போயகலும் பொல்லாப் பொழுது..

  72

  [padding right=”10%” left=”10%”]

  விடுதலைப் போரென்னும் தீரமிகு
  போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்தோரே!
  மண் பட்ட வேதனையை மாற்றத் துடித்தெழுந்து
  புண்பட்டு மண்ணில் பூவாய் உதிர்ந்தோரே!
  நெஞ்சுருகி உங்கள் நினைவைச் சுமக்கின்றோம்
  அஞ்சாத நெஞ்சோடு அந்நியர் தமைத் துரத்த
  வெஞ்சமர்கள் செய்தீர் வெற்றி பல கண்டீர்
  ஆனாதலு மந்தோ! அடைந்த பல வெற்றியெல்லாம்
  போனதென்ன மண்ணாய் புகழழிந்து தோற்றதென்ன?

  எங்கள் சரித்திரத்தை எழுதிடவே உங்களது
  செங்குருதி தன்னையன்றோ தீந்தையாய்த் தந்தீர்கள்
  சிதைந்த உடல்களன்றோ சித்திரங்களாயிற்று
  நீர்மேலெழுத்தாகி நிலைகுலைந்து உங்கள் புகழ்
  பார்மீதில் இன்று பழங்கதையாயப் போவதனை
  விட்டு விடலாமோ! வீணே எமையழித்த
  துட்டர்களெம் முன்னே தோளுயர்த்தி நிற்பதுவோ!

  தோற்றான் தமிழன் இனித் தொல்லையழிந்ததென்று
  மாற்றார் மனம் மகிழ வாழ்விழந்து எங்களினம்
  ஆற்றாமையுற்று அடிமைகளாய்ப் பஞ்சையராய்
  எம் தாயகத்தில் இருக்க விதி சொன்னால்
  அந்த விதியை அடித்துதைக்க வேண்டாமோ?

  ஆயுதம் வேண்டாம் அதை ஒருபால் வைத்தாலும்
  தேயும் தமிழீழத் தேசத்து எல்லைகளைக்
  காக்கும் கடமைதனைக் கைவிட்டுச் சென்றது ஏன்?
  காப்பதினி யார் பொறுப்பு? கண்கலங்கி நிற்கின்றோம்.
  என்ன வழியால் எம் மண்ணை நாம் காப்போம்
  என்று கவல்கின்றோம். எம் சந்ததிக்கினி யார்
  நின்று துணைசெய்வார்? நிர்க்கதியாய் விட்டது ஏன்?

  பொல்லாப் பகைதுரத்தப் புறப்பட்ட வேங்கைகளே
  கல்லறையிலின்று கடுந்;துயிலில் ஆழ்ந்தது ஏன்?
  எல்லா உயிர்க்கும் இறப்புண்டு ஆனாலும்
  வல்வர்கள்காள் நீங்கள் வழி நடுவில் போனதென்ன?
  நட்டாற்றில் கைகழுவி நாடிழந்து எக்கேடு
  கெட்டாலும் என்ன கிடக்கட்டும் என்றெண்ணி
  விட்டதென்ன? எங்கள் விதியைத் தலைகீழாய்
  மாற்றித் தமிழ்த்தாய் மனங்கலங்கச் செய்தது ஏன்?

  காட்டிக் கொடுத்த கயவர்கள் போலல்லாதெம்
  நாட்டை அமைத்திடற்காய் நாளும் உழைத்தீரே
  போராடவென்று புறப்பட்டுப் பொய்மையிலே
  நீராடினோரை நிலை குலைய வைத்தீரே
  பொய்ப் புரட்சி செய்யப் புறப்பட்ட வஞ்சகர் முன்
  மெய்ப் புரட்சி காட்டி விழிபிதுங்க வைத்தீரே
  உள்ளத்துறுதியின்றி உரிமைப் போராட வந்தோர்
  கள்ளத்தனங்களை நாம் கண்டுணரச் செய்தீரே

  மண்ணிற் புதைந்திட்ட மாவீரச் செல்வங்காள்!
  கூடவிருந்தெம் குலவீரர் தம்மோடு
  காலன் வயப்பட்ட கண்மணிகாள்! சுற்றங்காள்!
  சென்று மறைந்தீர் நீர் சென்றாலும் எம்முணர்வில்
  என்றுமீருப்பீர். எம்மண்ணை மீட்கின்ற
  போர் தொடரும் உங்கள் புனித நினைவெமது
  வேராகித் தாங்கும் விழுதாகிச் சக்திதரும்.
  ஆரெதிர்த்த போதும் அறம் தோற்றுப் போகாது.
  ஆதலினால் எங்கள் அன்பு உறவுகளே!
  வேதனையை எங்கள் விழிக்குள் புதைத்திடுவோம்
  கண்மூடி வீரக் களத்தில் வீழுந்தோரின்
  எண்ணம் மனதை இரும்பாக்கப் புத்துயிர்த்து
  மீண்டெழுவோம் எங்கள் வீர வரலாற்றை,
  ஆண்ட நினைவை அகலாது காத்தெமது
  தாயகத்தைக்காக்க தவறாது முன்னிற்போம்
  போயகலும் பொல்லாப் பொழுது.
  [/padding]

  யுகசாரதி