பொதுப்பிரகடனம், சுதந்திர சாசனம், மற்றும் ஒருங்கிணைவு முயற்சிகள்

733

தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி  அவர்களிடையே காணப்படும் முரண்பாடுகளைக் களையும் சில முயற்சிகள் கடந்த நாலாண்டுகளில் நடைபெற்று அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன. இங்கு குறிப்பிடப்படும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகள் யாவும் நான்காண்டுகளுக்கு முன்னர் ஒரணியில் நின்றன, அல்லது ஒரணியாக இயங்கின என்பதனை கவனத்தில் எடுத்தால், அவற்றிடையே கொள்கையளவிலாவது ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடு உள்ளது என்பதனை நாம் உணர முடியும். இருப்பினும் அவ்வாறான எந்த ஒரு முயற்சியும இதுவரை கைகூடவில்லை என்பது நிலமையின் தாற்பரியத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இவ்வமைப்புகளிடையே முழுமையான ஒருங்கிணைவு ஏற்படவேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மறுபுறத்தில், வெளிச்சக்திகள் தமது முயற்சிகளுக்கு வசதியாக, இவற்றிடையே கொள்கையளவிலான ஒருங்கிணைவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். இம்முயற்சிகளின் அவசியத்தை உணர்த்துவதும், இங்கு காணப்படும் கொள்கை மயப்பட்ட சிக்கல்களை வெளிப்படுத்துவதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

freedom charter tgte-fc

அமைப்புகள், குழுக்கள்
இங்கு ஒருங்கிணைவு ஏற்படுத்த வேண்டும் எனக்குறிப்பிடும் அமைப்புகளும், அவற்றிடையே காணப்படும் குழுக்களும், முள்ளிவாயக்காலுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைமையை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு தாயாகத்தில் செயற்பட்ட அரசியல் கட்சிகள், மற்றயவை விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகளாக புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட அமைப்புகள் ஆகும். இவற்றுள் சில இன்று தம்மை விடுதலைப்புலிகளிலிருந்து விலக்கிக் காட்ட முயன்றாலும், இவற்றின் கடந்தகாலச் செயற்பாடுகளை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

விபரமாகப் பார்த்தால், தாயகத்தில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கூட்டமைப்புகள், புலம்பெயர்நாடுகளில்: கிளைக் கட்டமைப்பு எனப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மக்களவைகள், பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் கொங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் கொங்கிரஸ், ருளுவுPயுஊ  போன்ற டுழடிடில குழுக்கள், தமிழ் இளையோர் அமைப்பு, உலகத்தமிழர் பேரவை, தலைமைச் செயலகம் என்ற குழுவும் அது சார்ந்த அமைப்புகளும், இனப்படுகொலைக்கு எதிரான தமிழரமைப்பு எனப் பட்டியலிடலாம்.

அரசியல் கொள்கை
பொதுவில் மேற்குறித்த தமிழ் அமைப்புகளுக்கிடையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொள்கை வேறுபாடுகள் இல்லை எனக் கருதப்பட்டாலும், அதனை அடையும் வழிமுறைகள் என இவ்வமைப்புகள் தெரிவு செய்யும் விடயங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முரண்பாடுகள் தென்படுகின்றன.
•    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெளிப்படையாகவே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வையே வலியுறுத்தி வருகிறது. அதன் தலைவர் திரு. சம்பந்தன் ‘ஐக்கிய இலங்கை’ என்ற விடயத்தை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தி வருகிறார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இதரகட்சிகள் இவ்விடயத்தில் உடன்படுகின்றனவா, இல்லையா என்பதில் குழப்பம் இருக்கிறது. அவை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்தும், வெளி அரங்கங்களில் வேறு கருத்தும் வெளிப்படும் விதத்தில் இரண்டு மொழிகளில் பேசிவருகின்றன. இருப்பினும் வெளியார் பார்வையில் கூட்டமைப்பு ஒரு தனி அமைப்பாகவே கருதப்படுகிறது என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

•    தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு தேசிய இனமான ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ‘ஒரு நாடு இரண்டு தேசங்கள்’ என்ற இணைப்பாட்சி முறையை தமது அரசியல் தீர்வாக வரித்துக் கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையில் மிகத் தெளிவான கொள்கை வேறுபாடு உள்ளது. கூட்டமைப்பு,  ஐக்கிய இலங்கைக்குள், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வினை வேண்டி நிற்கிறது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ண்ய உரிமையின் அடிப்படையில் ஒரு இணைப்பாட்சி முறையை வலியுறுத்தி நிற்கிறது.

•    நாடு கடந்த அரசாங்கம், மக்களவைகள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்பன சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனித் தமழீழம் அமைப்பதனை இறுதித் தீர்வாக ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் செயற்படுகின்றன.
இதர அமைப்புகளைப் பொறுத்தவரை மேற்படி முன்று நிலைப்பாடுகள் சார்ந்து தமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குறிப்பிடுகின்றன. இவற்றுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தீவிரமாக ஆதரிக்கும் உலகத்தமிழர் பேரவை, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற விடயத்தில் கூட்டமைப்புடன் உடன்படுகிறதா என்பதனை வெளிப்படுத்தாமல், இடத்துக்கு ஏற்றமாதிரி கருத்துகளை வெளியிட்டு தப்பிக்கொள்ளும் நழுவல் போக்கை கையாண்டு வருகிறது. இன்னும் சில தரப்புகள் சிறிலங்காவின் இனவாத முகத்தை வெளிப்படுத்த கூட்டமைப்பின் மிதவாத நிலைப்பாடு உதவும் என கூட்டமைப்பிற்கான தமது ஆதரவினை நியாயப்படுத்துகின்றன. நாடு கடந்த அரசாங்கத்தினரும் கூட்டமைப்பை ஆதரிப்பது கொள்கையளவில் முரண்நகையாகவே தென்படுகிறது.

ஒருங்கிணைவு முயற்சிகள்

தமிழ் அமைப்புகளிடையே உள்ள கொள்கை வேறுபாடுகளை தெளிவாக அடையாளங் காண முடிவதனால் இவற்றை ஒன்றிணைக்கும் முயற்சிகள் சிக்கலானது என்பதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இங்கு மற்றய மோதல்கள் முரண்பாடுகளும் உள்ளன என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் இவ்வமைப்புகள் யாவும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் குறைந்தபட்ச விடயங்களிலாவது ஒருங்கிணைவை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுப்பிரகடனம்
தமிழ் அமைப்புகளை இணைத்து ஒரு பொதுப்பிரகடனம் ஒன்றை வெளியிடும் நோக்கில் உலகத் தமிழர் பேரவை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சி உலகத் தமிழர் பேரவையின் ‘நான்கு தூண்கள்’ வேலைத் திட்டத்தின் ஒரு தூணாக அடையாளங்காணப்பட்டாலும், இதன் பின்னணியில் வெளிச் சக்திகள் இருப்பது தெரிய வருகிறது. சுவிற்சலாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில், தென்னாபிரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது. பேர்லினை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் டீநசபாழக குழரனெயவழைn  என்ற அமைப்பு இதற்கான அனுசரணையாளராகச் செயற்பட்டு வருகிறது. இம்முயற்சி தொடர்பில், அண்மைய மாதங்களில் பெர்லினில் நடைபெற்ற சந்திப்புகளில், உலகத் தமிழர் பேரவை, மக்களவைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நாடுகடந்த அரசாங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், பொதுப்பிரகடனத்தை உருவாக்கும் அளவிற்கு இதுவரை இணக்கப்பாடு ஏற்படவில்லை என அறிய முடிகிறது.

தமிழீழ சுதந்திர சாசனம்
உருவாகப் போகும் தமிழீழ தேசம், எவ்வாறான அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும், கொள்கை மற்றும் சட்டமாக்கல் போன்ற விடயங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் போன்ற விடயங்களில் ஈழத் தமிழ் மக்களின் கருத்தறிந்து ஒரு விடுதலை சாசனத்தை உருவாக்கும் முயற்சியை நாடுகடந்த அரசாங்கம் முன் மொழிந்துள்ளது. 1955 இல் தென்னாபிரிக்க விடுதலை அமைப்புகள் இணைந்து ஏற்படுத்திய விடுதலை சாசனத்தை ஒத்த  இம்முயற்சியில் ஏனைய தமிழ் அமைப்புகளையும் இணைத்துக் கொள்வதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும், இவ்வாறான இணைப்பு சாத்தியமாகும் பட்சத்திலேயே சுதந்திரசாசனத்திற்கான அங்கீகாரம் எட்டப்படும் என நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் இக்கட்டுரையாளருடனான ஒரு உரையாடலில் தெரிவித்தார்.
தமழீழ தேசம் தனி நாடாக அமைகிறதா, இணைப்பாட்சிக்குள் வருகிறதா அல்லது ஒற்றையாட்சிக்குள் அடங்கி விடுகிறதா என்பதனையிட்டு இப்போதைக்கு சொல்ல முடியாவிட்டாலும், தமிழ்த் தேசிய இனத்திற்கான முற்போக்கான, சர்வதேச சட்டங்களைத் தழுவியதான ஒரு சுதந்திரப்பிரகடனத்தை உலகக் கண்ணோட்டதற்கு விடுவது அவசியமானது என்பதனை தமிழ் அமைப்புகள் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ் அமைப்புகளால் முன்னெடுக்ப்படும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே அமைப்புகளுக்கிடையிலான கொள்கையளவிலான ஒருங்கிணைவு வெளிப்படுத்தப்படும்.
தம்மால் முன்மொழியப்பட்ட இவ்வாறான ஒருங்கிணைவு முயற்சிகளுக்கு நாடு கடந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் முழு மனதுடன் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதனை அவர்களது செய்கை மூலம் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது என இக்கட்டுரை வலியுறுத்துகிறது.