புறநானூற்றின் புதிய வேதம்

166

நேரம் நடுஇரவை நெருங்கிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் வல்வைவெளியூடாக வடமராட்சி நோக்கிச் செல்லுகின்ற நீண்ட சாலையில் இரண்டு வண்டிகள் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு வேகமாய் விரைந்து கொண்டிருக்கின்றன. முன்னால்போய்க் கொண்டிருந்த வண்டி சற்றும் வழிவிட்டுக் கொடுக்காமல் வாயு வேகத்தில் பறந்துகொண்டிருந்தது. பின்னால் போய்க் கொண்டிருந்த வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்களிடையே சின்னதாய் ஒரு பதட்டம். தலைவன் பயணம் செய்து கொண்டிருந்த வண்டிஅது என்பதால், பாதுகாப்பு பேணப்பட வேண்டிய அவசியம் அந்த மெய்ப் பாதுகாவலர்களுக்கு. விலகி வழி விடச் சொல்லும் ஒலி சமிக்ஞை (ஹோன்) செய்தபடியே போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால், விலகி வழிவிடும் நோக்கம், முன்னால் சென்று கொண்டிருந்தவனிடம் சற்றேனும் இருந்ததாய்த் தெரியவில்லை. காற்றாய் அல்ல. புயலெனச் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது அந்த வண்டி.
தலைவனுக்கோ ஆச்சரியம்.

முன்னால் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவன் விலகி வழிவிட்டுக் கொடுக்கவில்லை என்பதனாலல்ல. லாகவமாக – நிதானமாக -அத்தனை வேகத்திலும் அணுவளவும் தடம்பிசகாமல் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்த திறமை மிக்க அந்த ஓட்டுநர் யாராக இருக்கும் என்று மனசுக்குள் தோன்றிய கேள்வியில் பிறந்த ஆச்சரியம் அது.
அந்த வண்டியை ஓட்டிச் சென்றவன் ஒரு போராளி என்பது சில துÖரம் கடந்த பின், சற்று நேரத்தில் தெரியவருகிறது.
முதல் முதலாய் அன்று அவன் தலைவனுக்கு அறிமுகமாகிறான்.

யாரை நேரில் காண வேண்டும். உரையாட வேண்டும். என்றெல்லாம் அவன் ஏங்கிக் கிடந்தானோ அந்த ஒப்பற்ற தலைவனை முன்னால் கண்டபோது அந்தப் போராளியின் நெஞ்சுக் கூட்டுக்குள் மகிழ்ச்சியின் வண்ணத்துப் பூச்சிகள் படபடவெனச் சிறகடித்தன.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் அதியுயர் பரிமாணமாய் எழுந்த கரும்புலி எனும் வடிவத்தின் முதல் உயிராயுதம் என்ற பெருமை பின்னாளில் தனக்குக் கிடைக்க இருந்ததை அன்று அந்தப் பொழுதில் அந்தப் போராளி அறிந்தானில்லை.

அவன் தான் மில்லர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல்கரும்புலித் தாக்குதல் திட்டமிடப்படுகிறது. முதல் கரும்புலியாக வெடி மருந்தேற்றிய வாகனத்தை ஓட்டிச் செல்வது யார் என்பதைமுடிவு செய்வதற்காக, திறமை மிகுந்த இதற்கெனவே சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலொன்று தலைவனுடைய பரிசீலனைக்கு வருகிறது.

அன்றொருநாள், வல்வை வெளியின் வீதியில், தங்களுடைய வண்டிக்கு வழிவிடாமல் நிதானமாய் அதிவேகத்திலும் தடம் பிசகாமல் சென்ற அந்த வண்டியை ஓட்டியவனுடைய பெயர் தலைவன் நினைவில் நிழலாட,
அந்தப் போராளியே இந்தப் பணிக்கு மிகப் பொருத்தமானவனாக இருக்கமுடியும் என்ற தீர்மானம் மனசுக்குள் அரங்கேறுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கரும்புலியாகச் செல்வதற்கு, தலைவரால் தெரிவு செய்யப்பட்ட பெயர் `மில்லர்` என்ற செய்தி குறிப்பிட்ட சில கரும்புலிப் போராளிகளுக்கு மட்டும் தெரியவருகிறது.

சந்தோஷ மிகுதியால் துள்ளிக் குதித்த மில்லரை கட்டிக் கொண்டு அவர்கள் கூத்தாடுகிறார்கள். ஏமாற்றம் இருந்த போதும், அவர்களிடம் துளிகூட பொறாமை இருக்கவில்லை. தாயகம் என்ற ஒரே இலட்சியத்துடன் ஒன்றிணைந்த வீரர்கள் அல்லவா அவர்கள்?

தான் பிறந்த பயனையே பெற்றுவிட்டதாக மில்லர் பெரு மகிழ்ச்சி பெற்றான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றிப்பாதையில் புதியதொரு மைல் கல்லைத் தாண்டுவதற்கு அந்த முதற்கரும்புலி தயாராகிவிட்டான்.
…பாசத் தலைவனுடான கடைசிச் சந்திப்பு.. நண்பர்களிடம் விடைபெறுதல்…. யாவும் நிறைவேறின…

யூலை 05. 1987

வெடி மருந்தேற்றிய வாகனம் மில்லர் என்ற கரும்புலியைச் சுமந்து செல்லத் தயாராகி விட்டது.

இன்னும் சில நிமிடங்களில் அவனுடைய லட்சியப் பயணம் ஆரம்பமாகிவிடும். தமிழனுடைய நிகரில்லா வீரத்தின் சரித்திரத்தைப் பதிவுசெய்ய வரலாற்றின் எழுதுகோல் தயாராகிவிட்டது.
அந்தக் கரும்புலியின் நினைவுத்திரையில் அவனுடைய அம்மா நிழற்படமாய்த் தெரிகிறதா?

` என்னருமை அம்மா.. மகன் என்ற இனிய பாசத்தை நெஞ்சிலே நிறைத்து, வறுமையின் கொடிய பாரத்தை உங்கள் தலையிலே சுமந்து என்னை வளர்தெடுத்த உங்களுக்காக எதையுமே செய்யாமல் போறனம்மா.. ஆனா.. உங்களைப் போல இன்னும் ஆயிரமாயிரம் அம்மாக்களின்ரை துன்பம் துடைக்கிற மருந்தாகத் தான்இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறன்..
.. எதிரி முகாமொன்றை உங்கடை பிள்ளை தனியொருவனாய்ப் போய்த் தாக்கியழிச்சான் என்ற சேதி நாளைக்கு உங்களைத் தேடி வரும்.எங்கடை விடுதலை வரலாற்றிலை முதல் கரும்புலி வீரனைப் பெத்த தாய் என்ட பெருமை உங்களுக்கு உண்டு. `என்ர பிள்ளை எனக்கு ஒண்டுமே சொல்லாமப் போட்டானே` எண்டு இனி நீங்கள் கவலைப்படமாட்டீங்கள் தானே ? …
`இனி வரும் பிறவிகளிலும் உங்கடை மகனாகவே பிறக்கிற வரத்தை எனக்குத் தாருங்கள் தாயே

மாலை மயங்கிய நேரம்..

புறநானுÖற்று வீரத்தின் புதிய வேதம் சொல்வதற்காக அதோ அந்தக் கரும்புலி புறப்பட்டுவிட்டான்.

யாழ்.நெல்லியடி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட சிங்கள இராணுவ முகாம் அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது. இன்னும் சில மணித்துளிகளில் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று அங்கே நிகழ இருப்பதை அறியாமல்….

வெடி மருந்து நிரப்பிய வண்டி புறப்படுகிறது.

ஓட்டுநர் இருக்கையில் மில்லர்.

கையசைத்து விடை கொடுத்த தோழர்களின் விழியோரங்களில் ஈரம்.

இன்னும் சில நேரத்தில் அவர்களுடைய உயிர்த்தோழன் இல்லாமல் போய்விடுவான்.

அப்பொழுது தான் யாரும், எதிர்பார்க்காமல் தோழன் ஒருவன் மில்லருக்கு அருகிலிருந்த இருக்கையில் ஏறி அமர்ந்து கொள்கிறான். எல்லோரும் திடுக்கிடுகிறார்கள்.
“ஒரு கொஞ்ச துÖரம் மட்டும் நானும் உங்களோடை வாறன்” என்று மன்றாடுவது போல தன்னிடம் கேட்ட உயிர் நண்பனைப் பாசம் பொங்கப் பார்த்த அந்தக் கரும்புலி தன் பார்வையாலேயே சம்மதம் தெரிவிக்கிறான்.

நிதானமாய்ப் பயணித்த வண்டி சில துÖரம் கடந்த பின் சற்றே மெதுவாகி நிற்க அருகிலிருந்த தோழன் இறங்கிக் கொள்கிறான். தனது சட்டைப் பையை துழாவிய மில்லர் அதிலிருந்த ஒன்றிரண்டு சில்லறை நாணயங்களை எடுத்து தோழனுடைய உள்ளங்கையில் வைக்கிறான்.

`என்ரை ஞாபகமாய்’

இறுதி நேரத்துப் பிரியாவிடை சொல்லி இரண்டு கைகள் இறுகப் பற்றிக் கொள்கின்றன. ஒரு விநாடி மட்டுமே.

அடுத்த விநாடி வேகமெடுக்கிறது வண்டி. சூறாவளி போன்றதொரு அசாதாரண வேகம்.

எதிரி சற்றும் எதிர்பார்த்திராத ஒரு கணப்பொழுதில் நெல்லியடி இராணுவ முகாம் காவலரண்களையும் தடைகளையும் தகர்த்தெறிந்த மின்னலாய் உட்புகுந்து பெரியதொரு இடிமுழக்கத்தை பிரசவித்து வெடித்துச் சிதறுகிறது வெடிமருந்தேற்றிய வாகனம். கூடவே தமிழீழ விடுதலை வரலாற்றின் முதற் கரும்புலி இராணுவம்.

ஏறக்குறைய 300 சிங்கள இராணுவத்தினரை அழித்தொழித்த அந்தத் தாக்குதல், சிங்கள அரச யந்திரத்தின் வல்லாதிக்க இறுமாப்பின் மீது மரண அடியாய் விழுந்தது.
காற்றோடு காற்றாய்க் கலந்து, ஒவ்வொரு தமிழனுடைய மூச்சுக் காற்றினதும் உயிராகிஇன்றும் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மில்லர் என்ற முதற்கரும்புலி வீரன்.
(வெடி மருந்தேற்றிய வாகனத்தில் மில்லரோடு சில துÖரம் வரை சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பவர் அஹ்ம்சைப் போரில் உயிர் நீத்த தியாகி திலீபன்)