களின் அரசியல் உரிமைகளும்

429

கடந்த  ஒருபேப்பரில் இப்பத்தி சிறிலங்காவின் அதிபர் தேர்தல் பற்றியதாகவே எழுதப்பட்டது. இம்முறையும் அது தொடர்பாகவே எழுதப்படுகிறது. இலங்கைத் தீவு தொடர்பான நடப்பு அரசியல் அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்ற இத்தேர்தல் பற்றியதாக அமைந்திருக்கிறது. அரசியல் கட்சிகளினதும்,அதன் தலைவர்களின் நடவடிக்கைகளும் இத்தேர்தலை ஒட்டியதாகவே அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதுவொருமுக்கியத்துவமில்லாத விடயமாக இருப்பினும், சில தமிழ்த்தரப்புகள், குறிப்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை இத் தேர்தலை எதிர்கொள்கின்ற முறை இத்தேர்தலுக்கும் அவசியமில்லாத முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறது. இத்தேர்தலையிட்டான வெளித்தரப்புகளின் எதிர்பார்ப்பும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

கடந்தபோன இரண்டு வாரங்களில் நடைபெறும் சம்பவங்களையும் அரசியல் தலைவர்களது பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது, ஏற்கனவே இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்களோ என எண்ணுமளவிற்கு நகர்வுகள் மேற்கொள்ப்படுவது தெரிகிறது. ஆதலால் வரும் ஆண்டில் இத்தேர்தல் நடைபெறுவது ஒரளவிற்கு உறுதியாகிவிட்டது. இவ்விடயத்தில் புலம்பெயர் நாடுகளிலுள்ள சில தமிழ் குழுக்களும், தனிநபர்களும்கூட அக்கறை காட்டுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் லண்டனுக்கு வந்திருந்த ரணில் விக்கிரமசிங்க லண்டனில் உள்ள சில உதிரித் தமிழ்க்குழுக்களைச் சந்தித்துஆதரவு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வேடிக்கை என்னவெனில் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே சிறிலங்கா தூதரகங்களுக்கு காவடி எடுத்து,கோத்தபாய இராஜபக்சவின் அனுக்கிரகத்திற்கு காத்திருந்தவர்களே இப்போது இரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்து ‘ஆட்சி மாற்றம்’ (Regime Change) ஏற்படுத்த துடிக்கிறார்கள்.இரணில் விக்கிரமசிங்க லண்டனில் நின்ற அதேகாலப்பகுதியில் லண்டனுக்கு வந்திருந்த தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் மாவிட்டபுரம் சேனாதிராசாவும் இரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாக சில தகவல்கள் வெளியாகியிருந்தாலும் அவற்றை உறுதி செய்ய முடியவில்லை. கூட்டமைப்பின் லண்டன் கிளையை சேர்ந்தவர்கள் ரணிலை சந்தித்ததாக பிறிதொரு தகவல் தெரிவித்தாலும் அதனையும் உறுதி செய்ய முடியவில்லை.

லண்டனில் இரணில் தமிழ்க்குழுக்களை சந்தித்தது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உலகத் தமிழர்பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத்தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டமையால் அதற்குஎதிர்ப்புத் தெரிவித்து இரணிலை சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். நான் அறிந்தவரையில் சுரேன் சுரேந்திரனுக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தனிப்பட்ட பகைமையிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்தியாவின் ‘கருணையினால்’ பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலிருக்கிற கூட்டமைப்பிற்கும், அதன் புலம்பெயர் சகாக்களான உலகத் தமிழர் பேரவைக்கும் பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நீக்கக் கோரும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் ஒவ்வாமை இருப்பதில் ஆச்சரியமில்லை. இருப்பினும் ஐக்கிய தேசியக்கட்சியின் மீட்சிக்கு சஜித் பிரேமதாசா இன்றியமையாதவராக இருக்கிறார் என சிங்களத் தேசியவாதிகள் கூறி வருவதனை இத் தமிழ்த் தரப்புகள் அறியும்என நம்பலாம்.

இரணில் விக்கிரமசிங்கவுடனான தமிழ்க்குழுக்களின் சந்திப்புகள் பற்றி கொழும்பு அறிந்து வைத்திருக்கிறது என்பதனை உறுதி செய்யும் வகையில், இவ்வாரம் கிளிநொச்சிக்கு பயணம் செய்தமகிந்த இராஜபக்ச அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் பேசும்போது நாடு கடந்த அரசாங்கத்திற்கும் இரணில் விக்கிரமசிங்கவிற்கும் சந்திப்பு நடந்ததாகக் கூறியிருக்கிறார். நாடுகடந்த அரசாங்கத்திற்கு நெருக்கமான சிலர் இவ்வாறான சந்திப்புகளில் ஈடுபட்டமை உண்மைதான். எனினும் இவர்கள் உருத்திரகுமாரனின் அனுமதியுடன் இரணிலை சந்தித்தார்களா அல்லது தான்தோன்றித்தனமாகச்செயற்பட்டார்களா என்பது தெரியவில்லை.

பதின் மூன்று பிளஸ் இல்லை

இரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை விரும்பும் சில தமிழர்களிடம் இரணில் விக்கிரமசிங்க எத்தகைய தீர்வினை முன்வைக்கிறார் எனக் கேட்டபோது, அவர் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்குஅதிகமான அதிகாரங்களுடைய மாகாண சபைமுறைமையை ஏற்படுத்துவார் எனத் தாம் நம்புவதாகவும், ஆனால் எத்தகைய தீர்வு என்பதனை இப்போதே குறிப்பிட்டு சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க அவர் விரும்பவில்லை எனக்கூறுகிறார்கள். அதாவது சிங்கள மக்களினதும் மற்றய இன மக்களினதும் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதன் பின்னர், பெரும்பான்மையான சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரம் தருவார் என்பதுஇவர்களது நம்பிக்கை. இதனிடையே ஒக்டோபர்13ம் திகதி கொழும்பில் பத்திரிகையாளர்களுக்கு செவ்வி வழங்கிய இரணில், தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் பதின்மூன்றாம் திருத்தச்சட்ட மூலத்துக்கு அதிகமாக எதுவித அதிகாரமும் வழங்கப்போவதில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். ஆக இரணில் என்ன கூறினாலும் அது சிங்கள மக்களை திருப்திப்படுத்தவே தவிர அது அவரது உண்மையான நிலைபாடு அல்ல என்பதுதான் அவரை ஆட்சிக்கு கொண்டுவர விரும்பு தமிழர்களின் வாதமாக இருக்கிறது. இவ்விடத்தில், சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்கிற தீர்வையை தாம் வேண்டுவதாக கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை, குறிப்பாக சுமந்திரன் அடிக்கடி கூறி வருவதனையும் நினைவிற் கொள்ளவும்

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழித்தல்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள், சுயாட்சி போன்ற விடயங்களில் பேச்சளவிலாவது நெகிழ்ச்சித்தன்மை காட்டும் ஒருவர் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம்அறவே இல்லை என்பதனால், சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளத் தக்க சிலவிடயங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி போன்றவை தயாராக இருக்கின்றன. இறுதிக்கட்ட பேரம் பேசல்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் முஸ்லீம் கொங்கிரஸ் கட்சியினரும் இவர்களுடன் இணையக் கூடும்.

பதினெட்டாம் திருத்தச் சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அமைதி காத்த கொழும்பு தாரண்மை வாதிகள் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது பற்றி இப்போது கோரிக்கை விடுப்பது வேடிக்கையானது. இத்திருத்தச்சட்ட மூலம் வழியாகவே ஒருவர் இரண்டுதடவைக்குமேல் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. புதிதாக ஜனநாயக வழிமுறைக்குள் செல்லும் ஆபிரிக்க நாடுகள் கூட ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருபதனை மறுக்கும் சட்டங்களை கொண்டு வரும்போது, இந்நாடுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தினை கொண்டிருக்கும் இலங்கைத் தீவில் ஜனநாயக விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன. இதனைச் சீர் செய்வதுதான் தமது தலையாய கடமை என்பது போலவும், இதற்காகத்தான் இவர்களை தமிழ் மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்பது போலவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்துகொள்கிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை கொண்டுவருவதற்கு முன்னதாகவே தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுவருவதும், அதற்கெதிராக இளைஞர்கள் போராடிய வரலாற்றினையும் மறந்துவிட்டு ஜனாநாயகத்தை நிலைநாட்டப் போவதாக இவர்கள் கூறுவது வெளித்தரப்புகளைத் திருப்திப்படுத்தவே தவிர இதில் வேறெந்த முகாந்திரமுமில்லை. இதற்கிடையில் தமிழ் மக்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் தான் நிறைவேற்று அதிகாரஅதிபர் முறையை மாற்றுவதாக மகிந்த இராஜபக்சகிளிநொச்சியில் வைத்து கூறியிருக்கிறார். கூட்டமைப்பு தான் ஈழக் கோரிக்கையை கைவிட்டு விட்டதாக கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்தாலும் (தாம் ஒற்றையாட்சி முறையையே வேண்டுவதாக ஒரு சத்திய கடதாசியினை கூட்டமைப்பு நீதி மன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது) இதுதான் அவருக்குதுருப்புச் சீட்டு. அதாவது சிங்களத் தேசியவாதத்தின் வாக்கு வங்கியிலேயே அவர் நம்பி இருக்கிறார். அவர்களும் நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது பற்றி அக்கறைப்படப் போவதில்லை.