நில உரிமையின் அவசியத்தை உணர்த்தும் “மீரியப்பொத்த” அவலம்

432

‘ஏனென்று கேட்க
நாங்கள் யார்?.
நாங்கள்
உழைக்கவும் சாகவுமே பிறந்தவர்கள்!’
– மலையக கல்லறை ஒன்றில் பதியப்பட்டுள்ள பேருண்மை.

பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்த பிரதேசத்தில் மக்கள் புதையுண்டு போனார்கள் என்கிற செய்தி உலகத்தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அங்குள்ள மீரியபெத்தவில், லயன்களில் வாழ்ந்த தமிழ் தோட்டத்தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 400 பேர் மண் சரிவில் மாண்டு போனதாக உடனடியாக வெளிவந்த செய்திகள்கூறின.

ஆயினும் அரச செய்தியோ, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறியது போன்று , இங்கு புதையுண்டுபோன மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுவதாக அப்பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளார்கள்.

தோட்ட நிர்வாகம், புவி ஆய்வுத் திணைக்களம், அரசு என்பன இதற்கு தாங்கள் பொறுப்பில்லை என்பதுபோல் நழுவல் அறிக்கைகளை வெளியிடுகின்றன.

தாம் விடுத்த எச்சரிக்கையை தோட்ட நிர்வாகம் செவிமடுக்கவில்லையென்று ஒரு தரப்பும், அப்படியாயின் அம்மக்களைக் குடியமர்த்தத் தேவையான நிலத்தினை அரசு ஒதுக்கித்தரவில்லையென்று மறுதரப்பும், மரணித்த உடலங்கள் மீது நின்று குதர்க்கம் பேசுகின்றன.

வட – கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களோ, சொந்த நிலத்தை பறிகொடுக்கின்றனர்.

மலையகத் தமிழரோ, வாழ்ந்த மண்ணில் புதையுண்டு போகின்றனர்.

இந்நிலை மாற வேண்டும்.

ஆனாலும் மலையக மக்களின் அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினை புதையுண்டு போகக்கூடாது. இது வெறுமனே நிவாரணப் பிரச்சினை அல்ல. நீண்டகாலமாகவே நிலவி வந்த,இம்மக்களுக்கும் நிலத்திற்கும் இடையிலான பிரதான முரண்பாடு, தொழிற் சங்கத் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது என்பதுதான் நிஜம்.

இந்தச் சரியான முரண்பாட்டினை முன்வைத்து, இதற்காகக் குரல் எழுப்பும் அரசியல் சக்தியாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்களையே சுட்டிக்காட்ட முடியும்.

இலங்கையிலுள்ள, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு பெரும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்களே மலையக மக்கள். இவர்களுக்கு குந்தியிருக்க பாதுகாப்பான ஒரு நிலம் இல்லை.

அந்த மக்களுக்கு சொந்த குடிநிலம் வேண்டுமென்று குரல் எழுப்ப, அதற்காகப் போராட, அதே மக்களின் வாக்குகளைப் பெற்று மந்திரிகளாகும் எவருக்கும் அக்கறையில்லை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை, இம்மக்களின் 50 ரூபாய் கூலி (450 இலிருந்து 500 ஆக )உயர்விற்காக அரசோடு பேரம்பேசுவதே அரசியலாகி, அதுவே இம்மக்களின் விதியாகி விட்டது.

பெருந்தேசிய இனவாத அரசுகளைப் பொறுத்தவரை, இம்மக்களை தூக்கி நிமிர்த்த வேண்டும் என்கிற அவசியம் எப்போதும் இருந்ததில்லை. அந்தத் தேவையும் அவர்களுக்கில்லை.

லால் பகதூர் சாஸ்திரியோடு ஒப்பந்தம்போட்டு, காடு மலைகளைக் களனிகள் ஆக்கியஅதிமானுடர்களைத் துரத்தியடிக்கும் வேலைகளையே சிறிமாவோ ஆட்சி அன்று முன்னெடுத்தது.

அம்மக்களின் வாக்குகளைப் பெறுவோர், நாடாளுமன்றில் தமக்கு ஆதரவாக இருந்தாலே போதும் என்பதுதான் பெருந்தேசிய இனவாத ஆட்சியாளர்களின் பெருவிருப்பு. அதற்கு இசைவாக பல மலையகத் தலைவர்கள் அரசோடு இணைந்து செயற்படுகின்றார்கள்.

தம்மைப்போல், வருகிற சனாதிபதித் தேர்தலில் அரசினை ஆதரித்து, காணியுரிமை, மாகாணசபை உரிமை போன்று சகல உரிமைகளையும் பெற்று பெருவாழ்வு வாழ, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டுமென அறிவுரை வேறு கூறுகிறார் பிரபா கணேசன்.

முதலில் மலையக மக்களுக்கு குடியிருக்க நிலமும், வீடும் அரசிடமிருந்து பெற்றுத்தர பிரபா முன்வர வேண்டும்.

அதனை விடுத்து விடுதலைப் புலிகள்போன்று சந்தர்ப்பங்களை தவற விடக்கூடாதென கூட்டமைப்பிற்கு ஆலோசனை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இராணுவச் சமநிலை நிலவிவந்த வேளையில்தான் போர்நிறுத்தத்தை பிரகடனம் செய்து,பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். இதில் எங்கே அவர்கள் சந்தர்ப்பத்தைத் தவற விட்டார்கள் என்று புரியவில்லை.

சிங்களம் தருவதை ஏற்றுக்கொண்டு ( அது எதையும் இதுவரை தந்ததில்லை என்பது வேறு கதை) போவது அரசியல் சந்தர்ப்பவாதம்.

அதற்கு, சொந்தமாக ஒரு அரசியல் கட்சி தேவையில்லை. அதைவிட சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ இணைந்து விடுவது மிகவும் பொருத்தமான செயலாக இருக்கும்.

தெளிவாகச் சொல்லப்போனால், 20-21 ஆம் நூற்றாண்டின் நவீன அடிமைகள் இம் மலையகமக்கள். இது கசப்பான, சாசுவதமான உண்மை. நிலமற்ற மனிதர்களை வேறெப்படி அழைக்கலாம்!.

சாதி-மதங்களுக்கு அப்பால், ஒரு இனத்தின் `தொழிலாளர் வர்க்கம்’ மிகக் கொடூரமாக, 150ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்படும் குரூரம்,`சோசலிசக் குடியரசு` என்று சுய தம்பட்டம் அடிக்கும் இலங்கையில்தான் நடக்கிறது.

துயர் பகிர்ந்து, பத்தோடு பதினொன்றாகக்கடந்து செல்லும் நிகழ்வல்ல இம் மண்சரிவும், மனிதர்களின் இழப்பும்..

இம்மக்களின் நிரந்தர விடிவிற்காக, அனைத்து ஒடுக்கப்படும் மக்களும் ஓரணியில் திரளவேண்டும். இந்தப் பூவுலகில் இன ஒடுக்குமுறைக்கும், வர்க்க ஒடுக்குமுறைக்கும்ஒரே நேரத்தில் முகம் கொடுப்பது மகா கொடுமை.

இனியாவது (!) இந்த அதியுன்னத, பெருவலி சுமக்கும் மானுடர்களுக்காக என்ன செய்யப்போகிறோம்?.

சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அடிக்கடி கொழும்பிற்கு வருவதால், படைத்துறைத் தளபதிகளும், பாதுகாப்பு செயலாளர்களும் அங்குமிங்கும் ஓடுப்பட்டுத் திரிகிறார்கள். இவர்களுக்கு மலையக மக்களின் உயிர்வாழும் உரிமைப்பிரச்சினை குறித்து சிந்திப்பதற்கு நேரமிருக்காது. ஜனவரியில் தேர்தல், மார்ச்சில் ஐ.நா.வில் கண்டம் என்பதுதான் சிங்களத்தின் தலையாய பிரச்சினை.

அதேவேளை சென்ற வருடம் அந்தமான்- நிக்கோபார் தீவுகளுக்கு அண்மையில் ஓடிப்பிடித்து விளையாடிய சீன நீர்மூழ்கிகள், இப்போது நேரடியாகவே கொழும்பில் தலை காட்டுவதால், பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள இந்தியத் திருநாட்டிற்கு, மீரியபெத்த பற்றிய அக்கறை இருக்காது.

மியன்மாரில் (பர்மா) விட்ட இராசதந்திரத்தவறை, மீண்டும் இலங்கை விவகாரத்தில் விடக்கூடாதென திட்டமிட்டு செயல்படும் இந்தியா, மகிந்த அரசோடு மிகவும் நெருங்கிவரவே முயற்சிக்கும்.

தென் சீனக் கடலில் உள்ளது போன்று, நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தும் சுரங்கத் தளங்கள் இலங்கையில் இல்லையென்று தெரிந்தாலும் இந்தியாவின் அச்சத்திற்கு வேறுசில காரணங்களும் உண்டு.

அது குறித்து, அடுத்த வாரம் பார்ப்போம்.

இதயச்சந்திரன்

Image courtesy : www.coloradonewsday.com