எத்தனை சோகத்தை
தாங்குமோ எம் நெஞ்சம்.. ?
அத்தனையும் ஒரு வடிவாய்
எங்கள் இனக்கொழுந்தை
வஞ்சனையால்
கொன்றபோது…
கோடி முறை இறந்தோம்..
பால் மணம் மாறா பாலகன்..
பாலச்சந்திரன்..
தாயுள்ளம் கொண்ட
தலைவன் ஈன்ற
இளம் சூரியன்…
இதயத்தை பிடுங்கி விட்டு
உயிர் சுடரை
பிடுங்கி வீசினர்..
கொடிய மாந்தர்..
இரக்கமில்லா உலகம்
சாட்சியமானது..
நீதி
இன்றும்
நிமிர்ந்தெழ போராடுகிறது.
மனிதாபிமானம்
சவக்காட்டில்
புதைந்ததன்
சாவில்லா சாட்சி..
பாலச்சந்திரன்!
கள்ளமில்லா செல்வம் இவன்..
செய்த பாவம் என்ன?
பிஞ்சு விரலாலே
பகை தந்த பண்டத்தை
கள்ளமின்றி உண்டிட்ட
காட்சி கண்டபோது
செல்வமே..
கோடி முறை செத்தோமடா!
கயவரின் குறிவைப்பில்..
வஞ்சனையில் மடிகையிலே..
பெற்றவரை நினைத்தானோ?
வலியில் துடித்தானோ?
ஆண்டுகள் கடந்தும்
துடிக்கின்றன
தமிழர் இதயங்கள்.
வஞ்சகர் வாழும் பூமியில்
வந்து பிறந்த
கண்மணியே..
என்னடா நினைத்தாய்
இறுதி நினைவுகளில்..
அன்னை தந்தை அன்புக்காக
ஏங்கி
அழுதாயா?
அமைதியாக உறங்கினையோ?
தமிழரின் செல்வமே. ..
காலம் தந்த ஆழி முத்தே..
யாருமில்லா பொழுதில்
ஏக்கத்தின் சுமை ஏந்தி
என்னடா நினைத்தாய் நீ?
இறுதி கண பார்வையில்..
இறுதி துளி நினைவில்
எதை நீ நினைத்தாயோ ?
நினைந்து நாம் அழுகின்றோம்..
இனப்படுகொலையாளிகளுக்கு
எங்கள் குழந்தைகள்
பலியான கொடுமை சொல்லி
கலங்காத விழிகளை
கள்ளமற்ற முகம்
கொண்டு
கல்லாய் போன
இதயங்களை
ஓர விழி பார்வையில்
கரைத்தவனே..
பாலச்சந்திரா..
சுட்டு கொல்ல
வெறி மாந்தர்
குறி வைத்தது அறியாமல்..
ஏக்கத்தோடு காத்திருந்த
செல்வம் இவன்
என்ன பாவம் செய்தான்?
தமிழர்க்காய் போராடிய
தலைவன் மகன் என்றால்
கொலை தண்டனை குற்றமா?
உரிமை மீறி
கொன்ற கொலையாளிளை
தட்டி கேட்க மறந்த
கயமை உலகே..
கள்ள மௌனம்
கலைத்து
நேர் நின்று பதில் சொல்!
சொல் பதில் சொல்..
என்ன பாவம் செய்தார்கள்..
எங்கள் பாலச்சந்திரர்கள்
ஆயிரம் ஆயிரமாய்
மண்ணில் உதிர?
பிஞ்சு விழி பார்வை கண்டும்
நஞ்சு நெஞ்ச கொடும் மாந்தர்கள்..
கொஞ்சமும் இரங்கவில்லையே?
கவிதை பார்வை கண்ணாலே..
இறுதி கணத்தில்
என்னடா நினைத்தாய்?
ஒரு முறை சொல்லிவிடு..
நினைந்து நினைந்து
தமிழினத்தின் தாயவர்கள்
மாரடித்து அழுகின்றோம்..
கதறும் ஒலி கேட்கிறதா?
கண்மணியே பதில் சொல்லு!
நாளிரண்டு
ஆண்டுகள்
கடந்த பின்னும்…
ஆறவில்லை எம் காயம்..
அழியாத நினைவுகளின்
அழிக்க முடியாத வடுக்கள்..
காலத்தில் கரைந்து போவதில்லை..
பேயாடிய புயலே
பிணம் தின்ற வல்லூறுகளே..
பூங்கொத்தை கசக்கி
வெட்கமின்றி சுட்டு
கொன்ற இழியோரே..
எரிமலைகளும்..
பொங்கும் அலைகளும்…
எங்களுக்குள்
முட்டி மோதும்
பாலச்சந்திரனின்
நிலவு முக
ஒளி பிடுங்கி
கொன்றிட்ட
காட்டேரிகளை
கிழித்தெறியும் காலம்
என்றோ வரும்..
வலிக்க வலிக்க
நினைவுகளை மீட்டு
மீண்டும் மீண்டும்
நெருப்பில் குளிக்கின்றோம்…
காத்திருக்கின்றோம்..
மே மாதம் மறந்து போக அல்ல..
நினைந்து எழ..
..
ஆறாத காயங்களை
அழித்து
எழுத
நாம் என்ன செத்த
பிணங்களா?
வெந்து வெடிக்கும்
உயிர் மூச்சில்
வெடித்து பறக்கும்
தீயை
அணையாமல் பத்திரப்படுத்துகின்றோம்..
ஒற்றை தீப்பொறி கூட
இனி இழக்க மாட்டோம்..
மீண்டெழும் காலம்
மறுபடியும்
உருவாகும்..
மீண்டும் மீண்டும்
எரிகொண்டு
கனன்று எழும்
முள்ளிவாய்க்கால்
பெரு நெருப்பு இது!
அணைக்க மாட்டோம்..
யுகம் கடந்தும்
மூண்டெழும்
ஊழி பெரு நெருப்பு!!!
விடியல் காணும் வரை
அணையாது!
தமிழீழத்தின் குலக்கொழுந்து. மறப்போமா?? மறக்க முடியுமா???