ப.வை. ஜெயபாலன்
நுாற்றாண்டு நிறைவை எட்டிப்பிடிக்கப் போகும் வயது, மங்காத ஞாபக சக்தி, உதவியோடு நடமாடும் உடல்வலு, தளர்ந்த தேகம், தளராத மனம் முகத்தில் எந்நேரமும் தவளும் புன்னகை. மலாயன் கபே காலத்தில் வாடிக்கையாளர்கள் கண்ட அதே உபசரிப்புப் பாங்கு என்று எத்தனை இயல்புகளோடும் ஒரு நிறைவான பெரியவரை கோபுரா ஞானம் குடும்பத்தவரின் கோலாகல திருமணத்தில் காணக் கிடைத்தது.
நயினாதீவில் பிறந்தவர் 13 வயதில் யாழ்ப்பாணத்திற்கு நகர்ந்தவர் சத்திரம் சாமியார், மலையன் கபோ சாமி நாதன் என்று யாழ்ப்பாணத்தில் பல பகுதி மக்களாலும் அறியப்படும் அளவுக்கு தன் உழைப்பால் உயர்ந்தவர். தற்பொழுது லண்டனில் வாழ்கிறார். எனது ஊர் தெல்லிப் பளை என்றதுமே பலரது பெயரைச் சொல்லி விசாரித்தார். அந்தக் கால யாழ்ப்பாணத்தின் தோற்றமும் அவர் மனத்திரையில் எந்த மாற்றமும் மறைவும் இன்றி ஒளிர் வதை ஆச்சரியமாக இருந்தது.
பாரதி பா.வித்தியாலயம் என்று பொன்ட் வீதியில் இன்றும் இயங்குகிறது. இந்த பாடசாலையில் தான் இவர் ஆரம்பப் பள்ளியைப் பெற்றார். வி.எஸ்.எஸ்.கே என்ற வை.சி. என்ற சுருட்டுக் கடையிலேயே இவர் சிறு வயதில் வேலைக்குச் சேர்ந்தார். புகையிலையை யாழ்ப்பாணக் கிராமங்களில் மொத்தமாகப் பெற்று பல நுாறு தொழிலாளர்கள் மூலம் சுருட்டுச் சுத்தி, கட்டுகள் ஆக்கி எங்கும் ஏற்றுமதி செய்த அந்த தொழிலகம் கந்தர்மடத்தில் இயங்கியது. முதலாளியின் நம்பிக்கைக்கு உரிய தொழிலகப் பொறுப்புகளைக் கவனிக்கும் வேலைக்கு தன் திறமையால் உயர்ந்தார்.
யாழ்ப்பாணம் அந்த நாட்களில் தில்லைப்பிள்ளை என்பவர் நடாத்திய தாமோதர விலாஸ் தான் விலாசமான சாப்பாட்டுக் கடை இன்றும் கே.கே.எஸ். வீதியில் இருக்கிறது. தொடர்ந்து புங்குடுதீவு கதிரவேலு என்பவர் மலாயன் கபேயை ஆரம்பித்தார். ஆஸ்பத்திரி வீதி மோர்க் கடை சாந்திலிங்கத்தின் கடை இதே வீதியில் இருந்த வேலணை பசுபதியின் தேங்காய்க் கடை, சோபனா கடை என அழைக்கப்பட்ட வேலணை சோமசுந்தரத்தின் இனிப்புக் கடை, விறகுகாலை செல்வம் கடை, செல்லாச்சி கடை என்று அரசன் பெயரால் அழைக்கப்பட்ட அரிசிக் குஞ்சு ஐயாவின் மனோன்மணி அக்காவின் கடை. சிற்றி பேக்கரி என்ற சிங்களவருக்குச் சொந்தமான கடை, சோனகத் தெருவைச் சேர்ந்த அப்துல்காதரின் சாப்பாட்டுக் கடை, வேலணையைச் சேர்ந்தவரின் மிஸ்டர் பவான், கே.கே.எஸ். வீதியில் அமைந்த தம்புச்சாமியின் சீஸ் கடை. சூனா.வீநா என அழைக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தகரின் கடை. நைனாதீவு விஸ்வநாதத்தின் முட்டாஸ்கடை என்பன யாழ்ப்பாண நகரில் அந்தக்காலத்தில் அலங்கரித்த கடைகள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.
வை.சி. கடையில் பெற்ற அனுபவம் இவரை சொந்த தொழில் செய்ய துாண்டியது. அந்த நாட்களில் பஸ், வான் என்ற போக்குவரத்து வசதிகள் இல்லை. யாழ்ப்பாண பட்டனத்திற்கு வருவோருக்கு ஆறி அமர, பசி ஆற சத்திரம் ஒன்றை நிர்மாணித்து நடத்தினார் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஐயர் ஒருவர்.
கே.கே.எஸ்.வீதி, ஆஸ்பத்திரிச் சந்தியில் வீதியோரம் இன்றும் காணப்படும் கிணறு, வைரவர் கோவில் என்பனவும் அந்த சத்திரத்தை ஒட்டி ஐயரால் பொதுப் பாவ னைக்கு அமைக்கப்பட்டவை தான். இதனால் இன்றும் சந்திரச்சந்தி என்ற பெயர் நிலைக்கிறது. வருவோருக்கு ஒரு வென்பொங்கலும், சாம்பாரும் தொடர்ந்து வழங்கி வந்த தர்மவான் அந்த ஐயர். நீண்ட காலம் அந்த சத்திரத்தை நடத்தி வந்த ஐயர், தனது பணியை தொடர முடியாத நிலையில், அதை குத்தகைக்கு சாமிநாதனுக்கு வழங்கினார். சத்திரம் கடை திருத்த வேலைகள் செய்யப்பட்டு பலரும் தங்கிச் செல்லவும் ஏற்றதாக மாறியது. சத்திரம் கடை மோலிக்கு பெயர் பெற்றது. நியாய விலையில் மக்கள் சிறந்த சாப்பாட்டைப் பெற சத்திரம் கடையை நாடத் தொடங்கினார்கள். சத்திரம் சாமியார் என அன்பாக மக்களால் இவர் அழைக்கப்படலானார்.
மலாயன் கபேயை நடத்தி வந்த கதிரவேலர் குத் தகைக்கு அதை விட விரும்பினார். சுவாமிநாதர் ஜயா அதைப் பொறுப்பேற்றார். மலாயன் கபேயின் பெயர் கொடி கட்டி பறக்க வைத்தார். விசாலமான வசதிகளுடன் வடை, போண்டா, போலி, சைவ உணவு என்று பட்டணம் வரும் எவரும் மலையன் கபே சென்று உண்பதும், வடை பாசல் கட்டி வீட்டுக்குக் கொண்டு செல்வதுமான ஒரு பழக்கத்தை மலையன் கபேயின் வடை ருசி உருவாக்கியது.
அழகாக வெட்டப்பட்ட துண்டு வாழை இலையில் சம்பலுடன் சுடச் சுட பரிமாறப்படும் மலையன் கபே வடை இன்றும் நினைத்தாலே இனிக்கும். விசேடமாக இரண்டரை யார் நீளமான வெளிட் பூட்டிய மெசினை உழுந்து அரைக்க முதன்முதலில் யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்து பயன்படுத்தியவர் மலாயன் கபே சுவாமிநாதன் ஐயா தான். பேளி செய்ய பயன்படுத்தப்பட்டதும் மேசை அளவிலான பெரிய இரும்புத் தட்டு. மலையன் கபே குத்தகைக் கால முடிவில் அசோக் பவனை இவர் பொறுப்பேற்றார். அதனையும் உழைப்பால் உச்சத்திற்கு உயர்த்தினார்.
வாடிக்கையாளர் திருப்தியையும் நல்ல பெயரையும் பெற வேண்டும் என்பதே இவருடைய முழுமையான நோக்கமாக இருந்தது. இதனால் பெரும் பண இலாபத்தை சம்பாதித்தவராக இவர் ஆகவில்லை. போளி, கேசரி என்பன விசேட தரமான பண்டங்களுக்கு மைசூர் பாகு உட்பட மலையன் கபே சிறப்பைக் கொண்டிருக்கக் காரணமான தன்னிடம் பணி புரிந்த இந்தியாவைச் சேர்ந்த குப்பம்மாள், தாவு மற்றும் சாவகச்சேரியைச் சேர்ந்த ரீமேக்கர் ராசதுரை என்ற பணியாளர்களை நன்றி உணர்வோடும் நெற்றிச் சுருக்கோடு இப்பொழுதும் நினைவு படுத்துகிறார். தன்னுடன் ஒத்துழைத்த மனைவியை சில வருடங்களுக்கு முன் இலண்டனில் பிரிந்தது அவருடைய கவலையின் உச்சமாக முகத்தில் தெரிகிறது.
இப்பொழுது திறீ றோசஸ் என அன்பாக நண்பர்களால் அழைக்கப்படும் தன் மூன்று பெண் பிள்ளைகளோடும் இரு ஆண் பிள்ளைகளோடும் லண்டனில் வாழ்கிறார். சாமி நாதர் ராசமணி என்ற தன்னுடைய தாய் தங்கையின் உடைய பெயரையே சாம் ராஸ் என்ற பெயரை வைத்து மகிழ்கிறார் மூத்த மகன்.
இந்த உழைப்பால் உயர்ந்த யாழ்ப்பாணத்தை வடையால் அறிமுகப்படுத்திய இந்த பெரியாரின் நுாற்றாண்டை நாமும் வாழ்த்தி வரவேற்போகமாக.