90களில் சிங்கள அரசினால் தமிழீழ தேசம் எங்கும் பொருளாதார தடை அமுல்படுத்தப்பட்டது.
அடிப்படை பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை தட்டுப்பாடு மற்றும் இராணுவ முன்னெடுப்புக்களால் இடப்பெயர்வுகள் என தொடர்ந்து தமிழர் தேசம் பொருளாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர் நோக்கியது. தற்போது உள்ள நிலமை போல் வெளிநாட்டு உதவிகளோ தொண்டு நிறுவனங்களின் உதவிகளோ அப்போது பெரிதளவாக இருக்கவில்லை.
இடர்களை எதிர்கொள்ளும் பலமாகவும் நம்பிக்கையாகவும் இருந்தவை தமிழீழ விடுதலைப்புலிகளும் மக்களுமே.
விடுதலைப்புலிகள் தன்னிறைவு பொருளாதாரம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள்.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பினுடாக தமிழீழ பொருளாதார மேம்பாட்டுக்கான அனைத்து செயற்திட்டங்களையும் முன்னெடுத்தார்கள்.
விதை தானியங்களை மக்களுக்கு வழங்கி சிறு பயிர்செய்கைகளை ஊக்குவித்தார்கள்.
கோழி ஆடு மாடு வளர்ப்பதற்கான ஊக்குவிப்புக்களும் உதவிகளும் செய்யப்பட்டன. தென்னை மா பலா போன்ற மர கன்றுகள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டன.
வன்னிபெருநிலப் பரப்பில் காணிகள் வெறுமையாக யாரும் வைத்திராமல் பயன் தரும் வகையில் பயன்படுத்தினார்கள். பசளைகளும் தடைப்பட்டிருந்ததால் இயற்கை உரங்களே பயன்படுத்தப்பட்டன.
பாடசாலை மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டம் தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்டது. பாடசாலையிலும் மாணவர்கள், ஆசிரியர்களால் சிறுபயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆசிரியர் வீட்டுத் தோட்டங்களை பார்வையிடுவதற்காக மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வந்தார்கள்.
வீட்டுத்தோட்டம் செய்வதில் மாணவரிடையே போட்டி நிலவியது. பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு பயறு, உழுந்து,கௌம்பி பனங்கிழங்கு, கச்சான் பயன்படுத்தப்பட்டன. நெல் களஞ்சியப்படுத்தபட்டது.
கைச்சிலவுக்கு கோழிமுட்டை, பால் விற்பதால் கிடைக்கும் பணமே இருந்தது.
கயிறு திரித்தல், தேங்காய் எண்ணை காச்சுதல், எள்ளெண்ணை செக்கு… பாய் இளைத்தல், ஓலை பின்னுதல்….. என்று தமிழர் தேசம் தன்னிறைவு பொருளாதாரத்தில் மட்டுமே தங்கியிருந்தது.
மீன் பிடி, நன்நீர் மீன் வளர்ப்பு, பனை வளங்களை பயன்படுத்தும் தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டன.
பெரும்பாலும் இடப்பெயர்வுகளில் மக்களின் பசியை போக்கியது மரவள்ளிக் கிழங்கும் சம்பலுமே… இடம்பெயர்ந்த மக்களுக்காக விவசாயிகள் தமது தோட்டங்களை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி திறந்து விட்டிருந்தார்கள்…
வேலை இல்லாவிட்டாலும் வீட்டில் கஞ்சியாவது இருக்கும். இன்நிலை இப்போது முற்றாக மாறி விட்டதோ என்ற அச்சமே இருக்கின்றது.
இப்போது போர் இல்லை. வெள்ளமோ வரட்சியோ தொற்றுநோயோ எமது மக்களை, அவர்களின் வாழ்வியலை முடக்கிவிடும் அளவிற்கு தற்போதைய வாழ்க்கை முறை அமைந்துள்ளது. இதில் இருந்து மீள வேண்டும்.
மக்களின் பொருளாதாரத்தை அவர்களே கட்டியெழுப்ப வழிவகைகள் செய்யப்பட்ட வேண்டும்.
எவ் இடர் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனத்திடத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
பாணும் பருப்பும் எத்தனை நாளுக்கு தருவார்கள்??? நாளைய பொழுதை நாங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும்…. அதற்கான ஆயத்தங்களை செய்யவேண்டும். என்ற நியதியை அவர்கள் உணர வேண்டும்.
இயற்கை இடர்கள் வரும் போதெல்லாம் உதவி செய்ய யாராவது வருவார்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து பணம் வரும் என்ற மாயையை உடைத்தெறிய வேண்டும்…
30வருட போர்ச் சூழல் நமக்கு கற்றுதந்தவை ஏராளம். புதிதாக இன்னுமொரு அனுபவத்தை நாங்கள் பெற தேவையில்லை.
நாங்கள் சுதந்திரம் பெற்றவர்கள் அல்ல அடக்குமுறைக்குள் இருப்பவர்கள் என்ற எண்ணம் மக்களை புதிய பாதை நோக்கி கொண்டு செல்லும்.
நன்றி Viththi VK