ஓர் இரண்டு மாதம் முடிந்து விட்டிருந்தது-நான் கனடா போய் வந்து. ஈழத்தமிழ் மக்கள் உயிர்ப்புடன் வாழ்கிறார்கள் என்பதற்கான மூச்சுக் காற்று கனடாவின் டொரன்ரோ நகரில் பறந்தபடி இருந்தது. இப்படி ஓர் ஈழத்தமிழ் அடையாளத்துடன் இயங்குவதை நான் வேறெங்கும் கண்டிலேன். ஆனால் இவை பற்றியெழுவது எதுவும் இப்பத்தியின் நோக்கம் அல்ல. நோக்கம் யாதெனில் இங்கும் அரசியல் பேசுவதே.
போரின் உக்கிரம் தாங்க முடியாததால்த் தான் எங்களில் பலர் புலம்பெயர்ந்துள்ளோம். வேலை வாய்ப்பின்மையாலும் திரண்ட செல்வம் கருதியும். நாம் புலம்பெயரவில்லை என்று சொன்னால் அதுவும் பொய். யாவும் ஒரு மையப்புள்ளியில் சந்தித்திருக்கிறது. அப்படி உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
1985ம் ஆண்டில் யாழ் பல்கலைக்கழகக் கலாசாரக்குழு ஊடாக ‘மண் சுமந்த மேனியர்’ என்ற நாடகத்தை நாங்கள் மேடையேற்றி இருந்தோம். பிரதி- குழந்தை ம.சண்முகலிங்கம் நெறியாள்கை- க.சிதம்பரநாதன் என்ற போதிலும் கடையமைப்பில் நான் பெரும்பங்கு வகித்திருந்தேன் குடாநாடெங்கும் அறுபது மேடையேற்றங்களையும் கண்டு குடாநாட்டைப் போட்டு உலுப்பியிருந்தது அந்நாடகம்.
‘மண் சுமந்த மேனியர்’ நாடகத்தின் பேசுபொருள் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினை தொடர்பானதே. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் அடி நிலை மக்களே முதன்மைச் சக்திகளாகவிளங்குவர் என்றும் மத்திய தரவர்க்கம் போராட்டத்தைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிடும் என்றும் இநிதியாவைப் பார்த்துக் கொண்டிராமல் ஈழத்தமிழரே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் பலப்பல பேசியது அந்நாடகம்.
அதற்கான பொருத்தப்பாடு கருதியே ‘மண் சுமந்த மேனியர்’ என்ற தலைப்பையும் சூட்டியிருந்தார் குழந்தை மா. சண்முகலிங்கம் அவர்கள். அந் நாடகத்தில் ஒரு காட்சி வருகிறது ஐந்தாறு பேர் பயணப் பொதிகளைத் தூக்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். எப்படி ஏடுகிறார்கள்? சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்கின்ற உடலங்களைக் கடந்து கொண்டு மிதித்துக்கொண்டும் அவர்கள் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடுகிறார்கள்.
இந்தக் குறியீடு அல்லது படிமம் உணர்த்த வந்தது எதனை என்று நான் விளக்கப்போகின்றால் அது உங்களை முட்டாள் என்று கருதி விட்டேன் என்றாகும். ஆனால் அவ்வாறு கூறிய செய்தி எங்களுக்கும் ஆயிற்று என்பது தான் துயரிலும் பெருந்துயர். சடலங்களை ஏறி மிதித்துக் கடந்து வெளிநாடு போகிறார்கள் என்று போகின்றவர்களைக் குரூரமாகக் கிண்டல் அடித்திருந்தோம். ஆனால் அதே காரியத்தையே நாங்களும் செய்திருக்கிறோம்.
அந்த உறுத்தல் நாள் தோறும் என்னைத் துரத்துகிறது. சாகும் கணம் வரையும் அதிலிருந்து நான் விடுபட மாட்டேன் ஆனால் கொஞ்சமேனும் எம் மக்களின் மன்னிப்பை இரந்து யாசிப்போம் என்கின்ற ஓர் உணர்வு தான் தமிழ்த் தேசியம் பற்றிய தீவிர நிலைப்பாட்டையும் அதற்கேற்ற போர்க்குணத்தையும் என்னுள் வரித்துக் கொண்டேன்.
தமிழத்தேசிய விடுதலைக்கான போர் என்பது நூறு வீதம் சரியானது என்பதும் ஒருபக்க உண்மை உறுத்தல் மாத்திரம் தான் காரணமாக இருத்தல் வேண்டும். உறுத்தல் மாத்திரம் தான் காரணம் அல்ல. இந்த ‘உண்மைக்’காகவும் ஈழத்தமிழர் முனைப்புச் சக்தியாக மாறவே வேண்டும்.
அதன் வளியே தான் தமிழ்த்தேசியத்தை மன்னெடுக்கின்ற அனைத்துச் சக்கியையும் நேசத்துடன் பார்க்கின்றேன். நாடு கடந்த அரசாங்கம், அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம், பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி இன்ன பிற அமைப்புக்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுவேன். இவர்களிடம் வேகம் போதாது வேலைத்திட்டமில்லை ஜனநாயகத்தை மறுக்கிறார்கள் அதிகாரப் போட்டி நிலவுகிறது. என்று பற்பல முறைபாடுகள் சொன்னாலும் அவற்றை தேச முரண்பாடுகள் என்று தான் எண்ண வேண்டும். அவை விமர்சிக்கப்படவேண்டும் என்றாலும் குற்றஞசாட்டும் தொனியில் அல்லாது ஒரே அடியாக மறுக்காது சிநேக முரண்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்ற நோக்கில் அவை அமைவது நலம். எங்களிடம் அடிக்கின்ற கைகள் வேண்டாம். அன்பாக அரவணைக்கின்ற கைகள் கொண்டு குற்றங்களையும் தலையில் குட்டி அல்லாது முதுகில்த் தட்டிச் சொல்ல வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்த்தேசியத்திற்கான அமைப்பாக என்னால் கருத இயலவில்லை அவர்கள் இந்தியாவின் வேலைத்திட்டத்துக்கு இணங்க இயங்குகிறார்களே என்ற சந்தேகம் எனக்கு உண்டு மேலும் சம்பந்தர், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மாவை சேனாதிராஜா போன்ற நாடாளுமன்ற உறுப்பினார்கள் தமிழ்த் தேசியத்தை மறுதலித்து உரையாடுவதையும் காண்கிறேன். சிறீதரன், அரியநேந்திரன் போன்ற நல்ல சக்திகள் அங்கு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. காலம் அவர்கள் யார் என்பதைக் காட்டட்டும்.
இவ்வளவும் நிற்க கனடாவில் தொடங்கிய கதையை வேறெங்கோ கொண்டுபோய் கட்டி விடுகிறேன் என்று நினையாதீர் கனடாப் பயணத்தில் முந்தைய எனது அமைப்புத் தோளர்களையும் பல்கலைக்கழக நண்பர்களையும் சந்திப்பது முக்கியமாக இருந்தது. அமைப்புத் தோழர்களுடனான சந்திப்பின் சுவரசியத்தைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன் பல்கலைக்கழக நண்பர்களுடனான சந்திப்பு இன்னொரு மனிதனாக என்னைப் புரட்டிப் போட்டது. மனச்சாட்சி உறுத்தலால் மனமளிந்து போயிருந்தேன் நாங்கள் எங்களை எமாற்றுகிறோம் அதனூடாக நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றுகிறோம். இரண்டும் உண்மை எங்கள் மக்களின் பணத்தில் தான் நாங்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றோம். பல்கலைக்கழகத்தில் மாத்திரம் அல்ல பாடசாலையிலும் மக்களுடைய பணமே.
மற்றைய முக்கியமானது எம் மக்களுடைய சாவுகள் தான் புலம்பெயர் தேசத்தில் எம்மை ‘இருக்க’ வைத்தது. பல்லாயிரக்கணக்கில் அவர்கள் தம்மைக் காவு கொடுத்து புலம்பெயர் தேசங்களில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர் வாழ வகை செய்திருக்கிறார்கள். இல்லை என்று மனிதர் எவரும் மறுக்கமாட்டார்
கனடாவில் நான் பெற்ற ஞானம் அது. கனடா எனக்கு உபதேசித்ததை நான் சிரமேற்கொண்டுள்ளேன். யாபேரும் அப்படி ஓர் உணர்வு நிலையைக் கொள்ள தமிழர் அத்தனை பேரையும் நினைந்து வேண்டுகிறேன்.