பிறக்கிறது துன்முகி! (கலியுகம் 5118)

233

வருகிற சித்திரை முதலாம் திகதி துன்முகி ஆண்டு பிறக்கிறது. மாதத்தின் முதலாம் திகதிதான் ஆண்டுப்பிறப்பு என்பது ஒரு மாறாத,திடமான கூற்று. சித்திரை முதலாம் திகதி எப்போ என்பதில் எமக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் சில குழப்பவாதிகள். நாட்காட்டிகளைப் பாருங்கள். சிலவற்றில் ஏப்ரல் 13ம்திகதி புதன் கிழமையை சித்திரை ஒன்று என்கிறார்கள். சிலவற்றில் ஏப்ரல் 14ம் திகதி வியாழக்கிழமையை சித்திரை ஒன்று என்கிறார்கள்.தமிழில் ஒரு பழமொழி உள்ளது. கையாலாகாதவன் பெண்டாட்டி…… வைப்பாட்டி என்று. அந்தளவுக்கு எமது ஆண்டுப்பிறப்பை நிர்ணயிக்க முடியாதளவு கையாலாகாத நிலையிலா உள்ளது எமது பாரம்பரியம். ஆண்டு என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம் பின் நிதார்த்தமாகச் சிந்தித்து, எதிர்காலத்தில் இப்படியான சீர்கேடு ஏற்படுத்து பவர்களை விரட்ட வேண்டுமா இல்லையா என்பதை நீங்களே முடிவெடுங்கள்.

உலகில் ஆண்டுகள் பலவகை இருந்தாலும் சந்திரனின் சுற்றுக்களை மையமாக வைத்து கணிக்கப்படும் சந்திர ஆண்டு ஒன்றைத் தவிரமற்றைய எல்லா ஆண்டுகளும் பருவ காலங்களுக்கு ஒப்பவே கணிக்கப் படுகின்றன. எங்கள்ஆண்டை நாங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னாலும் அதை விண்மீன் சம்பந்த ஆண்டுஎன்று (வேதசோதிட ஆண்டு என்றும் அழைப்புதுண்டு) அழைப்பதே சிறந்த முறையாகும். உண்மையில் கதிரவனைத்தான் பூமி வலம்வருகிறது. எங்கள் கண்களுக்கோ கதிரவன்தான் பூமியைச் சுற்றுவதுபோல் தென்படுகிறான். புவியின் நடுக்கோட்டுக்கு அண்மையில் வாழ்ந்த எமக்கு, எமது தலைக்கு மேலே உள்ள வான் வட்டத்தில், (வட்டம் என்றாலே 360 பாகை என்பதை நாம் மறக்கக் கூடாது) அதன் ஒரு புள்ளியிலிருந்து தன் பயணத்தை தொடங்கும் கதிரவன் மாதம் 30 பாகையாக ஒரு ஆண்டில் 360 பாகையை அல்லது ஒரு வட்டத்தைச் சுற்றி புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வந்தடைகிறான். இதுவே ஒரு தமிழ் ஆண்டு. வானில்உள்ள புள்ளிகளை மையமாக வைத்துக் கணிக்கப் படுவதாற்றான் இதற்கு விண்மீன் சம்பந்த ஆண்டு என்ற பெயர் வந்தது.

கதிரவன் கிழக்கே தோன்றி மேற்கே மறைவதை நாளாந்தம் நாம் காண்கிறோம். ஆனால்அவன் ஒவ்வொரு மாதமும் ராசிகள் ஊடாக 30 பாகை கிழக்கு நோக்கி வருவதை பலர் தெரியாதவர்களாக உள்ளனர். இதைக் காண விரும்புவர்கள் ஒரு நாளில் கதிரவன் மறைந்ததும் 30 பாகை உயரத்தில் உள்ள நட்சத்திரங்களை அவதானித்து வையுங்கள். ஏன் முப்பது பாகை உயரத்தில் என்று கூறுகின்றேன் என்றால் அடிவானம் தெளிவாகத் தெரியாது. 30 பாகையில் உள்ள நட்சத்திரங்களை அவதானிப்பது எளிதாக இருக்கும். அதேபோல் ஒரு மாதம் கழித்து கதிரவன் மறைந்ததும் அதே 30 பாகையில் வானத்தைப் பார்ப்பீர்களானால் கதிரவன் 30 பாகை கிழக்கு நோக்கி நகாந்த காரணத்தினால் அடுத்த ராசியின் நட்சத்திரங்களே உங்கள் கண்களுக்குத் தெரியும். இப்படித் தொடர்ந்து பார்த்து வந்தால் ஒவ்Öவாரு ராசியிலும் உள்ள நட்சத்திரங்கள் உங்களுக்கு வாய்பாடமாக வந்துவிடும். எடுத்துக்காட்டிற்து பஞ்சாங்கம் பார்க்காமலே சந்திரன் நிற்கும் ராசியைப் பார்த்து அன்றைய நட்சத்திரம் என்னவென்று என்னால் கூற முடியும்.

ஒவ்வொரு 30 பாகையும் ஒவ்வொரு ராசியாக வகுக்கப் பட்டுள்ளது. 12 ராசிகள் உள்ளன.0 பாகையிலிருந்து 30 பாகை வரையுள்ள பகுதியை மேட ராசி என்றும் 30 பாகையிலிருந்து 60 பாகை வரை உள்ள பகுதியை இடப ராசி என்றும்மிகுதி உள்ள 10 பகுதிகளையும் முறையே மிதுனம்(60-90), கற்கடகம் (90-120), சிங்கம் (120-150) கன்னி 150-180) துலாம் (180-210) விருட்சிகம் (210-240) தனு (240-270) மகரம் (270-300) கும்பம் (300-330) மீனம் (330-360) என்றும் வகுத்துள்ளார்கள். சைபர் பாகையும் 360 பாகையும் ஒன்று என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. இந்தப் 12 ராசிகளுள் ஒவ்வொரு ராசிக்குள்ளும் இரண்டேகால் நட்சத்திரங்கள் என்ற ரீதியில் 27 நட்சத்திரங்கÛளையும் அடக்கியுள்ளார்கள். அச்சுவி, பரணி, கார்த்திகையின் முதல்பாதம் மேட ராசிக்குள் என்றால் கார்த்திகையின் 3 பாதங்களும் ரோகினி மிருகசீரிடத்தின் இரண்டுபாதம் இடப ராசிக்குள். இதுதான் நட்சத்திரங்கள் ராசிகளுள் அடங்கும் ஒழுங்கு.

இந்த 12 ராசிகளுமே நிரந்தரமாக வானில் வரையப்பட்ட புள்ளிகள் என்பதிலும் பார்க்ககோடுகள் என்பதே தகுந்த பதம். 360 பாகையையும் சைபர் பாகையையும் தொடுக்கும் கோடுதான் மேட ராசியின் தொடக்கம். இந்தக் கோட்டை கதிரவன் கடக்கும் நேரம்தான் மேட சங்கிராந்தி. இதையே நாம் சித்திரைப் புத்தாண்டின் பிறப்பு என்கின்றோம். 12 ராசிகள் உள்ளதால் ஆண்டில் 12 சங்கிராந்திகள் நிகழ்ந்தே ஆகவேண்டும். எடுத்துக் காட்டிற்கு மகர சங்கிராந்திதான் தை பிறக்கும் நாள், இதனால்கேரளத்தில் அனேக மாவட்டங்களில் தைப்பொங்கல் என்று அழையாது மகரப் பொங்கல் என்றே அழைக்கிறார்கள். கற்கடக சங்கிராந்திதான் ஆடிப்பிறப்பு. ஒரே ஆண்டில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு ஆடிக்கூழ் குடித்த அனுபவம்கூட இங்கு வந்த பின்பு எனக்கு ஏற்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு முக்கிய விடயத்தை வாசகர்கள் கவனத்திற்கு கொண்வர வேண்டி உள்ளது. சங்கிராந்தி நிகழ்ந்ததும் பாய்ந்தடித்துக்கொண்டு அன்றைய நாளை ஆண்டுப் பிறப்பாக அறிவிக்கும் பாரம்பரியம் இருந்ததில்லை. இந்திய இலங்கை நேரப்படி கதிரவன் மறைவதற்கு முன்பு சங்கிராந்தி நிகழ்ந்தால் மட்டும் அன்றையநாள் ஆண்டுப்பிறப்பாக அறிவிக்கப் படும். கதிரவன் மறைந்தபின்பு சங்கிராந்தி நிகழ்ந்தால் மறுநாள்தான் ஆண்டுப்பிறப்பாக அறிவிக்கப்படும். தேவையை ஒட்டி இந்த ஆண்டு ஏப்ரல் 13 இரவு புதன்கிழமை நிகழ்ந்தது மேட சங்கிராந்தி. ஏப்ரல் 14 வியாழக்கிழமை தான் ஆண்டு பிறப்பு.

இப்பொழுது இங்கிருந்து கொண்டு சிலர் அங்கு சங்கிராந்தி என்று அறிவித்த நேரத்திலிருந்து ஐந்தரை மணி நேரத்தைக் கழித்து விட்டு அங்கு பொழுது மறைந்து விட்டதால் நாளை ஆண்டுப்பிறப்பு, இங்கு இன்னும் பொழுது மறையாததால் இன்று ஆண்டுப் பிறப்பு என்கிறார்கள். இதைப் பச்சையாகச் சொல்வதானால் அங்கு நாளை முதலாம் திகதி. இங்கு இன்று முதலாம் திகதி என்கிறார்கள். ஒரு ஆண்டின் முதலாம் திகதியுடன் விளையாடுகின்றோம் என்பதைத் தெரிந்துதான் செய்கிறார்களோ அல்லது அறியாமையால் செய்கிறார்களோ என்று புரியவில்லை. கணிக்கும் திறன் கொண்டவர்களாக இவர்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சில மணி நேரங்களைக் கழிக்கத்தெரிந்தால் போதும். நேர வித்தியாசத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து பெயர்வாங்கும்நோக்கில் இப்படி ஒரு விளையாட்டை விளையாடலாம். பிறக்கும் புத்தாண்டையே, நாங்கள் ஏமாளிகளாக இருந்தால் கனடாவுக்கும் ஐரோப்பாவிற்கும் ஒருநாள் இந்தியா இலங்கைக்கு மறுநாள் என்று அறிவித்து பித்தலாட்டம் செய்யலாம். ஒரு நாட்டில் ஒரு நாளும் மறு நாட்டில்மறு நாளும் மாதப் பிறப்பென்று அறிவிப்பது முட்டாள்தனம் மட்டும் அல்ல தமிழ்ப் புத்தாண்டின் மகத்துவத்தைக் குறைக்கும் செயலுமாகும். அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்றால்,அதற்கு எடுபடும் நாங்கள்தான் முட்டாள்கள்.

அவர்கள் கடும் போக்கை நாங்களும் சில நிகழ்வுகளில் ஏற்கின்றோம். எடுத்துக்காட்டிற்கு தைப் பூசம், மறு நாள் கொண்டாடினால் அதுதை மகமாக இருக்குமே அன்றி பூசமாக இருக்காது. அமவாசை மறுநாள் பிரதமையாகிவிடும்.ஆகையால் (ஐந்து அங்கம்) பஞ்சாங்கத்தின் திதி, நட்சத்திரம், ராசி, யோகம், கரணம் ஆகியவற்றில் அவர்கள் கணிப்பு நுணுக்கங்களைக் காட்டலாம். ராசியில் ஒருநாளை எளிதாக விட்டுக் கொடுக்கலாம். காரணம் ஓரு முழு மாதம்கதிரவன் அந்த ராசியில்தானே நிற்கப் போகின்றான். புத்தாண்டு தைப்பொங்கல் ஆடிப்பிறப்பு ஆகிய பண்டிகைகளைப் பொறுத்த மட்டில் அவர்களை நாங்கள் நம்பியுள்ளோம் என்ற ஒரே காரணத்தை வைத்து எம்மை ஏமாற்றக் கூடாது. மறுநாள் ஆண்டுப் பிறப்பு அறிவிக்கும் முறை ஒன்றும் புதிதல்ல. சித்திரை 1ம் திகதி எமது ஆண்டின் தொடக்க நாள். அது எப்படி இடத்திற்கிடம் மாறுபட முடியும் தைப் பொங்கல் ஒரு தமிழர் திருநாள். கண்டத்துக்கு கண்டம் திகதி மாறுவது அறிவிப்பவர்களுக்கே ஒரு சீர்கேடாகப் படவில்லையென்று அவர்கள் நெஞ்சில் கைவைத்துக் கூறட்டும்.

இஸ்லாமியரின் புத்தாண்டைப் பாருங்கள். பருவ காலங்களுக்கு ஒப்ப அவர்கள் ஆண்டு ஓடுவதில்லை. சந்திர ஆண்டாக அது இருந்தாலும் அதை எவ்வளவு சீராக உலகம் முழுவதற்கும் ஒரே நாளாக இருக்க சீர் செய்கிறார்கள்.மெக்காவில் எப்போ பிறை தெரிகிறதோ, அந்நாளை மையமாக வைத்துத்தான் ஆண்டுப்பிறப்பு முடிவு செய்யப்படுகிறது. ஏன் ஆங்கில ஆண்டும் ஒரே திகதியின் அந்த அந்த இடத்தின் இரவு 12 மணிக்குத் தொடங்குவதாகத்தானே அறிவிக்கிறார்கள். நாங்களும் இலங்கை இந்தியா எடுக்கும் முடிவை வைத்தே மாதங்களின் முதலாம் திகதியை முடிவு செய்ய வேண்டும். தேவையென்றால் சங்கிராந்தி நிகழும் நேரத்தில் கோயில்களில் ஆராதனைக்கு ஏற்பாடு செய்யலாம். மாதப் பிறப்பின் நாளை மாற்றி எங்கள் ஆண்டின் மகத்துவத்தைக் குறைப்பதை அனுமதிக்க முடியாது.

தமிழ் ஆண்டும் அதன் மாதங்களும் எங்கள்உள்ளங்களில் மதிப்புடன் ஏற்றுக் கொள்ளப் பட்டவை. தமிழீழத்தின் தேசியப் பூவாம் கார்த்திகைப் பூ என்றதும் கார்த்திகை மாதம்தானே எங்கள் கண்முன் வருகின்றது. புரட்டாதிச் சனி, ஐப்பசி வெள்ளி ஆகியவை புனித நாட்களாக எத்தனை உள்ளங்களில் பதிந்துள்ளது. மார்கழி மாதம் என்றால் பலரின் ஞாபகத்தில் வருவது திருவெண்பாவைதானே.

நவம்பர் மாதத்தை சிலர் கார்த்திகை என்கிறார்கள். இதுவும் திருத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. இதுபோல் ஆங்கிலப் புத்தாண்டை சிலர்தை முதலாம் திகதி என்று கூறும்போது, முட்டாள்களே எங்கள் உள்ளங்களில் நாங்கள் ஏற்றி வைத்திருக்கும் உழவர் திருநாளாம் தைப் பொங்கலை தை எத்தனையாம் திகதி என்று சொல்லப் போகின்றீர்கள் என்று கேட்கத் தோன்றும்.

[author title=”எழுதியது” image=”http://orupaper.com/wp-content/uploads/2016/01/uncle.png”] மாசிலாமணி
ஒருபேப்பருக்காக[/author]