மக்கள் மனங்களில் குமார் பொன்னம்பலம்

1543

தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், தமிழ் மக்கள் மீதான மனிதவுரிமை மீறல்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றவர்களில் முதன்மையானவருமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் எழுபத்தைந்தாவது பிறந்த தினத்தையொட்டி (ஒகஸ்ட் 12ம் திகதி) அன்னாரது பணியை நினைவு கூரும் வகையில் நினைவு நிகழ்ச்சியொன்று கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை விரிவரையாளராகப் பணியாற்றும் திரு. குமாரவடிவேல் குரபரன் நினைவுப் பேருரையினை ஆற்றினார். நினைவு மலர் ஒன்றும் அங்கு வெளியிடப்பட்டது.

மிக நீண்ட காலத்திற்கு பின்னர் தமிழ்த் தேசிய ஆதரவு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், புத்திஜீவிகள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் என பெருந்திரளில் மக்கள் கலந்து கொண்டமை இன்றையை அரசியல் சூழலில் மிக முக்கியமான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தாக யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு அரசியல் ஆய்வாளர் ஒரு பேப்பருக்கு தெரிவித்தார்.

திரு. குமாரவடிவேல் குருபரன் வழங்கிய நினைவுப் பேருரை சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழும் சில முக்கிய கேள்விகளுக்கு பதில் காணும் முயற்சியாக அமைந்திருந்தது. மே 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசம் மற்றும் சுயநிர்ணயம் என்று பேசுவதற்கான வாயப்பான சர்வதேசச் சூழல் உள்ளதா? உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலா சுயநிர்ணய உரிமையை நாம் வலியுறுத்த வேண்டும்? படிப்படியாக தீர்வைப் பெற்றுக் கொள்ளலாமா? பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோருவதற்கான உரிமை உள்ளதா? நிலைமாறு நிர்வாகம் ஒன்றை வலியுறுத்த முடியுமா? இவை யாவும் யதார்த்தபூர்வமானதா? போன்ற கேள்விகளையிட்டு அவரது உரை கவனம் செலுத்தியது.