இவ்வாரம் பேருவள, அளுத்கம பகுதிகளில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டமை தொடர்பான செய்திகளை பன்னாட்டு ஊடகங்கள் உடனுக்குடன் வெளியிட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக, தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இயங்கும் தமிழ்அமைப்புகள் பலவும் தமது கண்டனத்தை பதிவு செய்யும் வகையிலும், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. வழமையாக சூடான விவாதங்கள் நடைபெறும் சமூகவலைத்தளங்களிலும் அவரவர் தமதுகருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இராஜதந்திர முறையில் வெளியிடப்படும் சம்பிரதாயபூர்வமான அறிக்கைகளைக் காட்டிலும் சமூகவலைத் தளங்களில் பதிவிடப்படுபவை ஒரளவிற்கு பதிவரின்உள்ளத்தில் தோன்றும் உண்மையான கருத்துகளாக இருப்பதனால், சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்தோடிகளாக இருக்கும் முஸ்லீம்கள் விடயத்தில் நாம் அக்கறைகொள்ளத் தேவையில்லை என்ற கருத்து பல தமிழர்களால் முன்வைக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
ஐநா மனிதவுரிமைச் சாசனத்தின் இரண்டாவது பிரிவு “ஒவ்வொரு மனிதரும் அவர் சார்ந்த இனம்,சமூகம், நிறம், மொழி, மதம், பாலினம், அரசியல்கருத்துகள் போன்ற பாகுபாடுகளின்றி, சுதந்திரமாக வாழ்வதற்கு முழு உரிமையையும் கொண்டிருக்கின்றனர்” எனக்கூறுகிறது. இதனடிப்படையில் மட்டுமல்லாது, எல்லா மதங்களும் போதிக்கும் இறையியல் தத்துவங்களின் அடிப்படையிலும், அல்லது மதங்களை மறுக்கும் மாற்றுத் தத்துவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் தமது மதத்தினை பின்பற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்துப்படுவதனை யாரும் நியாயப்படுத்த முடியாது. விடுதலைக்கு போராடும் இனம் என்றவகையில், இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டிய கடப்பாடு ஈழத்தமிழ்மக்களுக்கு உண்டு.ஆகவே முஸ்லீம் சிறுபான்மையினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை மனிதாபிமானமுள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில், முஸ்லீம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்புலம் பற்றியும், இவ்விடயத்தில் அறிக்கைகள் வாயிலாக வெளியிடப்பட்ட எதிர்விகைளில் ஒளிந்திருக்கும் அரசியல் பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.
மேற்படி வன்முறைசம்பவங்களுக்கு தனித்து பொதுபல சேனவையும், அவ்வமைப்பின் தலைவர்கலகொட அத்தே ஞானசார தேர்ரையும் குற்றம்சாட்டுபவர்கள் ஒன்றில் அறியாமையில் அவ்வாறுசெய்கிறார்கள் அல்லது சிறிலங்காவின் ஆட்சியதிகாரத்தை காப்பாற்றுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் பொதுபல சேன விடயத்தில் சிறிலங்கா ஆட்சி மையம் காட்டிவரும் அசதாரண சகிப்புத்தன்மை, அவ்வமைப்புடன் சிறிலங்கா ஆட்சிமையம் கொண்டுள்ள தொடர்புகள் பற்றியஐயப்பாட்டினை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. சிறிலங்கா ஆட்சிமையத்தைக் தவிர்த்து வெளிச்சக்திகளும் நிலமையை தமக்குச் சாதகமாக்கி தமது நலன் நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ளஇச்சம்பவங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. ஆகையால், இத்துன்பியல் நிகழ்வு தொடர்பாக அறிக்கை விடுபவர்களையும், கருத்து வெளியிடுபவர்களையும் நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கவேண்டியிருக்கிறது.
சிங்கள பௌத்த பேரினவாதமும் பொதுபல சேனவும்
பொதுபல சேனவின் தலைவர் ஞானசார தேரர் 2004ம் ஆண்டு தேர்தலில் மகிந்த இராஜபக்சவின் ஆளும் பொதுசன சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உரிமையவின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். கொழும்பில் சிறி சம்புத்த மந்திரவில் உள்ள பௌத்த கலாச்சார மையத்தில் பொதுபல சேனவின் தலைமையகம் அமைந்திருக்கிறது. இன்னொரு பௌத்த அமைப்புக்கு சொந்தமான இக்கட்டடம் மூன்று வருடங்களுக்கு முன்னர், அதாவது 2011 ம் ஆண்டுமே 15ம் திகதி மகிந்த இராஜபக்சவினால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த வருடம் காலியில் பொதுபலசேனவின் கட்டிடம் ஒன்றை கோத்தபாய இராஜபக்சதிறந்து வைத்தார். இத்திறப்பு விழா வைபவத்திற்குசிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கோத்தபாய அங்கு உரையாற்றுகையில், தன்னைஇவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் எனப்பலரும் அறிவுரை கூறியதாகவும், ஆனால் இவ்விழாவின் முக்கியத்துவம் கருதி தான் கலந்து கொண்டதாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் பௌத்த துறவிகளையிட்டு அச்சப்படவோ அல்லது அவர்களையிட்டு ஐயப்படவோ தேவையில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இவற்றை வைத்துப் பார்க்கையில், பொதுபலசேன என்ற அமைப்பிற்கும் சிறிலங்காவின்ஆட்சி மையத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதைப் புரிந்து கொள்ளமுடியும். அதே சமயம்சிங்கள பௌத்த இனத்தின் காவலனாக, நவீனதுட்ட கைமுனுவாக தன்னை நிலை நிறுத்தி தனதுவாக்கு வங்கியை சீர்குலையவிடாமல் வைத்திருக்கும் மகிந்த தம்மை மிஞ்சிய இனவாதிகளையிட்டு அச்சம் கொண்டிருப்பதில் நியாயமிருக்கிறது. இன்றுள்ள நிலையில் மகிந்தவை விடத்தீவிரமான இனவாதிகளாலேயே சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தைஏற்படுத்த முடியும். இந்நிலையில் அவர்களது இனவாத நடவடிக்கையை தடுப்பதன் மூலம் தமதுஆதரவுத்தளத்தில் வெடிப்புகள் ஏற்படுவதனை மகிந்தவால் அனுமதிக்க முடியாது. இராஜபக்ச சகோதரர்களைப் பொறுத்தவரை இது புலி வாலைப்பிடித்த கதைதான்.
மேற்கின் நிலைப்பாடும், மதக்குழுக்களுக்கு எதிரான வன்முறையும்
2012ம் ஆண்டு பொதுபலசேன ஆரம்பிக்கப்பட்டது, அதற்கு முந்தைய வருடம் ஒக்ரோபர் மாதத்தில் அவ்வமைப்பின் முக்கியஸ்தர்களான ஞானசார தேரர், அதன் பேச்சாளர் டிலந்த விதானகேஉட்பட எட்டுப்பேர் கொண்ட குழுவொன்று, Norwegian Peacebuilding Resource Centre (NOREF)என்ற அறியப்படாத அமைப்பு ஒன்றின் அழைப்பின்பேரில் நோர்வேக்கு சென்று அங்கு பலரைச்சந்தித்ததாக டிலந்த விதானகே ஊடகம் ஒன்றுக்கு வழங்கியபேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இச்சந்திப்பில் தாம் எரிக் சொல்ஹெய்மையும் சந்தித்துப் பேசியதாகவும் கூறியிருக்கிறார். மேற்படி பயணம் நடைபெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள நோர்வே அரசாங்கம் அப்பயணத்திற்கும் தமது அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்புமில்லை எனமறுத்துள்ளது. இக்குழுவினரை தாம் ஒருபோதும் சந்தித்ததில்லை என எரிக் சொல்ஹெய்ம் இக்கட்டுரையாளருடனான ருவிற்றர் தொடர்பாடலில் கூறியிருந்தார்.
கடந்த வருட முற்பகுதியில் பொதுபல சேனவின்குழு ஒன்று ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று அங்கு சில வாரகாலம் தங்கியிருந்தது. உள்நாட்டில் இனவாத வன்முறைகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், இவ்வமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவிற்கு நுளைவு அனுமதி பெற்றுக்கொள்வதில் சிரமமிருக்வில்லை. இவ்விடத்தில் குஜாராத் மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை காரணங்காட்டி அப்போதையமுதலமைச்சர் நரேந்திர மோடிக்கு பயணத் தடை விதிக்கப்பட்டமையைக் கவனத்தில் கொள்க.
தமிழ் அமைப்புகளின் எதிர்வினை
முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக முந்தியடித்துக்கொண்டு அறிக்கை வெளியிட்ட தமிழ் அமைப்புகளில் பெரும்பாலானவை மேற்குல வெளிநாட்டு அமைச்சுகளினதும், சிந்தனை மையங்களினதும் ஆலோசனைக்கமைய செயற்பட்டு வருவதாகக் கருதப்படுபவை. இவற்றுள், அருட்தந்தை இமானுவலின் உலகத் தமிழர் பேரவை, வரதகுமாரின் தமிழ் தகவல் நடுவம், பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் செயலவை ஆகியவைமுக்கியமானவை. உலகத் தமிழர் பேரவை தனதுஅறிக்கையினை அரபு மொழியிலும் வெளியிட்டமை இங்கு கவனத்திற்குரியது. உலகத் தமிழர் பேரவையின் அரபுமொழி அறிக்கை வெளிவந்தஅதே தினத்தில், கொழும்பில் மகிந்த இராஜபக்ச பதினழு இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அழைத்து நிலமையை விளக்கியதாக செய்தி வெளியாகியிருந்தது. ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை எதிர்க்கும் நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய நாடுகள் என்றை தகவலையும் இத்துடன் இணைத்துப்பார்த்தால் உங்கள் மனதில் மெல்லியதாக ஒரு படம் தோன்றலாம்.
கடந்த ஐநா தீர்மானத்தில் சிறுபான்மை மதக்குழுக்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கைத்தீவு விடயத்தில், சிறுபான்மை மதக்குழுக்கள் என்ற சொல் பரீட்சயமில்லாத ஒன்றாகவிருந்தது. அளுத்கம, பேருவள தாக்குதல்களுக்கு பின்னர் சர்வதேச ஊடகங்கள் அச்சொல்லைப் பயன்படுத்தி அதனை இப்போது பழக்கப்படுத்திவிட்டன.
வியாழன்று (யூன் 19) கொழும்பில் அமெரிக்கத்தூதுவர் மிசேல் சிசனை சந்தித்த முஸ்லீம் கொங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மையினர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நவநீதம்பிள்ளை அம்மையாரின் குற்றச்சாட்டுகளுக்கு இச்சம்பவங்களே ஆதாரம் எனக்குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆக, மார்ச் மாதத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இரண்டு மாதங்கள் கழித்து ஆதாரம் கிட்டியிருக்கிறது. இப்போது ஆட்சி மாற்றம் தொடர்பான முனைப்புகள் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது போல் தெரிகிறதல்லவா?