அறுவடைக்காலம், வயல் புறங்கள் எங்கும், கலகலப்பும், களிப்பும் மிகுந்து காணப்படும். ஐந்து மாதத்திற்கு பின் கடும் உழைப்புக்கு பயன்கிடைக்கும் காலம் இது. மழை வெய்யில், பனி என்று காலநிலையின் தாக்கத்திற்கு இடையும் பயிரை பருவத்திற்கு பருவம் நாசமாக்கும் பூச்சிகள், பங்கசுகள் ஊடறுத்து முளைக்கும் புல் இனங்கள் என்பனவற்றை எல்லாம் அகற்றி பயிரை வீறாக்குகின்ற கடும்உழைப்பில் இருக்கின்ற விவசாயி உற்பத்தியை பயனாகும் காலம் அது. இவ்வாறான பலஇடர்களை வென்று அறுவடை என்கின்ற பணத்தை கையில் காணுகின்ற காலம் இது. காட்டு விலங்குகள், கால் நடைகள் என்று இந்த அறுவடை காலத்தில் வயல் புறங்களை நோக்கி வரும் விலங்கினங்களுக்காக கட்டுத்துவக்கும், வெடியும் ஒலி எழுப்புகின்ற சங்கு ஓசையுமாக காவல் அரண்களில் காத்திருந்த விவசாயிகளையும் இந்த நேரங்களில் காணலாம்.
விவசாயம் நல்ல விளைச்சலை கொடுத்து பொலி கண்டால் விவசாயிகளுடைய மனமும், பொலியும் விவசாய விளைவு நலிந்தால் அவன் மனமும் கோணிக்குறுகி, கடன் சுமைகளில் அவன் அமைந்துவிடுவதும் உண்டு. கிளிநொச்சியில் சுமார் 17 வருடங்களுக்கு மேலாக முரசுமோட்டை, மூன்றாம் வாய்க்கால் என்ற இரு வேறு வயல்புறங்களில் 55 ஏக்கர் வரையான நெல் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட அனுபவம் எனக்கும் உண்டு.
போராட்டம் வீறுபட்ட நேரம் இடம்பெயர்வுகள் இந்தப் பூமிகள் காடாக்கின. இடையே எரிபொருள், உரங்களுக்கான அரசின் கடை,போக்குவரத்துத் தடை என்பன தாயாக பூமியில்குறிப்பாக வட-கிழக்குப் பகுதியில் நெற்செய்கை நிலங்களை குறுக்கின.
ஆயினும், ஈற்றிலே உக்கிரமடைந்த போர்,விவசாயிகளை இடம்பெயர வைத்து ஏழைகளாக்கிவிட்டது. கழுத்துக்குள் கணத்த மணிகளுடன் பொத்தியாக சுமந்தபடி பசுமை வீறுடன்செழித்து கட்டிடளம் காளை போல் காட்சி தரும்போதே நெற்பயிர்கள் மனதில் மகிழ்வின் நெருடலைத் தரும். அவை கதிர் வீசி, கதிரில் பால்வீசி, பால் மணியாகி பச்சைக் கதிராகி அவைகாய்ந்து பொன் வண்ணமாகி பாரச் சுமை தாங்கிபாட்டமாக நெற்பயிர்நிலத்தில் விழுந்து பொன்னிறமாக வயல் காட்சி தருகின்றபோது மனமும், மகிழ்ச்சியில் துள்ளும் அருமையான அந்த அழகுக் காட்சிகளை வயல்புறங்கள் தோறும் தமிழ் மண்ணில் காணலாம். கூட்டமாக வரும் பன்றிகள், கிளிகளிலிருந்து நெல்மணிகளை காக்க இரவு பகலாக இரும்பைத் தட்டி ஒலி எழுப்பியும், கட்டுத்துவக்கை கட்டி வைத்தும் கமக்காரர்கள் காவல் காப்பார்கள்.
அநேகமாக வயல் தோறும் கொட்டகைகள், களஞ்சிய அறை என்று இருக்கும் கமத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களுக்கு கொட்டில்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். பெரு வயல்களைக் கொண்டிருக்கும் இத்தகைய கொட்டில்கள் தான், உரம் கிருமி நாசினி, விதை நெல் என பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இரவிரவாக பாத்தி பாத்தியாக தண்ணீர் பாய்ச்சுவார்கள். கழிவு நீரை அகற்றுதல், வயல் காவல்,கிருமி நாசினி உரங்கள் போடுதல் என கொட்டகையில் இருக்கும் கூலிக் குடும்பங்களுக்கு விதை நெல் தொடக்கம் அறுவடை வரையாக வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். அறுவடை என்று அந்த நாட்களில் அரிவாள் கொண்டுகையால் அறுத்து பாட்டம் பாட்டமாக போடுகின்ற முறையே இருந்தது. இப்பொழுது அறுவடை யந்திரங்கள் வடக்கு தெற்கு எங்கும் புழக்கத்தில் உள்ளன.
முன்பு வயல் தோறும் அரிவு வெட்டுக் கத்தியுடன் வந்து, கிழக்கில் வாழும் அரிவு வெட்டுக்கூலிகள் வடக்கிலும் வாடி அமைத்துக் கொள்வார்கள். மட்டக்களப்புப் பிரதேசம், ஆலையடி வேம்பு, களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களிலிருந்து கூடுதலாக கிளிநொச்சி நோக்கி வருகின்றவர்கள் இருந்தார்கள். காக்கா மார்கள் என்று கூறும் முஸ்லிம்களே இவர்களில் அதிகம்.ஒரு கங்காணி தலைமை தாங்குவார். வாய்க்காலில் மீன் பிடித்து சமையல் சமைப்பதற்கு அரிவெட்டுக் குழுவில் ஒருவர் வருவர். சுமார் 20 பேரைக் கொண்டதாக அரிவுவெட்டுக்குழு இருக்கும். சந்தை நாட்களில் போய் அரிசி,காய்கறிகள் வாங்கி வருவார்கள். அதிகாலையில் வாயில் பீடிப் புகை கக்க, கையில் அரிவாளுடன் வயல்களில் வரிசையாக நடப்பார்கள். தலையை மூடி ஒரு ஓலைத் தொப்பி, கை முட்டிய சேட், காற்சட்டை தெரிய கட்டிய சாரம், கழுத்தை குளிர் காக்காமல் கட்டிய துண்டு என்றகோலம். தெம்மாங்குப் பாடல் பாடிய படி வரிசையாக சுறுசுறுப்பாக நெற்கதிர்களை அறுத்துப் போடுவதில் அந்த நாட்களில் இந்த அறுவடைக்குழு ஈடுபடுவதை பார்க்க அழகாக இருக்கும்.
காலையில் சமையல் காரர் கஞ்சியோடு வருவார். சுற்றவர நின்று குடிப்பார்கள். இது காலைஆகாரம். மீண்டும் வேலை ஆரம்பிக்கும். மதியம் சோறு பிரதான கறியாக ஒரு மீன் குழம்பு, வயல்மரநிழலில் இருந்தபடியே உண்டு ஆறி, ஒரு கண் அயர்ந்து எழும்பி மீண்டும் வேலையை ஆரம்பிப்பார்கள். ஆறு மணிக்கு வேலை முடிந்துவாடிக்கு திரும்பி, வருவார்கள்.வாய்க்காலில் குளித்து அவர்களுடைய களியாட்டம் அதன் பின் ஆரம்பமாகும். பீடிக்குள் போட்ட கஞ்சாத்துÖள் ஒரு இழுவை இழுத்து அடுத்தவருக்குத் தர அது கை மாறும். கள்ளுப் போத்தல் முதல்கசிப்பு சாராயம் என்று பலதும் இருக்கும். வசந்தனடி, கோலாட்டம், ஆட்டம் பாட்டம் என்றுவாடி பெற்றோல்மக்ஸ் வெளிச்சத்தில் நடக்கும். இரவு உறங்கினால், அடுத்தநாள் காலைவிழித்து மீண்டும் வேலையை ஆரம்பிப்பார்கள்.
நெற்கதிர்களை கூட்டி கதிர்கட்டு ஆக்குவதும், அதை தலைமாறியில் சுமந்து சூட்டுக் களத்தில் கொட்டி, சூடு வைப்பதும் கூட அவர்கள் அரிவுவெட்டும் ஒப்பந்ததுக்குள், அடங்கும். சூடு அடிப்புக்கும் விளையும் மூட்டை ஒன்றுக்கு இவ்வளவுகூலி என்று பேசி, சூடு அடித்துத் தர சூடு அடிப்புக் கூலியாளர்கள் இருப்பார்கள். புசல் பெட்டியால் கழுத்து வெட்டி அளந்து மூன்று புசல் ஒரு சாக்கில் போட்டு மூட்டையாக்கி, சணல் கயிற்றால்கட்டி சுமந்து களஞ்சியப்படுத்தி தருவார்கள். மூட்டைகளை வாங்க லொறிகளில் வியாபாரிகள் வருவார்கள். கிலோகணக்கில் மூடைகளை விற்று பணத்தை விவசாயிகள் பெறும் போது, அவருடைய மனம் மகிழ்ச்சியில் மிதக்கும். அந்தக் கடன், இந்தக் கடன் என்று போக நல்லவிளைச்சல் கண்டால் ஒரு தொகைப் பணம் விவசாயியின் கையில் மிஞ்சும். இவ்வாறாக இடையே தைப்பூச நிகழ்வில் புதிர் எடுப்பதும், பொங்கல் பொங்குவதும் கூட இந்த அறுவடை கால பயிர்ச் செய்கைக்குள் அடக்கம். சூடு அடிப்பு களத்தில் சூட்டுப் பொங்கல் நடைபெறுவதும் உண்டு. சூடு அடிப்புக் களத்திற்கு அருகாக அடுப்பு வைத்துப் பொங்கி பழம், பாக்கு,வெற்றிலை வைத்து, படையல் இட்டு இறைவனை வழிபாடு செய்வார்கள். சூடு அடிக்கும்போது, களத்தில் பெட்டிக்கடகத்தோடு வந்து காத்திருப்பார்கள்.
அந்த கூலியாளர்கள், ஏழைகளுக்கு சுழகால் அளந்து அன்பளிப்பாக விளைந்த நெல்லை தருவது கமக்காரனின் கொடை மனதில் அடங்கும். கதிர் கட்டுகளை சூடு அடிக்கும் களத்திற்கு கொண்டு செல்லும்போது, அதை சிந்தி கொட்டிக் கிடக்கும். அதை சிறியவர்கள், பெரியவர்களாக வந்து பொறுக்கி மூடையாக சேகரித்துக் கொள்வதற்கும் பெரும் கமங்கள் அந்த நாட்களில் ஏழைகளுக்கு இடம் தந்தது. பயன்தரும்சோற்று உணவுக்கு காரணமான இந்த நெல்எங்கள் தமிழர் வாழும் பூமி எங்கும் ஆண்டவன்தந்த கொடை அது. அந்தக் கொடைக்கு பருவகாலங்களும் ஒத்துழைத்தால் அது கமக்காரனுடைய மனது பொலிவு பெறும்.