பாதை தெரிந்த பின்பும் பயணத்தில் ஏன் தயக்கம் ?

1293

தமிழீழ நினைவெழுச்சி நாட்களை உணர்வுபூர்வமாக எதிர்கொள்ளும் தருணத்தில், நிகழ்காலநிலவரத்தையும் எதிர்காலம்பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக இப்பத்தி அமைகிறது. `மீகாமன் இல்லாத கலமாக’ ஈழத்தமிழினம் தடுமாறிக் கொண்டிருப்பதாக நம்மத்தியில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இன்னொரு புறத்தில் தவறான தீர்மானங்களால் இந்நிலைக்குத் தள்ளப்படடு விட்டோம் என்ற கருத்தும் உள்ளது. வந்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு விட்டு வருந்திக் கொண்ருக்கிறோம் என்று கூறுபவர்களும் உள்ளனர். இக்கருத்துகள் யாவும் அவரவர் பார்வையில் சரியாகத் தென்படலாம். இருப்பினும் வரலாறு முன்னோக்கியே நகரவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசியலில் அடிக்கடி ஏற்படும் திருப்பங்களுக்கு ஏற்ப தமிழர் நலன் சார்ந்து செயற்பட்டு மக்களை வழி நடாத்தக்கூடிய தலைமை ஒன்று இப்போது செயற்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் இவ்வாறான அசாதாரண காலத்தில் எவ்வாறு எம்மைதகவமைத்துக் கொள்வது என்பதில் நாம் குழம்பிக்கொண்டிருக்க வேண்டுமா? ஏனெனில் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகள், அதனை வென்றெடுப்பதற்கான போராட்ட வழிமுறைகள், அதன் ஆதரவுத்தளம், பலப்படுத்த வேண்டிய உறவுகள், எதிரியின் நோக்கம், தொடர்பாடல்களினால் ஏற்பட்ட பட்டறிவு, சர்வதேச சக்திகளின் நலன்சார் நடவடிக்கைகள் என நிறையவே பேசப்பட்டாயிற்று. வருடாவருடம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நிகழ்த்திய மாவீரர்நாள் உரைகள் விடுதலைப்புலிகளின் கொள்கைத் திட்டத்தைவெளிப்படுத்துவதுடன் நின்றுவிடாது தமிழ்மக்களை வழி நடாத்துவதாகவும் அமைந்திருந்தன. இனி அவற்றின் வழிநின்று நடப்போமா? அல்லது மீகாமனைத் தேடி நாட்களை வீணடிப்போமா? இவை எங்களை நாங்களே கேட்கவேண்டிய கேள்விகள்.

தேசியத் தலைவரின் இறுதியாக வெளிவந்த (2008ம் ஆண்டு) மாவீரர் தின உரையில் குறிபிடப்பட்டுள்ள சில முக்கிய விடயங்களைப் பார்ப்போம்:

“என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம்ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது.இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.’’

இவ்வாறு அன்றைய நிலமையை தலைவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழியும் நிலையிலும் இந்த நிலையில்மாற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா? தமிழர் பிரதேசங்கள் இன்றைக்கும் ஆக்கிரமிப்புக்குள்தான் இருக்கின்றன.

“உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம். உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம்.

காலமும், கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள்அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும், இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இன்றைக்கு இலங்கைத்தீவு விடயத்தில் சர்வதேச அரங்கில் சில மாற்றங்கள் தென்படுகின்றன என்றால் அதனை ஏற்படுத்தும் தரப்பாக உலகத் தமிழினத்தின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. உலகமயமாக்கலில் நாடுகடந்த தேசிய இனங்களின் முக்கியத்துவம் உணரப்படுவதானால்இது சாத்தியமாகிறது. ஆனால் உலகத் தமிழ் ஆதரவுச்சக்திகளினை ஒருங்கிணைத்துக் கொள்வதில் நாம் வெற்றிக்கண்டிருக்கிறோமா? அல்லது எமக்குள் குழுக்களை அமைத்து முட்டி மோதிக் கொண்டிருக்கிறோமா?

ஐந்து வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும்இன்றைக்கும் பொருந்தக் கூடிய வகையில்அமைந்துள்ள தலைவரின் உரையின் இறுதிப்பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“அன்பையும், அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரைக் கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”

தலைவரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம். சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியாத நிலையில், தமிழ் மக்களின் இறைமையை தாரைவார்க்க விரும்பாத தலைவர் அடுத்தக்கட்டச் செயற்பாடுகளை உலகத் தமிழர்களிடம் கையளித்திருக்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் இளைய தலைமுறையினரிடம் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதனை இந்த உரை தெளிவுபடுத்துகிறது.

இந்த இடத்தில் சிங்களத் தேசியவாதி தயான் ஜயதிலக அண்மையில் புது தில்லியில் பாதுகாப்பு கற்கை மையத்தினால் (Institute of Defence
Studies and Analyses ) ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிற்கு சென்று வந்த பின் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டவை தேசியத்தலைவர் அவர்களது எதிர்பார்ப்பினை நியாப்படுத்துவதாக அமைந்துள்ளது.

“இந்திய வெகுஜன அபிப்பிராயம் சிறிலங்கா தொடர்பில் பிரச்சனைக்குரியதாக உள்ளதாகநான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டிலும், தமிழ் அலைந்துழல்வு (Diaspora) சமூகத்திலும் உள்ள மிகவும் வினைத்திறன் கொண்ட இளையவர்களின் நடவடிக்கைகள் என்ற மென்சக்தியினால்சிறிலங்காவின் பரப்புரைகளை தோற்கடிக்கப்பட்டு வருகின்றன’’ இங்கு தயானின் எண்ணம் முற்றிலும் எதிர்நிலைப்பாடுடையது எனினும் நிலமையின் தாற்பரியத்தை அவரால் உணரக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில் தாயகத்திலுள்ள தமிழத் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் பின்நோக்கிய நகர்வாக, உலகத்தமிழர்களின் நடவடிக்கைகளை குழப்புவதாகவே அமைந்துள்ளமையை கவலையுடன் அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் தாயகத்தில் வாழும் இளையவர்களின் கைகளிலேயே உள்ளது. அதனை அவர்கள் விரைந்து நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்.