தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிரையீர்ந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் இந்நாட்களில்,விடுதலைப்போராட்டத்தையும் எம்மாவீரர்கள்ஏற்று நடந்த வழிமுறைகளையும் விமர்சனம்செய்வபவர்களின் பக்கமும் சற்று கவனத்தைத்திருப்ப வேண்டியுள்ளது. இயங்கும் எல்லாவிடயங்களையிட்டும் மனிதர்கள் குறை நிறை காண்பதுஇயற்கையே. ஆனால் விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைவோரின் இலக்கு பொதுவான விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. போராட்டத்தின் விளைவாகப் உருப்பெற்ற தேசக்கட்டுமானங்களை தகர்க்கும் உள்நோக்கம் கொண்டது. இங்குகட்டுமானங்கள் எனக் கூறும்போது அவை வெறுமனே பௌதீக கட்டுமானங்களாக இல்லாமல்சமூக, அரசியற் தளத்தில் தமிழ் மக்கள் தம்மைஒரு தேசமாக வரையறைசெய்வதற்கான தகமைகள் எனக் கொள்ளப்படல் வேண்டும். பௌதிககட்டுமானங்களை சிதைத்த எதிரிகளால் தமிழ்மக்களின் கூட்டுமனவுணர்வில் நிலைப்பெற்றுள்ளஇக்கட்டுமானங்களை இலகுவில் சிதைக்க முடியாதுள்ளது. அதனால் அகத்தில் இச்சிதைவை முன்னெடுத்துச்செல்லக் கூடிய முகவர்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். துரதிர்ஸ்டவசமாக இத்தகைய மனிதர்களுக்கு தமிழ்ச் சமூகத்தில் பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை.
சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவராகப் பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றசம்பந்தன், சென்ற் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவொன்றில் உரையாற்றுகையில் “வன்முறையின் காரணமாகவே தமிழினத்துக்குப் பெரும் அழிவு ஏற்பட்டது. நாங்கள் ஏன் வன்முறையைப் பின்பற்றினோம் என்ற பெரும் கேள்வி இன்று வரைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. வன்முறையைக் கையாண்டதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம். அதில் சில வற்றைநியாயப்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆனாலும் வன் முறையை நாம் ஏன் தேர்ந் தெடுத்தோம் என்ற கேள்வி இன்ன மும் உள்ளது.” எனக்குறிப்பிட்டிருந்தார். ஏதோ தமது அரசியல் உரிமைகளை அடைவதற்கு தமிழ்மக்களின் முன்னால் பலதெரிவுகள் இருந்தன போலவும், அவற்றுள் மானிடஅவலத்தை ஏற்படுத்தக் கூடிய ஆயுதவன்முறையை அவர்கள் தேர்தெடுத்தது போலவும் சம்பந்தனின் உரை அமைந்திருந்து.
உண்மையில், இவ்விடயத்தில் சம்பந்தனுக்குஜயப்பாடு எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால்தன்னை ஒரு அகிம்சாவாதியாகக் காட்டிக்கொள்ளவே அவர் இக்கருத்தினை தெரிவித்திருந்தார், சம்பந்தன் குறிப்பிட்டதுபோன்று யாருக்காவது ஐயமிருந்தால் அதற்கு தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பலவருடங்களுக்கு முன்னர் வழங்கியிருந்த விளக்கம் போதுமானதாகவிருக்கும். விடுதலைப்புலிகள் முன்னெடுத்துவந்த வன்முறை தழுவிய போராட்டம் பற்றி விளக்கிய தலைவர் அவர்கள், “நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவத்துடன் வாழவிரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளை வேறுவழிமுறைகளில் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அரசியற் தலைமை வக்கற்றிருந்த நிலையில், எல்லா வழிமுறைகளும் தோற்றுப்போனதன் பின்னரே தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்க வேண்டியிருந்தது என்பது தமிழ் அரசியல்வாதிகள் அறியாததொன்றல்ல. ஆனால் தமிழ் பாராளுமன்றத் தலைமையோ அவ்வப்போது அகிம்சைப் போராட்டம் பற்றிப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இப்போதும் மக்களைத் திரட்டி வீதிக்கிறங்கிப் போராடப்போவதாக அடிக்கடி வாய்ச்சவடால் விடுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நொவெம்பர் 7ம் திகதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடில், உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், மக்களுடன் இணைந்து போராடப்போவதாகவும் அறிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் வெளிநாடுகளுக்கு ஓடிஒளிந்தார்கள்.
தமிழ் பாராளுமன்ற அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், சமீப காலமாக புலம்பெயர் அமைப்புகளைசேர்ந்த சிலரும் அகிம்சை வழி பற்றியும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றியும் ஏன்அதிகமாகக் கதைக்கிறார்கள் என்பதையறிய நாம் அதிகம் போகத் தேவையில்லை. அவ்வாறானஆலோசனைகள் வெளித்தரப்புகளாலேயே வழங்கப்படுகின்றன. வடக்கிலிருந்து முஸ்லீம்களைவெளியேற்றியது `இனச்சுத்திகரிப்புபி என்று இவர்கள்அடம்பிடிப்பதும் வல்லாதிக்க எஜமானர்களைத்திருப்பதிப்படுத்துவதற்காவே என்பது தமிழ்மக்கள் அறியாததொன்றல்ல. அண்மையில் லண்டனில் நடைபெற்றதொரு நூல் வெளியீட்டுவிழாவில் உரையாற்றிய நோர்வேயின் முன்னாள் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், சிங்கள அரசாங்கங்கள் தமிழ்மக்களது அரசியல் உரிமைகளை பரிசாக வழங்கப்போவதில்லை எனவும், அவற்றை போராடியே பெறவேண்டும் எனவும் கூறியதுடன், வன்முறையற்ற வகையில் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்ற `அறிவுரையையும்’ கூறியிருந்தார். ஆகவே தமிழ்மக்கள் எவ்வாறு போராடவேண்டும் என்றும், அதன் விதிமுறைகளையும் வெளித்தரப்பினர்தான் தீர்மானிக்கிற நிலைக்கு தமிழ்அரசியல் தேய்வடைந்துள்ளமை தெளிவாகிறது.
இந்த இடத்தில்தான் அண்மையில் நடைபெற்ற இரண்டு போராட்டங்களையிட்டு நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒன்று, சென்னையில் `தி ஹிந்து’ நாளிதழின் ஆய்வு அமைப்பான அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்துமையத்தின் ஏற்பாட்டில் `இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனை அறந்தாங்கி பிரபாகரன் என்பவர் செருப்பால் அடித்தமை. மற்றையது அவுஸ்திரேலியாவில் சுமந்திரன்உரையாற்றவிருந்த கூட்டங்களில் அவரை உரையாற்றவிடாமல் அங்கு வாழும் தமிழ் மக்களால் தடுக்கப்பட்டமை. நாம் ஒரு நாகரீகமான சமூகமாக ஜனநாயக விதிமுறைகளை ஒழுகி நடப்பதனால்,முதலாவது ஆயுதம் தாங்காத சிவில் தரப்புமீதுநடாத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல் என்ற வகையிலும் மற்றையது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தைமறுதலிக்கும் செயற்பாடு என்ற வகையிலும் இவற்றைக் கண்டிக்க வேண்டியது அவசியமானது. ஆனால் இங்கு மறைத்திருக்கும் ஜனநாயகத்திரையைவிலக்கிவிட்டு உட்புதைந்திருக்கும் விடயங்களையிட்டும் நாம் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
எம். கே. நாராயணன் என அறியப்படும் மாயன்கோட்டை கேலத் நாராயணன் என்பவர் ஈழத்தமிழ்மக்கள் மீதான இனவழிப்பு உச்சம் பெற்ற காலப்பகுதியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். இவ்வினப்படுகொலையில் இந்தியாவிற்கும் பங்கு இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகின்ற நிலையில், எழுபது மில்லியன் மக்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் இனப்படுகொலையில் பங்குதாரியான ஒருவருக்கு செங்கம்பளம் விரிப்பார்கள் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயமிருக்கிறது?
மற்றைய சம்பவத்தில் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிற சுமந்திரன் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்க மறுப்பவர். சர்வதேச தரப்புகளின்முன், தமிழ்மக்களுக்கு நடந்தது இனப்படுகொலைஇல்லை என வாதிடுபவர். யூதமக்கள் நாசிகளினால்இனப்படுகொலைக்கு (பகுக் ஏச்ஙீச்ஷஹஞிசூஞ்) உள்ளாக்கப்பட்டமையை மறுத்துக் கருத்து வெளியிடுவது ஜரோப்பிய நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வியடத்தில் கருத்துச்சுதந்திரம் பறிபோகிறது என்று யாரும் வாதிடுவதில்லை. அண்மையில், 1915-17 ஆண்டுகளில் துருக்கியில் நடைபெற்ற ஆர்மேனியமக்களின் இனப்படுகொலையை மறுத்து கருத்து வெளியட்ட ஒருவருக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இவ்வாற கருத்து வெளியிடுவது குற்றமானதாக நிருப்பிக்கப்பட்டது. இத்தனைக்கும் ஆர்மேனிய இனப்படுகொலையை கடந்த ஆண்டுதான் ஐக்கியஅமெரிக்க ஏற்றுக்கொண்டது.
இத்தகையசூழலில் `கருத்துச்சுதந்திரம்’ பற்றி தமிழ்மக்களுக்கு யாரும் வகுப்பெடுக்க முடியாது. அவர்களது எதிர்ப்புகளை எந்தவழியில் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை செய்ய முடியாது. ஏனெனில் பாதிக்கப்பட்ட தரப்புகள் தமது உணர்வுகளை எவ்வித்ததில் வெளியிடுவது என்று முன்கூட்டியே திட்டமிட்டு முடிவெடுப்பதில்லை.
இவ்விடயத்தில் கருத்துக்கூறுகிற சில போலிஅகிம்சாவாதிகளை பார்க்கையில், காலனித்துவகாலத்தில், 1835ம் ஆண்டு இந்தியாவின் கல்விக்கொள்கைகளை வகுத்த ஆங்கிலேயரான லோர்ட் மக்கியுலே (Lord Macaulay) என்பவர் கூறிய கருத்துதான் நினைவுக்கு வருகிறது. “ஆள்பவர்களான எங்களுக்கும் எம்மால் ஆளப்படுகிற மக்களுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்களாக (interpreters) இருப்பவர்களை உருவாக்கும் கல்வி முறையை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். இவர்கள் இரத்தத்தால், சரும நிறத்தால் இந்தியர்களாக இருந்தாலும் அவர்களது எண்ணங்களில், விருப்புகளில், உளப்பாங்கில் ஆங்கிலேயர்களாக தம்மை வைத்திருக்க வேண்டும்.” என அவர் கூறியிருந்தார்.
இவ்வாறான கோடிக்கணக்கானவர்களின் உருவாக்கமே இந்திய உபகண்டத்தை இன்றும் மேற்கின் அடிமைகளாக வைத்திருக்கிறது. இதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்விதம் விதிவிலக்காக இருக்க முடியும்?
“நாம் எந்த வகையான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று எமது எதிரியே தீர்மானிக்கின்றான்” என்பது இன்று பெரும்பொருண்மிய வல்லரசாக உருவாகிவரும் சீனாவின் சிற்பி மாவோ வெளியிட்ட புகழ்மிக்க கருத்து. அதனுடைய அர்த்தம் எதிரியே எங்களுக்கான போராட்ட முறைகளைபரிந்துரை செய்வது என்பதல்ல. மாறாக, எதிரிக்குஎது வலிக்கும் என்பதனையறிந்து அந்த வழிமுறையில் போராடுவது என்பதனை தமிழ்மக்கள் புரிந்துகொள்வார்களா ?