புலம்பெயர் தமிழ் அரசியல், இனி ..

1337

தாயகத்தில் போராட்டம் மௌனிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில், ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தில் முக்கிய சக்தியாக அடையாளங் காணப்பட்டுள்ள புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகவுள்ளது. இப்பத்தியில் பதியப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகளே அன்றி ஒரு முழுமையான ஆய்வின் வெளிப்பாடு அல்ல. ஆகவே விடுபட்டுப்போன சில விடயங்களும் இருக்கலாம். எனினும் இக்கருத்துகள் ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இட்டுச் செல்லுமானால் அதுவே இக்கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமையும்.

புலம்பெயர் அரசியல் நடவடிக்கைள் இரண்டு தளத்தில் நடைபெறுபவை. ஒன்று அகச்செயற்பாடுகளாகவும், மற்றயவை புறத்தில் உள்ள அரசியல் சூழ்நிலைகளைப்புரிந்து கொண்டு, வெளிச்சக்திகளுடன் இணைந்தும், முரண்பட்டும் நடாத்தப்படும் செயற்பாடுகள்.புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் நாடுகள் மட்டத்திலும், நாடுகடந்தும் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அகச் செயற்பாடுகளாகவும், மற்றயவை புறச் செயற்பாடுகளாகவும் உள்ளன. புலம்பெயர் வாழ்வியல், எமக்கெல்லாம் இரண்டு உலகங்களில் வாழும் நிலையை கொடுத்திருப்பதால், இத்தகைய இரட்டைச் செயற்பாடுகள் தவிர்க்க முடியாதவை.

தேசிய நினைவெழுச்சி நாளிலிருந்து, சாதாரண (தமிழ்) புத்தக வெளியீட்டு விழாக்கள், தமிழ்ப்பாடசாலைகள், கோவில்கள், ஊர்ச்சங்கங்கள் என்பன இந்த அகச்செயற்பாடுகளில் அடங்குகின்றன. இவ்விடயத்தில் மைய அரசியலின் தலையீடு அல்லது ஈடுபாடு குறைந்திருப்பதால், இவை உபகலாச்சாரம் ((sub culture) என்ற வகைக்குள் அடக்கப்பட்டு விடுகின்றன.

அலைந்துழல்வுச் சமூகங்களின் எல்லாச் செயற்பாடுகளிலும் அரசியல் கலந்திருப்பதும், அவை தமது தாயகபூமியை மையப்படுத்தியிருப்பதும் தவிர்க்க முடியாதவை. இதில் உள்ள ஆபத்து என்னவெனில், இவ்விடயங்களில் முழுமையாக ஈடுபடுவர்கள், மையக் கலாச்சாரத்திலிருந்து விலகி, மாயையான தனித்தீவில் வாழ்வதுபோன்ற இயங்க ஆரம்பித்துவிடுவார்கள். பல்லின மக்கள் வாழும் நாடுகளில், குறித்த இனத்தினர் செறிவாக வாழும் சிறுபிரதேசங்களில் (ghetto) இத்தகைய நிலமை காணப்படுகிறது. புலம்பெயர் தமிழ் அரசியலிலும் இத்தகைய சிந்தனைப்போக்கு வளர்ந்து வருதை அவதானிக்க முடிகிறது. மாவீர்நாளை கொண்டாடுவது தொடர்பில் எழுந்த மோதல்கள், அதனைப் பிரதிபலித்த அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் ஆகியவை இதனை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்நிலையானது புலம்பெயர் அரசியலின் அதன் தளம்சார்ந்த வலுநிலையை மழுங்கடிக்கச் செய்வதாக அமைகிறது. இது சர்வதேச அரசியல் மட்டத்தில் செயற்படவேண்டிய அரசியல் செயற்பாட்டளார்களின் கவனத்தை திசை திருப்பிவிடுகிறது.

மைய அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமேயானால், அதன் செயற்பாடுகளினைத் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயற்படவேண்டும். மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை, அவற்றின் சிறிலங்கா தொடர்பான தலையீடுகள், பொதுவாக வெளிநாட்டு அபிவிருத்தி என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளுடன் ஏற்படுத்தப்படும் உறவுகளுக்கு ஒத்தவை, இருப்பினும் சிறிலங்காவில் விடயத்தில், அங்கு நடைபெற்ற யுத்தம், அதன் ஆட்சியாளர்கள், பிராந்திய அரசியல் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. பொதுவில் மூன்று விடயங்களில் மேற்கு நாடுகள் செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றன. அவையாவன:

  • மனிதாபிமான உதவிகள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அபிவிருத்தி நிதி உதவி
  •  மனிதவுரிமைகளைப் பாதுகாத்தல்
  •  இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்

“தாரண்மைவாத அமைதி முயற்சி” (Liberal Peace) என்ற அடிப்படையிலேயே மேற்கு நாடுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளபோதிலும், இவை நீதியான நடவடிக்கைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக, வர்த்தக நலன், கேந்திர முக்கியத்துவம், பிராந்திய அரசியல் சூழ்நிலை ஆகியவை காணப்படுகின்றன. இருப்பினும் புலம்பெயர் தமிழ் அரசியல் மேற்கின் அணுகுமுறையைச்சார்ந்து செயற்பட வேண்டியுள்ளது. தாயகத்தில் விடுதலைப்புலிகளின் நடைமுறை அரசு இருந்த காலத்திலும், இதே அணுகுமுறையையே மேற்கு நாடுகள் கடைப்பிடித்தனவாயினும், அப்போது எங்கள் முன் வேறு தெரிவுகள் காணப்பட்டன. இன்னொருவிதத்தில் சொல்வதாயின் பல இடங்களில் இவ்வணுகுமுறையுடன் முரண்படும் காரியங்களிலும் ஈடுபடவேண்டியிருந்தது. தற்போது அதற்கான வெளி அடைக்கப்பட்டுள்ள நிலையில், அலையோட்டத்துடன் எதிர்த்து நீச்சலடிப்பது இயலாத காரியமாகிவிட்டது.

மேற்குலகின் தாராண்மைவாத அமைதி முயற்சியுடன் சேர்ந்து பயணிப்பது என்பது, தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கைவிட்டு விட்டு, அதன் நலன் சாரந்து செயற்படுவது என்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. மாறாக இந்த வாகனத்தினை பயன்படுத்தி எமது பயணத்தை தொடர்வது என்ற அடிப்படையிலேயே நாம் செயற்படவேண்டியுள்ளது. தாயகம், தேசியம் தன்னாட்சி உரிமை என்ற எமது அரசியல் அபிலாசைகளினை மையப்படுத்தியே எமது செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மேற்குலகின் நடவடிக்கைகள் இலங்கைத்தீவில் நிரந்தர அமைதியை நிலைநாட்டி, அங்கு தம்முடன் இணங்கிச் செயற்படக் கூட்டிய “நல்லாட்சி” ஒன்றை ஏற்படுத்துவதே தவிர, அங்குள்ள தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்துவது அல்ல என்பதனை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். தேசிய இன முரண்பாடுகள் தீர்க்கப்படாமலேயே, அங்கு அமைதி நீடிக்குமானால் அந்நிலையானது மேற்குலகிற்கு ஏற்புடையது என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இங்கு எம்முடைய அரசியற்பணி, தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாமல் இலங்கைத் தீவில் நீதியான சமாதானம் நிலைக்க முடியாது என்பதனை உலக அபிப்பிராயமாக ஏற்றுக்கொள்ள வைப்பதே. இம்முயற்சிக்கு எதிராக செய்யப்படும் ஒவ்வொரு நகர்வுகளும் தடைகற்களாகவே நோக்கப்படவேண்டும். அவற்றுக்கு துணைபோகும் கைங்கரியங்களில் நாம் ஈடுபடமுடியாது.

இலங்கைத்தீவில் சிங்களவர்கள், தமிழர்கள் என தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதனை மறுத்து, சிறிலங்கா தேசியம் என்ற அடிப்படையில் “சிறிலங்கன் டயஸ்போறா” என்ற அடையாளத்திற்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் அலைந்துழல்வு (டயஸ்போறா) மக்களின் மத்தியில் இவ்வாறான எண்ணகருவை விதைப்பதில், International Alert, Royal Commonwealth Society போன்ற சில சர்வதேச அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு நாட்டு அமைப்புகளின் இந்த முயற்சிக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது முழு ஆதரவினையும் வழங்கி வருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன்), திரு. வரதகுமாரின் தமிழ் தகவல் நடுவம் (TIC), உலகத்தமிழர் பேரவையின் ஒரு பிரிவினர் (Concerned Peoples, Sri Lanka குழு) என்பனவும் இவ்விடயத்தில் உடன்படுவதாகத் தெரியவருகிறது. இவ்வாறு இவர்கள் மேற்கின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஏற்ப தம்மை மாற்றுகின்ற நெகிழ்ச்சித். தன்மையைக் கொண்டிருப்பதால், இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தூக்கி உயர்த்தும் நடவடிக்கைகளைக் காணக் கூடியதாக இருக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களவைகள், நாடுகடந்த அரசாங்கம் போன்ற சனநாயக வழிமுறைகளை பின்பற்ற முனைகிற அமைப்புகள் புறக்கணிக்கப்படுவதும், இவ்வமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் மறுக்கப்படுவதன் பின்னணியும் இதுவே.

திரு. வரதகுமாரின் தமிழ் தகவல் நடுவம் இவ்வார இறுதியில் “Peace, Security and development through Good Governance” என்ற தலைப்பில் சிறிலங்கா அரசியற்கட்சிகளின் இளம் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கு ஒன்றினை லண்டனில் நடாத்துகிறது. மேற்கின் அணுகுமுறையினை பின்பற்றுவதற்கு அப்பால், அதன் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்பவும் செயற்பட்டு தனது இருப்பை தக்கவைக்கவேண்டிய தேவை TIC க்கு இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆபத்துகளை உணர்நது கொள்ளவேண்டியது அவசியமானது. தாயக மக்களின் மனிதாபிமானத் தேவைகளை பூர்த்தி செய்ய முனைகிறோம் என்ற பெயரில், இனவழிப்பு சிறிலங்கா அரசாங்கத்துடன் நல்லிணக்கத்துடன் செயற்படும் மருத்துவர் ஆறுமுகம் புவிநாதனின் தமிழர் நலவாழ்வு அமைப்பு (THO) போன்றவையும் இதே அடிப்படையிலேயே இயங்குகின்றன.

இலங்கைத்தீவில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுவது ஒன்றும் எதிர்மறையான விடயமல்ல, ஆனால் அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்படுத்தப்படும் நல்லிணக்கம் போலியானது மட்டுமல்ல அது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்துவிடும். தேசியத் தலைமைக்காக மோதும் தரப்புகள் இதனை உணர்ந்து கொண்டால் சரி.