பாலு மகேந்திரா – அழகை யாசித்த ஓர் அற்புதக் கலைஞன்

1445

என்னால் இப்பொழுது எழுதாமல் இருக்கமுடியவில்லை. வேறு எதனால் எனது அஞ்சலியைச் செலுத்தி விடமுடியும். என்னிடம் இருப்பது எழுத்தொன்று மாத்திரமே. அதனூடாக என்அஞ்சலி அவருக்கு.

பாலுமகேந்திரா அவரின் பெயரை உச்சரிக்கும்போதே என் உடம்பில் கூதல் ஓடுகிறது.அந்த இளம்பராயத்தில் பாலுமகேந்திரா என்கின்ற பெயர் வித்தியாசமாகவும், வேறுவர்ணத்திலும் என்னை ஆட் கொண்டது. பாலுமற்றும் மகேந்திரா என்ற இரண்டு பெயர்கள்கொண்ட பெயர் அது. அதிலேயே பாலுமகேந்திராவின் தனித்துவம் வெளிப்படுகிறது.

அந்த அடையாளம் அவர் திரைப்படங்களிலும் வரிந்து கொண்டதுதான் அதன் சிறப்பு.1980ஆம் ஆண்டு. மதியம், கடும் வெயில் எறித்து, மாலைப் பொழுது குளிரத் தொடங்கியநாள். எங்கள் வீட்டு அயலில் ஐயனார் கோவில் அருகில் வேலி அடைத்து வெறும் காணி இருந்தது. அந்த வளவுக்குள் வீடியோ, டெக், தொலைக்காட்சிப் பெட்டி வைத்து திரைப்படம் காட்டுகிறார்கள். அன்று இரண்டு திரைப்படங்கள் அதனைப் பார்ப்பதாயின் மூன்று ரூபா கொடுக்க வேண்டும். ஒரு திரைப்படம் என்றால் இரண்டு ரூபா. `பகலில் ஒரு இரவு’ திரைப்படமும், `அழியாத கோலங்கள்’ திரைப்படமும் அன்று காட்டினார்கள். இறுதிக்காட்சி `அழியாத கோலங்கள்’ நானும் நண்பர்கள் நால்வரும் அழியாத கோலங்கள் திரைப்படத்திற்காக காத்திருந்தோம். ஒரு ரூபா குறைவு என்பதும், நல்ல படம் மாத்திரம் தான் பார்க்க வேண்டும் என்பது தான் காரணம்.

`அழியாத கோலங்கள்’ தொடங்கிய போது அதில் நாங்கள் எங்களைக் கண்டோம். தமிழில் எங்களை நாங்கள் கண்டறிந்த ஒரே ஒரு சினிமாஅது தான். `நெஞ்சிலிட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை’ என்ற பாடல் வரியுடன் திரைப்படம் தொடங்குகின்றது. சிவந்த சூரியன் மெல்லிய விளிம்புடன் மேலெழுகிறான். `தேவி பிலிம்ஸ்’ அழியாத கோலங்கள் செவ்வானப் பின்னணியில் எழுத்துக்கள் விரிகின்றன. சூரியன் முழுமையாகப் பூமியைப் பார்த்தவுடன்எழுத்துக்கள் நிறைவு பெற்று திரைக்கதை தொடங்குகின்றது.
அத்தொடக்கமே என்னுள் சிலிர்ப்பை உண்டாக்கியது. தொலைக்காட்சிப் பெட்டியின்இரைச்சலை மீறி நான் அதனுள் அமிழ்ந்து போகின்றேன். நான் காண்பது காட்சியா அல்லது ஒரு கனவின் நீட்சியா என்பது தெரியாது. வண்ணங்கள் குழைந்து அதன் மேல் அழியா கவிதை எழுதப்படுகின்றது.

`திரையில் ஒரு கவிதா ஓவியம்’ என்று அதனை விபரிக்கலாம். ஏ பிலிம் பை பாலுமகேந்திரா (A film by) என்று அழியாத கோலங்கள் நிறைவு பெறுகின்றது. நான் எழுந்திருக்கவில்லை, நானில்லை, யாருமே எழுந்திருக்கவில்லை. திரைப்படம் நிறைவு பெற்றது என்று யார் தான் நம்பினார்கள். திரைக்கதை அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது. அது வரை நாம் பார்த்திருந்த திரைப்படம் எதுவும் அப்படி முடிந்திருக்கவில்லை. அழியாத கோலங்கள் அவ்வாறல்ல. ஒரு நீண்ட பயணம் இடையில் சடக்கென நின்றது போல் ஆயிற்று.

அன்றிலிருந்து பாலுமகேந்திராவின் இரசிகனாக அல்ல அவரது வெறியனாகிப் போனேன் நான். அவரது உயரம், அவர் அணியும் தொப்பி,முகத்தில் கத்தை மீசை, தீர்க்கமான பார்வை, ஒளிப்பதிவு கருவி முன் நின்ற மிடுக்கு…. இவையாவும் அவரை நெறியாளன் என்றோ, ஒளிப்பதிவாளன் என்றோ சொல்லித் தரவில்லை. ஒரு நடிகன் என்ற பிரமை கூட இல்லை. மகா ஆளுமை நிறைந்த ஒரு பிரகிருதி என்று சொல்லிற்று. பாலுமகேந்திரா போன்ற இரசிப்பை நான் ஒருபோதும் கண்டதில்லை.

சிவாஜி-எம்.ஜி.ஆர் என்கின்ற இரு ஆளுமைகளுக்கிடையிலான போட்டி எங்கள் நண்பர் குழாமில் இல்லை. ஆனால், சௌந்தரராஜான்-ஜேசுதாஸ் என்றும் கே.வி.மகாதேவன்-எம்.எஸ்.விஸ்வநாதன் என்றும் போட்டியே எங்கள்நண்பர் குழாமில் இருந்தனர். இப்பொழுது அது பாலுமகேந்திரா-மகேந்திரன் என்பது போல் ஆயிற்று. இது தான் நான் யார் என்று சொல்லித்தெரியத் தேவையில்லை.

ஆனால், இந்த இடத்தில் நான் சொல்ல வேண்டும். மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்’ போல் ஒரு திரைப்படத்தை தமிழ் திரை இதுவரை காணவில்லை என்பது என் அபிப்பிராயம் அதேபோல் சுமார் 20 திரைப்படங்களை பாலுமகேந்திரா தந்திருந்தபோதும் `மூன்றாம் பிறை’, `யாத்ராபீ (மலையாளம்), `சந்தியா ராகம்’ என்ற மூன்று திரைப்படங்களைத் தவிர்த்து ஏனையவற்றை முக்கிய சினிமாக்கள் என என்னால் அறுதியிட முடியவில்லை. அவை பலவற்றில் நல்ல சினிமாவுக்கான அம்சங்கள் இருந்தன என்று தான் சொல்வேன்.

மேற்குறித்த பந்தி ஒருபுறம் இருக்கட்டும். பாலுமகேந்திரா, எங்களைப் பாதித்த இடத்திற்கு மீண்டும் வருகின்றேன். உண்மையில், அழியாத கோலங்கள் பார்த்ததன் பிறகு என்னுடைய பார்வைகள் அடியோடு மாறிப் போயின.சினிமா பற்றிய பார்வையை சொல்லவில்லை. உலகம் பற்றிய பார்வை, இயற்கை பற்றிய பார்வை, ஏன் பெண்கள் பற்றிய பார்வை, யாவும்மாறிப் போயிற்று. கஞ்சி போட்டு படபடக்கின்ற பருத்திச்சீலை தான் பெண்களுக்கான கொள்ளைஅழகு என்று காட்டியவர் பாலுமகேந்திரா. அவ்வாறே கூந்தலில் சூரிய ஒளி வெள்ளம் மெலிதாகப் படர்ந்திருக்க வரும் பெண், மோகினி என்றும் அறிந்தேன் நான்.

அந்த வெப்ப வலய நாட்டில் பகல் 10 மணிக்கு முன்னரும், பின்னேரம் 4 மணிக்குப் பின்னரும் சூரியனும் அழகன் தான் என்று அடித்துச் சொன்னவர் பாலுமகேந்திரா. கடல் இத்தனை நீலமா, மலை இத்தனை வசீகரமா,காடு இத்தனை அழகா, காலை இத்தனைவடிவா என வியக்க வைத்தவை பாலுமகேந்திராவின் கண்கள் தான். செம்பாட்டு மண் இத்தனை சிவப்பா என்ற வியப்பையும் தரத்தவறவில்லை. மேலும், மூடுபனியிலும், நிலவுப் பால் விசிறலிலும் ஊர் உறங்கிக் கிடந்த அழகை பாலுமகேந்திரா அல்லால் வேறு யார் காட்டினர்.

இப்பொழுதோ என்றால் எம் நண்பர் குழாமில் போட்டி திசை மாறிற்று. இது பாலுமகேந்திராவிற்கும், அசோக்குமாருக்கும் இடையிலான போட்டி. வண்ணம் குழைத்து வடிவில் நேர்த்தி செய்த ஒளிப்பதிவு யாருடையது என்பதே அது. அப்பொழுது மூவர் இருந்தனர்.பாரதிராஜாவின் கண்களாக நிவாஸ், மகேந்திரனின் கண்களாக அசோக்குமார், பாலுமகேந்திராவிற்கு அவரே கண்கள். மகேந்திரனின் முதல் திரைப்படமான முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு பாலுமகேந்திராவே ஒளிப்பதிவு. அதனால் தான் அத்திரைப்படத்தை ஜந்தாவது தடவை பார்த்தேன். அதுவும் `கழிவுகெட்ட யாழ்.ஹரன் தியேட்டரில்’ மழைக்காலத்தில் கலரி ரிக்கட் எடுத்தால் கவிழ்ந்து விழாதவர் வெகுசிலர். அப்படிப்பட்ட தியேட்டர் அது. ஆனால், அதற்குள்ளும் போய்,பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவை பார்க்கச் சிலிர்த்தபடி இருப்பேன். ரஜனிகாந் வருகின்றபோது சீழ்க்கை ஒலி பறக்கிறது. பாலுமகேந்திராவின் ஒளி பாய்கின்றபோது சீழ்க்கை அடிக்கமுடியவில்லை. அந்த ஒளியை எடுத்து கண்ணில் ஒற்றுகிறேன். அதுவும் `அடி பெண்ணே’ பாடல் காட்சி. பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு, ஷோபாவின் நாணச்சிரிப்பு… சொல்கின்றேன் ஐயன்நீர் அதனைக் கணாத கண்ணெண்னே கண்ணோ, கல்லாலே செம்பாலே செய்துட்ட கண்ணோ.

மகேந்திரன் தன் இரண்டாவது படமான `உதிரிப்பூக்களில்’ அசோக்குமாரை ஒளிப்பதிவாளராக்கி விட்டார். இப்போது பாலுமகேந்திராவிற்கும், அசோக்குமாரிற்கும் தான் போட்டி என்றாகி விட்டது. அசோக்குமார் பாலுமகேந்திராவிற்கு சளைத்தவர் அல்லர். ஆனால்,பாலுமகேந்திரா தன் ஒளிப்பதிவிற்கு பயன்படுத்துகின்ற வெளிச்சம் (Light) என்பது அவரை உயர்வாக்கிவிடுகின்றது. வெறுமனே இயற்கைக் காட்சிகளை எடுப்பது மாத்திரமல்ல, மனிதர் மீதும் இயற்கை மீதும் பாய்ச்சும் வெளிச்சம் மீதான பிரச்சினை வேறு எவரிடத்திடமும் காணமுடியாது.

1983 மார்கழிவரை பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் முள்ளும் மலரும், சங்கராபரணம், அழியாதகோலங்கள், மூடுபனி, மூன்றாம்பிறை என்று ஐந்து திரைப்படங்கள் பார்த்தாயிற்று. இவற்றில் அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம்பிறை ஆகியமூன்றும் அவரின் நெறியாள்கையில் உருவாகின. இவை திரையில் பார்த்த திரைப்படங்கள்.

ஆனால், கட்டுவனில் ஒருவரிடம் பாலுமகேந்திராவின் ஓழங்கள் என்ற மலையாளத் திரைப்படத்தின் வீடியோ பிரதி இருக்கின்றது என்று கேள்விப்பட்டு அதனை வாங்கிக் கொண்டு வந்து டெக் வைத்துப் பார்த்தோம். அமோல் பலேகர், பூர்ணிமா ஜெயராம் நடித்த திரைப்படம் அது. நல்லதொரு சிறுகதைவாசித்த திருப்தியை ஓழங்கள் திரைப்படம் தந்தது. அது மலையாளத் திரைப்படமாக இருந்தபோதிலும், அத்திரைப்படத்துடன் ஒன்றிப் போக மொழி ஒரு துளியும் தடையாக இல்லை. அது தான் பாலுமகேந்திரா. 

இவ்வளவு அநுபவங்களுடன் 1984 தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் `கள்ளத் தோணியில்’ பயணம் ஏறினேன் தமிழ்நாட்டிற்கு.அது அரசியல் வேலை செய்தவற்கான பயணம்.ஆயினும் இரண்டு ஆளுமைகளை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டினேன் ஒருவர் அசோகமித்திரன் மற்றையவர் பாலுமகேந்திரா.

எப்படி முகவரி எடுத்தேனோ எப்படி சென்னை சாலிகிராமத்தில் அவருடைய வீட்டைகண்டுபிடித்தேனோ எதுவும் ஞாபகம் இல்லை.ஆனால், பாலுமகேந்திரா வீட்டுக் கதவைத் தட்டினேன். நெடுத்த உருவம் தொப்பியுடனும், கத்தை மீசையுடனும் “யார் தம்பி, என்ன வேண்டும்?” என்று கேட்டது அத்தனையும் கனவு போல் ஆயிற்று. என்னை அழைத்துக் கொண்டுதனது வீட்டிற்குள் என்னை அழைத்துக் கொண்டு தனது வீட்டின் மொட்டை மாடிக்குச்சென்றார். மூன்றாம்பிறை திரைப்படத்தில்இடம்பெற்ற கொட்டில் அந்த மொட்டைமாடியில் இருந்தது. ஓர் ஆற்றங்கரையில் ஸ்ரீதேவிக்கு பச்சிளம் வைத்தியம் செய்யப்படும் இடம் தான் அந்தக் கொட்டில். அந்தக் கொட்டிலில் இரு மணித்தியால நேரத்திற்கு மேலாக உரையாடினோம். அப்படிச் சொல்லக் கூடாது. அவர் சொன்னதைக்கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் உரையாடிய போது தெரிந்த முகக்குறிப்பு, உடற்குறிப்பு யாவும் என் நெஞ்சில்அசைகிறது. உன்னிப்பாக கவனித்ததில் அவரதுமொழியில் கவித்துவமும் கம்பீரமும் ஒலித்தன.

அடுத்த பேப்பரில் தொடரும்