‘புலி நீக்க அரசியல்’ எனப்படுவது யாதெனில்…

888

தமிழ் மிதவாதிகளின், குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கொழும்புத் தலைமையின் தற்போதைய அரசியல் அணுகுமுறையினைப் பற்றிகருத்து வெளியிடும் சில (தமிழ்) அரசியல் விமர்சகர்கள் அல்லது பத்தி எழுத்தாளர்கள், அவர்கள்`புலி நீக்கம் செய்யப்பட்ட’ அரசியலை முன்னெடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆயுதரீதியான போராட்டத்தை முன்னெடுக்கிற வீரியமோ, அதற்கான விருப்போ கொண்டிராத அமைப்புகளால் புலி நீக்கம் செய்யப்பட்ட அரசியலைத்தான் கடைப்பிடிக்க முடியும் எனச் சிலர் வாதிடலாம். ஆனால் இங்கு புலிநீக்க அரசியல் எனக்குறிப்பிடப்படுவது என்ன என்பதனையிட்டு நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

கூட்டமைப்பினதும் அதன் புலம்பெயர் ஆதரவு அமைப்புகளினதும் தற்போதைய அணுகுமுறையை ஏற்றுக் கொள்பவர்கள், ” விடுதலைப்புலிகளின் அணுகுமுறையினை அல்லது செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத சர்வதேசம் போரில் சிறிலங்கா அரசாங்கத்தினை ஆதரித்தது. பாரிய மனித அவலத்தின் பின்னர், இப்போது அவர்கள் தமிழ்மக்களை அனுதாபத்துடன் அணுகுகிறார்கள். இந்நிலையில் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளை முன்வைத்து அரசியல் நடாத்தினால் அது அவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதாக அமையும்” எனஒரு விவரணத்தைச் சொல்லி முடிப்பார்கள் இவ்வாறு கூறுபவர்களில்களில் இரண்டு தரப்பினர்இருக்கிறார்கள். ஒரு தரப்பினர் விடுதலைப்புலிகள்அதிகாரத்தில் இருந்தபோது அவர்களை ஏற்றுக்கொள்ளவதாகப் பாசாங்கு செய்துகொண்டு, சமயம்கிடைக்கும்போதெல்லாம் விடுதலைப்புலிகளிற்குஎதிராகச் செயற்பட்டவர்கள்.

மற்றைய தரப்பினர் விடுதலைப் புலிகளையும்அவரது தியாகங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள்,ஆனால் இன்றைய சூழலில் தந்திரோபாயமாக நடந்து கொள்வேண்டும் எனக் கருதுபவர்கள்.இந்த இரண்டாவது தரப்பினர், தாம் தற்போதைக்குவிடுதலைப்புலிகளை எதிர்ப்பதாக அல்லதுஆதரிக்காதிருப்பதாக காட்டிக் கொள்கிறோம்எனக் கூறுகிறார்கள். தமது நடவடிக்கையினை `இராஜதந்திரம்’ என்று வேறு அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினரின் மத்தியில் கூட்டமைப்பின் தலைமைக்கு வரவேற்பும் ஆதரவும் உள்ளது. இன்னொருவிதத்தில்கூறுவதானால் இவர்களே கூட்டமைப்பின் ஆதரவுத்தளமாக உள்ளனர் எனலாம்.

இங்கு `புலி நீக்க’ அரசியல் என்பது வெறுமனே விடுதலைப்புலிகளைப் பிரதிபலிக்கும் அடையாளஅரசியலை துறப்பதா, அல்லது அவர்களது அரசியல் இலக்கினை மறுப்பதா என்ற குழப்ப நிலையிலிருந்துதான் இவ்விடயத்தினை அணுகவேண்டும். விடுதலைப்புலிகள் முன்னெடுத்தஆயுதப் போராட்டத்தை மறுதலிப்பது, அல்லதுமேற்குநாடுகள் ஏற்றுக்கொள்கிற ஜனநாயகமுறைப்படி நடக்க முற்படுவது என்பது வேறு,விடுதலைப்புலிகள் உறுதியாக இருந்த அவர்களதுஅரசியல் இலக்கிலிருந்து வழுவுவது என்பது வேறு.உண்மையில் `புலிநீக்க அரசியல்’ என்பது தமிழ்மக்களின் அரசியல் இலக்கினை மழுங்கடிப்புச்செய்வதனை நோக்காகக் கொண்டிருக்கிறது. இதனை சில தமிழ் அமைப்புகளின் நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன. ஆனால் இந்நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லி தமதுஅரசியல் எதிர்காலத்தை பாழடிக்க விரும்பாத காரணத்தால், இத்தரப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் ஒன்றையும், வெளித்தரப்பினர் முன் இன்னொன்றையும் பேசும் இரட்டை அணுகு முறையினை கடைப்பிடிக்கின்றனர்.

May_Day_Ranil_Sampanthan

ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும்பிரித்தானியா உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் இருபத்தியெட்டு நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை இன்னமுமிருக்கிறது. அது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

‘பயங்கரவாதத்தைக் கொண்டாடுதல்’ (glorification terrorism) என்ற அடிப்படையில் தடைசெய்யப்பட்டஇயக்கங்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதனைக் கூடத் தடைசெய்யும் இறுக்கமான சட்டங்கள் இந்த நாடுகளில் அமுலில் உள்ளன. தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டமைக்கு இவ்வியக்கங்களின் செயற்பாடுகளே காரணமாக இருந்தன எனக் கூறப்பட்டாலும், உண்மையில் அவர்களது அரசியல் இலக்குகளை இந்நாடுகள் ஏற்றுக்கொள்ளாமையே தடைக்கான காரணமாக இருக்கிறது. விடுதலைப்புலிகள் மீதான தடையினை சற்று உன்னிப்பாக அவதானித்தால் இதனை விளங்கிக் கொள்ள முடியும்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டமைக்கு வெளிப்படையாகச் சொல்லப்படுகிற காரணங்களாக சிறிவர்களை படையில் சேர்த்தமை, தற்கொலைப்போராளிகள், (ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட) அரசியல் தலைவர்களை கொலை செய்தமை, பொதுமக்கள் உட்பட ஆயுத மோதலில் ஈடுபடாவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை போன்ற விடயங்கள் கூறப்பட்டன. பொதுவில் சர்வதேச மனிதவுரிமை, மனிதாபிமானச் சட்டங்களை மீறும் எந்த அமைப்பையும் நாகரீகசமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஒடுக்கப்பட்டசமூகங்களிற்கும் அரச பயங்கரவாதத்தினை எதிர்கொள்வதில் ஆயுதவன்முறையே பாதுகாப்பைவழங்குகிறது என்பதனை தாராண்மைவாத ஜனநாயக வாதிகள் மட்டுமல்ல கியூபா போன்ற இடதுசாரி நாடுகளும் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறுஏற்றுக்கொள்ளவதும் ஏற்க மறுப்பதும், அரசியல்சித்தாந்தங்களின் அடிப்படையில் அல்லாமல்அவரவர் நலன் சார்ந்து அமைகிறது என்பதனையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

2010ம் ஆண்டு பெப்பிரவரியில் சர்வதேச முரண்பாடுகளுக்கான குழு (International Crisis Group) விடுத்த ‘The Sri Lankan Tamil Diaspora after the LTTE’ என்ற தலைப்பிலான அறிக்கையில், இலங்கைத் தீவில் போரின் முடிவிற்குப்பின்னர், தமிழ் அலைந்துழல்வுச் சமூகம் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை வரித்துக் கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. பயங்கரவாதப் பட்டியலில்விடுதலைப்புலிகளை இடுவதற்கு காரணமாகமுன்னர் குறிப்பிட்ட எந்தவொரு நடவடிக்கையையும் புலம் பெயர் தமிழர்கள் மேற்கொள்ளுவதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

மாறாகவட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியமை என தமிழீழக் கோட்பாட்டை முன்னிறுத்திய செயற்பாடுகளைக் காரணங்காட்டியே தமிழ் டயஸ்போறா விடுதலைப்புலிகள் போல் செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கத்தைய அரசுகளை தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்காக தமிழ் அலைந்துழல்வுச் சமூகத்தினர் மத்தியில் ஐனநாயகத்தையும்வெளிப்படைத்தன்மையையும் பேணும் வகையிலான புதிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் தமிழீழக் கோரிக்கையை முன்வைப்பதுஐனநாயக ரீதியானது என்ற போதிலும், இலங்கைத்தீவிலும் வெளியிலும் இதற்கு ஆதரவில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமது நலன்களுக்கு புறம்பான வகையிலான அரசியல் இலக்குகளை வைத்து செயற்படும் அமைப்புகளையும் அவற்றின் ஆதரவாளர்களையும் சட்டரீதியாக தடை செய்ய முடியாத நிலையில், வேறுவிதமாக அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பயங்கராவத தடைப்பட்டியல் உபயோகிக்கப்படுகிறது. மேற்கத்தைய மக்கள்மற்றும் அவர்களது பொருளாதார நிலைகள் மீதுவிடுதலைப்புலிகள் எவ்விதமான தாக்குதலை நடாத்தவோ, அல்லது அவற்றுக்கு அச்சுறுத்தலான வகையில் செயற்படவோ முயலவில்லை எனஇந்நாடுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.

மேற்கத்தைய அரசுகளின் கருத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த மேற்படி அறிக்கையினைப் போன்று, விடுதலைப்புலிகளின் வழியில்தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடக்க முயல்வதாக சிறிலங்கா அரசாங்கமும் குற்றம்சாட்டி வருகிறது.அவ்வப்போது, இந்திய அரசியல் விமர்சர்களிடமிருந்தும் இவ்வாறான கருத்துகள் வெளிவருவதுண்டு. சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ் மக்களிள் அடிப்படை அரசியல் அபிலாசைகள் பற்றி பேசும் எவரையும் விடுதலைப்புலிகளின் வழியில் செல்வதாக குறிப்பிடுவதில் மேற்கத்தைய தரப்பினருக்கும், இந்திய, சிறிலங்கா அதிகார மையங்களுக்குமிடையில் வேறுபாடுகளைக் காணமுடியாது. இதனடிப்படையில்தான் ‘புலி நீக்க’ அரசியலையிட்டு தமிழ் மக்கள் எச்சரிக்கை கொள்ளவேண்டியவர்களாக உள்ளனர்.

விடுதலை பெறும் வரை தமிழ்த் தேசிய அடையாளங்களை மறைத்து வைக்க வேண்டும் என்றுகோரிக்கைகள் சில தரப்பினரால் முன்வைக்கப்படும்போது, அதனை வெகு அப்பாவித்தனமான வேண்டுகோள் எனக் கருத முடியாதுள்ளது. மாறாக, இது ஈழத்தமிழர்களை தேசிய இனம்என்ற நிலையிலிருந்து சிறிலங்காவின் சிறுபான்மை மக்கள் என்ற நிலைக்கு தரமிறக்கும் உள்நோக்கம் கொண்ட அரசியல் நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை.