பொருத்தமற்ற தீர்வுக்குள் நியாயங்களைத் தேடுகிறதா கூட்டமைப்பு?

757

Mahinda Rajapaksa and Basil Rajapaksa

-இதயச்சந்திரன் (ஒரு பேப்பருக்காக)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான பசில் ராஜபக்சவின் பேரினவாதச் சிந்தனையிலிருந்து பிரசவித்த ‘திவி நெகும’ என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்த சிங்களம் முனைப்புக் காட்டுகிறது.

நாட்டின் அபிவிருத்தி, வளர்ச்சி என்பது போலான கருத்துருவத்தைக் கொண்ட இந்த ‘திவி நெகும’, ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சில அதிகாரங்களையும், மாகாணசபை பட்டியலில் இருந்து உருவிக் கொள்வதற்கு முயற்சிப்பதாக, 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக நம்புவோர் கவலையடைகின்றனர்.

அடிக்கடி பேசப்படும் காணி, காவல் துறை அதிகாரங்களுக்கு அப்பால், புதிதாக முளைத்துள்ள இந்த ‘திவி நெகும’, மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் குவிக்கும் இன்னுமொரு கருவியாக மாறுமென்பதே உண்மை.
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் , மத்தியிலுள்ள அமைச்சர்களுக்கு என்ன வேலை என்பதுதான் பசிலின் பிரச்சனை போல் தெரிகிறது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றில் கொண்டுவரப்படவிருந்த இச் சட்டமூலத்தை உயர் நீதிமன்றம் நிறுத்தியது.

அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் 120 ஆவது சரத்தின் பிரகாரம், மாகாணசபைப் பட்டியலிலுள்ள அதிகாரங்களை இச்சட்டமூலம் மீறுவதால், சபைகளின் அங்கீகாரம் இதற்குத் தேவை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

அரசியலமைப்பிலுள்ள சரத்து 154 [G] [3] இற்கு அமைய . இப்புதிய சட்டமூலம் குறித்து, சனாதிபதி என்பவர் , மாகாணசபைகளுக்குத் தெரியப்படுத்தி ,அவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இதற்கமைய மேல் மாகாணசபை, வடமேல் மாகாணசபை, ஊவா மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபை என்பன , ‘திவி நெகும’ சட்டமூலத்திற்கான அங்கீகாரத்தை வழங்கி விட்டன.

மத்தியில் ஆட்சிபுரிவோர் இம் மாகாணசபைகளில் பெரும்பான்மையாக இருப்பதால் , இலகுவாக இதனை நிறைவேற்றிவிட்டார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், 18 வது திருத்தச் சட்டம் உட்பட எந்தவிதமான சட்டங்களையும் நிறைவேற்ற, நாடாளுமன்றிலும் மாகாணசபைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்திருக்கும் அரசு , இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு மட்டும் , நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே அதனைத் தீர்மானிக்கும் வல்லமையுடையதென நாடகமாடுகிறது.

அதேவேளை ‘திவி நெகும’ சட்டமூல உருவாக்கத்தின் பின்புலத்தை உற்று நோக்கினால், அதிகார மையத்திலிருக்கும் மகிந்த சகோதரர்களுக்கு இடையிலான பனிப்போரின் முரண்நிலைகள் தெளிவாகத்தெரியும்.

2013 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், நாட்டின் மொத்த செலவீனம் 2520 பில்லியன் ரூபாவாகவும், மொத்த வருமானம் 1280 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
அதில் கோத்தபாய செயலாளராகவிருக்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிற்கு 290 பில்லியன் ரூபாய்கள் [ 29,000 கோடி] ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே அண்ணனிற்கு பாதுகாப்பு அமைச்சோடு நகர அபிவிருத்தியும் இணைக்கப்பட்டது போன்று, தனது பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு ஏன் ‘திவி நெகும’ என்கிற அபிவிருத்தி திணைக்களத்தை இணைக்கக்கூடாதென பசில் கேள்வி எழுப்பியிருக்கலாம்.

கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கென , வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும் தொகைப்பணத்தை தன்னகத்தே வைத்திருக்கும் சமுர்த்தி அதிகாரசபை, மலையாக அபிவிருத்தி சபை, மற்றும் தென்னிலங்கை அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றை ஒன்றிணைத்து ‘திவி நெகும’ அபிவிருத்தி திணைக்களம் உருவாகிறது. இதுதான் இச் சட்டமூலத்தின் அடிப்படையான விடையம்.

சமுர்த்தி வங்கியிலுள்ள 53 பில்லியன் ரூபாய்களும், ‘திவி நெகும’ ஊடாக, பசிலின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு சென்றடையுமென மங்கள சமரவீர கிண்டலடிப்பது இவர்களின் நோக்கங்களை உறுதி செய்கிறது.

ஆக மொத்தம், கிராமிய அபிவிருத்தி மற்றும் மக்கள் நலனை உள்ளடக்கிய , சகல அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்ட அமைச்சொன்றினை உருவாக்குவதுதான் ‘திவி நெகும’ என்கிற மகிந்த சிந்தனையின் நோக்கமாகும்.

இருப்பினும் சிங்கள இறைமையை நாடளாவிய ரீதியில் உறுதிப்படுத்த மகிந்த சகோதரர்கள் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு அப்பால், மாகாணசபை அதிகாரங்கள் முதல்படி, அடுத்து இரண்டாம் படியில் ஏறிநின்று சர்வதேசத்தின் உதவியோடு, மேலும் பல அதிகாரங்களைப் பெறலாமென வியாக்கியானமளிப்போர், இந்தியாவின் உத்தரவாதத்தோடு மகிந்தரின் ‘நாடாளுமன்ற தெரிவுக் குழு’ என்கிற மீளமுடியாத பொறிக்குள் விழும் சோக நிகழ்வும் நடைபெறத்தான் போகிறது.

இவைதவிர, 13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணசபைகளால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை, மத்திய அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சே , ‘திவி நெகும’ ஊடாக மேற்கொள்ளுமென சம்பந்தன் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் மாகாணநிதியத்திற்கு நிதி ஒதிக்கீடு செய்யும் அதிகாரம் யார் கையில் இருக்குமென்பதை 13 வது திருத்தச் சட்டம் தெளிவாகச் சொல்லிவிட்டது. மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி-சட்டம்-நிர்வாகம்-வணிகம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மூவர் ஆகியோரைக்கொண்ட குழுவே , மகிந்தர் மற்றும் ஆளுநரின் வழிகாட்டலில் இயங்குவார்கள்.

ஆகவே ‘திவி நெகும’ வந்தாலும் அல்லது வராவிட்டாலும் , அபிவிருத்திப் பணிக்கான காஜானாவின் சாவி எப்போதும் மகிந்தர் மற்றும் நாடாளுமன்றின் சட்டைப் பைகளிலேயே இருக்கும்.

வடமாகாணசபைக்கான தேர்தலை நடாத்தும்படி மகிந்தரை வற்புறுத்தும் இந்தியாவிற்கும், மேற்குலகிற்கும் இது புரியும்.

ஏனெனில் சென்னையிலுள்ள அமெரிக்கத்தூதுவர் ஜெனிபர் அவர்கள் அண்மையில் கூறியது போன்று, அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதே அவர்களின் குறிக்கோள். மாகாணசபைக்கு அதிகாரங்கள் இருக்கிறதா, தமிழ் தேசியத்தின் இறைமை பாதுகாக்கப்படுகிறதா என்பதல்ல அவர்களின் பிரச்சினை. நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான் இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு.

‘திவி நெகும’ ஊடாக, மாகாணசபைகள் மாநகர சபைகளாக மாறுவது குறித்தும் இவர்களுக்கு கவலை இல்லை.

சனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர், வடமாகாண சபை சார்பாக இச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதைப் புரிந்தாலும் இவ் வல்லரசுகள் இது குறித்து வாய்திறக்காது.

இயக்கமற்றநிலையில் வட மாகாணசபை இருக்கும்போது, அதனுடைய அங்கீகாரம் இல்லாமல் ஏனைய சபைகளின் ஒப்புதலோடு மட்டும் இச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியுமா என்கிற சட்டச் சிக்கல் எழுகிறது.

இதற்காகவும் உயர்நீதிமன்றில் வழக்கொன்று பதிவு செய்யப்படுமென்று எதிர்பார்க்கலாம்.

இருப்பினும், வடகிழக்கில் பூர்வீகமாக வாழும் இறைமையுள்ள தமிழ் பேசும் மக்களிற்கான அரசியல் தீர்வு, 13 வது திருத்தச் சட்டமல்ல என்பதனை, திணிக்கப்பட்ட 18 வது திருத்தச் சட்டங்களும், புதிதாக முளைத்துள்ள ‘திவி நெகும’ சட்ட மூலங்களும் உறுதிப்படுத்துகின்றன.

பிழையான தீர்விற்குள் நியாயங்களைத் தேடி, காலத்தை விரயம் செய்வதை தமிழ் அரசியல் தலைமைகள் கைவிட வேண்டும்.

சிங்களத்தின் அரசியலமைப்பிற்கு உட்பட்டுப் போராடும் அரசியல் வெளி குறுகிச் செல்கிறது.

இனி 13 வது திருத்தச் சட்டத்தில் எஞ்சியிருக்கும் அதிகாரங்களிற்காக, சாத்வீகப் போராட்டங்களை நடாத்துவதே கூட்டமைப்பின் அரசியல் பாதையாக இருக்கப்போகிறதா? .