மனிதர்களை நேசித்தபடியும் போலிகளைப் புறந்தள்ளி, கிண்டலடித்து, நிராகரித்தபடியும், வாழ்ந்த ஓர் ஆளுமை இனிமேல் என்றென்றுக்கும் விழித்துவிட முடியாத ஓர் இறுதி துக்கத்தில் ஆழ்ந்து விட்டது. அந்த இறுதி துயிலுக்கான இரங்கல் குறிப்பு ஒன்றினை பதியாவிடில் இப்பத்தியின் அர்த்தம் குறைவு பட்டதே.
2002ஆம் ஆண்டு தை மாதத்தில் மணிவண்ணன் அவர்களை சந்தித்தேன். ஒரு நாள் சந்திப்பல்ல அது. பத்து நாட்களுக்கு மேலாக இணைந்து திரிகின்றோம். அப்பொழுது ரி.ரி.என். தமிழ்ஒளி தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக நான் பணிபுரிந்தேன். அத்தொலைக்காட்சிச் சேவையின் ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக மணிவண்ணன் வந்திருந்தார். அவரை வைத்து சில நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். தயாரித்தேன் என்பது போக பரிஸ் அம்ட்ஸ்ரடாம் முதலான நகரங்களில் அவருடன் உலாத்தினேன். ஈபிள் கோபுர உச்சியிலிருந்து நானும் அவருமாக பாரிஸ் மாநகர அழகை ரசித்தோம்.
இருக்கட்டும் அவை ஒரு புறம். சாதாரண மனிதர்கள் யாவரும் செய்யக்கூடிய காரியங்கள் தாம் அவை. ஆனால், இப்படியான ஓர் உலாத்துகையில் அவரினது பல்வேறு பரிமாணங்களை நான் அறிந்தேன். உணர்ந்தேன். அவ்வாறு உணர்ந்த போது ஒரு முடிவு எடுத்தேன். அவர் சாதாரண
மானதொரு சினிமாக் கலைஞன் அல்லன். அதற்கும்அப்பாற்பட்ட ஒருவர்.
அவரது சினிமாக்களும் கூட என்னை அசைத்துப் போட்டதுண்டு. ஒன்றுக்கொன்று தடை வடிவத்திலேயோ, காட்சி உருவத்திலேயோ எந்தத் தொடர்பும் இல்லாத ஐம்பது திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். நுறாவது நாள் மற்றும் 24 மணி நேரம் என்ற இரண்டு திரைப்படங்களும் அமைதிப்படை மற்றும் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ. ஆகிய திரைப்படங்களும் ஒன்றுக் கொன்று தொடர்புபட்டவை. அவருடைய பாலைவன ரோஜாக்கள்,
இனி ஒரு சுதந்திரம், அமைதிப்படை ஆகிய திரைப்படங்கள் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவை. அமைதிப்படை போன்ற ஓர் அரசியல், கிண்டல் திரைப்படத்தை வேறு எந்த ஒரு இயக்குனராலும் தந்துவிடமுடியாது.
அவரைப் பார்க்கையில் சாதனையாளர் என்ற எந்த ஒரு பரிவட்டமும் அவர் தலையின் பின்னால் ஒளிரவில்லை. மிகுந்த நகைச்சுவை ததும்பிய பேச்சு, அவரிடமிருந்து உதிர்ந்தபடியிருந்தது. அவர் என்னை ‘இரவி அண்ணா’ என்று அழைத்தார். நான் ‘அண்ணை’ என்று கூப்பிட்டேன். அவர் முன் எந்தக் குழப்படியும் விடமுடியாது. ‘தம்மியபடி’ இருந்தேன். அவர் என்னை ஒரு போராளி என்று கருதி விட்டார். என்னை என்று அல்ல ஈழத்தமிழர் அனைவரும் அவருக்குப் போராளிகளே. ஈழத்தமிழரை அவர் மிகுந்த மதிப்பிலும் வியப்பிலும் உயரத்திலும் வைத்துப் பார்த்தார். அதில் கொஞ்சம் எனக்கும் சுவறியது.
மனிதரை மதிப்பதில் மணிவண்ணன் மகத்தானவர். மணிவண்ணன் பற்றி எழுதிய பலர் அதனைக் குறிப்பிட்டுள்ளனர். எனக்கும் நேரடி அனுபவங்கள் பல உள்ளன.
அம்ஸ்ரடாம் நகரில் ஒரு தொப்பி ஒன்றினை வாங்கி அவருக்குப் பரிசளித்தேன். அதன் பிறகு சில திரைப்படங்களில் அத்தொப்பி அணிந்து நடிப்பதனைப் பார்த்து வியந்தும், மகிழ்ந்தும் போனேன். எனது அன்புக்கு அவர் வழங்கிய பதில் மரியாதை என்று அதனை நம்புகின்றேன். அவ் வாறே பல சந்தர்ப்பங்களில் அவர் எனக்குத் தொலை பேசி எடுப்பார். ஹஎப்படி இருக்கிறீங்கள் இரவி அண்ணா?’ என்று தான் முதல்க் கேள்வி வரும், பின்னர் உரையாடல் பத்து நிமிடங்களாவது தொடர்ந்து விடும். அத்தனை நிமிடங்களையும், ஈழத்தமிழர்கள் பற்றிய அங்கலாய்ப்பும், ஆழ்ந்த விசாரிப்புக்களாக கரைந்து விடும். அவ்வளவு அக்கறை கொண்டவர் அவர்.
2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்ற போது, அவரைச் சந்திக்க முயன்றேன், முடியவில்லை. கடும் சுகவீனமுற்று மருத்துவமனையில் படுத்திருந்தார். அப்பொழுது அவரைப் பார்க்க எனக்கு அனுமதியில்லை. அவரது சுகவீனத்தின் காரணத்தை அறிந்தபோது நெஞ்சு கலங்கியது.
முள்ளிவாய்க்கால் துயரம், தலைவரின் மறைவு அவரை பாடாய்படுத்தியிருக்கின்றன. அது அவரின் இதயத்தை பலம் கொண்டு மட்டும் தாக்கியிருக்கின்றது. மக்கள் மீது அன்பும் கருணையும் கொண்டோர் இவ்வாறான இதய நோயால் பாதிக்கப்படுவதே இயல்பே.
மணிவண்ணன் எங்களை விட்டு மறைந்தமைக்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆனந்த விகடனுக்கு வழங்கிய செவ்வியில் மணிவண்ணனின் நெஞ்சு நோகுமமாறு பலவாறாக இழித்துரைத்தார் என்று சொல்லப்படுகிறது. அச்செவ்வியை வாசித்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன். இப்படியும் நாகரீகமற்ற வகையில் ஒருவரை வைய முடியுமா? என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது.
‘மனிதர் முகத்தை மனிதர் பழிக்கும் வழக்கம் இனியுண்டோ ‘ மனிதர் நோக மனிதர் வாழ வாழ்க்கை இனியுண்டோ’ என்று பாடினார் பாரதியார்.
மனிதர் நோக வாழும் வாழ்க்கையை சில மனிதர்கள் செய்தபடி தான் இருக்கின்றார்கள். அதனால், சிலர் உயிரைக் கூட இழக்கின்றார்கள். மணிவண்ணனுக்கு ஏன் இவ்விதம் நிகழ்கிறது? மெல் இதயம் கொண்டிருந்ததால் தானா? கொம்மியுனிஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தவர், தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டவர் பெரியாரின் வழி நடந்தவர், தமிழ்த்தேசிய வாதியாக தன்னை அறிவித்தவர், தன் மீது புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பியவர் என எப்படிப் பார்த்தாலும் நம் மனதிற்கு மிக நெருக்கமாக நின்றவர் மணிவண்ணன். அதற்காக ஆயிரம் முறை என் தலை குனியும்.
ஆனால், அதற்கும் அப்பால் அவர் யாரிடமும் சொல்லியிருக்க முடியாத ஒன்றை என்னிடம் சொன்னார். அதனால் அவர் மீது என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
சாரு மயூம்தார் என்ற போராளி நக்சலைட் என்ற மாவோயிஸ்ட போராட்டக் குழுவின் தோழர். இந்திய அரசை உலுப்பியெடுத்த மிக முக்கிய போராளிக்குழு அது. வட இந்தியாவைச் சேர்ந்த சாருவை இந்திய அரச படைகள் தேடி அலைந்த போது, சாரு தமிழ்நாட்டில் வந்து ஒளிந்து கொண்டார். அவ்வாறு அவர் சில வருடங்கள் ஒளிந்திருந்த போதுஒரு மாதமாக மணி வண்ணன் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்.
அந்த ஒரு மாதம் வரையும், சாரு காலைக் கடன் கழிப்பதற்கும், குளிப்பதற்கும் என்று காட்டுக்கும் குளத்திற்கும் அழைத்துச் சென்றவர் மணிவண்ணன் அவர்கள்.
சாரு மயூம்தார் என்பவரைத் தெரிபவர்களுக்கு, இது சிலிர்ப்பூட்டுகின்ற ஒரு அனுபவம். அந்த அனுபவத்திற்குச் சொந்தக்காரன் மணிவண்ணன் அவர்கள். ஆதலினால் பல்லாயிரம் முறை மணிவண்ணனுக்கு வணக்கம் செலுத்த என் தலை குனியும்.