பிரித்தானியாவின் சிறிலங்கா தொடர்பான வழிகாட்டி – 2013

622

பிரித்தானியாவின் சிறிலங்கா தொடர்பான வழிகாட்டி : 2013 – விளக்குகிறார் ஜனனி ஜனநாயகம்

இலங்கைத்தீவில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையின் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு தனது பணியினை ஆரம்பித்துள்ள நிலையில், சாட்சியம் அளிக்க முன்வருபவர்களின் பாதுகாப்பு, மற்றும் அவர்கள் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியிருப்பின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது தடுக்கப்படுமா போன்ற விடயங்களில் பிரித்தானிய அரசின் நிலைப்பாடு பற்றி மேலதிக விடயங்களை அறிந்து கொள்ளும்பொருட்டு இனப்படுகொலைக்கு எதிரான தமிழரமைப்பின் (Tamils Against Genocide) பணிப்பாளர் செல்வி ஜனனி ஜனநாயகம் அவர்களை ஒருபேப்பர் தொடர்பு கொண்டு உரையாடியது.

சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பு, அவர்கள் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்தால் அவர்களது விண்ணபம் சாதகமான முறையில் பரிசீலிக்கப்படுமா போன்ற விடயங்களை கடந்த இரண்டு இதழ்களில் ஜனனி விளக்கியிருந்தார். இனி பொதுவில் இலங்கைத்தீவிலிருந்து வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் பிரித்தானிய நீதித்துறை கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை பற்றி ஜனனியிடம் கேட்டறிவோம்.

பிரித்தானிய நீதிமன்றங்களில் பயன்படுத்துவதற்கென, 2013 இல் சிறிலங்கா தொடர்பில் நாடுகளிற்கான வழிகாட்டி (country guidance on Sri Lanka in 2013) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டியில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது?

இலங்கைத் தீவிலிருந்து வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் மீள நாட்டுக்குதிருப்பி அனுப்பப்படுவதில் உள்ள ஆபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கு தஞ்சம் வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிப்பதற்காக நீதிமன்றங்களிற்கான ஒரு வழிக்காட்டியை ஐக்கிய இராட்சியத்தின் குடிவரவு, மற்றும் தஞ்சம் கோருவது தொடர்பான உயர் தீர்ப்பாயம் (Upper Tribunal Immigration and Asylum Chamber) வெளியிட்டுவருகிறது. நாடுகளின் நடப்பு நிலவரம் அடிக்கடி மாற்றமடைவதால் சிலவருடங்களுக்கு ஒரு முறை புதிய வழிகாட்டி வெளியிடப்படுகிறது. ஒரே மாதிரியான வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில் அடிக்கடி விசாரணைக்கு எடுக்கப்படும்போது அவற்றுக்கு அறிவுறுத்தலை வழங்கக்கூடிய வகையில் இவ்வழிகாட்டி அமைகிறது.

இவ்வகையில், 2009ம் ஆண்டு தொடர்ச்சியான சில வழக்குகளின் அடிப்படையில் ஒரு வழிகாட்டி வெளியிடப்பட்டது. இவ்வழிகாட்டி தயாரிப்பதற்கு கவனத்தில் எடுக்கப்பட்ட சில வழக்குகளைக் இங்கு குறிப்பிட முடியும் TK (Tamils – LP updated) Sri Lanka CG [2009] UKAIT 00049]. இவற்றின் விபரங்களை நீங்கள் இணைய தளங்களில் பார்வையிட முடியும். 2009ம் ஆண்டு போர் முடிவுற்றதன் பின்னர் இவ்வழிகாட்டி வெளியிடப்பட்டபோதிலும், அப்போது போரின் இறுதியில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி முழுவதுமாக அறியப்படவில்லை. இன்னும் குறிப்பாகச் சொன்னால், சனல் 4ல் வெளியிடப்பட்ட Sri Lanka’s Killing Fields ஆவணப்படத்தின் முதலாவது பகுதி காட்சிப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டது.

இக்கால கட்டத்தில் பிரித்தானிய நீதித்துறையானது சிறிலங்கா அரசு பற்றி இப்போதுள்ளதைக் காட்டிலும் சற்று வேறுபட்ட நிலைப்பாட்டில் இருந்தது. சிறிலங்காவில் சட்டரீதியாகவும், சட்டத்திற்கு புறம்பான வகையிலும் தடுத்து வைக்கப்படுபவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானது என்பதனையும், பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்கள் திருப்பி அனுப்பப்படும் போதுஅவர்கள் கைது செய்யப்படுவதும், ஒரு முறைகைது செய்யப்பட்டு விடுதலையானதன் பின்னரும் மீளக் கைது செய்யப்படுவதுமான ஆபத்து இருப்பதனை அப்போதும் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்கள், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகஆயுதம் ஏந்தியவர்கள், அல்லது சிறிலங்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

2013 இல் இந்த வழிகாட்டி மீளாய்வுக்கு உட்பட்டது. முதலாவதாக, போர் முடிவுற்றதனால் பாதுகாப்புப் பிரச்சனைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அதிகமான கவலையை கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டை பிரித்தானிய உள்துறை பணியகம் எடுத்துக் கொண்டது. ஆனால் இக்காலத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பானசாட்சியங்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2011 இல் சனல் 4 தனது முதலாவது விவரணத்தை வெளியிட்டது. ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் அறிக்கையும் இக்காலத்தில் வெளியிடப்பட்டது.

இந்தத் தருணத்தில் இவ்வியடத்தில் அக்கறை கொண்ட ஒரு மூன்றாவது தரப்பாக, பல இலக்குகளுடன், இனப்படுகொலைக்கு எதிரானதமிழரமைப்பு (TAG) தலையீடு செய்தது. எமதுஇலக்குகளில் ஒன்று தீர்ப்பாயத்தை (tribunal) போர்க்குற்றங்கள் நடைபெற்றதனை ஏற்றுக்கொள்ள வைத்தல் – இவ்விடயத்தில் எமது இலக்கு நிறைவேறியது. இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட இரண்டு வகையான மக்களுக்கு, 1- சாட்சியாளர்கள், 2- சிறிலங்கா அரசிற்குஎதிராகச் செயற்பட்ட அரசியற் செயற்பாட்டாளர்கள், குறிப்பாக சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச்சட்ட மூலத்தினை எதிர்த்தவர்களும், தனியரசினை ஆதரித்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வாதிடுதல்.

இராஜபக்ச லண்டனுக்கு வருகை தந்தபோது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான மற்றைய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியிருந்தோம். சிறிலங்காஅரசாங்கம் தமக்கு எதிராகச் செயற்படும் புலம்பெயர்ந்தவர்கள் மீது கடும் எதிர்ப்பினை காட்டி வருகிறது. ஆகையால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனகீழ் நீதி மன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில் நாம் வாதாடி வெற்றி பெற்றிருந்தோம். இவ்வெற்றியினை முன்வைத்தே எம்மால் இத்தகைய கோரிக்கைளை முன்வைக்க முடிந்தது. கீழ் நீதி மன்றங்களில் நாம் பெற்ற வெற்றியை முன்வைத்து எதிர்காலத்தில் இவ்வாறானவழக்குகளில் தீர்மானம் எடுக்கக்கூடிய வகையிலான ஒரு நிலைப்பாட்டை உருவாக்க முனைகிறோம்.

2014ம் ஆண்டில் புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புகளை சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்வதாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, 2013 இல், புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியல் ரீதியாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுபவர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பினைக்காட்டி வருகிறது என்பதனை நிறுவுவதில் நாம் வெற்றி பெற்றிருந்தோம்.