மனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும்

761

பிரித்தானியாவில் மனித நேய நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டு வந்தவரான திருமதி. வாசுகி கருணாநிதி என்பவர் அவசரத் தேவை நிமித்தம் இலங்கைக்கு தனது மகளுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வர முற்பட்ட வேளையில் ஒகஸ்ட 6ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து  இலங்கைப் புலனாய்வுத் துறையினரால்  கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குப்  பெயர் போன கொழும்பு 4-ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வாசுகி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதால் இவரது கைது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதித் தூதுவர் இலங்கை வெளிநாட்டமைச்சருடன் தொடர்பு கொண்டிருந்தார்.  ஐந்து  நாட்களில் இவர் விடுதலை செய்யப்படுவார் என இலங்கை வாக்குறுதி அளித்திருந்தும் இக்குறிப்பு எழுதும் வரை அவர் விடுதலை செய்யப்படவில்லை.

பிரித்தானியாவில் உள்ள வாசுகியின் நண்பர்கள் வாசுகியின் கைதுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து கே. பி எனப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் பத்மநாதான், வழக்கைத் தொடரந்துள்ளவர்களின் குடும்பத்தினருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வழக்கைக் கைவிடுமாறும், அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர் விடுதலைசெயய்யப்படுவார் என வேண்டிக் கொண்டதாகத் தெரியவருகிறது. இதற்கு அவர்கள் வாசுகியை விடுதலை செய்தால் வழக்கு தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும் என அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிய வருகிறது.

லண்டனில் வாழும் கருணைலிங்கம்  என்பவர் மூலமாகவே கே.பி. வாசுகி குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டதாகவும், இரண்டு நிபந்தனைகளுக்கு அவர்கள் உடன்படுவார்களாயின் தம்மால் அவரை விடுவிக்க முடியும் என கருணைலிங்கமும் கேபியும் குறிப்பிட்டுள்ளனர். ஒன்று வழக்கை கைவிடுதல், அடிப்படை உரிமை வழக்கை கைவிடுதல், மற்றயது விடுதலையடைந்து லண்டன் திரும்பியதும், அவர் கைது செய்யப்பட்ட விபரங்களை மனிதவுரிமை அமைப்புகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளியிடக்கூடாது. இந்த நிபந்தனைகளை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனரா என்பது பற்றி அறிய முடியவில்லை.

சிறிலங்கா அரசபடைகளுடன் சேரந்தியங்கிவரும் கே.பி. கைதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது சிறிலங்கா புலனாய்வுத்துறையின் உயர் மட்டத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளமையும், இவ்விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது. கே.பியிற்கு உள்ளுர் முகவர்களாக கருணைலிங்கம் போன்றவர்கள் செயற்படுவதும் தெரிய வந்துள்ளது.

இது பற்றிய மேலதிக விபரங்களுடன் அடுத்த ஒரு பேப்பரில் சந்திக்கிறேன்.

ஊருளவாளி