பெருமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தி பெருமையடைவோம்

1140

இலங்கையின் வரலாறு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான போர்களின் வரலாறே. அவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்ததுமில்லை! வாழப்போவதுமில்லை!! தமிழர்களின் ஆட்சியுரிமையைப் பறித்த அந்நியர்களிடமிருந்து ஆட்சியுரிமையைப் பிடுங்கிக் கொண்ட இன்னொரு அந்நியர்கள் தமிழர்களின் ஆட்சியுரிமையை தமிழர்களின் எதிரிகளிடம் மக்களாட்சி என்ற போர்வையில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் வாக்குரிமை முதலில் பறிக்கப்பட்டது. தமிழர்களின் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. தமிழர்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டது.

தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது தமிழர்கள் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம் அவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழர்களின் வாழ்வே கேள்விக்குறியான போது வட்டுக்கோட்டையில் கூடிய தமிழ் அரசியல்வாதிகள் இனி தமிழர்கள் தங்களுக்கு ஒரு தனிநாடு அமைப்பதுதான் ஒரேவழி எனத் தீர்மானித்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் என அதற்குப் பெயரும் இடப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதானவிவாதத்தின் போது படை அணி ஒன்றும்இல்லாமல் எப்படித் தனிநாடு அமைப்பது என்றகேள்வி வந்த போது இந்தியா பங்களாதேசத்திற்கு செய்தது போல் தமிழர்களுக்கும் செய்யும் என்று பதில் கூறப்பட்டது. அதே விவாதத்தில் தனிநாட்டிற்கான அந்நியச் செலவாணி எப்படிக் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பிய போது அமெரிக்காவிற்கு திருகோணாமலைத் துறைமுகத்தைக் குத்தகைக்கு விட்டு போதிய அந்நியச் செலவாணியைப் பெற்றுக் கொள்ளலாம் எனப் பதில் கூறப்பட்டது. பனிப் போர்க்காலத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இரு வேறு அணிகளில் இருந்து ஒன்றுடன் ஒன்று கடுமையாக முரண்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இப்படிச் சொன்னது அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளின் தூரநோக்கின்மையை தெளிவாகக் காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் நம்பிக்கை இழந்த நேரத்தில்தான் தமிழ் இளைஞர்கள் படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தைத் தொடங்கினர். எங்கட பெடியன்கள் என்பதுதான் இவர்களின் அப்போதைய அடையாளம்.

எங்கட பெடியன்களின் முதலாவது அறியப்பட்ட எதிரியாக இன்ஸ்பெக்டன் பஸ்த்தியாம் பிள்ளையும் அறியப்படாத எதிரியாக இந்தியாவும் அப்போது இருந்தனர். எங்கட பெடியன்களுக்கு இந்தியா அப்போது நீட்டிய வஞ்சனைக் கரம் அப்போது அவசியம் தேவைப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. மதிய உணவின் பின்னர் ஒரு துரோகியையோ அல்லது ஒரு காவற்துறை உளவாளியையோ போட்டுத் தள்ளி விட்டு இரவு உணவை அவர்கள் தமிழ்நாட்டில் உண்ணக் கூடிய வகையில் அப்போது நிலைமை இருந்தது. உதவி செய்வதாக பொய் கூறி வந்த இந்தியா எங்கட பெடியன்களிடை பலதரப்பட்ட குழுக்களை உருவாக்கியது.

அப்போது ஒவ்வொரு இயக்கமும் ஒரு படத்தின் பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. புளொட் இயக்கம் தற்போது தாக்குதல் எதுவும் செய்யக் கூடாது தக்க தருணம் வரும்வரை காத்திருக்க வேண்டும் எனச் சொன்ன படியால் அது `விடியும் வரை காத்திரு’ என்னும் படத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. ரெலோ இயக்கம் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தையும் பளையின் தொடரூந்தின் மீதும் தாக்குதல் நடத்தி விட்டுபின் ஒய்ந்துபோனதால் அது `தூறல் நின்று போச்சு’ என்றபடத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தாக்குதல்களைச் செய்து கொண்டிருந்த படியால்அது `அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின்பெயரால் அழைக்கப்பட்டது. ஓர் இயக்கம் சோற்றுப் பார்சல் இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.

1987இன் பின்னர் ஈரோஸ் இயக்கத்தின் ஒரு பிரிவினரைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒட்டுக்குழுக்களாக மாறிய பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் தீரத்துடன் போராடி பல இழப்புக்கள் பின்னடைவுகளை எல்லாம் சமாளித்து தமிழர்களுக்கு என்று ஒரு நிகழ்வு சார் அரசையும் அமைத்தனர். இறுதிவரை கொள்கை மாறாமல் போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே.
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் திகதி அமெரிக்க நிžயோர்க நகரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் உலக ஒழுங்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. தலிபான் இயக்கத்தை ஈரான் அமெரிக்காவிற்குக் காட்டிக்கொடுக்கக் கூடிய வகையில் நிலைமை மாறியது. விடுதலை இயக்கங்கள் பல பயங்கரவாத அமைப்புக்களாக முத்திரை குத்தப்பட்டன.

அரசு அல்லாத எந்த ஒரு அமைப்பிடமும் படைக்கலங்கள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை உலக நாடுகள் எடுத்தன. ஒருநாடு இன்னொரு நாட்டுக்கு எதிராக மட்டுமே போர்ப் பிரகடனம் செய்யலாம் என்ற ஐக்கியநாடுகள் சபையின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1368உம் 1373உம் மாற்றி ஒரு நாடு ஒரு அமைப்பிற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்யலாம் என்ற நிலை உருவானது. அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு எல்லா நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தது. இந்தச்சந்தர்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவும் இலங்கையும் தமக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கை செய்யும் தமிழீழ விடுதலைப் புலிகளைஒழிக்க மேற்கு நாடுகள் தமக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டன. இதனால் மேற்குலக வல்லரசு நாடுகளும் ஜப்பானும் தமிழீழ விடுதலைப் புலிகள் படைக் கலன்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தின. தமிழீழவிடுதலைப் புலிகள் மறுக்கவே. அவர்களின் நிதிமூலங்களையும் படைக்கல வழங்கல்களையும் பல நாடுகள் ஒன்று கூடி தேடித் தேடி அழித்தன.

எமக்காகப் போராடி எமக்காக உயிர் நீத்த மாவீரர்கள் இன்றும் பயங்கரவாதிகளாகவே பல உலக ஊடகங்களாலும் உலக அரசியல் விமர்சகர்களாலும் உலகத் தலைவர்களாலும் விமர்சிக்கப்படுகின்றனர். இவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். இவரகள் இரு அரசபயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய புனிதர்கள் என்பதை உலகின் ஒவ்வொரு மூலையிலும் எடுத்துச் சொல்ல வேண்டியது எமது தலையாய கடமையாகும். எமது புனிதர்களான மாவீரர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என எல்லோரையும் உணரச் செய்யும் வரை எமக்கு விடுதலை இல்லை. எம் மாவீரர்களைப் பெருமைப்படுத்தினால்தான் எமக்கு விடுதலையும் பெருமையும் கிடைக்கும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு தமிழர்கள் செய்யும் மரியாதை உன்னதமானது இது எமது கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது. புரதான காலத்து நடுகைக் கற்களே இதற்கு சிறந்த உதாரணம். எமது மாவிரர்கள் பயங்கரவாதிகள் என்று எவரது வாயில் இருந்தும் வாராமல் பார்த்துக் கொள்வதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் மரியாதையாகும்.