பொருளாதாரத் தடை

1268

அலசுவாரம் – 95

தமிழக சட்டசபையில் இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசைக் கோரும் தீர்மானமும், அதையடுத்து இந்திய அதிகாரிகளின் இலங்கைப் பயணமும், சனல்4 இல் வன்னிப் படுகொலைகள் பற்றிய காணொளியும் சமீப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு சற்று ஆறுதலூட்டும் முக்கிய நிகழ்வுகளாகக் காணப்படுகின்றன.  ஏதோ எங்களையும் உலகம் கவனிக்கிறது அனுதாபத்தோடும் ஆதரவோடும் பார்க்கிறது என்று சற்று மனமாறக்கூடியதாக எம்மைச் சார்ந்த நிகழ்வுகள் நகர்கின்றன.

இதற்கிடையில் தமிழக முதல்வரிடம் இந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதி நாங்கள் கூறுவது எதையும் காதில்போட்டுக் கொள்கிறாரில்லை நாங்களென்ன செய்ய முடியுமென்று கையை விரித்துவிட்டதாக ஒரு செய்தியையும் வாசிக்கக்கூடியதாகவிருந்தது.

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? இந்தியாவோ முழு உலகோ என்னதான் வற்புறுத்தி ஈழத்தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்குகொடுங்கள் என்று கேட்டுக்கொண்டாலும் இலங்கையரசு தனது பௌத்த சிங்கள லங்கா என்னும் பெரும்பான்மையின ஆதிக்கக் கோட்பாட்டை விடப்போவதில்லை.  இலங்கை சிங்களவருக்கு மட்டுமே சொந்தம் என்னும் அடிப்படைக் கருத்துருவை (கொண்செப்ற்) மாற்றாது அல்லது மாற்ற முடியாது இருக்கும் இலங்கயரசிடம் போய் இந்தியா அர்த்தமில்லாமல் கெஞ்சுவது போலத் தெரிகிறது.  மேற்சொன்ன கருத்துருவில் மாற்றத்தைக் கொண்டுவராமல் எதுவுமே ஆகப் போவதில்லை.

ஒரு பெரியகோட்டை அதில் எதுவித மாற்றத்தையும் செய்யாமல் சிறியகோடாக மாற்றவேண்டுமென்றால் அந்தக் கோட்டுக்குப் பக்கத்தில் அதைவிடப் பெரிய கோடொன்றைப் போட்டு விடுவதைத் தவிர வேறு வழியேயில்லை.  அரசியல் ராஜதந்திரத்திலும் இது பொருந்தும்.  அந்தவகையில், இந்தியா தமிழினத்தின் மீதான தனது அக்கறையைக் காட்ட வேண்டுமென்றால் பாக்கு நீரிணையின் இருபுறத்திலுமுள்ள தமிழர் தேசியத்தை ஒன்றுபடுத்தி ஒருபெரிய கோடாக மாற்றும் ராஜதந்திர நடவடிக்கையில் இறங்கியேயாகவேண்டும்.  அது கச்சதீவைத் திரும்பப் பெற்றுத் தமிழகத்திடம் ஒப்படைப்பதிலிருந்து திருகோணமலை பலாலி போன்ற படைத்தளங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவருவது வரை, அதற்கும் மேலாய் மன்னார்ப் பிரதேசத்துடன் இராமேஸ்வரம் பிரதேசத்தைப் பாதையால் இணைப்பதுவரை பல வழிகளிலும் முயற்சிக்கப்படலாம்.

ஆனால் அதற்குப் பதிலாக இந்தியாவின் முயற்சிகள், ஈழத்தமிழர்களைப் பலிக்கடாக்களாக்கி, சிங்கள மேலாண்மைவாதத்திற்குப் பலியாக்கி, பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு அடிமைகளாக்கி, தமிழக மக்களையும் ஏமாற்றி, கையாலாகாத ராஜதந்திரத்தை இலங்கையுடன் பேணும் இந்திய நடுவண்ணரசின் இயலாமையில் போய் முடிந்துவிடுமோ என்றுதான் அஞ்ச வேண்டியுள்ளது.

கலைஞரின் சொந்தங்களும் சுற்றங்களும் ஈழத்தமிழர்களின் துயர்துடைக்கப் போகிறோமென்று பாசாங்கு செய்தவாறு இலங்கை வந்து ஜனாதிபதியையும் சந்தித்துத் துதிபாடிச் சென்றனர்.  அப்போதெல்லாம் அந்தக் குழுவினரின் உள்நோக்கம் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதும் புனரமைப்புப் பணிகளில் ஒப்பந்தங்களை (கண்டிராக்ற்) பெற்று பணம் சம்பாதிப்பதுமாகத்தான் இருந்தது.  இலங்கையரசும் இவர்களின் உள்நோக்கங்களைப் புரிந்துகொண்டு இனப்பிரச்சனையிலிருந்து இவர்களைத் திசைதிருப்பி விட்டது.  தற்போது அதிமுக அரசாங்கம் வந்து இவர்களின் திட்டங்களுக்கு ஆப்பு வைக்கும் நோக்கில் மத்திய அரசிடம் இலங்கையுடனான பொருளாதாரத் தடையை வேண்டி நிற்கிறது.

இலங்கையுடனான  எவ்வித அபிவிருத்தி முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்காமையே பொருளாதாரத் தடையின் முக்கிய நோக்கம்.  இதன்மூலம் ஏற்கனவே இலங்கையுடன் ஒப்பந்தங்களைச் செய்தவர்கள் அவற்றை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டிவரலாம். அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் தமிழகத்தின் முந்தைய அரசினால் இலங்கைக்குப் பணம்பண்ண ஏவிவிடப்பட்ட கலைஞரின் சுற்றங்களே.  அதிமுக வினருக்கு இதனால் எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஸ்பெக்ரம் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தற்போது மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கலைஞரின் மகளும் இலங்கைக்கு இத்தகைய பொருளாதார நலன்களை வேவுபார்ப்பதற்காக வந்து ஜனாதிபதியையும் சந்தித்துத் துதிபாடிச் சென்றமை இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

மொத்தத்தில் எல்லோருமே தமிழ் மக்களின் நீண்டகால நன்மைகளைக் கருத்திற்கொண்டு செயற்படுகிறார்களா அல்லது குறுகியகால கட்சியரசியலில் ஆளையாள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது கடினமாகவேயிருக்கிறது.

நாளைக்கே அதிமுக ஆதரவுச் சக்திகளையும் சட்டசபை உறுப்பினர்களையும் இலங்கையரசு அழைத்து அவர்களுக்கும் புனரமைப்புப் பணிகளில் ஒப்பந்தங்களைச் செய்ய வாய்ப்பளித்தால் இந்தப் பொருளாதாரத் தடை புஸ்வாணமாகிவிடக்கூடும்.

பொருளாதாரத் தடைத் தீர்மானத்திற்குப் பிறகு உடனடியாக இலங்கை வந்த சிவசங்கர் மேனன் தமிழக முதலமைச்சரையும் சந்தித்து ஒருவாறு சமாதானம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்.  ஏற்கனவே இலங் கையில் செயல்ப்படும் இந்திய முதலீட்டாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும்  காப்பாற்றும் நோக்கில மைந்த ஒரு சந்திப்பாக இதனைக் கொள்ளமுடிமேயன்றி இனப்பிரச்சனைத் தீர்வுக்கான சந்திப்பாக இதனைக் கொள்ளமுடியாது.

இலங்கையுடனான கப்பல் போக்குவரத்து தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையில் மத்திய அமைச்சரின் தலைமையில் ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. விரைவில் அது இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்குமிடை யிலும் தொடக்கப் படவிருக்கிறதாம்.  அதேவேளை தமிழக முதலமைச்சரோ தம்மால் முன்மொழியப்பட்ட  பொருளாதாரத் தடைப் பிரேரணையைக் காரணங்காட்டி இந்தக் கப்பற் போக்குவரத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று கோரியதோடு; அந்த வைபவத்தில் தமது கட்சி உறுப்பினர்களையும் பங்குபற்றவிடாமல் செய்திருக்கிறார்.  திமுக காலத்தில் மத்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல் சேவையின் முதலீட்டாளர்கள் டெல்லி அரசினதும், திமுக வினதும் ஆதரவாளர்களாகவே இருந்திருப்பர்.  புதிய அரசு வந்ததும் இந்த முதலீட்டாளர்களைப் புறந்தள்ள கப்பற் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி புதிய டென்ரர்களைக் கோருவதே ஒரேவழி.

ஆக எங்கும் எதிலும் பிஸினஸ்ஸே நோக்காயிருக்கிறது.  இன்றைய நிலையில் இந்திய முதலாளி வர்க்கத்திற்கு இலங்கை முதலீட்டிற்குரியவோர் முக்கிய கேந்திரம்.  புனரமைப்புப் பணிகள் அனேகம் நடைபெறவேண்டியிருப்பதால் மிக அருகிலுள்ள தமது கட்டுமானச் சக்தியைம் ஏனைய வளங்களையும் இலங்கைக்கு நகர்த்திப் பணம் சம்பாதிக்க இன்றைய சூழ்நிலை அவர்களுக்கு மிக ஏற்றதாயிருக்கிறது.  இந்த நிலையில் தமிழக அரசினால் முன் மொழியப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை எந்த அளவுக்கு இந்திய முதலாளி வர்க்கம் வரவேற்குமென்பது தெரியவில்லை.  ஒருவேளை பொருளாதாரத் தடைத் தீர்மானத்தை மத்திய அரசு கருத்திற்கொண்டு அதை நடை முறைப்படுத்த வெளிக்கிட்டாலும் அதனை இந்திய முதலாளி வர்க்கம் ஆமோதிக்கப் போவதில்லை.  அதனால் பாதக விளைவுகளை அடையப்போவது இந்திய முதலீட்டாளர்களே.

பொருளாதாரத்தடையென்பதை ஒரு நாட்டிற்கெதிராக, அதற்கு உதவி ஒத்தாசைகளைச் செய்துவரும் நாடு அவ்வுதவிகளை நிறுத்திக் கொள்வதென்பதாக மட்டும் கணிப்பிடலாகாது.  பொருளாதாரத் தடையென்னும்போது அத்தடையைப் போடும் நாடும் அதனால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.  இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு பல நாட்டு உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பிருப்பதால் இந்தியா விதிக்கும் பொருளாதாரத் தடை பெரிய பாதகங்களை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

இலங்கை, இந்திய பொருளாதார வளர்ச்சியின் அல்லது வீழ்ச்சியின் தாக்கங்களை அனுபவிக்கும் ஓர் நாடாக இருந்தாலும் அதன் இன்றைய முன்முயற்சிகள் இந்தக் கட்டிலிருந்து விடுபட்டுச் சுயமானவோர் பொருளா தாரக் கட்டமைப்பினுள் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்ளும் முயற்சிகளாகவே காணப்படுகின்றன.  இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் என்றவோர் சர்வதேச வலைப்பின்னலால் பயனடையும் இலங்கையை மேற்குலகினதும் இந்தியாவினதும் ஆதிக்கத்துக்குள்ளிருந்து விடுவித்து இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனது நிரந்தரமான நண்பனாக்கிக்கொள்ள வளர்ச்சிபெற்ற சீனா போட்டி போடுகிறது.  இலங்கைமீது இந்தியாவால் கொண்டுவரப்படும் பொருளாதாரத் தடை சீனாவின் இந்த நோக்கத்திற்கு சிறந்த ஊன்றுகோலாக அமையும் வாய்ப்புகளே அதிகமுள்ளன.  ஆனாலும் பக்கத்தில் இருபதுமைல் கடல் எல்லையுள் உள்ள இந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தைப் புறக்கணித்து இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிடுவது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமுமில்லை.

இலங்கையிலுள்ள சிங்கள தேசியத்தைவிடவும் பெரிதான பாக்குநீரிணையின் இருகரைகளிலுமுள்ள தமிழ்த் தேசியத்தின் ஆதிக்கம் அரசியல் ரீதியில் வளர்த்தெடுக்கப்படும்போது சீனா போன்ற நாடுகள் தமிழர்களையும் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது.  ஆனால் அதனை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதே இன்றுள்ள கேள்வியாக இருக்கிறது.  அறிஞர் அண்ணாவின் “மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற கோஷம் அடங்கிப்போனதோடு தமிழர்தேசியம் உறக்க நிலைக்கு வந்தது.  ஈழத்தமிழர்களின் போராட்டம் ஆயுத முனையில் அடக்கப்பட்டதோடு அது மூர்ச்சையடைந்து கிடக்கிறது.  ஆனாலும் இன்னும் இறந்து போகவி ல்லை. அதன் மூர்ச்சையைத் தெளிவித்து மீண்டும் புத்துயிர்க்கப்பண்ண  உருப்படியான ஆய்வுகளில் அரசியல் அறிஞர்கள் ஈடுபடுவதும் காலத்துக்கேற்ற வகையில் தமிழர்தேசியத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் அரசியல் வாதிகளை ஈடுபட தூண்டுவதும் இன்றுள்ள முக்கிய தேவைகளாகும்.  வெறும் “நாம் தமிழர்” என்ற உணர்வோடு  செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு அரசியல் விஞ்ஞான ரீதியாக தமிழர் தேசியத்தின் அவசியத்தைப் புரியவைப்பது அதன் முதல்படியாகிறது.

தொடருவம்…